Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 28 - காத்திருக்கிறது புற்றுநோய் சுனாமி!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 28 - காத்திருக்கிறது புற்றுநோய் சுனாமி!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 28 - காத்திருக்கிறது புற்றுநோய் சுனாமி!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 28 - காத்திருக்கிறது புற்றுநோய் சுனாமி!

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 28 - காத்திருக்கிறது புற்றுநோய் சுனாமி!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 28 - காத்திருக்கிறது புற்றுநோய் சுனாமி!

வ்வொரு ஆண்டும் இந்தியாவில் 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் புதிதாகப் புற்று நோயாளிகள் பட்டியலில் சேர்கிறார்கள். இதற்கு வாழ்க்கை முறையே முக்கியக் காரணம். ‘வரும் 2020-ம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 17 லட்சத்து 30 ஆயிரம் பேராக உயரக்கூடும்’ என்று அபாயமணி அடிக்கிறது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். அதோடு, ‘புற்றுநோயால் 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் இறக்கும் நிலையும் 2020-ம் ஆண்டில் ஏற்படும்’ என்கிறது அந்த அமைப்பு.

புற்றுநோய் போல அச்சுறுத்தும் பயங்கரம் வேறு ஒன்றும் இல்லை. நோயாளியை மட்டும் இல்லாமல், அவரை நேசிக்கும் எல்லோரையும் சேர்த்து பயமுறுத்தும் நோய் அது. உலக அளவில் மக்களைக் கொல்லும் டாப் 10 பயங்கரங்களில் புற்றுநோயும் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் புற்றுநோயால் இறக்க நேரிடும் நோயாளிகளில் சரிபாதி பேரின் மரணத்துக்குக் காரணம் நுரையீரல் புற்றுநோயும், வாய்ப் புற்றுநோயும்தான்.   

ஒரு நாளேட்டில் சில கல்லூரி மாணவிகள் மழித்த தலையுடனும் சிரித்த முகத்துடனும் போஸ் கொடுக்கும் படம் கண்டேன். ‘ஃபேஷன் எப்படியெல்லாம் போகிறது!’ என்ற சலிப்புடன் படித்தேன். படித்தபோது பெருமைப்பட்டேன். புற்றுநோய் சிகிச்சையால் முடியிழந்து, வெளியில் வரக் கூசும் பெண்களுக்குச் செயற்கை முடி ஒப்பனை செய்துகொள்வதற்காகத் தமது அழகிய தலைமுடியைத் தானம் தந்தவர்கள் இந்தப் பெண்கள். தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் இதை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்கிறார்கள். இதைப் பற்றிப் படித்தபோது, கட்டிய மனைவிக்கு ரத்தம் தேவைப்படும்போதுகூட, யாராவது டோனரைக் கூட்டி வர ஓடும் வீர ஆண்கள் நினைவுக்கு வந்தனர். எது அழகு என்று இந்த உலகம் நினைக்கிறதோ, அதையே வெட்டி, தானமாகக் கொடுக்கத் துணிந்த அந்தக் கல்லூரி மாணவிகள், தன்னம்பிக்கையின் சின்னமாகவே நமக்குத் தெரிகிறார்கள்.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 28 - காத்திருக்கிறது புற்றுநோய் சுனாமி!

எல்லாப் புற்றுநோய்களுமே மரணத்தைத் தரும் ஆபத்தானவை அல்ல! மார்பிலோ, பிறப்புறுப்பிலோ புற்றுநோய் வந்தால் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை தந்தால் நூறு சதவிகிதம் குணம்பெற முடியும். கீமோ தெரபி எனும் மருந்து செலுத்துதல், ரேடியேஷன் எனும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவற்றால் தலைமுடி உதிர்ந்துவிடும் எனத் தயங்கி, சிகிச்சை பெற மறுக்கும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். அதுபோல, அறுவை சிகிச்சை செய்தால் மார்பகத்தை இழக்க நேரும் எனும் மித மிஞ்சிய பயத்தால் மருத்துவம் பெற மறுப்பவர்களும் உண்டு. அதனால் நோய் முற்றி, வலியிலும் பிற உடல் தொல்லைகளாலும் வேதனைப்பட்டு இறப்போர் உண்டு.

பெண்கள் ஒருவகையில் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோயையோ, பிறப்புறுப்பு புற்று நோயையோ முற்றாக குணப்படுத்திவிட முடியும். பள்ளிப் பருவத்திலிருந்தே புற்றுநோயைக் கண்டறியும் முறைகள், சுய பரிசோதனைகள் பற்றிய விழிப்பு உணர்வை எளிதாகக் கொடுத்துவிட முடியும். மாதவிலக்கு பற்றிய விளக்கம், அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து புரிந்துகொள்வது, அதிகமான மற்றும் தொடர்ச்சியான ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் பற்றியெல்லாம் அவர்கள் பள்ளியிலேயே அறிய வேண்டும். இதற்கான சிறப்புப் பயிற்சியை ஒவ்வொரு ஆசிரியையும் பெறச் செய்ய வேண்டும். ஆரோக்கியமான மாதவிலக்கு காலச் செயல்பாடுகளுக்கான வாய்ப்புகள் ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் தேவை. இன்றும் சரியான கழிப்பறை வசதியில்லாத பள்ளிகள் உள்ளன என்பது நாட்டுக்கே பெரும் அவமானமாகும். சானிடரி நாப்கின்கள் ஒவ்வொரு மாணவிக்கும் இலவசமாகத் தடையின்றிக் கிடைக்கச் செய்துவிட்டால், நம் இளைய தலைமுறையினரின் ஆரோக்கியமான எதிர்காலம் உறுதி செய்யப்பட்டுவிடும்.

