தொடர்கள்
Published:Updated:

“முதலமைச்சர் சொன்னால் பாராட்டு... வளர்மதி சொன்னால் வழக்கா?”

“முதலமைச்சர் சொன்னால் பாராட்டு... வளர்மதி சொன்னால் வழக்கா?”
பிரீமியம் ஸ்டோரி
News
“முதலமைச்சர் சொன்னால் பாராட்டு... வளர்மதி சொன்னால் வழக்கா?”

“முதலமைச்சர் சொன்னால் பாராட்டு... வளர்மதி சொன்னால் வழக்கா?”

‘துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த எளிய பெண் மீது குண்டர் சட்டம் பாயுமா?’ என்றால், தமிழகத்தில் அது சாத்தியம். முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் இதைச் செய்திருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதை நியாயப்படுத்துகிறார்.  

வளர்மதி... ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம் விநியோகித்ததால் கைது செய்யப்பட்டார். உடனடியாக குண்டர் சட்டமும் அவர்மீது பாய்ந்திருக்கிறது. வளர்மதி 24 வயது கல்லூரி மாணவி. பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ இதழியல் படிக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி விவசாயம் முடித்தவர். விவசாயத்தையும் பொதுவுடமையையும் ஒரு சேர நேசிக்கும் மனுஷி. அவரைக் குண்டர் சட்டத்தில் அடைத்ததைக் கண்டித்து, பல அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர். சட்டமன்றத்திலும் இதுபற்றிப் பேசினார்கள். பல்வேறு அமைப்புகள் வளர்மதிக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளன. இந்தப் பரபரப்பு நிறைந்த சூழலில், வளர்மதி வீடுதேடிப் போனோம்.

“முதலமைச்சர் சொன்னால் பாராட்டு... வளர்மதி சொன்னால் வழக்கா?”

சேலம் மாவட்டம், வீராணத்தை அடுத்துள்ள பள்ளிகொடுத்தானூர்தான் வளர்மதியின் சொந்த ஊர். மீடியாக்கள் படையெடுப்பால் இப்போது பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது இந்தச் சிறிய கிராமம். வளர்மதியின் தாய் கமலாவிடம் பேசினோம். ‘‘எம் பொண்ணை நெனைச்சு எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. அதே சமயம் அரசாங்கத்தை நெனைச்சு அவமானமா இருக்கு. தினம்தோறும் எவ்வளவோ கொலை, கொள்ளை நடக்குது. குழந்தைங்களைக்கூட மானபங்கம் செய்யறாங்க. ரவுடிகளும் போக்கிரிங்களும் நாட்டைக் கூறு போடுறாங்க. அவங்களையெல்லாம் எதுவும் செய்யமுடியாத போலீஸ்தான், என் மகளைக் குண்டர் சட்டத்துல அடைச்சிருக்கு.

எனக்கு மொத்தம் மூணு பிள்ளைங்க. இரண்டு பசங்களுக்கு நடுவில் பொறந்த தங்கமான பொண்ணு வளர்மதி. நல்லா படிப்பா. பேச்சுப் போட்டிகள்ல கலந்துகிட்டு நெறைய பரிசு வாங்கிருக்கா. கலெக்டர், போலீஸ் அதிகாரி, எம்.எல்.ஏ-னு பலபேர் வளர்மதியைப் பாராட்டிருக்காங்க. அவ பி.எஸ்ஸி படிக்கும்போது, அங்க படிச்ச பசங்க பல பேருக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கலை. அவளோட முதல் போராட்டம், அந்த ஸ்காலர்ஷிப்புக்காகத்தான். அந்தப் போராட்டத்தில வெற்றியும் கண்டாள். எல்லாருக்கும் ஸ்காலர்ஷிப்பும் கிடைச்சுது. அதுக்கப்புறம் ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம்னு எல்லாப் போராட்டங்கள்லயும் கலந்துக்கிட்டா. அவ மேல போலீஸ் வழக்குப் போட்டுக்கிட்டே இருந்தாங்க. வளர்மதியை நாங்க எதற்காகவும் தடுத்ததே இல்லை. ஏன்னா அவள் மக்களுக்காகப் போராடுறா... நியாயத்துக்காகப் போராடுறா’’ என ஆவேசமாகப் பேசியவர், ‘‘எம் பொண்ணு ஜெயில்ல என்ன பாடு படுதோ?’’ என ஒரு ஏழைத்தாயாக முத்தாய்ப்பு வைத்தார்.

“முதலமைச்சர் சொன்னால் பாராட்டு... வளர்மதி சொன்னால் வழக்கா?”

வளர்மதியின் அப்பா மாதையனிடம் பேசினோம். ‘‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தால விவசாயிகளுக்குப் பாதிப்பிருக்கு. அதுக்கு எதிராகப் போராட வாங்கன்னு மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்தது ஒரு குத்தமா? குண்டர் சட்டத்தில கைது பண்ண, என் பொண்ணு துப்பாக்கியும் வெடிகுண்டும் வெச்சிருந்தாளா? ஏதாவது சதித்திட்டம் தீட்டினாளா? ‘இயற்கைப் பாதுகாப்புக் குழு’ சார்பா துண்டு பிரசுரம் கொடுத்தா. அது என்ன தடை செய்யப்பட்ட இயக்கமா? இயற்கையைப் பாதுகாக்கணும்னு இந்த நாட்டுல யார் போராடினாலும் குண்டர் சட்டத்தில் அடைப்பாங்களா? இந்த அரசுக்கு இயற்கையைக் காக்கணும்னு அக்கறை இல்லையா?’’ என்று கொதிப்புடன் கேள்விகளை அடுக்கினார்.

வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்த்து போராட்டங்களை ஒருங்கிணைத்து வரும் சமூக ஆர்வலர் முகிலனிடம் பேசினோம். ‘‘சமூக நலனுக்காகப் போராடியதற்கு ஒரு பெண் மீது குண்டர் சட்டம்

“முதலமைச்சர் சொன்னால் பாராட்டு... வளர்மதி சொன்னால் வழக்கா?”

பாய்ச்சப்படுவது இதுவே முதல்முறை. வளர்மதியைக் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு முன்பு ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தயாரித்திருக்கிறது போலீஸ். அதில், ‘நான் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவள். நான் அரசுக்கு எதிராகப் போராடுவதால் வீட்டில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டார்கள்’ என்று எழுதி, வளர்மதியிடம் கையெழுத்து வாங்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், வளர்மதி அதில் கையெழுத்துப் போடவில்லை. அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்துதான், குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பதாக சட்ட ஆணையில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பெண் மீது ஆறு வழக்குகள் இருக்கின்றன. ஆறு வழக்குகளுமே சாதாரண வழக்குகள். அந்த வழக்குகளை வைத்து குண்டர் சட்டம் போட முடியாது. ஜல்லிக்கட்டுக்குப் பிறகான இளைஞர் எழுச்சி, இந்த அரசுக்கு அச்சுறுத்துவதாக இருக்கிறது. போராடும் இளைஞர்களை அச்சுறுத்தவே, வளர்மதிக்கு இப்படிச் செய்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்தே தெரிகிறது’’ என்றார்.

வளர்மதியின் வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன், ‘‘வளர்மதி சார்ந்திருக்கும் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், தடை செய்யப்பட்ட அமைப்பு இல்லை. பதிவு செய்யப்பட்ட அமைப்பு. ‘மக்களைப் பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைக் கொண்டு வர மாட்டோம்’ என்று சட்டசபையில் முதல்வர் சொல்கிறார். அதையே வளர்மதி துண்டறிக்கையாகக் கொடுத்தால் குண்டர் சட்டத்தை ஏவுவதா?’’ என்றார்.

சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், ‘‘வளர்மதி நோட்டீஸ் கொடுத்தார் என்பதற்காக மட்டும் அவர் மீது குண்டர் சட்டம் பாயவில்லை. அவர் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறார். அவர் மீது நிறைய வழக்குகள் இருக்கின்றன. அதனால்தான், அவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப் பட்டுள்ளது’’ என்றார்.

- வீ.கே.ரமேஷ், எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: எம்.விஜயகுமார், தே.தீட்ஷித்

நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டவர்!

ளர்மதி மீது குண்டர் சட்டம் பாயக் காரணமாக இருந்த சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் மீது மிகப்பெரிய குற்றப்பத்திரிகையை வாசிக்கிறார்கள், சேலம் போலீஸார்.

“முதலமைச்சர் சொன்னால் பாராட்டு... வளர்மதி சொன்னால் வழக்கா?”

‘‘சேலம் ராஜகணபதி கோயில் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அறநிலையத் துறை அந்தக் கடைகளை அகற்றவில்லை. நீதிமன்றத்தில் அறநிலையத் துறை சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘மாநகரக் காவல்துறை எங்களுக்குப் போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்கள். சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமாரை ஆஜராகச் சொன்னது நீதிமன்றம். அவர் ஆஜர் ஆகாததால் கண்டித்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பாயும் என்ற நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கேட்டார்.

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணன் மறைந்தபோது அஞ்சலி செலுத்த, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். போதிய பாதுகாப்பு கொடுக்காததால், அவர்மீது செருப்பு வீசப்பட்டது. சேலம், செவ்வாய்ப்பேட்டைப் பகுதியில் காவல் துறை நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள். அந்த நிலத்தை மீட்க முயற்சித்த செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் மாற்றப்பட்டார். பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், ஆளும்கட்சி பிரமுகர் மீது வழக்கு போட்டதால் மாற்றப்பட்டார்’’ என்கிறார்கள், சேலம் போலீஸார்.