ஈழம் இன்று பெரும்கனவு. அதற்காக அதை நினைக்காமல் இருக்க முடியுமா? அதுவும் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் மிரளும் விழிகளுடன், பதறும் மனங்களுடன், நித்தமும் நிமிடங்களைக் கடத்திக்கொண்டு, ‘என்றாவது விடியாதா?’ என்ற ஏக்கப் பெருமூச்சுடன் கூப்பிடு தூரத்தில் சுருண்டு படுத்துக் கிடக்கும்போது ஈழத்தை எப்படி மறக்க முடியும்? இதோ... தீபச்செல்வன் அங்கிருந்து எழுத்தால் அழுகிறார்; கட்டுரையால் கதறுகிறார்; சொற்களால் கொல்கிறார்.

நாம் இங்கிருந்தபடி கொடூரத்தைக் கேள்விப்படுகிறோம். யாரோ நமக்கு இங்கு வந்து சொல்கிறார்கள். அதுவே இவ்வளவு வேதனையைத் தருகிறது. தீபச்செல்வன் அந்த மண்ணை மிதித்து, ஒவ்வொரு கிராமமாகச் சென்று, கவலை தோய்ந்த முகங்களைப் பார்த்துப் பார்த்து படம் பிடித்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அதனால்தான் இதனை, ‘இது என் கனவுப் புத்தகம்’ என்கிறார். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’, ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’, ‘என் குழந்தை பயங்கரவாதி’ என்ற கவிதைத் தொகுப்புகளின் மூலமாகவும், ‘எனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது’, ‘ஈழம் போர் நிலம்’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகளின் மூலமாகவும் கவனிக்கப்பட்ட படைப்பாளி.
ஒரு கவிஞனுக்கு அவனது கவிதைகள்தான் கனவுகளாக இருக்க முடியும். ஆனால், கட்டுரை நூலைச் சொல்கிறார் என்றால், அவர் ஈழ தேசத்தின் மீது மீறாக்கனவாய் நித்தமும் வாழ்கிறார் என்று பொருள். அந்தத் தமிழர் தேசம், இன்று சிங்களர் தேசம். தமிழ் ஊர்ப் பெயர்கள் எல்லாம் சிங்களப் பெயர்களாகவும், தமிழர் காலடியில் இருந்த நிலங்கள் அனைத்தும் சிங்களவர் ஆளுகைக்கு உட்பட்ட நிலங்களாகவும் மாறிய கொடுமையைக் கிராமம், கிராமமாகப் போய் தோண்டி எடுத்துள்ளார்; நம் முன் கொட்டுகிறார். இதனால் சிங்கள ராணுவத்தால் விசாரிக்கப்பட்டுள்ளார். அவரது புகைப்படக் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. புகைப்படங்கள் அழிக்கப்பட்டன. கிராமங்களுக்குள் நுழைய தடை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். ஆனாலும், அவர் அந்த மண்ணை விட்டுத்தர மனமில்லாத படைப்பாளியாக உலவுகிறார்.
‘‘தமிழ் ஈழ நிலத்தை, சிங்களப் பேரினவாத அபகரிப்பிலிருந்தும், தமிழ் இனத்தை இன அழிப்பிலிருந்தும் காப்பாற்றுவதற்கு... வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழம் ஒன்றே தீர்வாக உள்ளது” என்பதே தீபச்செல்வன் தீர்ப்பு... தமிழர் வழிமொழியும் தீர்ப்பு.
தமிழர் பூமி
தீபச்செல்வன்
எதிர் வெளியீடு, 96,
நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி.
தொடர்புக்கு: 99425 11302
விலை: ரூ.350/-

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- புத்தகன்