Published:Updated:

மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை

மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை

சிறுகதை: நரன், ஓவியங்கள்: செந்தில்

மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை

சிறுகதை: நரன், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை

ழனி,  சிறு வயது முதலே பெரியாண்டவர்  சைக்கிள் கடையில் வேலை செய்தான். அவன்  கொஞ்சம்  கெந்திக் கெந்தி  நடப்பான். காலையில் முதலாளியின் வீட்டுக்குச் சென்று கடையின்  சாவியை வாங்கிவந்து கடையைத் திறப்பது முதல்  கடை முன் இருக்கும் மண்ணைச்  சுத்தம் செய்து நீர் தெளித்து, முந்தைய நாளில் குறை வேலையாகவிட்ட சைக்கிள்களை மீண்டும்  வெளியே எடுத்து வைப்பதுவரை எல்லாமே இவன்தான் செய்வான். காலை 8 மணிக்கு முன்பே, வேலை செய்வதற்கு ஏற்ப கடையைத் தயார்செய்துவிட வேண்டும். காலையில் பள்ளிக்குச் செல்லும் சில சைக்கிள்கள் காற்று நிரப்பிக்கொள்ள வரும். ஆண்களின் சைக்கிள் என்றால், அவர்களையே நிரப்பிக்கொள்ளச்  சொல்வான். பெண் பிள்ளைகளின் சைக்கிள்களுக்கு அவனே முன்வந்து காற்று நிரப்புவான். பதினோரு  வயதிலிருந்து வேலை செய்கிறான். வந்ததுமே பழைய டிரவுசரையும் பனியனையும் அணிந்துகொள்ள வேண்டும். அது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. காலை 8 மணிக்குமேல்தான் சாலைகளில் பெண் பிள்ளைகளின் நடமாட்டம் இருக்கும். இரவு கடை முடிய 10 மணி ஆகிவிடும். சாலை, பெண்கள் நடமாட்டம் இல்லாத இடமாக மாறிவிடும். எப்போதும் அவனை அதே அழுக்கு டிரவுசரோடும் பனியனோடும்தான் எல்லோரும் பார்த்திருக்கிறார்கள். பெண்பிள்ளைகள் கல்லூரிக்கோ, பள்ளிக்கோ செல்லும்போது, நல்ல உடைகள் உடுத்தி அவர்கள் தம்மைப் பார்க்க வேண்டும் என அவனுக்கு ஏக்கமாக இருக்கும். பழனிக்கு 27 வயது. வீட்டில் யாரும் அவன் திருமணத்தைப்பற்றிக் குறைப்பட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. காலில் குறைபாடு இருந்தாலும், வயதுக்குரிய அத்தனை விஷயங்களும் தேவையாகத்தான் இருக்கின்றன.

மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை

அன்று இரவு கடை மூட கொஞ்சநேரம்தான் இருக்கும். அப்போது மரிய புஷ்பம் தன் சைக்கிளுக்குக் காற்று நிரப்ப வந்தாள். அந்த சைக்கிள், முரட்டு ஆண்கள் ஓட்டும் படியான, அகலமான கேரியரும் குறுக்குக் கம்பி போட்டதுமான வலுவான சைக்கிள்.  அது அவளுக்குப் பொருத்த மற்றதுபோலத் தெரிந்தது. மரிய புஷ்பத்தை,  இந்தக் கடைக்கு வேலைக்கு வந்ததிலிருந்தே அவனுக்குத் தெரியும். அவள் அப்போது உயர் நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். வாரத்தின் இறுதிநாளில் பெரிதாக வேலை ஒன்றும் இருக்காது.அன்று பழனிக்கு சந்தோஷமாக இருக்கும். அன்று முழுக்க வெளுத்த லுங்கியும் கட்டம்போட்ட சட்டையும் போட முதலாளி அனுமதிப்பார். 

 பெண்கள் பிரத்யேகமாக ஓட்டும் அழகும் நளினமுமான வொயர் பிரேக் சைக்கிளின் மெலிந்த கேரியரில் கறுப்பு உறையும், ஓரங்களில் சிவப்பு நிறமும் விரவிய மொந்தையான விவிலியத்தைக் கவ்வ வைத்துக்கொண்டு காற்று நிரப்ப வாரம் தவறாமல் வந்துவிடுவாள். பழனியின்  வயதிருக்கும் அவளின் தம்பி விமல்சனும் உடன் வருவான். பழனிக்கு, அவனின் பெயர் பிடிக்கும். அவள் எப்போதாவது கடைக்கு வரும்போது அவனைக் கூப்பிட வேண்டுமென்றால், அந்தப் பெயரை உச்சரிப்பாள். `நமக்கு மட்டும் ஏன் இப்படி பெயர் வைத்துவிட்டார்கள்?’ என்பதுபோல நினைப்பான். அவன் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெரும்பாலும் உடலை சரிபாதியாகத் திறப்பது மாதிரி இருக்கும் பொத்தான்கள் அணிந்த சட்டைகளை உடுத்த மாட்டான். சிறிது நேரம் தலையை மட்டும் காணாமல்போகச் செய்து தலை வழியாகச் செருகி, தலை வழியாக  உரித்து எடுக்கும் நிறமான கைவைத்த பனியன்களை அணிந்திருப்பான். மரிய புஷ்பத்தை `அக்கா’ என அழைப்பதைத் தவிர்ப்பான். ஆனால், மரிய புஷ்பம் அவனை `தம்பி’ என அழைத்து  ``காத்து பிடிக்கணும்’’ எனச் சொல்வாள். முதலாளி இருக்கும் வேளை தவிர, காற்று நிரப்ப எல்லோரிடமும் வாங்கும் பத்து பைசாவை மரிய புஷ்பத்திடம் வாங்க மாட்டான். ‘இருக்கட்டும்’ எனச் சொல்லிவிடுவான்.

