Published:Updated:

மாட்டு இறைச்சியைத் தொடர்ந்து... கோழி

மாட்டு இறைச்சியைத் தொடர்ந்து... கோழி
பிரீமியம் ஸ்டோரி
மாட்டு இறைச்சியைத் தொடர்ந்து... கோழி

மோடியின் அடுத்த அஸ்திரம்

மாட்டு இறைச்சியைத் தொடர்ந்து... கோழி

மோடியின் அடுத்த அஸ்திரம்

Published:Updated:
மாட்டு இறைச்சியைத் தொடர்ந்து... கோழி
பிரீமியம் ஸ்டோரி
மாட்டு இறைச்சியைத் தொடர்ந்து... கோழி

முதலில் அவர்கள் மாடுகளைக் குறி வைத்தபோது, ‘இது நமக்குத் தொடர்பில்லாத விஷயம்’ என்று நிறைய பேர் நினைத்தனர். இப்போது சத்தமில்லாமல் கோழிகள் பக்கம் திரும்பிவிட்டது நரேந்திர மோடியின் மத்திய அரசு. கிட்டத்தட்ட இந்தியாவில் கோழிப்பண்ணைத் தொழிலையே ஒழித்துக் கட்டும் கடுமையான விதிமுறைகள், மோடியின் அடுத்த அஸ்திரமாக வர இருக்கின்றன. கோழிப்பண்ணைத் தொழிலை நம்பியிருக்கும் பல லட்சம் மக்களை நடுவீதியில் நிறுத்துவதோடு, முட்டை விலையையும், கோழிக்கறியின் விலையையும் தாறுமாறாக உயர்த்தப் போகிறது இந்த அறிவிப்பு. 

கோழிப்பண்ணைகளிலும், வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும்போதும் கோழிகள் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகக் கருதிய மத்திய சட்ட அமைச்சகம், இதுதொடர்பாக விதிமுறைகளைப் பரிந்துரைக்குமாறு சட்ட ஆணையத்திடம் கடந்த மார்ச் 2-ம் தேதி கேட்டுக்கொண்டது. இதுபற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்தது சட்ட ஆணையம். இதைத் தொடர்ந்து, ஜூலை 3-ம் தேதி புதிய விதிமுறைகளைப் பரிந்துரை செய்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் அளித்திருக்கிறார், சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி பி.எஸ்.சவுகான். ‘முட்டைக்கோழி வதைத் தடுப்பு விதிகள் 2017’ மற்றும் ‘கறிக்கோழி வதைத் தடுப்பு விதிகள் 2017’ என அழைக்கப்படும் இவற்றை வெகுவிரைவிலேயே அமல்படுத்த இருக்கிறது மத்திய அரசு. முட்டை உற்பத்தியில் இந்தியா உலக அளவில் மூன்றாவது

மாட்டு இறைச்சியைத் தொடர்ந்து... கோழி

இடத்தில் இருக்கிறது. ஓர் ஆண்டில் சுமார் 6,500 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியக் குழந்தைகள் புரதச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படாமல் தடுப்பதில் முட்டைகளுக்கு முக்கிய இடம் உண்டு. சத்துணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக முட்டை தருகின்றன பல மாநிலங்கள். கறிக்கோழி உற்பத்தியிலும் இந்தியா  முன்னணியில் இருக்கிறது. இந்திய கறிக்கோழி மார்க்கெட்டின் ஆண்டு பிசினஸ் மதிப்பு, சுமார் 40,000 கோடி ரூபாய். இவை எல்லாவற்றையும் சீர்குலைக்கும் முயற்சியாகவே மத்திய அரசின் இந்த நடைமுறை பார்க்கப்படுகிறது.

‘கோழிகளைக் கூண்டுகளில் அடைத்து வளர்க்கும் கொடூர நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்’ என்று சொல்லும் இந்தப் பரிந்துரைகள், கோழிப் பண்ணைகளை லைசென்ஸ் ராஜ்ஜியத்துக்குள் தள்ளுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாட்டு இறைச்சியைத் தொடர்ந்து... கோழி

