Published:Updated:

நீங்குமா நீட்... கிடைக்குமா சீட்?

நீங்குமா நீட்...  கிடைக்குமா சீட்?
பிரீமியம் ஸ்டோரி
நீங்குமா நீட்... கிடைக்குமா சீட்?

என்னாகும் மாணவர்களின் மருத்துவக் கனவு?

நீங்குமா நீட்... கிடைக்குமா சீட்?

என்னாகும் மாணவர்களின் மருத்துவக் கனவு?

Published:Updated:
நீங்குமா நீட்...  கிடைக்குமா சீட்?
பிரீமியம் ஸ்டோரி
நீங்குமா நீட்... கிடைக்குமா சீட்?

‘இரவு பகலாகப் படித்து, தாங்கள் வாங்கிய ப்ளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிடலாம்’ எனத் தமிழகப் பாடத் திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் கண்ட கனவை, ‘நீட் தேர்வு’ என்ற சவப்பெட்டிக்குள் அடைத்தது மத்திய அரசு. அந்தச் சவப்பெட்டியின் கடைசி ஆணியைச் சம்மட்டியால் அடித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வு அடிப்படையில் 85 சதவிகித இடங்களை, உள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. ‘கூலி வேலை செய்பவரின் மகன் மருத்துவரானார்’, ‘கீரை விற்பவரின் மகள் டாக்டரானார்’ என்பது மாதிரியான செய்திகள் எல்லாம் இனிமேல் வெளிவராது.

தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது, அதைக் காப்பாற்ற சட்டப் பேரவையில் தனிச் சட்டம் கொண்டுவந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றார் ஜெயலலிதா. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் நாடாளுமன்ற ஒப்புதலுடன் சேர்க்கப்பட்டது. இதற்காக ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ எனப் புகழப்பட்டார் அவர்.

நீங்குமா நீட்...  கிடைக்குமா சீட்?

ஆனால், நீட் விஷயத்தில் அவருடைய கட்சியின் ஆட்சிதான் தமிழக மாணவர்களுக்கு அடுத்தடுத்து நம்பிக்கை துரோகம் செய்தது. ‘தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதத் தேவையில்லை’ என்று முதலில் தவறான நம்பிக்கை அளித்தனர். அதை நம்பி பலர் நீட் தேர்வுக்குத் தயாராகவும் இல்லை; விண்ணப்பிக்கவும் இல்லை. நீட் தேர்வுக்கு, தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டும், அது குடியரசுத் தலைவரின் பார்வைக்கே போகவில்லை. மத்திய அரசை வலியுறுத்தி இதைச் சாதிக்கவும் தமிழக அரசு தயாராக இல்லை. கடைசியில் அந்தத் தேர்வை எழுதியே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள் மாணவர்கள். ப்ளஸ் டூ தேர்வில் மூன்று, நான்கு பாடங்களில் சென்டம் வாங்கியவர்கள்கூட, நீட் தேர்வில் சாதிக்க முடியாமல் கண்ணீர் விட்ட சோகம் நிகழ்ந்தது. தமிழகம் முழுக்க நடந்த போராட்டங்களால், ‘மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு  நீட் மதிப்பெண் அடிப்படையில் 85 சதவிகித இட ஒதுக்கீடு’ என்று அரசு அறிவித்தது. ஆனால், இதையும் அரசால் காப்பாற்ற முடியவில்லை.

‘‘மருத்துவக் கனவுகளுடன் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து, நீட் தேர்வும் எழுதிய ஒரு மாணவர், அதற்கான கட் ஆஃப் கிடைக்காததால் தற்போது இளங்கலை இயற்பியலில் சேர்ந்துள்ளார்’’ என்கிறார் மருத்துவர் எழிலன். அவரே மேலும், ‘‘தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்கள் சுமார் 86,000 பேர். அவர்களில் 2,000 பேர் மட்டுமே மத்திய பாடத் திட்டத்தில் படித்தவர்கள். மீதம் உள்ள அனைவரும் மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்றவர்கள். தற்போதைய அரசு கணக்கீட்டின்படி அந்த 2,000 பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இடம் கிடைத்துவிடும்.

நீங்குமா நீட்...  கிடைக்குமா சீட்?



தமிழ்நாட்டு மக்களுக்காக, நம் மக்களின் வரிப்பணத்தில் கட்டி மேம்படுத்தப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கப்போவதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இவர்கள்தான். மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்களின் நிலை என்ன ஆகும்? இவர்களுக்கு அரசு என்ன பதில் வைத்திருக்கிறது? 2006-ல் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி ஆட்சியில்தான் அனைத்துக் கட்சியினரின் குரலாக, நுழைவுத் தேர்வு முறை நீக்கப்பட்டது. அந்த இடத்தில்தான் தற்போது நீட் நுழைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீட் தொடர்பான வழக்கு நடை பெற்றபோது அதில் குறுக்கிட்ட உச்ச நீதிமன்றம், ‘இனிமேல் நீட் தொடர்பான எவ்வித விவாதமும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கீழ்தான் நடைபெற வேண்டும்’ என்று ஆணை பிறப்பித்தது. அப்போதாவது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்குப் போயிருக்க வேண்டும். அதையும் இந்த அரசு செய்யவில்லை. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்குக் கோரும் சட்ட முன்வடிவுக்கு  சட்டப் பாதுகாப்பு வாங்கியிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. மருத்துவக் கல்வி மட்டுமில்லை... மருத்துவமும் இனி ஏழைகளுக்குக் கிடைக்காமல் போய்விடும். வட இந்தியாவின் பல மாநிலங்களில், ஆரம்ப சுகாதார நிலையங்களின் வெளியே, வெறும் பலகை மட்டுமே தொங்கும். உள்ளே செவிலியர்கள், மருத்துவர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள். தமிழக மருத்துவமனைகளின் எதிர்காலம் அப்படித்தான் இருக்கப் போகிறது” என்றார்.

நீங்குமா நீட்...  கிடைக்குமா சீட்?

‘இனி இதுதான் விதி’ என்றால், இங்கு எல்லாமே மாறிவிடும். நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போல முளைக்கும். பள்ளிகளுக்குக் கட்டணம் கொடுப்பதோடு, கோச்சிங் சென்டருக்கும் லட்சங்களில் செலவழிக்க வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் வசதியுள்ள, இந்த கோச்சிங் சென்டர்கள் இருக்கும் பெருநகரங்களில் வசிக்கிற, மத்தியப் பாடத் திட்டத்தில் படிக்கிற ஒரு சிலருக்கு மட்டுமானதாகவே மருத்துவக் கல்வி ஆகிவிடும்.

நீட் தேர்வு விலக்குக்காகத் தொடர்ந்து போராடிவரும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ‘‘50 ஆண்டு காலமாக இங்கே ஒரு கட்டமைப்புக்குள் நடந்துவரும் மருத்துவக் கல்வி முறையையே பாதிப்பதாக இது உள்ளது. மாநிலப் பாடத் திட்டம், மத்தியப் பாடத் திட்டம் என எதில் படித்திருந்தாலும் கோச்சிங் கிளாஸுக்குச் சென்றால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களின் கல்வி அதிகாரத்தை நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் நிர்ணயம் செய்வது அபாயகரமான சூழல்” என்றார். 

சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவி அபிநிஷா ப்ளஸ் டூ தேர்வில் 1,185 மதிப்பெண்கள் பெற்றவர். நீட் தேர்வு எழுதிய அவர், கட் ஆஃப் 212 மட்டுமே பெற்றுள்ளதால் அவரது மருத்துவக் கனவு கேள்விக்குறியாகி இருக்கிறது. அவரது தந்தை வழக்கறிஞர் முருகவேள், ‘‘நீட் தேர்வு நிச்சயம் நடக்காது என்று அரசுதான் மாணவர்களுக்கு உறுதியளித்தது. அரசின் வார்த்தைகளை நம்பித்தான் என் மகள் பாடத் திட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தினாள். மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்க்கத் தனக்குத் திராணியில்லை என்று மாநில அரசு முன்னரே குறிப்பிட்டிருந்தால் எனது மகளுடைய எதிர்காலம் இப்படி ஆகி இருக்காது. நாங்கள் மீண்டும் நீதிமன்றப் படியேறி நியாயம் கேட்போம்” என்றார்.

போராட்டக் குணமற்றுக் கிடக்கும் மாநில ஆட்சி, தன்னாட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள குரல் கொடுத்தால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும்.

- ஐஷ்வர்யா

இதுதான் சமூக நீதியா?

நீட் தேர்வு எழுதிய தமிழகப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களில், வெறும் ஐந்து சதவிகிதம் பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். காரணம், கேள்வித்தாள். தமிழில் கேள்வித்தாள் தந்ததை மிகப்பெரிய சாதனையாகச் சொன்னார்கள். ஆனால், பல கேள்விகள் அவுட் ஆஃப் சிலபஸ். மத்தியப் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளில், 50 சதவிகிதத்துக்கு மேல், தமிழகப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் பாட புத்தகங்களில் கிடையாது.

மருத்துவக் கவுன்சிலிங்கில் கடந்த ஆண்டுவரை தமிழக மருத்துவக் கல்லூரிகளில், 2 முதல் 3 சதவிகித இடங்களே சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குக் கிடைக்கும். மொத்த விண்ணப்பங்களில் அவர்களின் விண்ணப்பம் அதே சதவிகிதத்தில்தான் இருக்கும். அது நியாயமாகவும் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அவர்களுக்கு 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட இடங்கள் போய்விடும். இதைத்தான் ‘சமூக நீதி’ என்கிறார்கள் சிலர்.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்த இடங்கள்: 2,880. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குத் தரப்பட்ட 435 இடங்கள் போக மிச்சம் இருப்பது 2,445 இடங்கள். கடந்த ஆண்டு இதில் 75 இடங்கள்தான் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குக் கிடைத்தன. இந்த ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் அவர்களுக்கே  போகும். இனி, தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் சி.பி.எஸ்.இ பள்ளியில்தான் விழ வேண்டி இருக்கும்!