சில நேரம் அந்தப் பிதுக்கு எண்ணெய் டப்பாவை எடுத்துவந்து செயின் பிரேக் இணைப்புகளுக்கு எண்ணெய் விடுவான். கேட்காமலேயே கட்டைவிரலால் பெல்லை அழுத்திப்பார்த்து அதன் ஒலியைப் பெருக்குவான். மரிய புஷ்பத்துக்கு இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்.  எப்போதும்  சிரித்தமுகமாக இருப்பாள். இப்போதெல்லாம் அவள் முகத்தில் ஒளியே  இல்லை.

அவள் ஹாண்ட் பாரில் கால் முட்டி தட்டுவதாகச் சொல்லியிருக்க வேண்டும். ஒரு சித்திரை மாத அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் கடைக்கு வந்தவள், திடுமென வளர்ந்துவிட்ட பிள்ளைபோல் தெரிந்தாள். கடை முதலாளி, புதிய சைக்கிள் வாங்கிக்கொள்ளும்படி யோசனை சொன்னார்.

 மரிய  புஷ்பத்தின் அப்பாவும் அதையேதான் யோசித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார். ஆண்கள் சைக்கிள்போல பெரிதாகக் குறுக்குக் கம்பி இல்லாது, முன் கம்பி வளைவாய் இருக்கும் கரும்பச்சை நிற  அட்லஸ் சைக்கிள். அவளின் அப்பா மறுப்பு ஏதும் சொல்லவில்லை. இன்னும் அவளைச் சிறுபிள்ளையாகப் பாவித்து `இவ்வளவு பெரிய சைக்கிளை எப்படி ஓட்டுவாள்?’ என்பதுபோல கவலைப்பட்டார்.

கடை முதலாளி சொன்னார், ``ஓட்டிப் பார்க்கச் சொல்லுங்க.’’ சைக்கிளை சந்தோஷமாக எடுத்து ஓட்டினாள் மரிய புஷ்பம். ஓட்டும்போது இன்னும் பெரிய பிள்ளையைப்போல தெரிந்தாள். கடை முதலாளியும் கல்லாவைவிட்டு அவளின் அப்பாவோடு சாலையில் வந்து பார்த்தார். பழனியும் கெந்திக் கெந்தி வந்து சாலையைப்  பார்த்தான். துளிப் பிசகு இல்லாமல் நன்றாக ஓட்டினாள். பந்தைய நடுவரைப்போல், முதலாளி சொன்னார், ``அபாரம்.’’ அதன்பிறகே, முழு திருப்தியுடன் மரிய புஷ்பத்தின் அப்பா வாங்கிக் கொடுத்தார். முதலாளி பழைய சைக்கிளைப் பெற்றுக்கொண்டு புதியதன் விலையில் நான்கில் ஒரு பாகம் விலையைக் குறைத்தார். இப்போதும் புதியது போலவே இருக்கும் அந்த சைக்கிளை, முதலாளி இன்னும் ஒரு மடங்கு லாபத்துக்கு விற்றுவிடுவார் என்பது பழனிக்குத் தெரியும். ஆனால், மரியத்தின் அப்பா, அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை

முதலாளி, இரண்டு நாள்களில் வந்து புதிய சைக்கிளைப் பெற்றுக் கொள்ளச் சொன்னார். இரண்டு நாள் கழித்து ஒரு மாலை நேரத்தில், புதிய சைக்கிளை எடுப்பதற்காக மரியத்தின் அப்பா, தம்பி, மரியம் மூவரும் வந்திருந்தனர். ஏதோ வெளியூருக்குச் செல்பவர்களைப்போல் நல்ல துணி உடுத்தியிருந்தனர். முதலாளியிடம் மீதித்தொகையைக் கொடுத்துவிட்டு  சாவியை வாங்கினார்கள். அந்தச் சாவிக்குப் புதிய கீ செயின்  ஒன்றை இலவசமாகக் கோத்துக் கொடுக்கச் சொன்னார் முதலாளி. அந்தச் சலுகையை மரியம் பெரிதும் விரும்பினாள். கொத்திலிருந்து அவளே ஒன்றைத் தெரிவுசெய்து கொடுத்தாள். பழனி, தன் பங்காக சைக்கிளின் முன் பின் சக்கரங்களின் அச்சில் நான்கோ ஐந்தோ அடர்த்தியான நிறத்திலிருக்கும் பூவாக நினைக்கத் தோன்றும் குச்சிக் குச்சி பிளாஸ்டிக் நார்களின்  தொகுப்பைக் கோத்துவிட்டிருந்தான். சக்கரத்தைக் கவனிக்கும்போது அவள் அதையும் பார்த்துப் பூப்போல முகத்தை விரித்தாள். பழனிக்கு மனக்கிளர்ச்சியாக இருந்தது. கிளம்பும் போது மரியம், அவள் அப்பாவிடம் ஏதோ சொன்னாள். அவள் அப்பா, உடனே தன் சட்டைப் பையிலிருந்து  பத்து ரூபாயை எடுத்து  ``டீ செலவுக்கு  வெச்சுக் கோப்பா’’ என்று பழனியின் கையில் திணித்தார். அவனுக்குச் சங்கடமாகயிருந்தது. ஏதோ ஒன்று உடனே அணைந்துவிட்டதுபோல் உணர்ந்தான். அவர்கள் மூவரும் தேவாலயம் இருக்கும் திசை நோக்கிச் சென்றார்கள்.

