Published:Updated:

‘மசூர்’ என்னும் அரக்கன் - ரேஷன் பருப்பு ஆபத்து! - #BanMasoorParuppu

‘மசூர்’ என்னும் அரக்கன் - ரேஷன் பருப்பு ஆபத்து! - #BanMasoorParuppu
பிரீமியம் ஸ்டோரி
‘மசூர்’ என்னும் அரக்கன் - ரேஷன் பருப்பு ஆபத்து! - #BanMasoorParuppu

முடக்குவாதத்தைத் தரும் அரசு

‘மசூர்’ என்னும் அரக்கன் - ரேஷன் பருப்பு ஆபத்து! - #BanMasoorParuppu

முடக்குவாதத்தைத் தரும் அரசு

Published:Updated:
‘மசூர்’ என்னும் அரக்கன் - ரேஷன் பருப்பு ஆபத்து! - #BanMasoorParuppu
பிரீமியம் ஸ்டோரி
‘மசூர்’ என்னும் அரக்கன் - ரேஷன் பருப்பு ஆபத்து! - #BanMasoorParuppu

ரேஷன் கடைகள் மூலம், மலிவு விலையில் முடக்குவாத நோயைத் தர தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. ஆம், இந்த நோயை உண்டாக்குவதாகக் காரணம் காட்டி, 10 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட ‘மசூர்’ பருப்பை, ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்காகக் கொள்முதல் செய்யப் போகிறது அரசு. இதற்காக அரசாணை வெளியிட்டு, மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

மசூர் பருப்பைக் கொள்முதல் செய்வதற்கான அரசாணைக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்து தடை உத்தரவு வாங்கியுள்ளார், காரைக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடைத்துறை அதிகாரியான ஆதிஜெகநாதன். இந்நிலையில், வழக்கை வாபஸ் பெறுமாறு ஆதிஜெகநாதனுக்கு மிரட்டல்கள் வருவதாகப் புகார் எழுந்திருக்கிறது.

‘மசூர்’ என்னும் அரக்கன் - ரேஷன் பருப்பு ஆபத்து! - #BanMasoorParuppu

இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் சரவணனிடம் பேசினோம். “மசூர் பருப்பை ஆரம்பத்தில் மதிய உணவுத் திட்டத்துக்குத் தமிழகத்தில் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இந்தப் பருப்பில் சமைத்த உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் வருவதாக புகார் எழுந்தது. இதுபற்றி நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்த கரூர் கலெக்டர், மசூர் பருப்பைச் சாப்பிட்டால் முடக்குவாதம் வரும் என்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு, கடந்த 2007-ம் ஆண்டு அறிக்கை கொடுத்தார். அதைத் தொடர்ந்து, ‘இனிமேல் மசூர் பருப்பை வாங்குவதில்லை’ எனத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் முடிவு செய்தது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. 

ஆனால், இப்போது அதே பருப்பை மீண்டும் வாங்க முடிவு செய்து, புது அரசாணையை வெளியிட்டிருக்கிறார்கள். முடக்குவாதம் வரும் என்று தெரிந்தும், மக்கள் மீது அக்கறை இல்லாமல், ரேஷன் கடைகளில் மசூர் பருப்பை விநியோகம் செய்வதற்கு அரசு தயாராகிவிட்டது. நுகர்பொருள் வாணிபக் கழகம், கடந்த மாதம் டெண்டர் கோரியது. அதில், துவரம் பருப்பு, கனடா மஞ்சள் பருப்பு, மசூர் பருப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 30 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு, ரூ.143 கோடிக்கு சப்ளை செய்ய, விளம்பரம் வெளியிடப்பட்டது. அதன்பின், மசூர் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு துறைமுகத்தில் இருப்பதாக நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சொல்கிறது. மக்களைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்தவித கவலையும் இல்லை. அரசோ, ‘குறைந்த விலையில் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்குகிறோம்’ என்று சொல்கிறது. தரமான பொருள்களை வழங்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கும்போது, மக்களுக்குக் கேடு விளைவிக்கிற பொருளை வாங்கலாமா?” என்றார்.

மசூர் பருப்பில் என்ன பிரச்னை? ‘‘மசூர் பருப்பின் சிவப்பு நிறம் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நிறத்தைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை. இதைப் பயிர் செய்யும்போது, அத்துடன் கேசரி பருப்பும் களை போல கலந்துவிடுகிறது. மசூரும் கேசரியும் ஒன்றோடு ஒன்று கலந்துவிட்டால், அதில் விஷத்தன்மை அதிகமாகிவிடும். மசூர் பருப்பைச் சாப்பிட்டால் முடக்குவாத நோய் தாக்கும். கால்நடைகளுக்குக்கூட இது ஆபத்தானது என்று இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை கொடுத்திருந்தது’’  எனச் சொன்னார்கள் வேளாண்மைத் துறை அதிகாரிகள் சிலர். 

‘மசூர்’ என்னும் அரக்கன் - ரேஷன் பருப்பு ஆபத்து! - #BanMasoorParuppu

இந்த வழக்கைப் போட்ட ஆதிஜெகநாதனிடம் பேசினோம். ‘‘தடை செய்யப்பட்ட ஒரு பொருளைக் கொட்டும் இடமாகத் தமிழகம் இருக்கிறது. மசூர் பருப்பை ரேஷன் கடைகளில் மட்டுமின்றி, சத்துணவுத் திட்டத்துக்கும் வழங்கப்போகிறார்கள். இதன் மூலம் குழந்தைகளைச் சிறுவயதிலேயே முடக்குவாதத்தில் தள்ளப் பார்க்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? உயிரே போனாலும் இந்த வழக்கிலிருந்து பின்வாங்கமாட்டேன்” என்றார் உறுதியான குரலில்.