இதன்படி, கால்நடைப் பராமரிப்புத் துறையில் பதிவு செய்யாமல் இனி யாரும் கோழிப்பண்ணை வைக்கக்கூடாது. ஏற்கெனவே பண்ணை வைத்திருப்பவர்களும், இந்த விதிமுறைகள் அமலான மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். மாநில அரசுகள் இதற்காக கமிட்டிகளை அமைத்து, தேவையான கூடுதல் விதிமுறைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். கால்நடைத்துறை அதிகாரிகள் எந்த நேரத்திலும் கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்ய முடியும். கோழிகளைச் சித்ரவதை செய்வதாகத் தெரிந்தால், அவற்றைப் பறிமுதல் செய்து, விலங்குகள் வதைத் தடுப்பு மையத்தில் வைக்கலாம். கூண்டுகள் இல்லாமல் கோழிகளைத் திறந்தவெளியில் வளர்க்கும் பண்ணைகளுக்கு ‘ஆர்கானிக் பண்ணைகள்’ எனச் சான்றிதழ் தரலாம். கூண்டுகளில் வளர்த்தால், கோழிகள் சுதந்திரமாக நிற்கும் அளவுக்கு இடம் கூண்டில் இருக்க வேண்டும். வேண்டும்போது அவை உட்கார்ந்துகொள்ளும் அளவுக்குத் தரை தளம் இருக்க வேண்டும். கோழிகள் இரண்டுபக்க இறக்கைகளையும் விரித்தால், கூண்டின் கம்பிகளிலோ, மற்ற கோழிகள் மீதோ படாமல் இருக்கிற அளவுக்கு இட வசதி வேண்டும். முட்டையிட தனி இட வசதி செய்திருக்க வேண்டும். தீனியைச் சுதந்திரமாகக் கொத்தித் தின்ன ஏற்பாடு இருக்க வேண்டும். தண்ணீரும் வசதியான இடத்தில் கிடைக்க வேண்டும். கோழிகளிடம் கடுமை காட்டாத அளவுக்குப் பயிற்சி பெற்ற பணியாளர்களே கோழிப்பண்ணைகளில் பணிபுரிய வேண்டும். 5,000 கோழிகளுக்கு ஒரு பணியாளர் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் பிராய்லர் கோழிகளை விளக்கு வெளிச்சத்தில் வைத்திருக்கக்கூடாது. ஒரு நாளில் ஆறு மணி நேரமாவது அவை இருளில் இருக்க வேண்டும். அவை சுறுசுறுப்பாக வலம் வரும் அளவுக்குச் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். இப்படி நீள்கின்றன கோழிகளைக் காக்கும் விதிகள். 

மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு சர்வதேச விதிகளைக் காலில் போட்டு மிதிக்கும் நம் சட்ட அமைப்புகள், கோழிகளைப் பாதுகாக்க சர்வதேச சட்டங்களைச் சுட்டிக் காட்டுகின்றன. மனிதர்களால் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு ஐந்து வகை சுதந்திரங்களை உலக விலங்குகள் நல அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அவை: பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் தாகத்தோடு எந்த விலங்கும் இருக்கக்கூடாது. பயம் அல்லது துன்பத்தில் விலங்குகள் இருக்கக்கூடாது. உடல்ரீதியாகவோ, சூழலின் வெப்பநிலையிலோ எந்த அவஸ்தையும் இருக்கக்கூடாது. வலி, காயம் மற்றும் நோய் ஏற்படக்கூடாது. தன் இயல்பான குணங்களை ஒரு விலங்கு வெளிப்படுத்தும் சூழல் அமைய வேண்டும்.

‘கோழிப்பண்ணைகளில் இதற்கான சூழல் இல்லை’ என வேதனைப்படும் சட்ட ஆணையம், ‘ஒரு ஏ4 பேப்பர் அளவுக்கான இடம்கூட கூண்டுகளில் கோழிக்குக் கிடைப்பதில்லை’ என்று வேதனைப்படுகிறது. ‘வரிசையாகப் பல கூண்டுகளில் கோழிகளை அடைத்து வைக்கிறார்கள். ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காகப் பல வரிசைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் ஒரே இடத்தில் இருக்கின்றன. நிறைய கோழிகள் இதனால் காயமடைகின்றன. பண்ணைகள் காற்றோட்டமாகவோ, சுகாதாரமாகவோ இல்லை’ என பீட்டா அமைப்பு சட்ட ஆணையத்திடம் வேதனைப்பட்டிருக்கிறது. ‘கோழிகளுக்கு என்ன தீவனம் தருகிறார்கள் என்பதை முறைப்படுத்த இங்கே எந்த அமைப்பும் இல்லை. நிறைய பேர் தாறுமாறாக ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைக் கொடுத்து கோழிகளை வளர்க்கிறார்கள். இதனால், கோழிக்கறியைச் சாப்பிடும் மனிதர்கள் உடலிலும் இந்த மருந்துகள் கலக்கின்றன’ எனத் தன்னார்வ அமைப்புகள் பல புகார் செய்துள்ளன. இவை எல்லாவற்றையும் ஆதாரமாக வைத்து இந்த விதிகளை உருவாக்கி இருக்கிறது சட்ட ஆணையம்.

