Published:Updated:

“பழி தீர்க்காமல் தாலியைக் கழற்றமாட்டேன்!”

“பழி தீர்க்காமல் தாலியைக் கழற்றமாட்டேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பழி தீர்க்காமல் தாலியைக் கழற்றமாட்டேன்!”

டெல்டா பகுதியை மிரட்டும் தொடர் கொலைகள்

டெல்டா மாவட்டங்களில், ‘பழிக்குப் பழி’ கொலைகள் மீண்டும் அரங்கேற ஆரம்பித்துள்ளன. ‘என் கணவரின் மரணத்துக்குக் காரணமானவர்களை, பிணமாகப் பார்க்காமல் தாலியைக் கழற்றமாட்டேன்’ என்ற ஒரு பெண்ணின் சபதத்தால் நடைபெற்றுவரும் தொடர் கொலைகள், டெல்டா ஏரியாவைப் பீதியில் உறைய வைத்துள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே, திருசென்னம்பூண்டியைச் சேர்ந்தவர், பஞ்சாபகேசன். இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் இருந்தன. 2015-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி இரவு, திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில், காரில் வந்த கும்பல் ஒன்று பஞ்சாபகேசனைக் கொலை செய்துவிட்டுத் தப்பியது. சில நாட்களில் அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜா, வின்சென்ட் உள்பட ஏழு பேர் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

“பழி தீர்க்காமல் தாலியைக் கழற்றமாட்டேன்!”

கொல்லப்பட்ட பஞ்சாபகேசனும், கோர்ட்டில் சரணடைந்த செந்தில்குமாரும் ஒரே ஊர்க்காரர்கள்; பால்ய கால நண்பர்கள்; கபடி வீரர்கள். பஞ்சாபகேசன், திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டுவந்தார். அவரின் ஆதரவுடன், திருசென்னம்பூண்டி பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்றார், செந்தில்குமாரின் அண்ணன் ரெங்கராஜ்.

மணல் குவாரி விவகாரத்தில் பஞ்சாபகேசனுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டானது. பஞ்சாபகேசன் தன் ஆட்களுடன் சென்று ரெங்கராஜையும், செந்தில்குமாரையும் கட்டிவைத்து அடித்ததுடன், சிறுநீரை முகத்தில் தெளித்து அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பஞ்சாபகேசன் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சிறையிலிருந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தனர். செந்தில்குமாரின் கூட்டாளியான ராஜாவின் சகோதரிக்கு, திருச்சி உறையூரில் ஜூன் 1-ம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட செந்தில்குமார் மற்றும் வின்சென்ட் ஆகியோர் பைக்கில் ஊர் திரும்பினர். அப்போது, திருச்சி ஓயாமாரி சுடுகாடு அருகே மூன்று கார்களில் வந்த மர்மக் கும்பல் ஒன்று, அவர்களை வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்தது. இந்த வழக்கில் பஞ்சாபகேசனின் மனைவி சுகந்தி, அண்ணன் கனகராஜ், பவுசு செந்தில், வேங்கூர் சரவணன், உடும்பு முருகானந்தம் என 15-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரட்டைக்கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஏழு பேர், முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். பஞ்சாபகேசனின் மனைவி சுகந்தி மட்டும் தலைமறைவாக உள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“பழி தீர்க்காமல் தாலியைக் கழற்றமாட்டேன்!”

சரணடைந்தவர்கள் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “பஞ்சாபகேசன் இறந்தபிறகு, ‘என் கணவரின் கொலைக்குக் காரணமானவர்கள் செத்தால்தான், தாலியைக் கழற்றுவேன்’ எனச் சுகந்தி வைராக்கியத்துடன் இருந்தார். அவர் தொடர்ந்து அழுது புலம்பி வந்தார். இதைப்பார்த்த நாங்கள், பஞ்சாபகேசனின் முதல் நினைவு நாளுக்குள் பழி தீர்க்க முடிவு செய்தோம். ஆனால், அது நடக்கவில்லை. தொடர்ந்து செந்தில்குமாரை வேவு பார்த்துக்கொண்டே இருந்தோம். அவர்கள் சிறையில் இருந்து வெளியே வர எட்டு மாதங்கள் ஆனது. காத்திருந்து இப்போது, சுகந்தி முன்னிலையிலேயே செந்திலையும், வின்சென்டையும் வெட்டிச் சாய்த்தோம்” என்று கூறியுள்ளனர்.

பஞ்சாபகேசனும், செந்தில்குமாரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் பகை இரண்டு சமூகங்களுக்கு இடையேயான பகையாக மாறியது. இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. கடந்த ஜூன் 26-ம் தேதி, பஞ்சாபகேசனின் இரண்டாவது நினைவுநாள். அன்று வெளியான நாளிதழ்களில், ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்’ எனப் பஞ்சாபகேசன் குடும்பத்தார் விளம்பரம் கொடுக்க, எதிர்த் தரப்பு ஆத்திரமடைந்துள்ளது.

தற்போது, மற்ற கொலையாளிகளைப் பஞ்சாபகேசன் தரப்புக் குறிவைப்பதாக ஒருபக்கம் பரபரப்பு. இன்னொரு புறம், கொல்லப்பட்ட செந்தில்குமார் தரப்பும் அதேவேகத்தில் வலம்வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“பழி தீர்க்காமல் தாலியைக் கழற்றமாட்டேன்!”

கொல்லப்பட்ட செந்தில்குமார் தரப்போ, “இந்தக் கொலை வழக்கில் ரவி என்பவரைச் சேர்த்துள்ளார்கள். பஞ்சாபகேசனின் நெருங்கிய நண்பரான ரவி, ஒரு பிரபல ரவுடி. ‘பஞ்சாபகேசனின் மரணத்துக்குப் பழி தீர்ப்போம்’ என ரவி சபதமிட்டார். அதன்படிதான், தற்போது இரட்டைக்கொலை நடந்துள்ளது. ஆனால், வேறொரு ரவியை போலீஸ் கைது செய்துள்ளது. கொலை நடந்த நேரத்தில், அந்த வழியே போலீஸ் வாகனத்தில் துப்பாக்கியுடன் வந்த போலீஸார், கொலையைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் இருந்த முக்கிய நபர் உள்பட, உண்மையான குற்றவாளிகள் பலரும் தப்பித்துவிட்டார்கள்” என்கின்றனர்.

“பஞ்சாபகேசன் இறந்தபின், சுகந்தி வைராக்கியத்துடன் இருந்தது உண்மைதான். ஆனால், கொலை நடந்த இடத்தில் அவர் இல்லை. ஆசிரியரான அவரையும் அப்பாவிகளையும் இந்தக் கொலையில் சேர்த்துள்ளனர்” என்கிறது, பஞ்சாபகேசன் தரப்பு.

டெல்டா மாவட்டத்தில் நடைபெறும் இந்தப் படுகொலைகள், சாதி மோதலாக உருவெடுக்குமோ என்ற அச்சம் இருப்பதால், அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

- நமது நிருபர்