Published:Updated:

ஆபத்தான மருந்தைப் பரிந்துரைக்க லஞ்சம்... மிரட்டல்!

ஆபத்தான மருந்தைப் பரிந்துரைக்க லஞ்சம்... மிரட்டல்!
பிரீமியம் ஸ்டோரி
ஆபத்தான மருந்தைப் பரிந்துரைக்க லஞ்சம்... மிரட்டல்!

அம்பலப்படுத்திய சத்யராஜ் மகள்

ஆபத்தான மருந்தைப் பரிந்துரைக்க லஞ்சம்... மிரட்டல்!

அம்பலப்படுத்திய சத்யராஜ் மகள்

Published:Updated:
ஆபத்தான மருந்தைப் பரிந்துரைக்க லஞ்சம்... மிரட்டல்!
பிரீமியம் ஸ்டோரி
ஆபத்தான மருந்தைப் பரிந்துரைக்க லஞ்சம்... மிரட்டல்!

ருந்து நிறுவனங்களின் வில்லத்தனத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார், நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. ஊட்டச்சத்து நிபுணராக இருக்கும் திவ்யாவை அணுகிய அமெரிக்க மருந்து நிறுவன பிரதிநிதிகள், தங்களின் மல்ட்டி வைட்டமின் மருந்துகள் மற்றும் கொழுப்பு கரைக்கும் மருந்துகளைப் பரிந்துரைக்குமாறு சொன்னார்கள். அவற்றில் ஸ்டீராய்டு மற்றும் ஆபத்தான பொருள்கள் இருப்பதால், திவ்யா மறுத்தார். லஞ்சம் கொடுக்க முற்பட்டார்கள். அதை மறுத்த திவ்யாவை, மிரட்டினார்கள். இதுபற்றி பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் திவ்யா.

ஆபத்தான மருந்தைப் பரிந்துரைக்க லஞ்சம்... மிரட்டல்!

‘‘இது ஒரே ஒரு திவ்யாவுக்கு நிகழ்ந்த பிரச்னை அல்ல’’ என்கிறார், கல்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி. மருந்து நிறுவனங்களின் பேராசை முயற்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் புகழேந்தி, ‘‘சேவை என்ற உயர்ந்த தன்மையில் இருந்து, வணிகம் என்ற கொடூர விஷக்கிருமியின் கையில் மருத்துவம் சிக்கிக்கொண்டதன் வெளிப்பாடு இது. ஒவ்வொரு நோயாளியும் அவர்களுக்குக் கறவை மாடாகத் தெரிகிறார்கள். இந்தியாவின்  130 கோடி மக்களிடமிருந்து, கிடைக்கும் வரை பணத்தைக் கறக்கின்றன மருந்து நிறுவனங்கள். இந்தக் கூட்டுக் கொள்ளையில் சில மருத்துவர்கள், மருத்துவமனைகள், அரசியல்வாதிகள் என எல்லோருமே பங்காளிகள். மருந்து நிறுவனங்கள் கொண்டு வரும் கொள்ளை லாபமே, அமெரிக்கா போன்ற நாடுகளைப் பணக்கார நாடுகள் ஆக்குகிறது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளைக் குறிவைத்தே, அவர்கள் தங்களின் மருந்துச் சந்தையை விரிவுபடுத்துகின்றனர். தங்கள் மருந்துகளை நோயாளிக்குப் பரிந்துரைக்க வேண்டி, டாக்டர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் கொடுப்பது வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்வது போன்ற முறைகளைக் கையாள்கின்றனர். மருத்துவர்களுக்கு 33 ரூபாய்க்குத் தரப்படும் இரும்புச்சத்து டானிக், வெளியே 102 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மருத்துவத்துக்குச் செலவிட்டே பலர் ஏழையாகிவிட, மருந்து நிறுவன அதிபர்கள் உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள்” என்கிறார்.

ஆபத்தான மருந்தைப் பரிந்துரைக்க லஞ்சம்... மிரட்டல்!

‘‘இந்திய மருந்துச் சந்தையின் வர்த்தக மதிப்பு, ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய். இதை ஆண்டுதோறும் அதிகரிக்கச் செய்யும் முயற்சியே, மருந்து விற்பனை தொடர்பான முறைகேடுகளையும் மூர்க்கப்படுத்துகிறது’’ என்கிறார் அனைத்திந்திய மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சம்மேளனத்தின் தேசியச் செயலாளர் ரமேஷ் சுந்தர். தொடர்ந்து பேசும் அவர், ‘‘முன்பெல்லாம் மருந்து, மாத்திரைகளின் தரத்தையும் உள்ளடக்கத்தையும் மருத்துவர்களிடம் விளக்கி, மருந்துகளை வாங்கிக்கொள்ள கோரிக்கை வைப்போம். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே நுழைந்தபிறகு, இந்த கிஃப்ட் கலாசாரம் பெருகியது. இப்போது மருந்து நிறுவனங்கள்,மருத்துவர்களைச் சரிக்கட்டி கிஃப்ட் கொடுக்க என்றே தனியாக ஒரு துறையை உருவாக்கி உள்ளனர். எப்படியெல்லாம் மருத்துவர்களைத் தங்கள் வழிக்கு கொண்டு வரலாம் என்பதற்கான பயிற்சியையும் தருகின்றனர். ‘முறையற்ற மருந்து விற்பனை, கிஃப்ட் கலாசாரத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும்’ என்று டெல்லியில் மத்திய அரசு நடத்திய கூட்டத்தில் எங்கள் சங்கம் வலியுறுத்தியது. ஆனால், எதுவும் நடக்கவில்லை’’ என்கிறார் வேதனையோடு.

ஆபத்தான மருந்தைப் பரிந்துரைக்க லஞ்சம்... மிரட்டல்!

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், ‘‘ஐரோப்பிய நாடுகளில், ‘இந்த நோய்க்கு இப்படித்தான் சிகிச்சை தரவேண்டும்’ என்று சட்டரீதியான வழிகாட்டுதல்கள் உள்ளன. இதை எந்த டாக்டரும் மீற முடியாது. மீறினால் தண்டனை கிடைக்கும். ஆனால், இங்கு எந்தச் சட்ட வரைமுறையும் இல்லை. அரசாங்கமே பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்குச் சாமரம் வீசுகிறது. ஒருவர் வாழும் பிரதேசம், இயற்கைச் சூழல், பண்பாட்டுக்கு ஏற்ற உணவுப் பழக்கமே, அவருக்குச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். உதாரணமாக, நாமக்கல்லில் முட்டை உற்பத்தி அதிகம். நமக்குக் குறைந்த விலையில் முட்டை கிடைக்கிறது என்பதால், புரதச்சத்துக்கு அதைச் சாப்பிடலாம். அதை விட்டுவிட்டு, ‘புரோட்டீன் டயட்’ என்ற பெயரில் எதற்காக பன்னாட்டு மருந்துகளை வாங்க வேண்டும்? அரசே பன்னாட்டு மருந்துகளுக்கும், ஊட்டச்சத்து உணவுகளுக்கும் அனுமதி கொடுத்து, மக்களை மோசமான நுகர்வோராக மாற்றுகிறது. அரசின் கொள்கை முடிவு மாற வேண்டும். மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்போதுதான் நம்பிக்கையான மாற்றங்கள் நிகழும்’’ என்றார் அழுத்தமாக.

நோயாளி என்பவர் பொருளல்ல, அவர் ஓர் உயிர் என்பதை மருந்து நிறுவனங்களும் அரசும் உணர வேண்டிய தருணம் இது.

- சே.த.இளங்கோவன்