Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 29 - மயக்கம் என்ன?

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 29 - மயக்கம் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 29 - மயக்கம் என்ன?

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 29 - மயக்கம் என்ன?

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 29 - மயக்கம் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 29 - மயக்கம் என்ன?

‘இந்தியாவில் போதுமான அளவுக்கு மயக்கவியல் நிபுணர்கள் இருந்தால், பிரசவத்தின்போது நிகழும் மரணங்களில் நூற்றில் ஐந்தைத் தடுக்க முடியும்’ என்று அரசே சொல்கிறது. இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலன் பாதிக்கப்படுவதற்கு, மயக்கவியல் நிபுணர்கள் பற்றாக்குறையும் ஒரு காரணம். அமெரிக்காவில் சுமார் ஒரு லட்சம் மயக்கவியல் நிபுணர்கள் இருக்கிறார்கள். அந்த நாட்டின் மக்கள்தொகை சுமார் 32 கோடி. இதைவிட நான்கு மடங்கு அதிக மக்கள்தொகை கொண்ட நம் இந்தியாவில் இருக்கும் மயக்கவியல் நிபுணர்கள், சுமார் 13,000 பேர்.

குறிப்பாக, கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் மயக்கவியல் நிபுணர்களே இருப்பதில்லை. இதன் ஆபத்தான விளைவுகளை உணர்ந்து, கடந்த 2002-ம் ஆண்டு குறுகிய காலப் பயிற்சி ஒன்றை அறிமுகம் செய்தது மத்திய அரசு. எம்.பி.பி.எஸ் முடித்த எந்த டாக்டரும் இந்தப் பயிற்சியை முடித்து மயக்கவியல் நிபுணர் ஆகலாம் என அரசு அறிவித்தது. ஆனால், டாக்டர்களுக்கும் ஆர்வம் இல்லை; கொஞ்ச நாளில் அரசும் ஆர்வம் இழந்து விட்டது.    

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 29 - மயக்கம் என்ன?

‘உறங்குவது போல இறப்பு... உறங்கி விழிப்பது போலப் பிறப்பு’ என்கிறார் வள்ளுவர். இது ‘அனெஸ்தீசியா’ கொடுத்து ஏற்படுத்தும் மயக்கநிலைக்குத்தான் கச்சிதமாகப் பொருந்தும். சர்வசாதாரணமாகப் பலர், ‘செத்துப் பிழைச்சேன்’ என்பதும், ‘உயிர் போய் உயிர் வந்திச்சு’ என்பதும் உண்மையில் அனெஸ்தீசியாவில்தான். தினம் தினம் இறப்பையும் பிறப்பையும் ஒரு முறையல்ல... பலமுறை கண்ணெதிரில் தரிசிப்பவர், மயக்கவியல் நிபுணர். இறப்பு போன்ற உணர்வற்ற நிலையிலும், உயிரோட்டத்தின் அத்தனை செயல்பாடு களையும், மூச்சையும், இதயத்துடிப்பையும் தனது விரல் நுனியில் இயக்கிக்கொண்டிருக்கும் சாரதி அவர்.

பெரும்பாலான நோயாளிகள் அறியவும், நினைவுகூறவும், நன்றி சொல்லவும் வாய்ப்பேதும் பெறாத அபாக்கியவான்கள் இவர்கள். வேதனையின் நடுவே வந்து, முன்பரிசோதனை செய்வார். அரை மயக்க நிலையில் ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு வரப்படும் நோயாளியை, முகமூடி அணிந்த முகத்துடன் அணுகி உறங்கச்செய்கிறார். நோயாளி மீண்டும் உணர்வு பெறும்போது, அவர் அங்கு இருப்பதில்லை.

வயிற்றைக் கிழித்து, கருப்பையைப் பிளந்து, குழந்தையை வெளியே எடுத்ததும், வாயுடன் வாய்வைத்து ஊதி உயிர் தந்து, அதன் முதல் அலறலில் மகிழ்ச்சி காணும் முதல் மனிதர் மயக்கவியல் நிபுணரே. மண்டையைப் பிளந்து மூளையின் ரத்தக் கசிவை நீக்கிப் புத்துயிர் தரும்போதும், முறிந்த எலும்புகளை இரும்புப்பட்டி கொண்டும் திருகாணி கொண்டும் ஒரு தச்சன் போல் பொருத்தும் போதும், துடிக்கும் இதயத்தின் ஓட்டையை அடைக்கும்போதும், வலி தெரியாமல் இருக்க வழி செய்பவர்.

உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளில் அடித்தளமாக நிற்கும் மயக்கவியல் நிபுணர்கள் கண்ணுக்குத் தெரியாத அஸ்திவாரக் கற்களே. ஆனால், அவர்களை நோயாளிகள் மட்டுமல்ல... சக டாக்டர்களேகூட அங்கீகரிப்பது இல்லை. ஒரு அறுவைசிகிச்சையைச் செய்யும் சர்ஜன் போலவே இவரும் மிக முக்கியமானவர்தான். நோயாளியின் உடல் எடையை வைத்து, அளவைக் கணக்கிட்டு மயக்க மருந்து தர வேண்டும். கொஞ்சம் கணக்கு பிசகினாலும், உயிருக்கே ஆபத்தாகிவிடும். அதிலும், உடல் பருமன் அதிகம் இருக்கும் நபர்களுக்கு மயக்க மருந்து தருவது சவாலான விஷயம். ஆனால், அறுவைசிகிச்சைக் கட்டணத்தில் ஒரு சிறுதொகையே மயக்கவியல் நிபுணருக்கு ஃபீஸாகத் தரப்படுகிறது. இதுதான் பலரையும் ஆர்வமாக இந்தத் துறைக்கு வரவிடாமல் தடுக்கிறது.

