Published:Updated:

ரூபாவை சீண்டிய சசிகலா!

ரூபாவை சீண்டிய சசிகலா!
பிரீமியம் ஸ்டோரி
ரூபாவை சீண்டிய சசிகலா!

ரூபாவை சீண்டிய சசிகலா!

ரூபாவை சீண்டிய சசிகலா!

ரூபாவை சீண்டிய சசிகலா!

Published:Updated:
ரூபாவை சீண்டிய சசிகலா!
பிரீமியம் ஸ்டோரி
ரூபாவை சீண்டிய சசிகலா!

ர்க்கரை நோயாளியான சசிகலா, தினமும் காலையில் தனக்கென பிரத்யேக சமையலறையில் ரெடியான தோசை அல்லது இட்லிதான் சாப்பிடுவார். கடந்த திங்கள்கிழமை வேறு வழியின்றி எல்லாக் கைதிகளையும் போலவே எலுமிச்சை சாதம் சாப்பிட்டு டீ குடித்தார். மதியம் அசைவ உணவு சாப்பிடுவதே அவரின் விருப்பம். ஆனால், கேழ்வரகு ரொட்டியும் தயிர் சாதமும்தான் கொடுத்தனர். இரவில் சப்பாத்தியும் தயிர் சாதமும் சாப்பிட்டுவிட்டு அவர் தூங்கப் போவார். ஆனால், எல்லாக் கைதிகளுக்கும் கொடுக்கும் சாதமும் சாம்பாருமே தரப்பட, வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்தார்.

ரூபாவை சீண்டிய சசிகலா!

‘சிறைக்குள் அடைந்து கிடக்க வேண்டியிருக்கிறது’ என்பதைத் தவிர சசிகலாவுக்கு வேறு எந்தக் குறையும் இல்லை. தங்குவதற்கு ஒரு அறை, பார்வையாளர்களைப் பார்க்க, யோகா செய்ய, பொருட்களை வைக்க என ஐந்து அறைகளை அவருக்கு ஒதுக்கித் தந்திருந்தார்கள். கேட்கும் எதையும் சமைத்துத் தர, சில கைதிகளே பணியாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தார்கள். இரட்டைக் கட்டில், புது பெட், மின்விசிறி, வாட்டர் ஹீட்டர், மினரல் வாட்டர் கேன், காபி மேக்கர், அகன்ற திரை டி.வி எனச் சகல வசதிகளோடு அவரின் அறை இருக்க, பார்க்க வரும் எவருடனும் எவ்வளவு நேரமும் பேச டேபிள் சேர் போட்டு தனி அறை இருந்தது. இந்த எல்லா வசதிகளும் ஒரே நாளில் பறிபோய்விட்டன. அதிகாலையில் எழுந்து தன் அறைக்கு வெளியே வாக்கிங் போகும் சசிகலா, இப்போது அறையை விட்டு வெளியில் வருவதில்லை. ‘மற்ற கைதிகளைப் போல  வெள்ளைப்புடவை கட்ட  வேண்டியதில்லை’ என்பது மட்டுமே இப்போது சசிகலாவுக்குக் கிடைத்திருக்கும் ஒரே சலுகை. 

வளைக்கப்பட்ட விதிகள்! 

‘‘சினம் கொண்ட சிங்கத்தை செல்லுல அடைச்சா அது செல்லையே சிதைச்சுடும்ல?’’ என வடிவேலு பேசிய காமெடி டயலாக் இப்போது சீரியஸாகி இருக்கிறது. கடந்த 15-ம் தேதியோடு ஐந்து மாத கால சிறை வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார் சசிகலா. ‘பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வரலாற்றில், இதுவரை இல்லாத அளவுக்குக் களங்கம் சுமத்தப்பட்டிருப்பதும் இந்த ஐந்து மாத காலத்தில்தான்’ என்கிறார்கள் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள். ‘சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி, பல வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி சத்யநாராயண ராவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று கடந்த 10-ம் தேதி சிறையை ஆய்வு செய்த சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா, தன் முதல் அறிக்கையை வெளியிட்டார். இதை சத்யநாராயண ராவ் மறுத்தார். இதையடுத்து ஒவ்வொரு நாளும் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை பற்றிய செய்திகள் ஊடகப் பரபரப்புகளில் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கின்றன. ஆய்வுக்குப் போன நேரத்தில் ரூபாவைப் பற்றி சசிகலா ஏதோ  சொல்லி சீண்டியதாகவும், அந்தக் கோபத்தில்தான் ரூபா அறிக்கையை ஊடகங்களுக்குக் கசியச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

ரூபாவை சீண்டிய சசிகலா!

தடயங்கள் அழிப்பு!

