Published:Updated:

“கருத்துச் சொன்னால் கொலை மிரட்டலா?” - விவகாரம் ஆன டி.வி விவாதம்

“கருத்துச் சொன்னால் கொலை மிரட்டலா?” - விவகாரம் ஆன டி.வி விவாதம்
பிரீமியம் ஸ்டோரி
News
“கருத்துச் சொன்னால் கொலை மிரட்டலா?” - விவகாரம் ஆன டி.வி விவாதம்

“கருத்துச் சொன்னால் கொலை மிரட்டலா?” - விவகாரம் ஆன டி.வி விவாதம்

மீண்டும் ஒரு தொலைக்காட்சி விவாதம், சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. யோகா தினம் பற்றி ‘நியூஸ் 7’ தொலைக்காட்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட விவாதத்தில், பெரியாரிய எழுத்தாளர் வே.மதிமாறனும், பி.ஜே.பி பிரமுகர் நாராயணனும் பங்கேற்றனர். அதில் இருவரும் காரசாரமாகப் பேசிக்கொள்ள, பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துவிட்டார்கள். அதற்குப்பின், மதிமாறனுக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாகக் கண்டனக் குரல் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, மதிமாறனிடம் பேசினோம். “பொதுவாக பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் அரசியல் பற்றி நான் பேசுவதில்லை. காரணம், ‘காங்கிரஸ் முன்பு செய்யாததா... யாருமே ஊழலே செய்யாதவர்களா..?’ என விவாதத்தைத் திசை திருப்புவது அவர்களின் வாடிக்கையாக இருக்கிறது. எனவே, அவர்கள் கட்டிக் காக்கும் சாதிய, மதவாதக் கொள்கைகளைக் குறிப்பிட்டு விமர்சிக்கிறேன். இந்துக்களின் கோயில் உள்ள இடத்தில் முஸ்லிம்கள் பிரச்னை செய்வதாக அவர்கள் பேசினால், இந்து மக்களையே கோயிலுக்குள் விடாமல் தடுப்பதைப் பற்றி, தமிழில் வழிபட முடியாததைப் பற்றி நான் பேசுகிறேன். இதே மதத்தில் மக்களைப் பிளவுபடுத்துகிற சாதியமைப்பு முறையைப் பேசுகிறேன்.

“கருத்துச் சொன்னால் கொலை மிரட்டலா?” - விவகாரம் ஆன டி.வி விவாதம்

‘எழுத்தாளர் பெருமாள்முருகன், கோடிக்கணக்கான இந்துக்களை இழிவுபடுத்திவிட்டார்’ என அர்ஜுன் சம்பத், ஒரு விவாதத்தில் பேசினார். என் முறை வந்தபோது, ‘பெருமாள்முருகனைவிட மிக மோசமாக, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அர்ஜுன் சம்பத்தையும் என்னையும் சேர்த்து மனு என்ற எழுத்தாளர் இழிவுபடுத்தி இருக்கிறார்’ என்று சொன்னேன். அதற்கு, ‘மனு தர்மத்தில் அப்படியெல்லாம் எழுதப்படவில்லை’ என அர்ஜுன் சம்பத் மழுப்பினாரே தவிர, உரிய பதிலை அவரால் சொல்லமுடியவில்லை. டாக்டர் அம்பேத்கர் தீவிரமாக சாதிய இந்து அமைப்பை எதிர்த்தவர். அவரையும் இந்துத்துவாவின் ஆதரவாளர் என்று சொல்கிறபோது, அம்பேத்கரின் பேச்சையும் எழுத்தையும் வைத்து மறுக்கிறேன்.
கேள்விகளுக்கு உரிய பதிலைக் கூறாமல், கேட்பவர்களைத் திட்டுவது, நாம் நேசிக்கும் தலைவர்களை இழிவுபடுத்துவது என்ற அளவில்தான் அவர்களின் எதிர்வினை இருக்கிறது.