பெரும்பாலும் ஆண்களுக்குப் பழக்க வழக்கத்தால் உண்டாகும் நுரையீரல், வாய், குடல் புற்றுநோய்களை, வந்த பின் குணப்படுத்துவது கடினம். வரும்முன் காக்கும் வாழ்க்கை முறை மாற்றத்தை இளம் வயதிலேயே விதைப்பது நல்லது. இளம் வயதில், அதுவும் கல்லூரி காலத்திலேயே பிடித்துக்கொள்ளும் பெரும் மோகினிப் பிசாசு புகைப்பழக்கமே. இளமையின் சின்னம் என்றும், ஆண்மையின் அடையாளம் என்றும், ஸ்டைல் என்றும் பற்றும் பிசாசு புகை. புகைப்பிடிப்பது தொடர்பான விதிமுறைகளை இறுக்கமாக்கியும், சிகரெட் பெட்டியின் எல்லாப் பக்கங்களிலும் பயங்கரமான எச்சரிக்கை படங்களை அச்சிட்டும், விலையைப் பல மடங்கு உயர்த்தியும், விளம்பரங்களைக் கட்டுப்படுத்திய பின்னும், இன்னமும் பலர் தற்கொலைக்கான சுருக்குக் கயிறைக் காசு கொடுத்து வாங்கி மாட்டிக்கொள்வது கொடுமை.

புதிதாக, வட இந்திய உறவால் நுழைந்துள்ள பெரும் கேடு பான்பராக், குட்கா, ஜர்தா. இவற்றால் வாய்ப்புற்றுநோய் சமீபகாலமாகத் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. எதிலும் காசு பார்க்கும் பணவெறியால், காவல்துறை உதவியுடன் இவற்றின் விற்பனை அனுமதிக்கப்படுவதாக வந்துள்ள செய்தி நம்மைத் தலைகுனியச் செய்கிறது. பெற்றோரும், ஆசிரியர்களும், சமூக அக்கறை கொண்ட ஒவ்வொரு நபரும், புகையிலைப் பொருள்கள் மீதான சமூக எதிர்ப்பை உருவாக்குவது அவசியம்.

கட்டுப்பாடற்ற குடிப்பழக்கம் காரணமாக இரைப்பை, குடல், கல்லீரல் புற்றுநோய்கள் அதிகரித்து வருகின்றன. சமீபகாலமாகப் பெண்களிடம் உருவாகி வரும் விழிப்பு உணர்வு, மதுவுக்கு எதிரான புரட்சியாக வடிவெடுத்து வருவது தமிழகத்துக்குப் புதிய நம்பிக்கை தருவதாக உள்ளது. குறிப்பாக, மெரினா புரட்சிக்குப் பின் இளைஞர்களும் பெண்களும் சின்னச் சின்ன கிராமங்களில்கூட புதிய எழுச்சி பெற்று துணிவுடன் போராடி வருவதை வாழ்த்தலாம். ஆனால், காவல் துறை உதவியுடன் டாஸ்மாக் கடைகளை அரசு பாதுகாப்பதையும், நீதிமன்ற உத்தரவின்படி பல கடைகளை மூடிய பின்னரும், முன்பைவிட அதிக மதுபானங்கள் விற்கிறோம் என்று அரசு பெருமையுடன் அறிக்கை சமர்ப்பிக்கும் கொடுமைகளையும் பார்க்கிறோம்.

மிக வேகமாக வளர்ந்துவரும் புற்றுநோயைத் தடுக்கவும், சிகிச்சை தந்து குணப்படுத்தவும், அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய அவசரக் காலம் இது. ஒவ்வொரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் புற்றுநோய் கண்டுபிடிப்புக்கான பரிசோதனை வசதிகள், மேமோகிராம், புற்றுநோய்த் திசு பரிசோதிக்கும் பேப்ஸ்மியர் போன்றவை இருக்க வேண்டும். கீமோ தெரபி எனும் மருந்து வழி மருத்துவம், அறுவைசிகிச்சை மற்றும் நவீன கதிர்வீச்சு சிகிச்சை வசதிகளை உருவாக்குவதுடன், இந்த ஒவ்வொரு துறைக்குமான சிறப்புப் புற்றுநோய் வல்லுநர்களைப் பணியமர்த்த தமிழக அரசு உடனடி முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.

பெண்களுக்கு ஹெச்.பி.வி வைரஸ் காரணமாக ஏற்படும் பிறப்புறுப்பு புற்றுநோயைத் தடுக்க, Cervarix தடுப்பூசியை இலவசமாகப் பள்ளிப் பருவத்திலேயே போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வு பிரசாரம் அவசியம் உருவாக்கப்பட வேண்டும். தமிழனத்தைப் புற்றுநோய் சுனாமியிலிருந்து காக்கும் புனிதப் பணியை அரசு உடனே துவங்குமென நம்புவோம்.

(நலம் அறிவோம்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!