ஆதிஜெகநாதன் அருகில் அமர்ந்திருந்த அவர் மனைவி வசந்தா, “எங்க வீட்டுக்கு இன்னோவா கார்ல நாலஞ்சு பேரு வந்தாங்க. ‘கேஸை வாபஸ் வாங்குங்க. உங்களுக்கு இப்ப அஞ்சு லட்சம் ரூபாய் தற்றோம். கேஸ் வாபஸ் ஆனப்புறம் இன்னும் அஞ்சு லட்சம் தற்றோம்’னு சொன்னாங்க. அவங்களோட பேச்சும் தோரணையும் மிரட்டுறது மாதிரி இருந்துச்சு. உடனே நான், ‘நல்ல விஷயத்துக்காக நான் தாலி அறுக்கவும் தயாரா இருக்கேன்’னு துணிச்சலா சொன்னேன். அவங்க கிளம்பிப் போயிட்டாங்க. இப்படி எங்களுக்குப் பல மிரட்டல்கள் வருது. அடியாளுங்களை ஏவி விட்டு யாரோ எங்களை மிரட்டப் பாக்குறாங்க” என்றார்.

இதுபற்றி உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் பேசினோம். “மசூர் பருப்பை மட்டுமே கொள்முதல் செய்யவில்லை. மசூர் பருப்பு, கனடா மஞ்சள் பருப்பு, துவரம் பருப்பு என மூன்று வகையான பருப்புகளுக்கு டெண்டர் கோரியுள்ளோம். சந்தையில் எந்தப் பருப்பு எளிதாகக் கிடைக்கிறதோ, எந்தப் பருப்பை மக்கள் விரும்புகிறார்களோ, அந்தப் பருப்பைக் கொள்முதல் செய்வோம். மசூர் பருப்பில் சிவப்பு நிறத்தைப் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் தற்போது வந்துவிட்டன. மசூர் பருப்பால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது” என்றார்.

‘மசூர்’ என்னும் அரக்கன் - ரேஷன் பருப்பு ஆபத்து! - #BanMasoorParuppu

நாமக்கல்லைச் சேர்ந்த பருப்பு வியாபாரி ஒருவருக்காகவே, அமைச்சர் ஒருவர் இந்தக் கொள்முதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சர்ச்சைக்குரிய இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இதில் உடந்தையாம். ‘எப்படியும் வாங்கிவிடுவார்கள்’ என்ற நம்பிக்கையில், தூத்துக்குடி துறைமுகத்துக்கு மசூர் பருப்பு கன்டெய்னரில் வந்துவிட்டது. ‘மசூர் பருப்பை வாங்கியே தீருவது’ என்று தமிழக அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதற்குப் பின்னணி இதுதானாம்.

- தெ.பாலமுருகன்
படம்: ச.சாய் தர்மராஜ்

கேசரி பருப்புக்கும் ரூட் க்ளியர்!

சூர் பருப்பு போலவே நரம்புக் கோளாறுகளையும், முடக்குவாதத்தையும் ஏற்படுத்துகிறது என்று கடந்த 1961-ம் ஆண்டே மத்திய அரசால் தடை செய்யப்பட்டது கேசரி பருப்பு. இந்தத் தடை அமலில் இருந்தாலும், வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் இதைச் சமையலுக்குப் பயன்படுத்தி வந்தனர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தத் தடையை, கடந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு நீக்கி விட்டது. ‘கேசரி பருப்பைக் குறைந்த அளவில் சாப்பிட்டால் ஆபத்து ஏதுமில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சொல்லிவிட்டது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஏற்பட்ட வறட்சியால், பருப்புக்குத் தட்டுப்பாடு வந்துள்ளது. குறைந்த விலையில் நிறைய புரதச்சத்து தரும் கேசரி பருப்பைப் பயன்படுத்துவதில் தவறில்லை’ என மத்திய அரசு காரணம் சொன்னது. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த முடிவைக் கடுமையாக விமர்சனம் செய்தன. இந்த விமர்சனங்களைத் தாண்டி, கேசரி பருப்பு இந்தியாவிலும் பயிராகிறது; வெளிநாடுகளில் இருந்தும் வந்து இறங்கிக்கொண்டிருக்கிறது.

‘‘கேசரி பருப்பில் இருக்கும் நியூரோ டாக்சின்கள்தான் ஆபத்தானவை. இந்தப் பருப்பைச் சாப்பிடும் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும், கால்களைப் பாதித்து முடக்கிப் போடுவது இவைதான். இந்திய விஞ்ஞானிகள், இந்த நியூரோ டாக்சின்கள் குறைவாக இருக்கும் கேசரி பருப்பு இனத்தைப் புதிதாக உருவாக்கி இருக்கிறார்கள்’’ என்கிறார், இந்திய பருப்பு ஆராய்ச்சி நிலையத் தலைவர் நரேந்திர பிரதாப் சிங்.

குறைவாக இருந்தாலும், விஷம் என்பது விஷம்தானே!