Published:Updated:

இழிதொழில் ஒழி! - ஜூவி ஸ்பெஷல் ஸ்டோரி

இழிதொழில் ஒழி! - ஜூவி ஸ்பெஷல் ஸ்டோரி
பிரீமியம் ஸ்டோரி
இழிதொழில் ஒழி! - ஜூவி ஸ்பெஷல் ஸ்டோரி

க.வீரபாண்டியன், ஐ.ஏ.எஸ்

இழிதொழில் ஒழி! - ஜூவி ஸ்பெஷல் ஸ்டோரி

க.வீரபாண்டியன், ஐ.ஏ.எஸ்

Published:Updated:
இழிதொழில் ஒழி! - ஜூவி ஸ்பெஷல் ஸ்டோரி
பிரீமியம் ஸ்டோரி
இழிதொழில் ஒழி! - ஜூவி ஸ்பெஷல் ஸ்டோரி

சென்னையில் அரங்கேறிய ‘மஞ்சள்’ நாடக நிகழ்வுக்குப் பிறகு, கையால் மலம் அள்ளும் இழிவு குறித்த விவாதம், தமிழகத்தின் பல்வேறு ஆளுமைகளாலும் வெகுஜன ஊடகங்களாலும் முன்னெடுக்கப்படுகிறது.

கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவுகட்ட அருந்ததியர் இயக்கங்கள் மற்றும் பல்வேறு தலைவர்களால் ஏராளமான முயற்சிகள் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் தலித், கம்யூனிஸ்ட் இயக்கங்களும், முற்போக்கு சக்திகளும் தங்கள் பங்களிப்பைச் செலுத்தி வந்துள்ளனர். அண்மையில், தோழர் திவ்யா உருவாக்கிய ‘கக்கூஸ்’ ஆவணப்படமும், கையால் மலம் அள்ளும் இழிவு குறித்த விவாதத்தைப் பொதுவெளியில் தொடங்கி வைத்தது. தற்போது தோழர் ஜெயராணியின் ஜெய்பீம் மன்றமும், சகோதரர் பா.இரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த ‘மஞ்சள்’ நாடக நிகழ்வு, விவாதத்தை வேறு தளங்களில் விரிவுபடுத்தியுள்ளது.

இழிதொழில் ஒழி! - ஜூவி ஸ்பெஷல் ஸ்டோரி

இழிதொழில்களில் மிகவும் அருவருக்கத்தக்க ஒன்றான, மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அள்ளும் அவலம் இன்றைக்கும் தொடர்கிறது. உலகில் எங்குமே காணமுடியாத இந்த வன்கொடுமை, பல சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகும் இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அம்பேத்கரின் போராட்டத்தால் உண்டான சிறு பலனைக் கூட அனுபவிக்காத மக்கள் கூட்டம் ஒன்று தலித் சமூகத்திலேயே உண்டு. அது, நாடு முழுக்க மலம் அள்ளுவதையும், சாக்கடை சுத்தம் செய்வதையும், வீதிகளைக் கூட்டுவதையும் தொழிலாகச் செய்து வரும் சாதிகள்தான்.

பறை அடித்தல், இழவு சொல்லுதல், சவக்குழி வெட்டுதல், செத்த மாட்டுத்தோல் உரித்தல், ஆண்டைச் சாதிகளிடம் பண்ணையடிமையாய் இருத்தல் போன்ற இழிவான தொழில்களைச் செய்யுமாறு இந்தச் சமூகம் சபிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நிலைகளிலும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பங்கி, வால்மீகி, ரெல்லி, ஹெலால்கர் போன்ற சாதிகள்தான், எந்தவொரு நலத்திட்டத்தாலும் சட்டத்தாலும் குறைந்த அளவில்கூட பயனை நுகர்ந்து பார்த்திராதவை. தமிழ்நாட்டின் சக்கிலியர்களும் அத்தகைய அவல நிலையில்தான் இருக்கிறார்கள்.

ஆண்கள் மலக்குழிகளுக்குள் இறங்கி சுத்தம் செய்வதிலும், பெண்கள் துப்புரவுப் பணி செய்வதிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். குறிப்பாக, வட இந்தியாவின் பல மாநிலங்களில் உலர் கழிப்பிடங்களிலிருந்து மனித மலத்தைக் கூடைகளில் அள்ளித் தலையில் சுமந்து கொண்டுபோய் ஊருக்கு வெளியே கொட்டும் அருவருக்கத்தக்க வேலையில் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்தச் சமூகத்தினரின் வாழ்க்கை மாற்றத்துக்காக பல்வேறு நிதி ஆதாரங்களை அரசு ஏற்படுத்தியிருந்தாலும், அநீதியான இந்தச் சமூக அமைப்பில் சிறு அசைவைக்கூட அவை ஏற்படுத்தவில்லை. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இயற்றப்பட்ட உப்புச் சப்பில்லாத சட்டங்களும் (1993-ம் ஆண்டு சட்டம்), திட்டங்களும் (துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வுத் திட்டம்) எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. 2013 வரை நீதிமன்றங்களின் கடுமையான கண்டனங்களும், எச்சரிக்கைகளும் கூட நம் அரசுகளிடத்தில் எந்தச் சலனத்தையும் உண்டாக்கவில்லை. பிரதமரின் கனவுத் திட்டமான, ‘தூய்மை இந்தியா’விலும் இந்தப் பணிகளைச் செய்யும் சமூகத்தின் அவலத்தைப் போக்கும் வழிமுறைகள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இழிதொழில் ஒழி! - ஜூவி ஸ்பெஷல் ஸ்டோரி