மாட்டு இறைச்சியைத் தொடர்ந்து... கோழி

அதோடு, இறைச்சி வெட்டும் கூடங்களுக்கான விதிகளைக் கோழிகளுக்கும் பரிந்துரை செய்துள்ளது சட்ட ஆணையம். தெருமுனைக் கடைகளில் கோழிகளை வெட்டிக் கறி கொடுப்பது சட்ட விரோதம். அங்கீகாரம் பெற்ற இறைச்சிக் கூடங்களில் மட்டுமே கோழிகளை வெட்ட வேண்டும். ஒரு கோழி பார்த்துக் கொண்டிருக்கும்போது, இன்னொரு கோழியை வெட்டக்கூடாதாம். 

இப்போது உலக அளவில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மட்டுமே, கூண்டுகளில் அடைத்து கோழிகளை வளர்ப்பதில்லை என முடிவெடுத்து இருக்கின்றன. இதில் செலவு மிக அதிகம். எனவே, முட்டை மற்றும் கோழிக்கறி விலையும் அதிகமாகிறது. அங்கு மக்கள்தொகை குறைவு. மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகம் என்பதால், விலை ஒரு பிரச்னையாக அங்கு இருப்பதில்லை. அமெரிக்கா, சீனா, பிரேசில் போன்ற முன்னணி நாடுகள் பின்பற்றும் முறையையே இந்திய கோழிப்பண்ணைகள் பின்பற்றுகின்றன. மக்கள்தொகை அதிகம் இருக்கும் நாடுகளில் இப்படித்தான் பண்ணைமுறை சாத்தியம்.

இறைச்சிக்காக கால்நடைகளை விற்பது தொடர்பான மத்திய அரசின் புதிய விதிமுறைகளை, மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு எதிரான முயற்சியாகவே பலரும் பார்த்தனர். ஆனால், அது மட்டுமே அல்ல. விவசாயம் பொய்த்த பகுதிகளில் எளிய மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பவை, கால்நடைகளும் கோழிகளும்தான். மத்திய அரசின் கால்நடைகள் தொடர்பான விதிமுறைகள், மாடுகள் மீது விவசாயிகளுக்கு இருந்த பிணைப்பைக் குறைத்தன. ஒருகாலத்தில் வீட்டுத் தோட்டத்தில் கூடையில் மூடி கோழிகளை வளர்த்த நாம், இப்போது தேவை எகிறவே பண்ணை முறைக்கு மாறி இருக்கிறோம். தமிழகம் முழுக்கவே, விவசாய நிலங்களில் சிறுசிறு கோழிப்பண்ணைகள் வந்தன. அந்த ஆதாரத்துக்கு இந்த விதிமுறைகள் வேட்டு வைக்கின்றன. ஏற்கெனவே, பி.ஜே.பி ஆட்சியில் உள்ள ஓரிரு மாநிலங்களில், ‘மதிய உணவுத் திட்டத்தில் முட்டை தருவதை நிறுத்தலாமா’ என விவாதங்கள் ஆரம்பித்தன. ‘அது இந்தியக் குழந்தைகளின் வளர்ச்சியையே பெரிய அளவில் சிதைக்கும்’ என எதிர்ப்பு எழுந்ததால் அமைதியானார்கள். கோழிப்பண்ணைகளுக்கான விதிகள், நம் வறிய குழந்தைகளுக்கு முட்டை கிடைப்பதை நிறுத்தக்கூடும். அது, இந்தியாவின் எதிர்காலத்துக்கே ஆபத்தாக முடியும்.

- தி.முருகன்
அட்டை ஓவியம்:  ஹாசிப்கான்
படங்கள்: க.தனசேகரன்,  எம்.விஜயகுமார்

மாட்டு இறைச்சியைத் தொடர்ந்து... கோழி
மாட்டு இறைச்சியைத் தொடர்ந்து... கோழி

வரப்போகிறது லெக் பீஸ்!