யோகா தொடர்பான விவாதத்தைப் பொறுத்தவரை, ‘கடும் உடல் உழைப்பில் ஈடுபட்டிருக்கும் பெரும்பான்மையான இந்துக்களுக்கு யோகா தேவை இல்லை; சிறு குழுவினரின் பண்பாட்டைத் திணிக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டேன். பி.ஜே.பி-யின் நாராயணனோ, அதை ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்துவதாக விவாதத்தை மாற்றி, ஒரு கட்டத்தில் அவரே இன்ன சாதி என ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு, கோபம் கொப்பளிக்கப் பேசினார்.

தொலைக்காட்சி உரையாடல்களில், என்னுடைய வாதத்துக்குப் பதில் கூற முடியாமல், என்னை மிரட்டுவதைப் போலப் பேசுவது தொடர்ந்து நடக்கிறது. அன்றைக்குக்கூட     பி.ஜே.பி-யின் நாராயணன், கடும் எச்சரிக்கை விடுத்துப் பேசினார். அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் உள்ள இராம.ரவிக்குமார் என்பவர், ‘ஆயுதம் வைத்துள்ள கடவுள்கள் மனித உருவில் வந்து மதிமாறனை பலியெடுக்கும்’ என்றெல்லாம் கூறியிருக்கிறார். அவர்கள் செய்யவேண்டியது, விவாதத்தில் உரிய பதில் கூறவேண்டும் என்பதுதான்” எனத் தன் பாணியில் பேசினார், மதிமாறன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“கருத்துச் சொன்னால் கொலை மிரட்டலா?” - விவகாரம் ஆன டி.வி விவாதம்

பி.ஜே.பி பிரமுகர்  நாராயணனிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘தமிழ்த் தொலைக்காட்சிகளில் இதுவரை 2 ஆயிரம் உரையாடல்களில் பங்கேற்றிருப்பேன். கருத்துமாறுபாடு கொண்ட அருள்மொழி, சுப.வீரபாண்டியன் ஆகியோருடன் பேசியிருக்கிறேன். எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. யோகா தின விவாதத்தில், மதிமாறன், ‘பார்ப்பனர்’ எனக் குறிப்பிட்ட சாதியைச் சொல்லிப் பேசினார். அப்படிக் குறிப்பிடுவது தவறு என்பதைக்கூட நெறியாளரிடம்தான் கூறினேன். பொதுவெளியில் எந்த ஒரு சாதியையோ, மதத்தையோ குறிப்பிடுவதும், திட்டுவதும் தவறு. சாதியை ஒழிப்போம் என்பவர்கள், எந்த ஒரு சாதியையும் குறிப்பிட்டுப் பேசுவது தவறுதானே? அதைத் தவறு என்று சொல்லாதவர்கள், பதிலுக்கு ஆட்சேபம் தெரிவிப்பதை மட்டும் குறைசொல்லமுடியுமா?” என்றார்.

மதிமாறனுக்கு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் இராம.ரவிக்குமாரிடம் பேசினோம்.

“கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளவே நாங்களும் விரும்புகிறோம். மதிமாறனுடன் பகிரங்க விவாதம் நடத்தவும் தயாராக இருக்கிறோம். ஆனால், இந்து மதத்தை மட்டும் தொடர்ந்து தவறாகப் பேசுவதை, கீழ்த்தரமான விளம்பரப்படுத்தலாகவே நாங்கள் பார்க்கிறோம். இதை, மதிமாறன் நிறுத்திக்கொள்ளவேண்டும். எங்கள் அய்யா அம்பேத்கர், இந்து மதத்தில் உள்ள தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தார். அவரையும், இந்து மதத்தை இழிவுபடுத்திய   ஈ.வெ.ரா-வையும் ஒரே தட்டில் வைப்பது மிகவும் தவறானது. என்னுடைய முகநூல் பதிவைக் கொலைமிரட்டல் எனத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் என அவர்கள் இது பற்றி புகார்செய்தால், அதை எதிர்கொள்வேன்” என்றார் அவர்.

கருத்தும் கருத்தும் மட்டும் மோதட்டுமே!

- இரா.தமிழ்க்கனல்