 மரிய புஷ்பம், கல்லூரியில் சேர்ந்துவிட்டதை அறிந்தான். நெடுநாளுக்குப்பிறகு, ஒருநாள் மரிய புஷ்பம் அரை சேலை அணிந்த வேறொரு பெண்ணின் உதவியோடு சைக்கிளின் பின்பக்கத்தைக் கொஞ்சமும் தரையில்  தோயாதவாறு உயர்த்திப் பிடித்தபடி  கடைக்கு வந்தாள். இவன் உள்பக்கமாகத் திரும்பி வேறொரு சைக்கிளுக்கு  பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தான். திரும்பிப் பார்க்கையில், கணேசன், மரியத்தின் சைக்கிளைக் குனிந்து கவனித்து, அவளின் பாவாடை சைக்கிள் செயினில்  கறுப்பு கிரீஸ் கரையோடு சிக்கியிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். பஞ்சரை அப்படியே போட்டு விட்டு  வேகவேகமாக அங்கே போனான்.  தான் முனைந்து யோசனை சொல்ல நினைப்ப தற்குள்,  கணேசன்  செயினைப் பின்னகர்த்தி அந்தப் பாவாடையை மெள்ள  தொட்டு வெளியே எடுத்துக்கொண்டிருந்தான். கெரண்டைக்குமேல் சிறு அரும்பு முடிகளோடு  இரண்டு விரல்களுக்கு இடையே கால் தெரிந்தது. கணேசன், இவனிலும் ஒரு வயது இளையவன். வேலைக்குச் சேர்ந்து  ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. துறுதுறுவென இருப்பதாக, அவன்  இல்லாதபோது கடையின் மூத்த ஊழியரான ராசு அண்ணனிடம் சொல்லியிருக்கிறார் முதலாளி. அவனுக்குக் கொஞ்சநாள்களாக பீடி குடிக்கும் பழக்கம் இருப்பதும், செக்ஸ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருப்பதும் பழனிக்குத் தெரியும். பழனிக்கு வேகவேகமாக ஏதோ அடித்துக்கொள்வதுபோல் இருந்தது. தானும் கையைக் கொண்டுபோனான். ``இல்லை... எடுத்துட்டேன். இன்னும் கொஞ்சம்தான்’’ என்று  கணேசன் சொன்னான். `எனக்குத் தெரியும். நீ உன் வேலையைப் பாரு’  என்று சொல்வதுபோல் இருந்தது பழனிக்கு.

அதே நேரம், பழனியை அழைத்து டீ குடித்த காலி டம்ளர்களைக் கொண்டுபோய் மாரியப்பன் கடையில் கொடுத்துவிட்டு வரச் சொன்னார் முதலாளி. வேறு வழியில்லாமல், அங்கு இருக்கும் காலி கண்ணாடி டம்ளர்களை  எடுத்து  வட்டவட்டமாகத் துளை இருக்கும் இரும்புக்கம்பி தூக்குக்குள் செருகி எடுத்துக்கொண்டு கெந்திக் கெந்திப் போனான். உடல், அவமானத்தால் ஒரு நிமிடத்துக்குள் வெடித்துக் கிழிந்துவிடுவதுபோல் இருந்தது. வளைவு திரும்பியதும் முதலாளியும் கணேசனும் டீ குடித்த கண்ணாடி டம்ளர்களைத் தேடி எடுத்து சுவரில் கோபமாக அறைந்தான். சுக்கல் சுக்கலாக உடைந்தன.

வெகுநேரம் கழித்து வந்தான். திரும்பி வந்தபோது கடையில் முதலாளி இல்லை. ராசு அண்ணனிடம் ``மேலுக்குச் சரியில்லை’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான். அடுத்த நாள் கடைக்குப் போகவில்லை.  இரண்டாம் நாள் காலையிலேயே ராசு அண்ணன் வீட்டுக்குத் தேடி வந்தார். கணேசன், கல்லாவிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்துவிட்டான் என்றும், முதலாளி கணக்கு முடித்து அனுப்பிவிட்டதாகவும், கணவன்  இல்லாத அவனின் அம்மா கடை வாசலில் வந்து அழுதபடி மன்னித்துச் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டபோதும், முதலாளி சேர்த்துக்கொள்ளவில்லை என்றும் உடனே உன்னை வரச்சொல்லி முதலாளி சொன்னதாக ராசு அண்ணன் சொன்னதும் பழனியின் மனசுக்குள் சட்டென ஆயிரம் திரிநாவிட்ட எண்ணெய் விளக்குகள் எரிந்தன. கூச்சமாக இருப்பதுபோல உணரத்  தொடங்கினான். ``போங்க, கிளம்பி வர்றேன்’’ என்று சொன்னான். முதலாளி அன்று டீயோடு வடையும் கடைக் கணக்கில் வாங்கிக் கொடுத்தார். வேலை முடிந்து கிளம்பும்போது இந்த மாதத்திலிருந்து சம்பளத்தில் நூறு ரூபாய் உயர்த்திக் கொடுப்பதாகச் சொன்னார்.

 அதன் பிறகு, நெடுநாள்களாக மரிய புஷ்பத்தை அவன் சாலை களில் பார்க்கவில்லை. கடைக்கும் வருவதில்லை. உத்தேசமாக அவளின் வீடு இருக்கும் திசையை நோக்கிப் பல நாள்கள் யதார்த்த மாகக் கண்ணில் படுவாள் என்று நினைத்து, கடையில் இருப்பதி லேயே நல்ல சைக்கிளை எடுத்துக் கொண்டு சுற்றியிருக்கிறான். அவள் கல்லூரி முடிந்து செல்லும் வழிகளில், ஞாயிற்றுக் கிழமைகளில்  செல்லும் தேவாலய சாலைகளிலும் தேடினான். ஒரு பகல் பொழுதில் அந்தத் தேவாலயத்தைக் கடந்து செல்கையில் உள்ளே போய்ப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. திறந்து கிடந்த தேவாலயத்தில், தேவாலய அமைதி தவிர யாருமே இல்லை. கன்னி மேரி மட்டும் தன் சிறு மகனைக் கையில் சுமந்தபடி, உள்ளே நுழைபவர் களை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். `இண்டாயிரம் வருடங்களாக  இந்தக் குழந்தையை இறக்கிவிடாமல் சுமந்துகொண்டே இருக்கிறாளே... பாவம், கை நோகாதா இந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு?’ என்பதுபோல நினைத்துக் கொண் டான். சொரூபத்தின் முன்னால், சில பிரார்த்தனைகள் மெழுகுக் குச்சிகளில் சுடர் பந்தமாக எரிந்தன.  இரண்டாயிரம் வருடங்களாகக் கொண்டாடப்படும்  இந்தக் குழந்தையின் பிறந்த தினத்துக்கு இந்த வருடமாவது வரவேண்டும் என நினைத்துக்கொண்டான். ஆலய மையத்தில் பாவமன்னிப்புக் கூண்டு இருந்தது. `கூண்டின் வெளிப்புறம் இருந்து பாதிரியாரிடம் ஒப்புக்கொடுக்க அந்தப் பூஞ்சையான பெண்  என்ன பாவம் செய்திருப்பாள்?’ என்று யோசிக்கத்  தொடங்கினான்.

ஒரு மூலையில், சிறு துண்டு கல்தூணின் மீது கல்லால் ஆன தீர்த்தத்தொட்டி இருந்தது. தீர்த்தத் தொட்டியில் ஞான முழுக்கிட்டு `இன்று முதல் உன்னை  `ஜானி’  என்று அழைப்பார்கள்’ என்று யாரோ சொல்வதுபோல் இருந்தது. பழனி திடுக்கிட்டு வெளியே வந்துவிட்டான்.

 பல மாதங்கள் கழிந்து, ஒருநாள் அவளின் தம்பியை தேநீர்க் கடை ஒன்றில் பார்த்துவிட்டான். மிக உயரமாக வளர்ந்திருந்தான். மீசை தாடியெல்லாம்கூட வளர்ந்திருந்தன.  அமைதியான முகத்தோடு, அவனிலும் சிறிய பையனைப்போல்  இருந்தான். இப்போது எந்தவிதமான பதற்றமும் இல்லாமல், கடைக்கு வெளியே நின்று ஒரு கையில் தேநீரும், மறுகையில் சிகரெட்டையும் வைத்து இரண்டு புகையையும் அருந்தியபடி இருந்தான். இவனுக்கு ஆர்வமும் கோபமுமாக அவனை நோக்கிக் கெந்திக் கெந்திப் போனான். யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதுபோல போனதும் சத்தமாக  ``முத்து அண்ணே... ஒரு டீ’’ என்றான். கையில் சூடான கண்ணாடி டம்ளரைப் பிடித்துக்கொண்டு வேண்டுமென்றே அவன் பக்கத்தில் போய் நின்றான். அவன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவன் கையிலிருந்த நேரம், தேநீர், சிகரெட் எல்லாமே கரைந்துகொண்டே இருந்தன. `மரிய புஷ்பத்தை எங்கே என்று கேட்டுவிடலாமா?’ என நினைத்தான். இப்படி ஆரம்பித்தான்,  ``தம்பி... என்ன கடைப்பக்கம் ஆளயே காணோம்?’’ இவனின் தயக்கமும் மெலிந்ததுமான குரலும் அவனுக்குப் போய்ச் சேரவில்லை. அதற்குள் அவன் காசைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினான். அப்போதுதான் பார்த்தான், அவன் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பதை.

ஒருநாள் புழுக்கமான மதிய வெயிலில்  பஜார்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது, `முன்னே செல்லும் சைக்கிளில் பின்னே அமர்ந்து செல்வது  மரிய புஷ்பமோ?’ என்பதுபோலத் தோன்றியது.

ஒற்றைக்காலால் பெடலை விரைந்து உந்தினான். சூம்பிய இடதுகால் இடதுபுறத்தில் வெறுமனே தொங்கிக்கொண்டிருந்தது. மரிய புஷ்பம்தான், யாரோ ஒருவனின் முதுகின் பின்னால் துருவேறிய  அகன்ற கேரியர் இருக்கும் சைக்கிளில் பின்னால், அமர்ந்து இடதுபுறம் இருக்கும் கடைவீதியை வெறித்துப் பார்த்தபடி சுரத்தே இல்லாமல் போய்க்கொண்டிருந்தாள். கழுத்தில் மஞ்சள் சரடு மட்டும் தொங்கியது. மெலிந்து ஒளி குன்றிய முகம். யதார்த்தமாகப் பின்னால் திருப்பிப் பார்த்தவள், பழனியைப் பார்த்துவிட்டாள். இறுக்கமான முகத்தைக் கொஞ்சம் தளர்த்தி, மிக மிகச் சிறியதாகப் புன்முறுவல் செய்தாள். பிறகு, மீண்டும் இடதுபக்கக் கடைவீதியைப் பார்க்கத் தொடங்கி விட்டாள். கொஞ்ச நேரம் பெடலை மிதிப்பதை நிறுத்திவைத்தான் பழனி. சைக்கிள்,  வேகத்தைக் குறைந்துத் தளர்ந்தது.
அதன் பிறகு, பல வருடங்கள் மரிய புஷ்பத்தின் நினைப்பே இல்லாமல் இருந்தான். அங்கொன்றும்  இங்கொன்றுமாக வீடுகள் முளைத்திருக்கும் ஊரின் வடக்குத் திசை வெளிப்புறப்பகுதியில் ஒருநாள் துஷ்டி வீட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் கணேசனைப் பார்த்தான்.

மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை

``தனியாகக் கடை வைத்திருக்கிறேன்’’  என்று சொல்லி, கடைக்கு அழைத்தான். கடையில் வேலைக்குப் பையன் ஒருவன் இருந்தான். அவனை அனுப்பி டீ வாங்கி வரச் சொன்னான். ரிப்பேருக்கு ஏழெட்டு சைக்கிள்கள் நின்றுகொண்டிருந்தன. நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் .

இப்போதுதான் வளர்ந்துகொண்டிருக்கும் பகுதி என்பதால், இங்கே வேறு கடைகள் இல்லை. கருவேலம் முள்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால், தினமும் பத்து பஞ்சருக்குமேல் வரும். கணேசன் இப்போது முதலாளி  என்பதால், நல்ல வெளுத்த உடை அணிந்திருந்தான்.  `தனக்கு மட்டும் ஏன் இப்படித் தாட்டியமில்லை? தன்னிலும் வயதில் இளையவன். சொந்தமாகக் கடை வைத்து எப்படிப் பிழைக்கிறான்?’ ஏக்கமாக இருந்தது பழனிக்கு.

கணேசன் ஒரு சைக்கிளைக் காட்டிக்  கேட்டான், ``இது யாரு சைக்கிள் தெரியுமா?’’ மறுத்து தலையாட்டினான்.  ``புஷ்பம் சைக்கிள்.’’ நெற்றியைச் சுருக்கி யார் என்பதுபோல பார்த்தான் பழனி. ``அதான்... ஒரு வேதக்கார பிள்ளை வருமே, எல்லா ஞாயித்துக்கிழமையும் காத்துப் பிடிக்க.’’ மரிய புஷ்பத்தைத்தான் சொல்கிறான் என்பது புரிந்துவிட்டது. ஆமாம்,  சந்தேகமில்லாமல் அதே சைக்கிள்தான். இந்த அகன்ற கேரியரில்தான் அன்று அவள் தன்னை இருத்தியிருந்தாள். அவனிலும் மூத்த பெண்ணை  ‘அக்கா’ என அழைக்காமல் பெயர் சொல்லி அழைத்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. என்றாலும், மரியத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தான்.

பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இருக்கப்  பிடிக்காமல், சாக்கு சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டான். வழி முழுவதும் யோசித்தபடியே வந்தான். காதல் திருமணம் செய்துகொண்டவளை வீடே ஒதுக்கியிருக்கிறது. அவள் திருமணம் செய்துகொண்டதும் ஒரு வேதக்கார பையனைத்தான் என்றாலும், மரியத்தின் அம்மா சாதி விசுவாசியாக இருந்தாள். அந்தப் பையனைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் `மீன்காரியின் மகன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறாள். குடும்பமே கைவிட்டிருக்கிறது. திருமணமாகி நான்கு ஆண்டுகள்தான் வாழ்ந்திருக்கிறாள். அவளின் கணவன் காலையில் இந்த சைக்கிளில் வைத்து  உப்பு வியாபாரம் செய்யும் உப்பு வியாபாரியாகவும், மற்ற நேரங்களில் சைக்கிளில் அரிசி மூட்டை களைச் சுமந்து செல்லும் லோடுமேனாகவும் இருந்திருக்கிறான்.

ஒருமுறை லாரியில் லோடாக வந்திருந்த அரிசி மூட்டைகள் சரிந்ததில், கழுத்து ஒடிந்து மூன்று நாள்கள் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு இறந்துவிட்டான். அப்போதும் மரியத்தின் வீட்டிலிருந்து யாரும் உதவிக்கோ, வந்து பார்க்கவோ இல்லை. இப்போது அவள் வீட்டின் சிறு பகுதியில் வைத்து மளிகைப் பொருள்களையும் காய்கறி களையும் விற்றுக் கொண்டி ருக்கிறாள். அதன் பிறகு, கணேசன் சொன்னதுதான் பழனியை அங்கிருந்து உடனே கிளம்பத் தூண்டியது.``இரவில் அரவமில்லாமல் நிறைய ஆண்கள் அவள் வீட்டுக்கு வந்து போவதுண்டு. சமயங்களில் மதிய நேரங்களில் கடையைச் சாத்தி விட்டுக்கூட இருந்திருக்கிறாள். நானே நாலைந்து தடவைப் போயிருக்கிறேன்.’’ ‘ஒரு பொம்பள பிள்ளையை வெச்சுக் கிட்டு வேற என்ன பண்ண முடியும்? அந்த சைக்கிளைப்போல இவளும் துருப்பிடித்து விட்டாளா?’ என நினைத்துச் சலித்துக் கொண்டான். தேவையில்லாமல் அவள்மேல் ஒரு வெறுப்பு படிந்துவிட்டது.