மெரிக்க மக்கள், சிக்கனில் மார்புக்கறி மட்டுமே சாப்பிடுவார்கள். லெக் பீஸைக் கழிவு என குப்பையில் போடுவார்கள். ஆனால், இந்தியர்களுக்கு லெக்பீஸ் மீதுதான் மோகம். அதனால், அமெரிக்காவில் வீணாகக் குப்பையில் போடப்படும் லெக்பீஸை அப்படியே இந்தியாவுக்கு அனுப்ப, அங்கிருக்கும் நிறுவனங்கள் திட்டம் போட்டு வருகின்றன. இந்திய கோழிப்பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இதை ஏதேதோ காரணங்கள் சொல்லி இந்தியா தடுக்க முயன்றது. ஆனால், உலக வர்த்தக அமைப்பு, இந்தியாவின் தடையை ரத்து செய்துவிட்டது. மத்திய அரசு கோழிப்பண்ணை களுக்குக் கிடுக்கிப்பிடி போடும் இதே நேரத்தில், அமெரிக்க லெக்பீஸ்கள் மலிவான விலையில் இங்கு வந்து மார்க்கெட்டை ஆக்கிரமிக்கப் போகின்றன. நிறைய மருந்துகளும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட தீவனங்களும் கொடுத்து வளர்க்கப்பட்ட கோழிகளின் கால்கள் அவை.   

‘‘உலக உணவுச்சந்தையை மொத்தமாக அபகரிப்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் இலக்கு. அதில் பிராய்லர் சிக்கனும் இருக்கிறது. முன்பு பிராய்லர் கோழியை அறிமுகம் செய்து, மரபு சார்ந்த கோழியினங்களை அழித்த பன்னாட்டு நிறுவனங்கள், இப்போது உள்நாட்டுத் தொழிலை அழித்து மொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிடுகின்றன. அதற்கான முன்னோட்டம்தான், கோழிக்கால் இறக்குமதி. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தனை அடிப்படைத் தேவைகளையும் தனியாருக்குத் தாரை வார்க்கத் துடிக்கிற மத்திய அரசு, உணவுச் சந்தையையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுகிறது” என்கிறார் சூழலியலாளர் பாமயன்.

மாட்டு இறைச்சியைத் தொடர்ந்து... கோழி

‘‘பல லட்சம் பேருக்கு வேலை போகும்!’’

‘‘அரசு சொல்லும் விதிமுறைகள்படி கோழிப்பண்ணைகள் மாறுவதற்கு 20 ஆண்டுகள் ஆகக்கூடும். அதற்குள் இங்கு கோழிப்பண்ணைத் தொழிலே அழிந்துவிடும்’’ என்கிறார், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சின்ராசு. ‘‘கோழிகளைக் கூண்டுக்குள் அடைக்காமல் வளர்ப்பதில் நிறைய பிரச்னைகள் உள்ளன. நோய்கள் தொற்றும் ஆபத்து அதிகமாகும். மற்ற பறவைகளின் தாக்குதலில் இறப்பதும் அதிகரிக்கும். ஒரு கோழி போடும் முட்டையை இன்னொரு கோழி தவறுதலாக உடைக்கலாம். தண்ணீர் நிறைய செலவாகும். இப்படி பல பிரச்னைகள் ஏற்படும்.  

அரசு சொல்வதுபடி இந்தியாவில் யாருமே கோழி வளர்ப்புத் தொழில் செய்ய முடியாது. தற்போது, ஒரு லட்சம் கோழிகளை 6-7 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணையில் வளர்க்கிறோம். அவர்கள் சொல்லும் விதிமுறைப்படி, ஒரு லட்சம் கோழிகளை வளர்க்க 100 ஏக்கர் தேவைப்படுகிறது. இது சாத்தியமே இல்லை.

இது, விவசாயம் சார்ந்த சிறு தொழில். பலரை வேலைக்குச் சேர்த்து, பல கோடி ரூபாய் சம்பாதிக்கும் சாஃப்ட்வேர் தொழில் அல்ல. அரசு சொல்கிறமாதிரி செய்தால், செலவு பல மடங்கு அதிகரிக்கும். அதனால் எல்லா விலையும் எகிறும். அசைவப் பிரியர்கள் மிகவும் ஏமாற்றம் அடைவார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலை நம்பியுள்ள பல லட்சம் பேர் வேலையிழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என்கிறார் அவர்.

- வீ.கே.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism