Published:Updated:

தனியார் கையில் ஜி.எஸ்.டி வரி நிறுவனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தனியார் கையில் ஜி.எஸ்.டி வரி நிறுவனம்!
தனியார் கையில் ஜி.எஸ்.டி வரி நிறுவனம்!

கேள்வி கேட்க முடியாது... கணக்குப் பார்க்க முடியாது...

பிரீமியம் ஸ்டோரி

ஜி.எஸ்.டி-க்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கொந்தளித்து வரும் நிலையில், அரசு ஊழியர்கள் மத்தியிலும் இதற்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. காரணம், வித்தியாசமானது. ‘‘வரி வசூல் உட்பட பெரும்பாலான தகவல்களும் அதிகாரங்களும் தனியார் வசம் போவதால், தேசப் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் ஏற்படும்’’ என்பதே அவர்களின் அச்சம்.

ஜி.எஸ்.டி யுகத்தில் ‘பவர்ஃபுல்’ அமைப்பாக இருக்கப்போவது, ‘ஜி.எஸ்.டி.என்’ எனப்படும் ‘சரக்கு மற்றும் சேவைகள் வரி நெட்வொர்க்’. மத்திய - மாநில அரசுகள் மற்றும் வரி செலுத்துபவர்கள் உட்பட ஜி.எஸ்.டி அமலாக்கத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் இது.

தனியார் கையில் ஜி.எஸ்.டி வரி நிறுவனம்!

ஜி.எஸ்.டி-யில் வரி செலுத்துபவர்கள் முதலில் தங்களை ஜி.எஸ்.டி நெட்வொர்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் வரி செலுத்துபவர்கள் பற்றிய விவரங்கள் உட்பட அனைத்துத் தகவல்களும் ஜி.எஸ்.டி நெட்வொர்க்கிடம் இருக்கும். ஆனால், இது அரசு சார்பற்ற தனியார் நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் துரைப்பாண்டியனிடம் கேட்டோம். ‘‘இந்த நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகள் 24.5 சதவிகிதம், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பங்குகள் 24.5 சதவிகிதம். இப்படி ஒட்டுமொத்த அரசின் பங்கு வெறும் 49 சதவிகிதம். ஆனால், தனியாரின் பங்குகளோ 51 சதவிகிதம். அதாவது, அரசின் பங்குகளைவிட ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி உள்பட அரசு சாராத பிற நிதி நிறுவனங்களின் பங்குகள்தான் அதிகம். தனியார் ஆதிக்கம் செலுத்தக்கூடிய, கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றாக ஜி.எஸ்.டி நெட்வொர்க் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது.

மத்திய -  மாநில அரசுகள் வசூலிக்கும் வரிகள், சம்பந்தப்பட்ட துறைகளால் கணக்கீடு செய்யப்பட்டு, பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தப்படுவதுதான் இதுவரையிலான நடைமுறை. ஆனால், வரிப்பணத்தை இனிமேல் ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இது, அரசுப் பணத்தைத் தனியார் கையில் கொடுப்பதற்குச் சமம். ஒரு ஏஜென்சியாகச் செயல்படும் ஜி.எஸ்.டி.என் நிறுவனம், தனக்கான சேவைக் கட்டணமாக ஒரு தொகையை எடுத்துக்கொள்ளும். ஒட்டுமொத்தத்தில், பல லட்சம் கோடி ரூபாய், கார்ப்பரேட் கைக்குப் போகிறது. இது குறித்து சுங்கத்துறை, கலால்துறை அதிகாரிகள், தங்கள் கவலையை மத்திய நிதி அமைச்சருக்குக் கடிதத்தின் மூலம் தெரிவித்தனர். அதற்காக, அந்த அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்” என்கிறார் துரைப்பாண்டியன்.

அதிர்ச்சிக்குரிய மேலும் சில விவகாரங்களும் உள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், ஜி.எஸ்.டி நெட்வொர்க்கிடம் யாரும் தகவல் கோர முடியாது. சி.ஏ.ஜி எனப்படும் மத்திய அரசின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியால் ஜி.எஸ்.டி நெட்வொர்க் கணக்குகளைத் தணிக்கை செய்ய முடியாது. அந்தளவுக்கு மிகக் கவனமாக மத்திய அரசு ‘வேலை’ செய்திருக்கிறது.

தனியார் கையில் ஜி.எஸ்.டி வரி நிறுவனம்!

இதை, பி.ஜே.பி-யைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியே கடுமையாக எதிர்த்துள்ளார். “ஜி.எஸ்.டி நெட்வொர்க்கில் தனியார் ஆதிக்கம் செலுத்துவது தேச நலனுக்கு நல்லதல்ல. இவ்வளவு அதிகாரங்கள் கொண்ட ஒரு நிறுவனத்தை, தனியார்களின் கையில் நிழல் அமைப்பாகத் தரலாமா?’’ என்று பிரதமர் மோடிக்கு சுவாமி கடிதம் எழுதினார். நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்னையை சுவாமி எழுப்பினார். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யான டி.ராஜா உள்ளிட்டவர்களும் சுவாமியின் கருத்தை ஆதரித்துப் பேசினர்.

இது குறித்து டி.ராஜாவிடம் கேட்டபோது, ‘‘ சுப்பிரமணியன் சுவாமி ‘தனியாரிடம் கொடுக்கும்போது, தகவல்கள் எல்லாம் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்’ என்று கேள்வி எழுப்பினார். ‘ஜி.எஸ்.டி நெட்வொர்க்கில் தனியார் ஆதிக்கம் கூடாது’ என்று நாடாளுமன்ற செலக்ட் கமிட்டியில் முடிவுசெய்து பரிந்துரை அளித்தோம். அதை அரசு கண்டுகொள்ளவில்லை. இது தேச நலனுக்கு எதிரானது” என்றார்.

‘ஜி.எஸ்.டி நெட்வொர்க்கில் உள்ள தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்’ என்று ஆளும் தரப்பில் சொல்லிவருகிறார்கள். இதேபோலத்தான், ஆதார் விஷயத்திலும் ‘உத்தரவாதம்’ கொடுத்தார்கள். கடைசியில் என்ன ஆனது? இதில் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?

- ஆ.பழனியப்பன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு