Published:Updated:

நெடுஞ்சாலைத் துறையில் ஆட்சி செய்கிறார்களா முதல்வரின் பி.ஏ-க்கள்?

நெடுஞ்சாலைத் துறையில் ஆட்சி செய்கிறார்களா முதல்வரின் பி.ஏ-க்கள்?
பிரீமியம் ஸ்டோரி
News
நெடுஞ்சாலைத் துறையில் ஆட்சி செய்கிறார்களா முதல்வரின் பி.ஏ-க்கள்?

நெடுஞ்சாலைத் துறையில் ஆட்சி செய்கிறார்களா முதல்வரின் பி.ஏ-க்கள்?

‘‘நெடுஞ்சாலைத் துறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பி.ஏ-கள்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். முதல்வரின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருப்பதால், அவர்கள் சமுதாயத்தினருக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இடமாறுதலும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் லாபநோக்கத்தோடு நடக்கிறது’’ என பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, கிடுகிடுக்க வைத்துள்ளார் நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் முருகேசன்.

அவரிடம் பேசினோம். ‘‘2014-ல் திருநெல்வேலியில் நடந்த ஒரு சாலைப்பணியை இணைத் தலைமைப் பொறியாளர் பரமேஸ்வரன் ஆய்வுசெய்து தரம் இல்லை என்று கூறி, அந்தப் பணியை நிறுத்தினார். இதனால் கோபம் அடைந்த கான்ட்ராக்டர், அந்த நேர்மையான அதிகாரியை அடித்து விட்டார். இதைக் கண்டித்து நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக தர்ணா போராட்டம் செய்தோம். இதை இப்போதைய முதலமைச்சரும் அப்போதைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான போராட்டமாகக் கருதி, எங்கள் சங்கத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து சங்கத்தைக் கலைத்தார்கள். சங்கத்துக்கு மறுதேர்தல் நடந்தது. நேரடியாகவே அமைச்சரின் உதவியாளர்கள் களம் இறங்கி, பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்தார்கள். இதனால் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம்.

நெடுஞ்சாலைத் துறையில் ஆட்சி செய்கிறார்களா முதல்வரின் பி.ஏ-க்கள்?

மீண்டும் மறுதேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்டு சங்கத்தின் மாநிலத் தலைவராக வெற்றி பெற்றேன். பிறகு எங்கள் அணியைச் சேர்ந்த வெங்கடாசலத்தைத் தலைவராக நியமித்துவிட்டு, நான் துணைத் தலைவராக இருந்து வருகிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கருதி, என்னை சேலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு மாறுதல் செய்தார்கள். வயதான தாய், தந்தையோடு சேலத்தில் குடியிருக்கிறேன். என் மனைவி சேலத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் டாக்டராகப் பணியாற்றுகிறார். என் குழந்தைகள் சேலத்தில் படிக்கிறார்கள். ஆகவே, மாறுதல் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் சென்றேன். இந்தச் சூழ்நிலையில் என்னை மர்ம நபர்கள் தாக்கினார்கள்.  சேலத்தில் கடைக்குச் சென்றபோது என் வயதான தந்தையும் மர்மமான முறையில் தாக்கப்பட்டார். நான் தாக்கப்பட்டபோது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டேன். அதனால் மருத்துவ விடுப்பு எடுத்தேன். அதற்குச் சம்பளம் தராமல் இழுத்தடித்ததோடு என்னைத் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கும், பின்னர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடிக்கும் மாற்றினார்கள். இப்போது அரியலூருக்கும் மாற்றி இருக்கிறார்கள்.

‘எங்கள் துறையின் முழுக் கட்டுப்பாடும் உயர் அதிகாரிகளிடம் இல்லை. துறை அமைச்சரின் முன்னாள் சிறப்பு நேர்முக உதவியாளர் மணி, அமைச்சரின் தற்போதைய நேர்முக உதவியாளர் கிரிதரன், அமைச்சரின் தற்போதைய சிறப்பு நேர்முக உதவியாளர் சேகர் ஆகிய மூன்று பேரிடம்தான் இருக்கிறது’ என்று முன்னாள் நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் பாஸ்கரனே பதவியில் இருக்கும்போது சொன்ன ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நெடுஞ்சாலைத் துறையில் ஆட்சி செய்கிறார்களா முதல்வரின் பி.ஏ-க்கள்?

இப்போது நெடுஞ்சாலைத்துறையில் முதல்வரின் உதவியாளர்களாக இருக்கும் மூன்று பேருமே அவரின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குப் பணம் கொடுத்தால்தான் இடமாறுதல் வாங்க முடியும்.  நான் தொடர்ந்து ஓர் ஆண்டாக சேலத்தில் உள்ள காலிப் பணியிடத்துக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்தும் கொடுக்காமல் பணியைவிட்டு வெளியேறும் அளவுக்குத் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். இதனால் உளவியல்  ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்’’ என்றார்.

நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளர்கள் சங்க மாநிலத் தலைவரும் சென்னை நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலையத்தின் கோட்டப் பொறியாளருமான வெங்கடாசலம், ‘‘எங்கள் துறையை இந்த உதவியாளர்கள்தான் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற பேச்சு இருக்கிறது. 2014-ல் கான்ட்ராக்டர்களால் இணைத் தலைமைப் பொறியாளர் பரமேஸ்வரன் மிரட்டப்பட்டார். அதைக் கண்டித்து நாங்கள் தர்ணா செய்தோம்.

அப்போது சங்கத்தில் இருந்த பலரைப் பழிவாங்கும் நடவடிக்கையாகத் திசைக்கு ஒருவராகத் தூக்கி அடித்தார்கள். அதை உயர் நீதிமன்றமும் கண்டித்தது. எங்கள் சங்கத் தேர்தலுக்கு 200 பேருக்கு மேல் ஓட்டு போட வர மாட்டார்கள். ஆனால், அன்று 1,000 பேர் ஏ.ஸி பஸ்ஸில் வந்தார்கள். வெற்றி பெற்றதும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள விடுதியில் கும்மாளம் போட அரசுப் பணத்தை விரயம் செய்தனர்’’ என்றார்.

நெடுஞ்சாலைத் துறையில் ஆட்சி செய்கிறார்களா முதல்வரின் பி.ஏ-க்கள்?

நெடுஞ்சாலைத் துறையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளராக இருக்கும் கிரிதரனிடம் இது பற்றிக் கேட்டோம். ‘‘இது முழுக்க முழுக்கப் பொய்யான தகவல். இடமாறுதல் என்பது அவர்களின் துறை சார்ந்த விஷயம். இதில் என்னுடைய தலையீடு எதுவும் கிடையாது. இடமாறுதல் சிறந்த முறையில் நடைபெற்றுள்ளதாக அவர்கள் துறையைச் சேர்ந்தவர்களே சொல்லி இருக்கிறார்கள். மற்றபடி அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது’’ என்றார்.

இதுபற்றி நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் கோதண்டராமன், ‘‘நெடுஞ்சாலைத் துறையில் இடமாறுதல் எங்கள் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இதில் வேறு யாரும் தலையிட முடியாது. விதிகளைப் பின்பற்றித்தான் இடமாறுதல் நடைபெற்றுள்ளது. முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. இவருக்கு மாறுதல் வேண்டும் என்றால் என்னைச் சந்தித்து விண்ணப்பம் கொடுத்தால் செய்து கொடுப்பேன்’’ என்றார்.

எடப்பாடி பழனிசாமி இப்போது அமைச்சர் மட்டுமல்ல, முதலமைச்சர். அவரது துறையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல.

- வீ.கே.ரமேஷ்
படம்: எம்.விஜயகுமார்