Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 30 - டாக்டர்களைத் தாக்குவதுதான் தீர்வா?

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 30 - டாக்டர்களைத் தாக்குவதுதான் தீர்வா?
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 30 - டாக்டர்களைத் தாக்குவதுதான் தீர்வா?

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 30 - டாக்டர்களைத் தாக்குவதுதான் தீர்வா?

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 30 - டாக்டர்களைத் தாக்குவதுதான் தீர்வா?
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 30 - டாக்டர்களைத் தாக்குவதுதான் தீர்வா?
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 30 - டாக்டர்களைத் தாக்குவதுதான் தீர்வா?

‘டாக்டர்களில் 82.7 சதவிகிதம் பேர், ஏதாவது வழக்குகளில் சிக்குவோமோ என்ற அச்சத்துடனே வாழ்கிறார்கள். 62.8 சதவிகித டாக்டர்கள், ஏதாவது பிரச்னையில் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்துடனேயே சிகிச்சை அளிக்கிறார்கள். 57.7 சதவிகித டாக்டர்கள், ஏதாவது பாதுகாப்பு வைத்துக் கொண்டால் நல்லது என்று நினைக்கிறார்கள். 46.3 சதவிகித டாக்டர்கள், ஏதாவது வன்முறைக்கு ஆளாகிவிடுவோமா என்ற மன அழுத்தத்தில் தவிக்கிறார்கள். 24.3 சதவிகித டாக்டர்கள், நம்மீது ஏதாவது நஷ்டஈடு வழக்குப் போட்டுவிடுவார்களோ என்ற பயம் கொண்டவர்களாக உள்ளனர்.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ, குறைந்தது எட்டு மணி நேர உறக்கம் தேவை. பெரும்பாலான டாக்டர்களுக்கு ஏழு மணி நேரத் தூக்கம் கூட இல்லை. பெரும்பாலான டாக்டர்கள் முழுமையான மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் இல்லை. தங்கள் நோயாளிகளின் நம்பிக்கையைப் பெற்றவர்களாகவும் அவர்கள் இல்லை. மொத்தத்தில், மருத்துவர்கள் மன நிறைவற்றவர்களாக, ஒரு சோதனைக் காலத்தைக் கடக்கிறார்கள்.’

இந்திய மருத்துவச் சங்கத்தின் புனே கிளை, இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துக் கூறியுள்ள புள்ளிவிவரங்கள் இவை. ‘நாம் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளோம்’ என்ற உணர்வு, நாடு முழுவதும் டாக்டர்களிடம் அதிகரித்து வருகிறது. ஏன் இந்தத் தாக்குதல்கள்? உயிர் காக்கும் தெய்வங்களாகக் காலம் காலமாகப் போற்றப்பட்ட டாக்டர்கள், வெறும் 20 ஆண்டுகளில் எதிரிகளாக, வில்லன்களாகப் பார்க்கப்படும் அவலம் எப்படி நேர்ந்தது? எப்படி வளர்ந்தது? இதற்கு டாக்டர்கள் காரணமா? சமூகம் காரணமா? டாக்டர்களிடம் என்ன குறை? இந்தக் குறைகளுக்கும், வெறுப்புக்கும், சமூகக் கோபத்துக்கும் காரணமானவை எவை? இவை பற்றிய பொறுமையான, நடுநிலையான, சமூக அக்கறை கொண்ட ஆய்வு தேவை.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 30 - டாக்டர்களைத் தாக்குவதுதான் தீர்வா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலாவதாக, ‘டாக்டர்கள் பணம் பிடுங்குகிறார்கள்; மனிதாபிமானமின்றி இருக்கின்றனர்; நோயாளிகளையும், நோய்களையும் காசு பண்ணுவதற்கான ஆதாரங்களாகவே பார்க்கின்றனர்’ என்று கூறப்படுகிறது. இந்த மனநிலை உண்மையா? அப்படியானால், இலவசமாக சிகிச்சை தரும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீதும் பெரும் வன்முறைத் தாக்குதல்கள் நடப்பதை எதிர்த்துப் போராட்டங்கள் நடப்பது ஏன்? மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலும் அரசு டாக்டர்களும், ஊழியர்களும், ‘எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்’ என்று போராடுவது ஏன்?

