Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 27 - கருணை மரணம் என்பது விடுதலையா?

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 27 - கருணை மரணம் என்பது விடுதலையா?
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 27 - கருணை மரணம் என்பது விடுதலையா?

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 27 - கருணை மரணம் என்பது விடுதலையா?

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 27 - கருணை மரணம் என்பது விடுதலையா?
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 27 - கருணை மரணம் என்பது விடுதலையா?

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ் அண்மையில் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘என்னை விடுதலை செய்ய  இயலாவிட்டால், கருணைக்கொலையாவது செய்துவிடுங்கள்’ என்று உருக்கமாக அதில் கேட்டிருந்தார். விடுதலை என்பது கானல் நீராகும்போது, விரக்தியில் இப்படித்தானே கேட்பார்கள்!

மகாராஷ்ட்ரா மாநிலம், புனேவில் பாரத் மாருதி லோட் என்ற மருத்துவர், கணையத்தில் புற்றுநோய் வந்து அவதிப்படுகிறார். 26 ஆண்டுகளாக,கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் அர்ப்பணிப்போடு பணிபுரிந்தவர். பணித்திறமைக்காக இரண்டு முறை அரசு விருதுகளும் பெற்றவர். இப்போது புற்றுநோய் வந்து, தன் சேமிப்பைக் கரைத்து, வீட்டை அடமானம் வைத்து, தெரிந்த எல்லா வழிகளிலும் கடன் வாங்கி 29 லட்ச ரூபாய் செலவழித்தும், இன்னமும் ஆபத்தான கட்டத்திலிருந்து வெளியே வரவில்லை. கடன்காரர்கள் கழுத்தை நெரிக்க, ‘என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்’ என்று கதறுகிறார். அவரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறதா, இல்லையா?

‘Euthanasia’ எனும் கிரேக்கச் சொல்லுக்கு ‘நல்ல மரணம்’ என்று பொருள். நல்ல மரணம் எனும் கருணைச் செயல்பாட்டை, ‘கருணைக் கொலை’ என மொழிபெயர்ப்பது கொடூரமானதாகவே தோன்றுகிறது. ‘மருத்துவர் உதவியோடு நிகழும் தற்கொலை’ என பிரிட்டன் இதை வரையறுக்கிறது. நாம், ‘கருணை மரணம்’ என்று சொல்லலாம். ‘இனி பிழைக்க மாட்டார்’ எனக் கருதப்படும் ஒரு நோயாளியை, அவர் படும் வலிகளிலிருந்து விடுவித்து மரணத்தைத் தழுவச் செய்வதை இப்படி அழைக்கிறார்கள். நெதர்லாந்து, கனடா, கொலம்பியா, பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகள் ‘கருணை மரணத்தை’ சட்டப்படி அனுமதிக்கின்றன. இந்தியாவில், ‘மிக மோசமான நோயுற்று படுத்த படுக்கையாகக் கிடந்தபடி செயற்கை சுவாசமும் ஊசி மூலம் ஊட்டச்சத்தும் பெறும் 16 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளை, அவர்களின் விருப்பத்தோடு கருணை மரணம் அடைவதை அனுமதிக்கலாம்’ என ஒரு சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு, இன்னமும் விவாத அளவில் இருக்கிறது.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 27 - கருணை மரணம் என்பது விடுதலையா?

மகாபாரத்தில் துரோணர் மகன் அஸ்வத்தாமன் சாகாவரம் பெற்றவன். ஆனால், ‘தீராத நோயுடன் ஏன் வாழ்கிறோம்’ என்று தினம் தினம் துடித்துக் கொண்டிருந்தானாம். இப்படி வாழ்வதும் ஒரு சாபம்தான். முதுமையில் உடலுறுப்புகள் செயலற்றுப் போய், தமக்குத் தாமே சுமையாக ஒவ்வொரு கணமும் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை கொடியது; அதைவிட மரணமே நிம்மதி என ஆகிவிடும்.

‘கணவன் சம்பாதிப்பான், மனைவி வீட்டைக் கவனிப்பாள், குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பார்கள், வீட்டிலிருக்கும் தாத்தா - பாட்டியைக் குடும்பமே கவனித்துக்கொள்ளும், பெரிய மருத்துவச் செலவுகள் இல்லை’ என்ற காலம் கனவாகிப் போய்விட்டது. இன்றைய சூழலில், கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போவதும் சம்பாதிப்பதும் அவசியமாகிவிட்டது. தண்ணீர் கூடக் காசாக்கப்பட்டுவிட்ட காலத்தில், அன்பு, பாசம், சேவை என எதற்கும் நேரமில்லை. மறுபுறம் மரணத்தை இயற்கை என ஏற்கும் மனப்பக்குவத்தை முற்றாக இழந்துவிட்டோம். எது வந்தாலும் காப்பாற்றுவோம் என விளம்பரம் செய்யும் மருத்துவமனைகள், மருத்துவத்தின் எல்லையை உணர்த்துவதற்குப் பதிலாக, வீணான பயத்தையும் போலி நம்பிக்கையையும் கூட்டி விரக்தியுறச் செய்கின்றன.