2012-ம் ஆண்டு வெளியிடப்பட்ட, ‘குடும்பங்கள் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு - 2011’, நம் தேசத்தின் நகர் மற்றும் கிராமப்புறங்களில் மொத்தம் 26.06 லட்சம் உலர் கழிப்பிடங்கள் உள்ளதாகத் தெரிவித்தது. தேசியத் துப்புரவுப் பணியாளர் விடுவிப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டம் அமல்படுத்தப்பட்ட 1993-ம் ஆண்டிலிருந்து 2005 வரை, இந்தியாவில் உள்ள கையால் மலம் அள்ளும்  தொழிலாளர்களின் எண்ணிக்கை 7.7 லட்சம் என்று கணக்கிடப்பட்டது. இவர்களில் 4.3 லட்சம் தொழிலாளர்கள், இந்தத் திட்டத்தின்மூலம் பயன்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 1.18 லட்சம் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, 79,454 தொழிலாளர்கள் பயன்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இந்த மக்களிடையே பணியாற்றும் அரசு சாரா நிறுவனங்களோ, ‘சுமார் 13 லட்சம் பேர் இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள்’ என்கின்றன.

‘கையால் மலம் அள்ளும் தொழிலில் மனிதர்களை ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றம்’ என்று 2013-ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதன்பிறகு,  எந்தக் கணக்கெடுப்பிலும் இந்தச் சமூகத்தின் விவரங்கள் வராமல் பார்த்துக்கொள்வதில் அரசாங்கங்கள் கவனமாக உள்ளன. இந்தச் சட்டம், உலர் கழிப்பிடங்கள் மற்றும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் கணக்கெடுப்பைக் கட்டாயம் ஆக்கியுள்ளது. ஆனால், மாநில அரசாங்கங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் இதைச் சரிவர செய்யவில்லை. முன்பு அறிவிக்கப்பட்ட  7.7 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, இன்றைக்கு 13,368 என்ற அளவுக்கு ‘சுருக்கி’ விட்டது அரசு. நகர்ப்புறங்களில் 4,358 பேரும் (தமிழ்நாட்டில் 363 பேர்), கிராமப்புறங்களில் 9,010 பேரும் (தமிழ்நாட்டில் ஒருவர் கூட இல்லை) மட்டுமே இந்தத் தொழிலில் இன்னமும் இருப்பதாகச் சொல்கிறது அரசு.

பொதுவாக, துப்புரவுப் பணியாளர்களைக் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் என்னும் வகைக்குள் அடக்குவதில்லை. இது துப்புரவுப் பணி குறித்த அறியாமையால் ஏற்படும் சிக்கலாகும். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வட மாநிலங்களைப் போல சுத்தம் செய்து கூடையில் அள்ளிக்கொண்டு ஊருக்கு வெளியே கொட்டும் முறை இல்லை. ஆனாலும், துப்புரவுப் பணியிலும், மலக்குழிகளைச் சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபடும் ஒருவர், மனித மலத்தை அப்புறப்படுத்துவதை வசதியாய் மறந்து விடுகின்றனர்.

இழிதொழில் ஒழி! - ஜூவி ஸ்பெஷல் ஸ்டோரி

உலகின் மிகப்பெரும் ரயில் போக்குவரத்தை இந்திய ரயில்வே துறை இயக்குகிறது. 13 லட்சம் தொழிலாளர்களோடு உலகின் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமாகப் பெயரெடுத்த ரயில்வே துறைதான், நாட்டில் அதிகமாக மலம் அள்ளும் தொழிலாளர்களையும் கொண்ட நிறுவனம் என்று தேசியத் துப்புரவுப் பணியாளர் ஆணையம் சொல்கிறது. ஒரு நாளைக்கு 2.3 கோடி பேரும், ஆண்டுக்கு 810 கோடி பேரும் பயணம் செய்யும் ரயில்களிலும், தண்டவாளங்களிலும், ரயில் நிலையங்களின் திறந்தவெளிகளிலும் சேரும் கழிவுகளை இந்த பாவப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள்தான் அப்புறப்படுத்த வேண்டும். மனித மலத்தை மனிதனே அப்புறப்படுத்தும் கேவலம் எந்த ஒரு ரயில் நிலையங்களிலும் எளிதாகக் காணக் கிடைக்கும் காட்சிதான்.