ரூபாவின் அறிக்கை ஊடங்களில் வெளியானதும், கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்’ என்று அறிவித்தார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில், கடந்த 14-ம் தேதி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணைக் குழுவை அமைத்த பிறகு, சர்ச்சையில் தொடர்புடைய அதிகாரிகள் யாரும் சிறை ஆய்வுக்குச் செல்லக்கூடாது என்பது விதி. ஆனால், டி.ஜி.பி சத்யநாராயண ராவ் 15-ம் தேதி காலை 10 மணிக்கு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றார். அப்போது சசிகலாவின் தனிச் சமையலறை இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டதோடு, சசிகலாவுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளுக்கான தடயங்களும் அழிக்கப்பட்டன. பிற்பகல் 3 மணிக்கு பெங்களூரு ஃப்ரீடம் பார்க் எதிரே உள்ள தன் அலுவலகத்துக்கு அவர் திரும்பி வந்தார்.

அதே அலுவலகத்தின் கீழ்தளத்தில் டி.ஐ.ஜி ரூபாவின் அறை உள்ளது. டி.ஜி.பி வந்த தகவல் தெரிந்தவுடன், ரூபா தன்னுடைய இரண்டாவது அறிக்கையை டி.ஜி.பி-யிடம் கொடுத்தார். ‘சசிகலாவைப் பார்வையாளர்கள் சந்திக்கும் கேலரியில் உள்ள நெம்பர் 7, 8 ஆகிய இரண்டு சி.சி.டி.வி கேமராக்கள் செயல்படாத நிலையில் உள்ளன. சசிகலாவைப் பார்வையாளர்கள் சந்திப்பதற்குத் தனி அறை இருந்தது. அங்கு சசிகலா அமர்வதற்கென பிரத்யேகமான சேர், டேபிள் மற்றும் பார்வையாளர்கள் அமர்வதற்கு நான்கைந்து சேர்கள் போடப்பட்டிருந்தன. அதை ஹேன்டி கேமராவில் பதிவு செய்தேன். ஆனால், அந்தப் பதிவுகள் அழிக்கப்பட்டுவிட்டன’ என்று அந்த அறிக்கையில் இருந்தது.

ரூபாவை சீண்டிய சசிகலா!

ரூபா தாக்கப்பட்டாரா?

ரூபா கொடுத்த அறிக்கையைப் பார்த்து சத்யநாராயண ராவ் டென்ஷன் ஆன அதே நேரத்தில், மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றார் ரூபா. அப்போது சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், ஜெயிலர் அனிதா ஆகியோரின் தூண்டுதலால், சில கைதிகள் ரூபாவைச் சுற்றி வளைத்தனர். ‘நீ இனி உள்ளே வரக்கூடாது. எங்களுக்கு எய்ட்ஸ் இல்லை. உனக்குத்தான் எய்ட்ஸ் இருக்கு’ என்று ஒருமையில் பேசியதோடு, கெட்ட வார்த்தைகளிலும் திட்டி தாக்க முற்பட்டாரர்களாம். ரூபா அவசரமாக போன் செய்து போலீஸை வரவழைத்த பிறகே, பாதுகாப்பாக வெளியில் வர முடிந்தது. சிறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றி ரூபாவுக்குத் தகவல் கொடுத்த கைதிகள் சிலரும் படுமோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சூழலில்தான் 15-ம் தேதி இரவு 15 பெண் கைதிகள், 17 ஆண் கைதிகள் என மொத்தம் 32 கைதிகள் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

கர்நாடக சிறைத்துறை விதிப்படி, சிறைக்குள் இருக்கும் கைதிகளைக் கவனித்துக்கொள்ள சிறைப் பஞ்சாயத்து அமைக்கப்படும். கைதிகளே அதன் உறுப்பினர்கள். அவர்களைத் தேர்வு செய்வதும் கைதிகளே. ஆனால், பரப்பன அக்ரஹாரா சிறையைப் பொறுத்தவரைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், ஜெயிலர் அனிதா இருவரும் யாரைக் கை காட்டுகிறார்களோ, அவர்களே பஞ்சாயத்து உறுப்பினர் ஆக முடியும். இப்படிப்பஞ்சாயத்து உறுப்பினர்களாக ஆன ராகேஷ், புட்டா ஆகியோரே சசிகலா தரப்பினருக்கு உதவி செய்ய நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறை அதிகாரிகளின் அறையில்தான் சசிகலாவும், இளவரசியும் பல மணி நேரம் இருப்பார்களாம். அந்த அளவுக்கு இந்த அதிகாரிகள் சசிகலாவைச் சிறப்பாகக் கவனித்து வந்திருக்கிறார்கள்.

ரூபாவை சீண்டிய சசிகலா!

சிறைக்கு வெளியே வந்தாரா சசிகலா?

பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்கு மிக அருகே பிருந்தாவன் அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கிறது. இந்தக் குடியிருப்பில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டில், இளவரசியின் மகன் விவேக் தங்கியிருந்து தினமும் சசிகலா, இளவரசி, சுதாகரனைக் கவனித்து வருகிறார். இந்த அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு, சசிகலா அவ்வப்போது சிறைத்துறை உயர் அதிகாரிகளின் காரில் வந்து செல்வதாக புகார் எழுந்திருக்கிறது.

பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, ‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நான் பெற்ற தகவல்களைச் சொல்கிறேன். சசிகலா சிறைக்குள் வந்த 16.2.2017 முதல் 12.6.2017 வரை மொத்தம் 117 நாட்களின் நிலவரம் இது. ‘சிறைக்குள் இருக்கும் விசாரணைக் கைதிகளை உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள் வாரம் ஒருமுறை சந்திக்கலாம். தண்டனைக் கைதிகளை 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சந்திக்க முடியும்’ என்பது சிறை விதி. அப்படிப் பார்த்தால், தண்டனைக் கைதியான சசிகலாவை 117 நாட்களில் (4 மாதத்தில்) 8 முறைதான் சந்தித்திருக்க முடியும். ஆனால், 32 முறை, 71 பேர் சசிகலாவைச் சந்தித்திருக்கிறார்கள்.

இதேபோல், சிறைக்குள் இருக்கும் தண்டனைக் கைதியை ஒரு வருடத்தில் ஒருவர் ஆறு முறைதான் சந்திக்க முடியும் என்பது விதி. ஆனால், சசிகலாவை, இளவரசியின் மகன் விவேக் ஒன்பது முறையும், தினகரன் ஏழு முறையும் சந்தித்திருக்கிறார்கள். பார்வையாளர்கள் நேரம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை என்பது சிறை விதி. ஆனால், சசிகலாவைப் பலரும் இரவு 8 மணி வரை சந்தித்திருக்கிறார்கள். பெங்களூரிலேயே இருக்கும் சசிகலா அணியைச் சேர்ந்த அ.தி.மு.க கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி ஒருமுறைகூட சந்திக்கவில்லை என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் சிறைத்துறை பதில் தந்துள்ளது. ஆனால், புகழேந்தி பலமுறை சசிகலாவை நேரில் சந்தித்ததாக ஊடகத்தில் சொல்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல சிறைத்துறை கொடுத்துள்ள இந்த ஆவணங்களே போதும். சிறைத்துறை, விதிமுறைகளை மீறி பல சலுகைகளைக் கொடுத்திருக்கிறது என்பதை நிரூபிக்க முடியும். கோடிகள் கொடுத்தால் சிறைக்கம்பிகள் வளையும்’’ என்றார்.

ரூபாவை சீண்டிய சசிகலா!

‘‘விதிகளை மீறவில்லை!’’

கர்நாடக அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, ‘‘சிறைத்துறை விதிகளுக்கு எதிராக எந்த விதமான சலுகையையும் சசிகலா பெறவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இங்கு 22 நாள்கள் சிறையில் இருந்தபோது, வெளியில் இருந்து உணவுகள் சென்றது. தற்போது அந்தச் சூழ்நிலை இல்லை. சசிகலா இங்கு வந்த உடனேயே, வெளியில் இருந்து உணவுகள் கொடுப்பதற்கு அனுமதி பெற முயன்றேன். உடனே அவர் கூப்பிட்டு, ‘சிறைத்துறை விதிகளுக்கு உட்பட்டு இங்கு வழங்கும் உணவையே சாப்பிட விரும்புகிறேன்’ என்று கூறிவிட்டார். அதனால் அந்த முயற்சியை விட்டுவிட்டேன்.

பரப்பன அக்ரஹாரா சிறையின் அனைத்துப் பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறைக்குள் சிறு தவறு நடந்தாலும் அதை சிறைத்துறை டி.ஜி.பி சத்யநாராயண ராவ் தனது அறையில் அமர்ந்தபடி பார்க்க முடியும். அதிகாரிகளுக்குள் நடக்கும் போட்டியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை’’ என்றார்.

ரூபாவை சீண்டிய சசிகலா!

உச்ச நீதிமன்றம் என்ன செய்யும்! 

ஆதாரங்களை அழித்தவர்கள் நிம்மதி அடைந்தாலும், சிறையில் சசிகலாவுக்கு செய்துகொடுக்கப்பட்ட வசதிகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. சசிகலாவுக்கு உதவிய சத்யநாராயண ராவ் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட, சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார். எனினும், ‘‘இந்தக்கூட்டணியில் இன்னொருவராகக் குற்றம் சாட்டப்படும் அனிதாவே இப்போது பரப்பன அக்ரஹாரா கண்காணிப்பாளராக ஆக்கப்பட்டுள்ளார். டி.ஜி.பி சத்யநாராயண ராவ் இடத்துக்கு என்.எஸ்.மெஹரிக் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என இருப்பவர். அதனால் சசிகலாவுக்குச் சிக்கல் இல்லை’’ என்கிறார்கள்.

சிறைக்குள் நடக்கும் ஊழல்களை வெளிப்படுத்திய ரூபாவும் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   

தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மறுசீராய்வு மனுக்கள் இந்த மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்ற சூழல் இருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் வெளியாகி, சசிகலாவுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

- வீ.கே.ரமேஷ், படங்கள்: ரமேஷ் கந்தசாமி