அதன் பிறகு, இன்றுதான் இந்தக் கடைக்கு வருகிறாள். குனிந்து முன் டயரை அழுத்திப் பார்த்தான். காற்றுப் பிடிக்க அவசியமற்று நிறைந்திருந்தது. பின் டயரை அழுத்த முற்படும் போது மெதுவாகச் சொன்னாள், ``உன்கிட்ட பேசணும். டீக்கடையில நிக்குறேன் வா.’’ கிளம்பிவிட்டாள்.  பழனிக்கு மனசுக்குள் பரபரவென இருந்தது. உள்ளங்கை வியர்த்தது. விறுவிறுவென டீக்கடை இருக்கும் திசை நோக்கிக் கெந்தினான். ``என்னோடு வர்றியா... உன் கையில முன்னூறு ரூபா இருக்கா?’’ என்று மட்டும் கேட்டாள்.  கடைக்கு மீண்டும் திரும்பி வந்தவன், சம்பளத்தில் பிடித்துக்கொள்ளச் சொல்லி முதலாளியிடம் முன்னூறு ரூபாய் கேட்டு வாங்கிக்கொண்டு கைலியையும் சட்டையையும் அணிந்துகொண்டு, டீக்கடை இருக்கும் திசை நோக்கி மீண்டும் போனான். நெடுநாள் ஏக்கம் தீரவிருக்கும் நாளாக இந்த நாள் அமையும் என்பதை முப்பது நிமிடத்துக்கு முன்புவரைகூட  நினைத்துப்பார்க்கவில்லை. பதினைந்து வருடங்களாக மனசுக்குள் நினைத்துக் கொண்டிருந்த பெண். கணேசன் பலமுறை பொய் சொல்லியிருக்கிறான் என்றாலும், இந்த முறை சொன்னது உண்மைதான். வேகமாகச் சென்றான். மரியம்,தயாராக நின்று கொண்டிருந்தாள். ``பரவாயில்லை. நானே ஓட்டுறேன்’’ என்று அவளே சைக்கிளை  ஓட்டினாள். பழனி வேகமாகக் கெந்திக் கெந்தி ஓடித் தாவி அந்த அகல கேரியரில் அமர்ந்தான்.

அவனுக்கு சங்கோஜமாக இருந்தது. ஒரு பெண் தன்னை அமர்த்தி ஓட்டிச்செல்வதை எண்ணி தன் கால்களை நொந்துகொண்டான். எல்லா கடைகளையும் மூடிக் கொண்டிருந்தார்கள். ஊரின் பெரிய ஸ்வீட் ஸ்டாலின் முன்னால், சைக்கிளை நிறுத்தினாள். உள்ளே போய் பூந்தியும் சேவும்  கால் கிலோ வாங்கிக்கொள்ளச் சொன்னாள். அவன் வீட்டிலிருக்கும் குழந்தைக்கு, மலிவுவிலையில் பிஸ்கட் பாக்கெட் ஒன்றையும் சேர்த்து வாங்கிக் கொண்டான். நேரம் ஆகிவிட்டது என்பதுபோல வேகமாக அழுத்தினாள்.  கமலம் பூக்கடையின் வாசலில் நின்றது சைக்கிள். ஏற்கெனவே சொல்லி வைத்திருப்பாள் போல, பெரிய மொந்தையான பூ  வாசமடிக்கும் காய்ந்த வாழைநாரால் முடைந்த பார்சல் ஒன்றை அளித்தார். பணத்தைக் கொடுத்துப் பெற்றுக் கொண்டாள்.  `இவ்வளவு பூவை வைத்து என்ன செய்வாள்?’ எனத் தனக்குள் கேட்டுக்கொண்டான்  பழனி. நகரின் இருள் படிந்திருந்த அரவமற்ற மேற்கு மூலைக்கு சைக்கிளை  விரைந்து அழுத்தினாள். பெட்ரோமாக்ஸ் வெளிச்சமிருக்கும் ஒரு பெட்டிக்கடையின் முன்னால் நின்றது. அங்கே ஊதுவத்தி, மெழுகுவத்தி, தீப்பெட்டி வாங்கிக் கொண்டாள் .

கடைக்காரரிடம் ஏதோ பேசினாள். அவர் உள்ளே இருந்து ஒரு மண்வெட்டி, ஒரு வாளி இன்னும் சில பொருள்களை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கி பழனியிடம் கொடுத்தாள். அவனுக்கு எதுவும் புரியவில்லை. சிறிது தூரத்தில் எதிரே முக்காடிட்ட சில பெண்கள் துண்டு துண்டாகத் தன் குடும்பத்துடன் நன்றாக உடுத்தி வந்துகொண்டி ருந்தார்கள். அவள் கிறிஸ்தவர்களைப் புதைக்கும் கல்லறை நோக்கி சைக்கிளைச் செலுத்தினாள். தூரத்தில் இருந்தே ஒவ்வொரு கல்லறை மேட்டிலும்  வெளிச்சமாக மெழுகுத் திரிகள் உருகிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. உள்ளே விறுவிறுவெனப் போனாள். பழனி அவளைத் தொடர்ந்தான். அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. `நம்மைப் பயன்படுத்திக்கொண்டாள்’ என நினைத்தான். மணி பத்துக்குமேல் ஆகியிருக்கும். எல்லா கல்லறைகளின் மீதும் பூக்கள், பண்டங்கள் பரப்பப்பட்டிருந்தன. மெழுகுவத்திகள், ஊதுவத்திகள், புதிய சிலுவைகள் ஊன்றப்பட்டிருந்தன. அவள் வளைந்து வளைந்து போய் கொஞ்சம் மட்டும் உப்பலாக இருக்கும் ஒரு கல்லறையின் முன் நின்றாள். அதன்மீது பெயர் தெரியாத புல் போன்ற சிறு புதர்களும், சிறு முள்செடிகளும் வளர்ந்திருந்தன.  சிலுவை, பெயர்த்து எடுக்கப்பட்டு அருகில் கிடந்தது. கடைசியாக ஒரு பெரிய கல்லறையின் முன் நின்றிருந்த  நிறைய உறுப்பினர்கள்கொண்ட குடும்பம், அங்கிருந்து அகன்று சென்றது. எல்லா கல்லறைகளும் தனிமையில் விடப்பட்டிருந்தன. இவர்கள் இருவர் மட்டுமே எரியும் ஆயிரம் மெழுகுத் திரிகள் நடுவே, ஊதுவத்தியின் நறுமணப் புகையின் நடுவே, விதவிதமான லட்சம் பூக்களின் வாசத்தின் நடுவே... நின்றுகொண்டிருந்தார்கள். அந்த இடம் பிரமாண்டமான திருவிழா நடந்து முடிந்த இடம்போல் இருந்தது.

மரியம், பழனியிடம் உரிமையாக ``மேலே இருக்கும் புல்லையும் செடியையும் புடுங்கிப்போட்டு, மண்ண மேடேத்து வந்திடுறேன்’’ என்று  சொல்லிவிட்டு வாளியை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள். சிறிது நேரத்தில் வாளி நிரம்பத் தண்ணீருடன் வந்தாள். மேடேற்றி சிலுவையைக் கல்லறையின் தலையில் ஊன்றினார்கள். கொண்டுவந்திருந்த சுண்ணக்கல்லை நீரில் ஆத்தினாள். கொஞ்ச நேரம் கொதித்து அடங்கியது. ஈச்சமாரால் தொட்டுத் தொட்டுத் தடவிக்கொடுத்தாள். நேரம் நள்ளிரவை நெருங்கியிருக்கும். எல்லா கல்லறைகளின் மீதும் மெழுகுகள் அணைந்து அடங்கின. மரியம், குச்சியைக் கீச்சினாள். கல்லறையின் மீது வெண்மை யாக சுண்ணத்தின் ஈரம் தெரிந்தது. இரவுப் பூச்சிகளின் சத்தம் கேட்கத் தொங்கிவிட்டது. கல்லறையின் மடியில், மரியம் பண்டங்களைப் பரப்பிவைத்தாள். வாழைநார் மொந்தையைப் பிரித்து, நீளமான ரோஜாமாலையை நீட்டி சிலுவையின் தலைவழியே தொங்கவிட்டாள். மெழுகுவத்தியையும் ஊதுவத்தியையும் கொளுத்தினாள். ஏற்கெனவே கையில் வைத்திருந்த  அந்த நோட்டையும் பேனாவையும் மைக்கூட்டையும் கல்லறையின் வயிற்றில் வைத்தாள். முழங்காலிட்டு முக்காடிட்டாள். கண்களை மூடிக்கொண்டு இரண்டு நிமிடம் அப்படியே இருந்தாள். வேறு வழியில்லாமல் அவனும் கண்களை மெள்ள அணைத்துக்கொண்டான்.

மரியம் எழுந்து பூந்தியைக் கைகொள்ளுமளவு அள்ளிக்கொண்டாள். பழனியை நோக்கிக் கையை நீட்டினாள். அவன் வாங்கிக்கொள்ளும் முன் அவனை `ஆ காட்டு’ என்று சொல்லியபடியே கொஞ்சம் பூந்தியை வாயில் சிந்தினாள். `அவர் பேர் என்ன?’ என்று கேட்டான். `டேவிட்’ என்று சொன்னாள். ஏதாவது சொல்ல வேண்டுமென்பதற்காக ‘`ரொம்ப நல்ல பெயர்’’ என்று சொன்னான். ``ஏன்? நோட்டு, பேனால்லாம் வைக்கிறீங்க?’’. ‘`அவர் ரொம்ப நல்லா படிப்பாரு. ஒரே வகுப்பில்தான் படிச்சோம். அவங்க அப்பா   இறந்ததுக்கு அப்புறம் வசதி இல்லாம படிப்ப நிறுத்திட்டாங்க.  இவர் வேலைக்குப் போகணும்னு ஆகிடுச்சு. படிக்க ரொம்ப பிரயாசை கொண்ட மனுஷன். அதான், நான்தான் அவர விரும்பிக் கட்டிக் கிட்டேன். என் அம்மா பிரச்னை பண்ணமா இருந்திருந்தா, படிப்ப முடிச்சிட்டுதான் கல்யாணம் பண்ணிருப்பேன்’’ என்றாள்.
 மழை வரும் போலிருந்தது. கல்லறைத்  தோட்டத்திலிருந்து கிளம்பினார்கள். மரியம் வீட்டிற்கு வந்து சேரும்போது ஒரு மணிக்கு மேலாகி இருந்தது. வெளியே நூல் கம்பிபோல மழைபெய்யத்  துவங்கியது. குறைவாய் மஞ்சள் வெளிச்சத்தை  வழங்கும் ஒரே ஒரு குண்டு பல்ப் எரிந்துகொண்டிருந்தது. பழனியை வீட்டிற்குள் அழைத்தாள்.

மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை

வீட்டில் அநாவசியமாய்  எந்தச்  சாமான்களும் இல்லை.  ஆக்கப் பொங்க இரண்டு பாத்திரங்களும், மேற்படி ஓரிரு சில்வர் உருப்படிகளும்  மட்டும்தான். அங்கிருந்த அத்தனை பொருள்களின் மீதும் துயரம் படிந்திருப்பதை உணர முடிந்தது. விதிவிலக்காய் ஒரே ஒரு பொருள் அங்கிருந்தது. கலைநயத்தோடு வேலைப்பாடுகள் மிகுந்த மர மேசையொன்று.