‘மயக்கவியல் அறிவியல் துறை’ என மேலை நாட்டில் பெயர் சூட்டும் முன்னரே, சக மனிதனின் வலியையும் வேதனையையும் போக்கும் மருந்துகளை மனிதன் தேடிக் கண்டுபிடித்துப் பயன்படுத்தி வந்தான். இந்தியா, கிரேக்கம், சீனம், அரபு நாடுகளில் இத்தகைய வலி நீக்கும் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அப்படிப் பெயர் தெரியாத மனிதன் துவக்கியதே மயக்கவியல். கோத்தகிரி ‘லாங்உட்’ சோலைக்காட்டில் நடந்து கொண்டிருக்கும்போது நண்பர் ராஜு, மொட்டுப் போன்ற ஒரு பூவைப் பறித்துக் கொடுத்து, ‘‘மென்று பாருங்கள்’’ என்றார். சற்று நேரத்தில் வாய் முழுதும் மரத்துப்போனது. அதைப் ‘பல்வலிப்பூண்டு’ என்றார். ‘‘பழங்குடி மக்கள் இதைப் பல் வலி போக்கவும் பல்லைப் பிடுங்கவும் பயன்படுத்துவர்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 29 - மயக்கம் என்ன?

அழகிய பாப்பி மலரின் காயிலிருந்து எடுக்கப்படும் பிசினான ஓபியம், அதன் விதைகள், கசகசா, கஞ்சா செடியின் இலை, மது மற்றும் புகையிலை போன்றவை சிறந்த வலி நிவாரணிகளாகக் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், அவற்றைப் போதைப் பொருட்களாக்கி, காசாக்கிவிட்டனர். புராணங்களில் இளவரசியை மயக்கித் தூக்கிச் செல்லும் மாயாவியின் மயக்குவித்தைக்கு அடிப்படை என்ன என்கிற அறிவியல் பின்புலம் ஆராயப்படவில்லை. ‘ஹிப்னாசிஸ்’ எனும் வசியக்கலை வெறும் வித்தையாகவே உள்ளதே தவிர, விஞ்ஞானமாக்கி விளக்கும் முயற்சி இல்லை.

நவீன மயக்கவியல், ஈதர் என்ற பொருளை 1846-ல் வில்லியம் மார்டன் பயன்படுத்தியதில் தொடங்குகிறது. வாயுவாகும் தன்மைகொண்ட ஈதரைச் சுவாசிக்கும்போது, முற்றாக உணர்விழந்த நிலை உண்டாகிறது. ஈதர் அண்மைக்காலம் வரை பயன்பாட்டில் இருந்தது. அதைத் தொடர்ந்து குளோரோபார்ம் வந்தது. ஜோசப் ப்ரீஸ்ட்லி, ஹம்பிரி டேவி ஆகியோரின் கண்டுபிடிப்பான நைட்ரஸ் ஆக்சைட் நீண்ட நேர அறுவைசிகிச்சைக்கும் உதவும் ‘பொது மயக்க’ அற்புதத்தைச் செய்தது. இது இன்னமும் பயன்பாட்டில் உள்ளது.

மயக்கவியல் மூன்று வகையான பயன்பாட்டுப் பிரிவுகளைக் கொண்டது. முதலாவதாக உடல் முழுவதையும் உணர்விழக்கச் செய்யும் General Anaesthesia; இரண்டாவது, அடி வயிற்றுப் பகுதிக்குக் கீழ் கால் பகுதியை மரத்துப் போகச் செய்யும் தண்டுவட மயக்க முறை Spinal Anaesthesia; மூன்றாவது, அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய பகுதியை மட்டும் உணர்விழக்கச் செய்யும் Local Anaesthesia. இவை நவீன ஆய்வுக் கண்டுபிடிப்புகளால் மிகவும் பாதுகாப்பானதாகவும் நீண்ட நேரச் சிக்கலான அறுவைச்சிகிச்சைகளுக்குப் பயன்படுவதாகவும் செழுமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இது தவிர ரத்தக் குழாயில் நேரடியாக மருந்துகளைச் செலுத்துவதன் மூலம் குறுகிய நேர முழு மயக்க நிலையை உருவாக்கும் Short General Anaesthesia முறையும் அறிமுகமாகியுள்ளது.

பல மணி நேரங்கள் நடக்கும் உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளின் பின்னணியில் இருக்கும் முகமறியா சூத்திரதாரிகள், மயக்கவியல் நிபுணர்களே. அவசர நிலை சிகிச்சை (Emergencey Care), தீவிர மருத்துவம் (ICU), இதய மருத்துவம் (ICCU), விபத்து, விஷக்கடி மருத்துவம், வலி நீக்க மருத்துவம் போன்ற உயிர் காக்கும் பிரிவுகளில் இளம் மயக்கவியல் மருத்துவர்கள் மிக முக்கியமான பங்கை ஆற்றுபவர்களாக உள்ளனர். மரணத்தின் விளிம்பில் தள்ளப்பட்டவர்களைக் காக்க இவர்கள் செய்யும் பணி, விவிலியத்தில் இறந்த லாசரசை மீட்டு எழுப்பிய இயேசுவின் அற்புதத்துக்கு இணையானது எனக் கூறலாம்.

(நலம் அறிவோம்)