இவற்றுக்கான அடிப்படைக் காரணங்களைத் தேடுவது பலரின் மனசாட்சியை உறுத்தும். சரி செய்யவே முடியாத பல சமூகக்கேடுகளை வெளிப்படுத்தும்.

முன்பெல்லாம் தகுதி, திறமை, சமூக அர்ப்பணிப்பு, தியாக உணர்வு கொண்டவர்களே மருத்துவத்துறைக்குத் தேர்வுபெறுவர், சில ஆயிரங்கள் செலவழித்தாலே போதும்... ஒருவர் படிப்பு முடித்து டாக்டராக வெளியில் வர முடியும். லஞ்சம் கொடுக்காமல் அரசுப் பணியும் உடனே கிடைக்கும். டிரான்ஸ்ஃபர் உள்பட எதற்கும் பணம் செலவழிக்கத் தேவையில்லை. இந்த நிலை மாறி, கோடிகளில் ‘கேபிடேஷன்’ வாங்கும் தனியார் மருத்துவச் சந்தைக் கல்லூரிகளை உருவாக்கியது யார்? அனுமதி தந்த அரசியல்வாதிகளுக்கும், காசு வாங்கிக்கொண்டு இதற்கெல்லாம் துணை போன இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் போன்றவர்களுக்கும் என்ன தண்டனை கிடைத்தது? அவர்கள் ஏதேனும் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளானார்களா? கோடிகளை வாங்கிக் கட்டிலுக்கு அடியில் போட்டுக்கொண்டு, பணப்படுக்கை மீது தூங்கும் கல்வித் தந்தைகளுக்கு ஏதேனும் தண்டனை கிடைத்ததா? கோடிக்கணக்கில் கருப்புப் பணத்தைக் கொடுத்து இடம் பிடித்து, மருத்துவர் ஆனவர்கள்தான் புனிதமான சேவையை இழிவுபடுத்தியவர்கள் என்று இந்தச் சமூகம் அவர்களை ஒதுக்கியதா?

பளபளப்பான கட்டடங்களையும், கவர்ச்சியான விளம்பரங்களையும் பார்த்து கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு ஓடி பணத்தைக் கொட்டும் விட்டில் பூச்சி நோயாளிகள், அங்கே சத்தமின்றிக் கருகுகிறார்கள். ஆனால், மனிதாபிமானத்துடன் நடு இரவில், தனித்து வந்து மருத்துவம் பார்க்கும்  அரசு டாக்டரும், மருத்துவமனைப் பணியாளர்களும் தாக்கப்படுகின்றனர். அடியாட்கள் காவல் நிற்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகள், அமைதியாகவே நடந்து கொண்டிருக்கின்றன.

இன்று மத்திய அரசு தொடங்கியுள்ள ‘மக்கள் மருந்தகங்கள்’ (Jan Aushadhi), 500 சதவிகிதம், 1000 சதவிகிதம் குறைவான விலையில் உயிர்காக்கும் மருந்துகளைத் தருகின்றன. ஆனால் இதே அரசு, 500 சதவிகிதம், 1000 சதவிகிதம் லாபம் வைத்து, அதே மருந்துகளைத் தயாரித்து விற்கும் அந்தச் சர்வதேச மருந்துக் கொள்ளையர்களைத் தட்டிக் கேட்கவோ, தடை செய்யவோ தயங்குவது ஏன்? ரஷ்யக் கூட்டுறவுடன் அரசுத்துறையின் மூலம் தொடங்கப்பட்ட ஹிந்துஸ்தான் மருத்துவக் கருவிகள் உற்பத்தித் தொழிற்சாலைகளும், மத்திய அரசின் மருந்து உற்பத்தித் தொழிற்சாலைகளும் ஏன் மூடப்பட்டன?

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 30 - டாக்டர்களைத் தாக்குவதுதான் தீர்வா?

‘அரசு மருத்துவமனைகளில் 1,000 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், ஐந்து செவிலியர், ஐந்து மருத்துவ உதவியாளர்கள் தேவை’ என்ற அடிப்படை விதியை மதிக்காமல், குறைவான பணியாளர்களுடன் மருத்துவமனைகளை நடத்த அரசு வற்புறுத்துவது ஏன்? இந்தப் பற்றாக்குறையை சரி செய்யாத அரசை, மக்கள் நல அரசு என்று எப்படி ஏற்பது? கிராமங்களிலும் மலைப்பகுதிகளிலும் வாழும் மக்களுக்குச் சேவை செய்ய முன்வரும் மாணவர்களுக்கு, மருத்துவக் கல்லூரியில் இடம் தர அரசு ஏன் முன்வரவில்லை? கிராமப்புறங்களில் மருத்துவமனை தொடங்க உதவிகள் தராத அரசை யாரேனும் கேள்வி கேட்டார்களா? பிறந்த இடத்தில் சேவை செய்ய முன்வருவோர்க்கு அரசுப் பணியைத் தரும் அடிப்படை சமூக உணர்வு கூட அரசுக்கு இல்லாமல் போனதை எதிர்த்து யார் போராடினார்கள்?

பொருள்களுக்கு எம்.ஆர்.பி அச்சிட்டு விலையை நிர்ணயித்துக் கட்டுப்படுத்தும் அரசு, மருத்துவக் காப்பீட்டில் கட்டணத்தை நிர்ணயிக்கும் அரசு, அதே கட்டுப்பாட்டை மருத்துவமனைகளுக்கு ஏன் நிர்ணயிக்கவில்லை? மருத்துவமனைகளைத் தகுதிக்கு ஏற்ப ஏ, பி, சி என வகைப்படுத்தி கட்டணத்தை நிர்ணயித்தால், சமூகத்தின் பல கேடுகளுக்குத் தீர்வு கிடைக்கும் இல்லையா?

அமெரிக்காவில் டாக்டர்களின் சராசரி வாழ்நாள், 78 வயது. இந்தியாவில் டாக்டர்களின் சராசரி ஆயுள் 59. இந்த அவசர மரணத்தைத் தவிர்க்க டாக்டர்கள் என்ன முயற்சி எடுக்கப்போகிறார்கள்? சமூகம் என்ன பொறுப்பை ஏற்கப் போகிறது?
மருத்துவத் துறையை மக்கள் நேயம் கொண்டதாக மாற்றும் இத்தனை விஷயங்களையும் எளிதாகச் செய்து முடிக்கும் திறன்கொண்ட அரசும், கேட்டுப் பெறவேண்டிய சமூகமும் ஊமையாக இருப்பது நியாயமல்ல.

இவற்றுக்கு உண்மையான தீர்வு காண முற்பட்டால், டாக்டர்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் ஒட்டுமொத்த சமூகமும் பல புரட்சிகரமான மாற்றங்களுக்குத் தம்மை உட்படுத்திக்கொள்ள நேரிடும். ஆனால், அதற்கு யாரும் தயாராக இல்லை. ஒருவர் மற்றவரைக் குற்றம் சாட்டித் தம்மை உத்தமராகக் காட்டிக்கொள்ளும் போலித்தனமே சகல நிலைகளிலும் நிலவுகிறது. சமூகச் சீர்கேட்டின் பலியாடுகள் டாக்டர்கள், அவ்வளவே!

மக்களின் பணத்தில் டாக்டர்களாக, பொறியியல் வல்லுநர்களாகத் தேர்ச்சி பெற்ற முதல் தர இளைஞர்களை நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டுமெனத் தடுத்து நிறுத்தாது, மல்லையாக்களைப் போல ஓட விட்டு விடுகிறது அரசு. இதனால் குறைவான மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் கொண்ட தரமற்ற மருத்துவச் சூழலைச் சொந்த நாட்டு மக்களுக்குத் தருகிறது அரசு. இதன்மூலம் தனியார் கொள்ளைக்கு அனுமதிக்கும் அரசைத் தட்டிக்கேட்கவும், தண்டிக்கவும் துணிவற்ற சமூகம், டாக்டர்களைத் தாக்குவது என்ன நீதி?

(நலம் அறிவோம்)