அதை பார்த்துக்கொண்டேயிருந்தவனிடம்   ``அது டேவிட்டோடது’’ என்றாள். அவள்  கல்லறைக்கு  எடுத்து வந்திருந்த நிறையப் பக்கங்கள் கொண்ட தடிமனான  நோட்டும், பேனாவும், காலி  மைக்கூடும்  அதன் மேலிருந்தது. மெல்ல நோட்டைத் திறந்து பார்த்தான். முழுக்க கறுப்பு மை எழுத்துகள். அகன்ற  கறுப்பு எறும்பு புற்றைப்போல முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை கொஞ்சமும் இடைவெளி  இல்லாமல் அவ்வளவு எழுத்துகள்.  ``அது அவர் எனக்கு எழுதுன ஒரே ஒரு காதல் கடிதம். கிட்டத்தட்ட ஒரு வருஷத்தப் போல முன்னூத்தி அறுபது பக்கம். ஒன்பது  வருஷம் முந்தி, விடாம ஒரு  மூணு நாளு மழை பெய்ஞ்சதுல்ல... அந்த மூணு நாளா அவர் உக்கார்ந்து எழுதினது.’’ 

பழனிக்கு நாவறட்சி போலிருந்தது.குடத்திற்குள்ளிருந்து தண்ணீர்  மொண்டு கொடுத்தாள். ``குழந்தை எங்கே?’’ என்று கேட்டான். வீட்டின் வலது மூலையைக் காட்டினாள். துணி குவியலுக்குள் ஒரு சிறு பொம்மைபோல உறங்கிக் கொண்டிருந்தது. ``சளி மருந்து கொடுத்திருந்தேன். அதான், தூங்குறா. நாலு வயசாகுது’’ என்றாள்.

 கொஞ்சம்  நகர்ந்து போய் சேலைத் தலைப்பை விரித்துப் படுத்துக்கொண்டாள். ``வா’’ என்று சொல்லி முந்தானையை விலக்கினாள். பழனிக்கு நடுக்கமாயிருந்தது. ‘`வா தம்பி’’ என்றாள். ‘`தம்பி காத்துப் பிடிக்கணும்’’ அதே பதினைந்து வயது குரல். குரலில் வாஞ்சையும், அமைதியும்  இன்னும் அப்படியே இருந்தது. ``உச்’’ என்றபடியே ‘`அய்யோ... பழக்கத்துல வந்துருச்சி.  நீ வா’’ என்று அருகில் அழைத்தாள்.
 ‘`நான் கிளம்புறேன்’’ என்றான். ``எனக்குத் தெரியும். என்கிட்ட உனக்கு என்ன வேணும்னு. பரவாயில்ல... வா. ஏதும் நினைக்காத. கணேசன் சொல்லிருப்பானே, நான் யாருன்னு. நீயும் என்ன அப்படித்தான நினைச்ச.’’ ``அதெல்லாம் இல்ல’’ பழனி தடுமாறினான். ``நீ மட்டும் என்ன ஊரே  அப்படித்தான நினைக்குது. பொம்பள தனியா இருந்தா, அந்த மாதிரி தொழில் பண்ணுவான்னு... துணியையும் மானத்தையும் அவுத்துட்டுதான் வாழணும்னு முடிவு பண்ணிட்டா, நான் ஏன் கடை வெச்சிப் பொழைக்கிறேன்’’ வியர்க்க வியர்க்க சரிவாய் நின்றுகொண்டிருந்தான்.

தயக்கதோடு மெலிந்த குரலில் ``கிளம்புறேன்’’ என்று சொன்னான். அக்கறையான குரலில் ‘`தங்கிட்டுக் காலைல போ’’ என்றாள். குழந்தை மூத்திரத்தைப்போல அவ்வளவு சிறிய மழை தான். உடனே நின்றுவிட்டது.

மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை

மரியம் அவளின் சைக்கிளை எடுத்துக் கொண்டுப்போகச்சொல்லிக் காலையில் கடையில் வந்து எடுத்துக் கொள்கிறேன்  என்றாள். மறுக்காமல் எடுத்துக்கொண்டான். வீட்டிற்கு வரும் வழியெல்லாம் யோசித்தான். நாளை சைக்கிள் எடுக்க வரும்போது கேட்டுவிட வேண்டும், ‘கல்யாணம் பண்ணிக்கலாமா’ன்னு.

அடுத்த நாள் முழுக்க மரியம் வரவே இல்லை. அதன் மறுநாள் அவன் மரியத்தைத் தேடி வீட்டிற்குப் போனான். வீட்டை நேற்றே காலி  செய்துவிட்டதாகச் சொன்னார்கள். பத்து நிமிடத்திற்குள் காலி செய்துவிடக்கூடிய வீடு தான் அது. கடைக்கு வந்தான். அந்த அகல கேரியர் சைக்கிளைப் பார்த்து ராசு அண்ணன் கேட்டார். ``யார் சைக்கிள் பழனி இது?’’ ``முன்னூறு ரூபாய்க்கு வாங்கினேன்’’ என்றான்.
பிதுக்கு எண்ணெய் டப்பாவை எடுத்துவந்து எல்லா இணைப்புக்கும் எண்ணெய் பிதுக்கி விட்டான். கேட்காமலேயே  பெல்லை அடித்துப் பார்த்து ஒலியைப் பெருக்கிக் கொண்டிருந்தான்.

ஆனந்த விகடனுக்கான உங்கள் சிறுகதைகளை avstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!