‘சஃபாய் கர்மச்சாரி அந்தோலன்’ என்ற துப்புரவுப் பணியாளர்கள் போராட்ட இயக்கத்தின் சார்பில், அதன் தலைவர் பெஜவாடா வில்சன் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், 27.03.2014 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, 1993-ம் ஆண்டிலிருந்து மலக்குழிகளுக்குள் இறங்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவு இன்னமும் அமல்படுத்தப்படவே இல்லை.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தைத் தடுக்கவும், கையால் மலம் அள்ளும் இழிவுநிலை தொடர்பான அனைத்துச் சிக்கல்களை கண்காணிக்கவும் தேசியத் துப்புரவுப் பணியாளர் ஆணையம் 12.08.1994 அன்று உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம், 2004-ம் ஆண்டோடு சட்டரீதியான தன் அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து, இப்போது பெயரளவுக்கு உள்ளது.

அரசின் கொள்கைகளும், வளர்ச்சித் திட்டங்களும் சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் வண்ணம் அமைய வேண்டும். ஆனால், அதுபோன்ற மாற்றங்கள் எதுவும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை காணக் கிடைக்கவில்லை. ‘தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்படும், அதன் மூலம் திறந்தவெளிக் கழிப்பிடங்களை முழுவதுமாக ஒழிக்க முடியும்’ என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, ‘‘12 கோடி  கழிப்பறைகளில் நிரம்பும் கழிவைச் சுத்தம் செய்ய என்ன கட்டமைப்பு வசதிகள் உள்ளன? சிறிய குழாயைக் கூட சரியாகப் பொருத்த வக்கில்லாத அரசுத் துறைகளும், ஊராட்சி, நகராட்சி மன்றங்களும் என்ன தொழில்நுட்பத்தைக் கையாளப் போகிறார்கள்?’’ என்ற கேள்விகளை பெஜவாடா வில்சன் எழுப்பினார். மேலும், ‘‘இந்த அறிவிப்பு, இன்னும் அதிகமாக தலித் மக்களை இந்த இழிதொழிலில் ஈடுபடவே வழிவகுக்கும்’’ என்கிறார்.

சட்டங்களாலும், திட்டங்களாலும் மட்டுமே இந்த இழிதொழிலை ஒழித்துவிட முடியாது. துப்புரவுப் பணி என்பது, சாதி அமைப்புடன் தொடர்புடையது. பல குலத்தொழில்களை நவீன இயந்திரங்களின் கண்டுபிடிப்புகள் பறித்துக்கொண்டு போயிருக்கின்றன. அதே நேரம், அசுத்தம் நிறைந்த இழிதொழில்களை, ஒடுக்கப்பட்ட சாதிகளின் தலையில் கட்டிவிட்டனர்.

இழிதொழில் ஒழி! - ஜூவி ஸ்பெஷல் ஸ்டோரி

‘எப்படி இதிலிருந்து விடுபடுவது?’ என்பதுதான் பிரச்னை.இந்தத் தொழிலை நவீனமயப்படுத்துவதும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதும் தீர்வாகுமா? கையுறை மாட்டிக்கொண்டு குப்பைகளை அள்ளுவதாலும், ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திக்கொண்டு மலக்குழிகளைச் சுத்தம் செய்வதாலும் இழிவுநிலை நீங்கிவிடுமா? பணிகளை நிரந்தரப்படுத்தி, அவர்களுக்குத் தேவையான பணிப்பாதுகாப்புகள் அளிக்கப்படுமானால், இந்த இழிதொழில், அடுத்த தலைமுறையை ஈர்த்துவிடாதா? அதுவா நாம் விரும்புவது? இந்தப் பணியை உதறித்தள்ளுவதும், மாற்றுத் தொழிலை மேற்கொள்வதும் உடனடித் தேவை. அதை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த மக்களை, மாற்று வாழ்வாதாரங்களை நோக்கி திசை திருப்பும் கடமை அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் உண்டு. அடுத்த தலைமுறையினர், இந்த இழிதொழிலில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியக் கடமை என்பதையும் நாம் உணர வேண்டும். இதற்கான தீவிரப் பிரசாரத்தை அனைத்துப் பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டும்.

அரசு சார்பில் துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கென, உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் தொடங்கி, அவர்களுக்கு இலவசக் கல்வியை அளிக்க வேண்டும். ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ், நகரங்களிலேயே தேவையான நிலங்களைக் கையகப்படுத்தி, இந்த மக்கள் அனைவரையும் வீட்டு உரிமையாளர்களாக்க வேண்டும்.

சாதியமைப்பு எப்படி பல்வேறு அடுக்குகளைக் கொண்டதோ, அதைப்போலவே சாதி ஒழிப்பும் பல்வேறு அடுக்குகளைக் கொண்டது. புத்தர், பூலே, பெரியார், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்கள் போராடி அடைந்த வெற்றிகளையும், தோல்விகளிலிருந்து பெற்ற   படிப்பினைகளையும் உள்வாங்கிக்கொண்டு, சாதியை ஒழிப்பதற்கான முன்நிபந்தனையாக, கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனடியாக முடிவுகட்டுவோம். இந்த இழிதொழிலுக்கு எதிரான நம் குரலை இன்னும் ஓங்கி ஒலிப்போம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism