Published:Updated:

எங்கிட்டே மோதாதே !

யூமா வாசுகி ,சேகர்

எங்கிட்டே மோதாதே !

யூமா வாசுகி ,சேகர்

Published:Updated:

நாடோடிக் கதைகள் வங்கம்

##~##

ஒரு காட்டில் ஓர் அசட்டுப் புலி இருந்தது. அதன் பெயர் குரோனோ. ஒரு நாள் அது இரை தேடிச் சென்றது. வழியில் டோனோ என்ற முயலைப் பார்த்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அடடா! இதுவல்லவா அதிர்ஷ்டம்!’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்ட குரோனோ, முயலை நோக்கிப் பாய்ந்தது. ஆனால், டோனோ தப்பி ஓடியது. விடாமல் துரத்தியது குரோனோ.

ஓடி ஓடி அவை இரண்டும் காட்டைக் கடந்து, ஊருக்குள் வந்து விட்டன. டோனோ முயல் ஒரு வீட்டுக்குள் புகுந்துகொண்டதைப்  பார்த்து, குரோனோ நின்றது. 'ஆ! மனிதர்களின் வீட்டுக்குள் சென்றால் குழப்பமாகிவிடுமே!’ என்று திரும்பி ஓடிவிட்டது.

வீட்டுக்குள் சென்ற டோனோ முயலை அங்கே இருந்தவர்கள் பிடித்து, கட்டிவைத்துவிட்டார் கள். ''ஹி... ஹி... நாளைக்கே இந்த முயலைச் சாப்பிடலாம்'' என்று சொன்னார்கள்.

சூரியன் விடைபெற்று சந்திரன் வான் உச்சிக்கு வந்துவிட்டான். 'டோனோவுக்கு என்ன ஆயிற்று?’ என்று தெரிந்துகொள்ள பதுங்கிப் பதுங்கி அந்த வீட்டுக்கு வந்தது புலி.

எங்கிட்டே மோதாதே !

குரோனோவைக் கண்டதும் டோனோ பொங்கிச் சிரிக்கத் தொடங்கியது. ''ஹீ ஹீ ஹீ! வாங்க குரோனோ அண்ணா. நான் இங்கே வந்ததற்கு நீங்கள்தான் காரணம். அதற்கு மிகவும் நன்றி. இங்கே அருமையான விருந்து கிடைத்தது. நாளைக்கு எனக்குத் திருமணமும் நடக்கப்போகிறது!'' என்றது டோனோ.

அதைக் கேட்டதும் குரோனோ வின் கண்கள் வியப்பால் பிதுங்கின. ''என்ன உனக்குக் கல்யாணமா? யாருடன்?'' என்று கேட்டது.

''இந்த வீட்டில் உள்ள அழகான பெண்ணுடன். ஆனால்,   திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால், அவர்கள் என்னைக் கட்டிவைத்து இருக் கிறார்கள்'' என்றது டோனோ.

குரோனோ யோசித்தது. ''உனக்கு விருப்பம் இல்லாவிட்டால், உன் கட்டுகளை அவிழ்த்துவிடுகிறேன். நீ  என்னைக் கட்டிவைத்துவிட்டுப் போனால் போதும். உனக்குப் பதிலாக நானே கல்யாணம் செய்துகொள்கிறேன்!'' என்று சொல்லி, டோனோவின் கட்டு களை அவிழ்த்துவிட்டது. டோனோ அதே கயிற்றால் குரோனோவைக் கட்டிப்போட்டு விட்டு ஓட்டம் பிடித்தது.

பொழுது விடிந்தது. முயலுக்குப் பதிலாக புலி இருப் பதைக் கண்டு, வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந் தார்கள். கழியும் கட்டையும் எடுத்துவந்து குரோனோவை அடித்து நொறுக்கினார்கள். பெரும்பாடுபட்டு அங்கிருந்து தப்பியது குரோனோ.

'அடேய் டோனோ... இதுக்கு எல்லாம் காரணம் நீதானே? மறுபடியும் என்கிட்டே சிக்குவே. அப்போ கவனிச்சுக்கிறேன்’ என்று குரோனோ மனதுக்குள் சொல்லிக்கொண்டது.

நாட்கள் கடந்தன. ஒரு நாள் ஒரு மாலை நேரம். டோனோ முயல் காட்டைக் கடந்து ஊருக்குள் சென்றது. அப்போது ஒரு வீட்டில் பானை நிறைய பால்கட்டி இருப்பதைப் பார்த்தது. அதை எடுத்துக்கொண்டு காட்டுக்கு வந்தபோது பொழுது இருட்டிவிட்டது. முழு நிலவு இரவு அது. டோனோ ஒரு குளக்கரையில் அமர்ந்தது. பானையில் இருந்து பால்கட்டியை எடுத்துத் தின்னத் தொடங்கியது. திடீரென்று கேட்டது ஒரு சப்தம்.

எங்கிட்டே மோதாதே !

''ஹா! ஹா! மாட்டிக்கொண்டாயா!'' பயங்கரமாகச் சிரித்தபடி முன்னால் வந்து நின்றது குரோனோ. ஒரு நொடி நடுங்கிப்போனது டோனோ. ஆனாலும், அதை வெளிக்காட்டாமல் சொன்னது.

''வாங்க! வாங்க! தேடிப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல இருக்கு. நான் இதை உங்களுக்குத் தருவதற்காகத்தான் கொண்டு வந்தேன்'' என்று பானையை நீட்டியது டோனோ.

குரோனோ பால்கட்டியைத் தின்று பார்த்தது. ''அடடா, மிகவும் சுவையாக இருக்கிறதே! எனக்கு இன்னும் நிறைய வேண்டுமே'' என்று பேராவலுடன் சொன்னது.

உடனே டோனோவுக்கு ஒரு தந்திரம் தோன்றியது. குளத்தில் பிரதிபலித்த நிலவுப் பிம்பத்தை சுட்டிக்காட்டி, ''அண்ணே, பால்கட்டி அங்கே கிடக்கிறது பாருங்கள். இந்தப் பானையை உங்கள் கழுத்தில் கட்டிக்கொண்டு குளத்தில் குதியுங்கள். பால்கட்டி முழுவதையும் கொண்டுவந்துவிடலாம்!'' என்றது.

முட்டாள் குரோனோ ஒரு காட்டுக் கொடியால் பானையைக் கழுத்தில் கட்டிக்கொண்டது. பிறகு 'தொபுக்கடீர்!’ என்று குளத்தில் குதித்தது. அப்புறம் சில குமிழ்கள் மட்டும் மேலே வந்தன.

'இந்த டோனோகிட்டே வால் ஆட்டினா இப்படித் தான்’ என்றவாறு கம்பீரமாக நடந்துசென்றது டோனோ.