Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 26 - இலவசத்துக்கும் இன்ஷூரன்ஸூக்கும் இடையே நசுங்கும் நோயாளி!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 26 - இலவசத்துக்கும் இன்ஷூரன்ஸூக்கும் இடையே நசுங்கும் நோயாளி!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 26 - இலவசத்துக்கும் இன்ஷூரன்ஸூக்கும் இடையே நசுங்கும் நோயாளி!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 26 - இலவசத்துக்கும் இன்ஷூரன்ஸூக்கும் இடையே நசுங்கும் நோயாளி!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 26 - இலவசத்துக்கும் இன்ஷூரன்ஸூக்கும் இடையே நசுங்கும் நோயாளி!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 26 - இலவசத்துக்கும் இன்ஷூரன்ஸூக்கும் இடையே நசுங்கும் நோயாளி!

‘இவர்களும் உங்கள் ஆட்சியில் இருக்கும் மக்கள்தான். ஆனால், இங்கு பிறக்கும் குழந்தைகளை மட்டும் அற்பாயுளில் சாக விடுகிறீர்களே?’ எனக் கோபமாகக் கேட்டது அந்த கமிட்டி. அந்தக் கமிட்டியை உருவாக்கிய அரசிடமே கேள்வி கேட்கும் துணிச்சல் அவர்களுக்கு இருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இந்தியா அடிமைப்பட்டு இருந்தபோது, இரண்டாம் உலகப் போர் வந்தது. அந்தப் போர்க் காலத்தில், இந்தியா சுகாதார வசதிகள் இல்லாமல் தவித்துப் போயிருந்தது. இந்தியாவில் வசூலித்த அத்தனை வரிப்பணத்தையும் போருக்குச் செலவிட்டுவிட்டு, நம் மக்களின் சுகாதார வாழ்வையே அதற்கு விலையாகக் கொடுத்தது பிரிட்டிஷ் அரசு. அதனால், எங்கெங்கும் கொள்ளை நோய்கள் பரவி, நூற்றுக்கணக்கில் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்தனர். இந்த மரணங்களைத் தடுத்து நிறுத்த வழி தெரியாத அரசு, சர். ஜோசப் போர் என்பவர் தலைமையில் சுகாதார ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கமிட்டியை அமைத்தது. 1943-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தக் கமிட்டிக்குக் கொடுத்த வேலை, ‘இந்திய சுகாதாரத் துறையின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும்’ என ஆராய்ந்து சொல்வதே!

பிரிட்டிஷ் மருத்துவ நிபுணர்கள் இடம்பெற்றிருந்த அந்தக் கமிட்டி, பிரிட்டிஷ் அரசைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. இந்தியாவில் பச்சிளம் குழந்தைகள் அதிகமாக மரணமடைவதை பிரிட்டன் குழந்தைகளின் புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டும், இந்தியர்களைவிட பிரிட்டிஷ் மக்களின் ஆயுள் அதிகமாக இருப்பதைச் சுட்டிக் காட்டியும், ‘இந்தியர்களும் உங்கள் குடிமக்கள்தானே... உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?’ என்று அரசைக் கேள்வி கேட்டது அந்த அறிக்கை. ‘தடுப்பு மருத்துவத்துக்கும், ஆரம்பநிலை சிகிச்சைக்கும் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியது இந்த அறிக்கை. இந்தியாவுக்குச் சுதந்திரம் தந்துவிட்டு வெளியேறும் அவசரத்தில் இருந்த பிரிட்டிஷ் அரசுக்கு இதையெல்லாம் கவனிக்க நேரம் இல்லை.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 26 - இலவசத்துக்கும் இன்ஷூரன்ஸூக்கும் இடையே நசுங்கும் நோயாளி!

நம் ஆட்சியாளர்கள் இதைச் செய்தார்களா? பெரியம்மை, பிளேக் போன்ற பல கொள்ளை நோய்களை வேரறுத்து மகத்தான சாதனை படைத்துள்ளோம். ஆனால், முழுமையான சுகாதாரம் என்ற இலக்கை இன்னும் நாம் அடையவில்லை. நம்மைவிடக் கீழே இருந்தது சீனா. ஆனால், இன்று நம்மை மிரட்டும் வகையில் மகத்தான முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. மக்கள்தொகை அடிப்படையில் உலகின் இரண்டு பெரிய நாடுகள் இவைதான். ஏழ்மையும் வறுமையுமே சொந்தமாக இருந்து, கிராமங்களும் விவசாயமுமே பிரதானமாக இருந்த தேசங்கள் இவை. இன்று அதிவேகமாக வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளாக இந்த இரண்டு நாடுகளும்தான் குறிப்பிடப்படுகின்றன. ‘மக்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் அமைதியும் வளமும் வளர்ச்சியும் சாத்தியமாகும்’ என்பதை உணர்ந்திருந்தது சீனா. முயலை ஆமை வென்ற கதை போல அது முன்னேறிச் சென்றது.

1949-ல் சீனாவில் 10,000 பேருக்கு ஒரு டாக்டரே இருந்தார். நகரங்களிலேயே போதுமான டாக்டர்கள் இல்லை என்கிறபோது, கிராமங்களுக்கு யாருமே போகவில்லை. சீனத் தலைவர் மாவோ, ஓரளவு படித்த இளைஞர்களுக்கு ஆறு மாத கால மருத்துவப் பயிற்சி தந்து கிராமங்களுக்கு அனுப்பி வைக்க ஒரு திட்டத்தை உருவாக்கினார். இது ‘வெறுங்கால் மருத்துவர் திட்டம்’ எனப்பட்டது. இந்த ‘மக்கள் மருத்துவர்கள்’ கிராமங்களில் தங்கி, சிகிச்சை வழங்கினர்.

Schictosoma எனும் நத்தைப் புழுக்களே அப்போது சீனாவுக்குப் பெரும் சவாலாக இருந்தது. தண்ணீர் வழியே பரவும் இந்தப் புழுக்கள் வயிற்றுக்குள் பெருகி, சீன மக்கள் பலரும் தொப்பையோடு திரிந்தனர். இதற்கு சுத்தமற்ற நீரும், கழிப்பிட வசதிகளற்ற, ஆரோக்கியக் குறைவான சூழலுமே காரணம் என்பதைக் கண்டறிந்தனர் இந்தக் கிராமப்புற மருத்துவர்கள். அசுத்த நீர் தேங்கிக் கிடந்த சதுப்பு நிலங்களைத் தூய்மை செய்யும் பணியில் மக்களுடன் கூடிப் பணியாற்றினர். மூன்றே ஆண்டுகளில் சுமார் 1 கோடி கழிப்பறைகள் கட்டி முடிக்கப் பட்டன. ‘‘கடவுள் செய்ய முடியாததை மக்கள் செய்து முடித்தனர்’’ என்று பெருமையுடன் மாவோ கூறினார். உலகின் ஆரோக்கியம் மிக்க நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்தை இருபதே ஆண்டுகளில் சீனா பிடித்தது.

இந்த வரலாற்றை மறந்ததால், இப்போது இந்தியா போலவே சீனாவிலும் மருத்துவத்துறை பெரும் சிக்கலில் இருக்கிறது. சிகிச்சைக் கட்டணம் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. டாக்டர்கள் மீது மக்களின் நம்பிக்கை குறைந்திருக்கிறது. மருந்து நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தேவையற்ற மாத்திரைகளை எழுதுவதாகவும், லேபாரட்டரிகளுடன் பேசி வைத்துக்கொண்டு அவசியமில்லாத பரிசோதனைகளை எழுதுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இன்னொரு பக்கம், டாக்டர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகி உள்ளது. சீனாவின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைக்கு ஒரு நாளில் சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை மட்டும் 20,000. அரசு மருத்துவமனைகள் பிதுங்கி வழிகின்றன.
 
வேறு வழியின்றி சீன அரசு இப்போது தனியார் மருத்துவமனைகளை ஊக்குவித்து வருகிறது. அது மட்டுமில்லை... மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்து, சில ஆண்டுகளிலேயே 95 சதவிகித மக்களுக்குக் காப்பீட்டு வசதியை வழங்கிவிட்டது. ஆனால், இது மக்களுக்கோ, காப்பீட்டு நிறுவனங்களுக்கோ தேவையற்ற செலவுகளை ஏற்படுத்த விடாமல், கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மருந்துகளின் விலையை அரசே கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. ஒவ்வொரு சிகிச்சைக்கும் என்ன கட்டணம் என வரையறை செய்துள்ளது அரசு. இப்போது தலைநகர் பெய்ஜிங்கில் அமலில் இருக்கும் இந்த விதி, விரைவில் நாடு முழுக்க அமலாகும். சாதாரண பிரச்னைகளுக்கு  மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் சிகிச்சை கொடுத்து, ஏராளமான கட்டணம் வாங்கிவிட முடியாது. சிம்பிளான சிகிச்சைகள் மட்டுமே தேவை என்றால், அந்த நோயாளியை ஆங்காங்கே இருக்கும் சிறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவிட வேண்டும். இதற்காக நகரங்களிலும், கிராமங்களிலும் ஏராளமான ‘கம்யூனிட்டி மருத்துவமனைகள்’ திறக்கப்பட்டுள்ளன.

இது எப்படிப்பட்ட விளைவுகளைத் தரும் என்பதில் எல்லோருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் நாம் என்ன செய்திருக்கிறோம்? அரசு மருத்துவமனைகளுக்குப் போதுமான நிதி ஒதுக்காமல், தேவையான வசதிகளைச் செய்து தராமல், அவற்றைப் பற்றிய அவநம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்தி வைத்துவிட்டோம். சரி, காப்பீடுதான் தீர்வு என்றால், அதையும் முறையாகச் செய்யவில்லை. ‘இந்தியாவில் இன்னமும் 76 சதவிகித மக்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை’ என்கின்றன புள்ளி விவரங்கள். இலவசத்துக்கும் இன்ஷூரன்ஸுக்கும் இடையே நசுங்கித் தவிக்கிறார் நோயாளி.
அரசு தனது பொறுப்பைக் கைகழுவிவிட்டு, மக்களை வீதியில் நிறுத்தக்கூடாது.

(நலம் அறிவோம்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!