Published:Updated:

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

Published:Updated:
##~##

குழந்தைகளிடம் நனையும் மழை

குழந்தைகளின்
உள்ளங்கைகளுக்குள்
பிடிபடும் மழை நீருக்கு
உண்டாகக்கூடுமோ
ஒரு கடலின் கர்வம்?

குடையை விரித்தபடி
சாலையில் இறங்கி
பள்ளிக்குச் சென்றாள்
டீச்சர் அம்மா.
சிறு குடையை விரித்தபடி
முற்றத்திலிருந்து
வாசலில் இறங்கி
பள்ளிக்குச் செல்வதாகக்
கூறிச் சிரித்தது
டீச்சராகிவிட்ட குழந்தை.

- நேசிகா

மழையின் வாய்ப்பாடு

வாய்ப்பாடு தெரியுமாடே
என்று கேட்டுவிட்டு
அடுத்த வகுப்பறை ஆசிரியரிடம்
பேசப் போய்விட்ட வாத்தியார்
எதிரே இருப்பது இல்லாததுகூடத்
தெரியாதபடிக்குக்
கண்களை இறுக மூடிக்கொண்டு
வேலுச்சாமி
அருகிருக்கும் கே.லச்சுமணன்  
'லேய்! வாத்தி இங்கன இல்லடா’
என்று காதுக்கருகில் முணுமுணுத்ததும்
தொடையில் கிள்ளியதும்கூட  
அறியாதவாறு
ஆதியோடு அந்தமாக
ஓரோண் ஒண்ணு தொடங்கி
பைத் பைத் நூறு வரை
அடித்துத் தள்ளி நிமிர்ந்தது மாதிரி
விடாது அடித்துக்கொண்டே இருக்கிறது
இந்தப் பின்னிரவு மழை.

- எஸ்.வி.வேணுகோபாலன்

சொல்வனம்!

மாநகர் மழை - சில துளிகள்

தார் சாலையில் வழிந்து
கான்கிரீட் தளங்களில் மிதந்து
மண் தரை தேடும் மழை
திகைத்து சேர்ந்து
தேங்குகிறது பேரணியாய்.

சாய்ந்து, கவிழ்ந்து,
நிறைந்துகிடக்கும் குப்பைத் தொட்டிகள்
கப்பல் விடுகின்றன.

ஒதுங்க மரமின்றி
சிக்னல் மரங்களை
வெறித்துக்கொண்டு
நனைகிறார்கள்
வாகன ஓட்டிகள்.

நேற்று பார்த்த
பிளாட்ஃபாரவாசிகள்
இன்றைய மழைக்கு
என்ன செய்வார்கள்?
யோசிக்க நேரமின்றி
செலுத்தப்படுகிறார்கள் யாவரும்.

வெள்ளத்தில் மிதந்து
வீடேறினாலும்
அங்கேயும் அலையடிக்கும்
அற்புதங்களை நிகழ்த்துகிறது
மாநகர் மழை.

மூடப்படாத
சாக்கடைக் கால்வாயோ
போன மாதம்
தொலைத் தொடர்புத் துறை
வெட்டிய குழியோ
நிகழ்த்திப் பார்த்துவிடுகிறது
சில இறப்புகளையும்.

காலணியில் தூசு படாத
காரில் போய் வரும்
மனிதர்களுக்கான தெருவில் மட்டும்
இன்ஜின் வைத்து இறைத்து
அப்புறப்படுத்துகிறார்கள்
சாலையில் தேங்கும்
மழை நீரை.

- அருண் பழனியாண்டி

சொல்வனம்!