Published:Updated:

பிரான்ஸில் மூளை... வேளச்சேரியில் லீலை!

பிரான்ஸில் மூளை... வேளச்சேரியில் லீலை!
பிரீமியம் ஸ்டோரி
பிரான்ஸில் மூளை... வேளச்சேரியில் லீலை!

பத்திரிகைகளை திருடி விற்ற பி.டி.எஃப் மாஃபியா

பிரான்ஸில் மூளை... வேளச்சேரியில் லீலை!

பத்திரிகைகளை திருடி விற்ற பி.டி.எஃப் மாஃபியா

Published:Updated:
பிரான்ஸில் மூளை... வேளச்சேரியில் லீலை!
பிரீமியம் ஸ்டோரி
பிரான்ஸில் மூளை... வேளச்சேரியில் லீலை!

டுத்தவர் உழைப்பைச் சுரண்டி ஆதாயம் பெறுவது சிலருக்குக் குரூர பிசினஸ். கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி, ஆயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பால் உருவான படத்தின் சி.டி-யைச் சில மணி நேரங்களில் ரிலீஸ் செய்வதைப் போலவே, நாளிழ்கள், வார இதழ்கள் வெளியானதுமே அதனுடைய பி.டி.எஃப் வடிவத்தை எடுத்து, இணையத்தில் வெளியிடும் மனிதாபிமானமற்ற மனிதர்கள் உருவாகி விட்டார்கள். யாரோ ஒருவர் இப்படிச் செய்ய, இதனுடைய பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களில் பலரும் இலவசமாகப் படித்து வந்தார்கள். ஆயுதங்கள் பயன்படும் விதத்தைப் பொறுத்தே நல்லது, கெட்டது எனத் தீர்மானிக்கப்படுகிறது. இன்றைய தேதியில் கணினி வழி பயன்பாடுகளும் அப்படித்தான் இருக்கிறது. இப்படித் திருடிய ஃபைல்களைச்  சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பணம் பார்த்தவரைப் பதம் பார்த்திருக்கிறது போலீஸ்.

‘கணினியைப் பயன்படுத்தி தங்களின் அறிவுச் சொத்துகளை யாரோ களவாடுகிறார்கள்’ என்று ‘குமுதம் குழுமம்’ சார்பில் சென்னை மாநகரக் காவல்துறையிடம் புகார் அளித்தனர். “பத்திரிகைகளை முழுமையாக பி.டி.எஃப் முறையில் மாற்றி, அவற்றைக் குறிப்பிட்ட இணையத்தில் பதிவேற்றியபின், வாடிக்கையாளர்களின் வசதிப்படி பதிவிறக்கம் செய்து படிப்பதற்கு, சிலர் சந்தா வசூலிக்கிறார்கள். இந்த ஃபைல்களை ‘வாட்ஸ் அப்’ குழுக்களிலும் சர்க்குலேட் செய்கிறார்கள். எங்களின் ‘சர்வர்’களையும் திருட்டுத்தனமாக ‘ஹேக்’ செய்து முக்கியமான தகவல்களைத் திருடுகின்றனர்” எனப்  புகாரில் கூறப்பட்டிருந்தது. இதேபோன்று  `விகடன் குழுமம்’ சார்பிலும் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது.

பிரான்ஸில் மூளை... வேளச்சேரியில் லீலை!

மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் ரவிசேகர், இன்ஸ்பெக்டர்கள் அன்பரசு, மெல்வின் உள்ளிட்டோர் அடங்கிய ஸ்பெஷல் டீம், இவர்களைப் பிடிக்க களத்தில் இறங்கியது. பல மாத ஆட்டத்துக்குப் பின், தூத்துக்குடியைச் சேர்ந்த டாக்டர் கண்ணன் என்பவரின் மகன் ஆனந்த், ஜூலை 8-ம் தேதி போலீஸிடம் சிக்கினார்.

அடுத்தடுத்து புகார்கள் வந்திருந்தாலும், குற்றவாளி பிடிபடுவதற்குப் பத்து மாதங்கள் ஆகியிருக்கிறது. போலீஸ் தரப்பில் விசாரித்தோம். “இணையம், வாட்ஸ் அப் எனப் பத்திரிகைகளின் பி.டி.எஃப் பைல் சுற்றினாலும், அதன் ஆரம்பப்புள்ளியை  நெருங்குவதில்தான் பெரும் சிரமம் இருந்தது. பி.டி.எஃப் ஃபைல்களில் இருந்த ‘வாட்டர் மார்க்’ அடையாளம்தான், குற்றவாளியை நெருங்க உதவியாக இருந்தது. குற்றவாளி என நாங்கள் முடிவுசெய்த நபரின் வங்கிக்கணக்கில், வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தியதற்கான ஆதாரம் கிடைத்தது.

‘தி மேக்னட் டாட் காம்’ என்ற இணையத்தின் மூலமாகத்தான் இந்த மோசடி நடக்கிறது என்பதை முதலில் கண்டுபிடித்தோம்.  வெப்சைட்டை நடத்துபவரின்  போட்டோவை   கலெக்ட் செய்தோம். அடுத்ததாக, வெப்சைட்  நிர்வாகியின் செல்போன் நம்பரைப் பிடித்து அவரைத் தொடர்பு கொண்டோம். ‘புதிதாக ஒரு வெப்சைட் கிரியேட் செய்ய வேண்டும்’ என்று தொழில் ரீதியாகவே அணுகினோம். ஆனால், போனை எடுத்தது ஆனந்த் அல்ல, அவர் தம்பி அஸ்வின். அவர்  உடனே உஷாராகி செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். விட்டால் ஆள் எஸ்கேப் என்பதால், உடனே களம்  இறங்கினோம்..

அந்த செல்போன் லொகேஷன் வேளச்சேரி என்பதைக் கண்டுபிடித்து, ஆனந்த்தின் புகைப்படத்தை நிறைய பிரின்ட் போட்டு  வேளச்சேரியின் முக்கிய இடங்களில் ஒட்டினோம். பிறகு, ஒவ்வொரு வீடாக விசாரணையில் இறங்கினோம். அதில் ஆனந்த் சிக்கிக்கொண்டார்” என்றனர்.

ஆனந்திடம் போலீஸ் விசாரித்தது. “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, முகமது இஸ்மாயில் என்பவர் என்னிடம் வந்தார். சில பல்கலைக்கழகங்களின் வெப்சைட் மாடல்களைக் கொடுத்து, அதைப் போல ‘தி மேக்னட் டாட் காம்’ என்ற வெப்சைட்டை உருவாக்கித் தரும்படி கேட்டார். அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டார். அதன் பிறகு அவர் வரவே இல்லை. திடீரென ஒருநாள் பிரான்ஸிலிருந்து ஸ்கைப் மூலம் பேசினார். ‘தி மேக்னட் டாட் காம் உன் கணக்கிலேயே இருக்கட்டும். சில பத்திரிகைகளின் பி.டி.எஃப் ஃபைல்களை உனக்கு அனுப்புகிறேன். சந்தாதாரர்களுக்கு அதைப் பதிவேற்றிக் கொடு. மெம்பர்ஷிப் நிறைய வரும். உனக்கு முப்பது சதவிகிதம் கமிஷனை வைத்துக்கொண்டு எழுபது சதவிகிதத்தை என் வங்கிக்கணக்குக்கு அனுப்பு’ என்றார். அதைத்தான் செய்தேன். அது இவ்வளவு பெரிய க்ரைம் என்று எனக்குத் தெரியாது” என்றாராம் அவர்.

சைபர் க்ரைம் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர், “இது கொலைக் குற்றத்துக்கு இணையானது. பல நூறு தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டுவதை மன்னிக்கவே கூடாது. பிரான்ஸில் இருக்கும் முகமது இஸ்மாயிலுக்குப் பின்னால் எல்லை தாண்டிய சக்திகள் ஏதேனும் இருக்கின்றனவா என்றெல்லாம் பார்க்க வேண்டும். இந்த வழக்கு சாதாரணமாகக் கடந்து போய்விடக் கூடியது அல்ல” எனச் சொல்லி அதிர வைத்தார்.

சைபர் க்ரைம் போலீஸாருக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

- ந.பா.சேதுராமன்