‘மரணம் அமிர்தம்’ எனக் கொண்டாடிய தத்துவ மனநிலை மாறிப் போயுள்ளது. வாழும் ஆசையில், நம் வாழ்க்கையைத் தரமற்றதாக்கிக் கொண்டுள்ளோம். நோயிலும் முதுமையிலும் வேதனையுடன் அம்புப்படுக்கையில் கிடந்த பீஷ்மர் நிலைதான். ‘இறைவன் கொடுத்த உயிரை எடுக்கும் உரிமை மனிதனுக்கில்லை’ எனத் தர்மங்களும் சட்டமும் கூறலாம். ஆனால், வேதனையில் வாடுவோர்க்கு, மரணம் தவிர வேறு உன்னதத் தீர்வு என்ன உள்ளது? அவர்களை வேதனையிலிருந்து விடுவிப்பது பாவமா?

‘கருணை மரணத்தை அனுமதிப்பதா, கூடாதா’ என்ற விவாதம் நீண்ட காலமாகவே தொடர்கிறது. மதம் மறுக்கிறது; மனிதாபிமானம் அனுமதிக்கச் சொல்கிறது. ‘அவதிப்படுபவர் கேட்டால் இரக்கத்தின் காரணமாக மரணத்தைத் தரலாம்’ என்பவரும் உண்டு. கிரேக்கத்தில் ‘ஹெம்லாக்’ எனும் மூலிகை கஷாயத்தைக் கொடுத்து மரணத்தைப்  பரிசளிப்பதை சாக்ரடீஸ், பிளாட்டோ போன்ற அறிஞர்கள் ஆதரித்தனர். ஆனால், சாக்ரடீஸே பிறகு ‘ஹெம்லாக்’ கொடுத்துக் கொல்லப்பட்டார் என்பது கொடிய முரண். மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேடஸ், ‘எந்த உயிரையும் கொல்லத் துணைபோகாது இருப்பாயாக’ என்று கட்டளையிடுகிறார். எதைச் செய்ய?

நாமும் கருணை மரணத்தைக் காலம் காலமாக ‘சடங்கு’ எனும் பெயரில் சாதுர்யமாகச் செய்துகொண்டுதான் உள்ளோம். முதுமையில் நினைவிழந்து படுத்த படுக்கையாக உள்ள முதியவரை, ஒரு பெரிய தாழியில் வைத்துப் புதைத்துவிடுவர். இன்று அகழாய்வில் கிடைக்கும் ‘முதுமக்கள் தாழி’ என்பது, கருணை மரணப் பெட்டகமே. அந்தக் கருணை மரணத்தின் சடங்கு வடிவமே கடைசி பால் ஊற்றுவது. உணர்வற்றுக் கிடப்பவர் வாயில் ஊற்றும் பால்... விழுங்க முடியாமல் நுரையீரலுக்குள் சென்று மூச்சடைத்து சாகடிக்கிறது. சட்டச் சிக்கலின்றி, மதச் சம்பிரதாயப்படி குடும்பமே முன்வந்து கருணை மரணத்தைத் தந்துவிடுகிறது. மரணப் படுக்கையில் கிடப்பவருக்குப் பாதிரியார் ‘அவஸ்தை தருவது’ என்று தரும் தீர்த்தம்... கர்த்தரிடம் செல்லத் தரும் கிறிஸ்துவ வடிவமே. காந்திகூட வேதனையில் துடித்த ஆட்டுக்கு மரணத்தைத் தர அனுமதித்தார்.

‘மதுக்கடையை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகி விடும்’ என்பது போல, கருணை மரணத்தை அனுமதித்தால் ‘கருணை’ எனும் பெயரில் கொலைகளும் நடக்கும் எனச் சட்டம் தடுக்கிறது. மரண தண்டனையைச் சட்டப்படி அனுமதிக்கும் அரசு, மனிதாபிமான அடிப்படையில் கருணை மரணத்தை அனுமதித்தால் என்ன?

‘முதுமைக் காலத்தில் நோயுற்ற எங்களைப் பாதுகாக்க எவருமில்லை... கொன்றுவிடுங்கள்’ என்று கோரிக்கையுடன் வந்து நிற்கும் முதியவர்களைக் காண்பது இப்போது சாதாரணமான நிகழ்வாகி வருகிறது.

‘யாருக்குக் கருணை மரணம் தருவது? கருணை மரணம் தருவது எப்படி? யார் அதை மேற்கொள்வது? மரண தண்டனை ஒரு நீதிபதி, மருத்துவர், பொறுப்புள்ள சமூகப் பிரதிநிதியின் முன் நடப்பது போல, இதையும் மேற்கொள்ளலாமா?’ இப்படிப் பல கேள்விகளுக்கு விடை காண்பது அவசியம். இதைப் பெரிய சமூக விவாதமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.

(நலம் அறிவோம்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism