Published:Updated:

மீண்டும் வருகிறார் ஸ்ரீதர்? - கலக்கத்தில் காஞ்சிபுரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மீண்டும் வருகிறார் ஸ்ரீதர்? -  கலக்கத்தில் காஞ்சிபுரம்
மீண்டும் வருகிறார் ஸ்ரீதர்? - கலக்கத்தில் காஞ்சிபுரம்

மீண்டும் வருகிறார் ஸ்ரீதர்? - கலக்கத்தில் காஞ்சிபுரம்

பிரீமியம் ஸ்டோரி

‘ஸ்ரீதர்’... காஞ்சிபுரம் நகரைக் குலைநடுங்கச் செய்யும் ஒற்றை வார்த்தை. தமிழகக் காவல் துறையின் வலையில் சிக்காமல் தப்பித் திரியும் கரும்புள்ளி. உலகின் எந்த மூலையிலிருந்தும் காஞ்சிபுரத்தை இயக்கும் க்ரைம் ரிமோட். இதற்குமேல் ஸ்ரீதரைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மீண்டும் வருகிறார் ஸ்ரீதர்? -  கலக்கத்தில் காஞ்சிபுரம்

வெளிநாட்டில் இருந்தபடி காஞ்சிபுரத்தில் நிலங்களை மிரட்டி அபகரிப்பதும், கொலை செய்வதுமான வேலைகளில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்தார். கூட்டாளிகள் மீது குண்டர் சட்டம், சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துகள் மீட்பு, ரெட் கார்னர் நோட்டீஸ், அமலாக்கத் துறை அதிரடி சோதனை, தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு என ஸ்ரீதருக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி ஸ்ரீநாத் செயல்பட்டார். ஸ்ரீநாத் தற்போது பதவி உயர்வில் டிரான்ஸ்ஃபர் ஆகிவிட, மீண்டும் காஞ்சிபுரத்தில் காலூன்ற ஸ்ரீதர் முயற்சி செய்வதாக  திகில் பரவிக் கிடக்கிறது.

ஸ்ரீதரின் மனைவி குமாரியும், மகள் தனலட்சுமியும் ஏற்கெனவே இந்தியா வந்தபோது, மத்திய அமலாக்கத் துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு அவர்களின் பாஸ்போர்ட்களும் முடக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த ஜூலை 8-ம் தேதி லண்டனிலிருந்து இலங்கை வழியாக சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமாரையும் மடக்கி, மத்திய அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். மறுநாள் காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி அவரிடம்  12 மணி நேரம் விசாரணை நடத்தினார். உயர் நீதிமன்ற உத்தரவு பெற்று, அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. “உங்கள் அப்பா என்ன பிசினஸ் செய்கிறார் தெரியுமா? நீங்கள் செலவு செய்ததெல்லாம் முறைகேடாகச் சம்பாதித்த பணம் என்று உங்களுக்குத் தெரியுமா? அவருடைய பணத்தை நீங்கள் செலவு செய்வதால் உங்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்பது தெரியுமா?” எனக் கிடுக்கிப்பிடி கேள்விகளால் காவல் துறையினர் அவரைத் துளைத்தெடுத்தனர். ஸ்ரீதரின் நடவடிக்கைகள், சொத்துகள், விசா பற்றி சுமார் 250 கேள்விகளுக்கு மேல் சந்தோஷ்குமாரிடம் கேட்டிருக்கிறார்கள். பெரும்பாலான கேள்விகளுக்குத் ‘தெரியாது’ என்றே சந்தோஷ்குமார் பதில் சொன்னாராம். சந்தோஷ்குமாரின் வாக்குமூலத்தைக் காவல் துறையினர் உயர் நீதிமன்றத்தில் ஒப்படைத்ததும், ‘மேலும் பத்து நாள்கள் விசாரணைக்கு உட்பட வேண்டும்’ என  உத்தரவு   பிறப்பிக்கப்பட்டது.

மீண்டும் வருகிறார் ஸ்ரீதர்? -  கலக்கத்தில் காஞ்சிபுரம்

இதைத் தொடர்ந்து அவரிடம் தொடர் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே மத்திய அமைச்சர்கள் மூலமாக எஸ்.பி சந்தோஷ் ஹதிமானிக்கு நெருக்கடி வருகிறது. ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் ஸ்ரீதரைப் பிடிக்க மும்முரமாக களத்தில் இறங்கிவிட்டாராம் அவர்.

காஞ்சிபுரம் வட்டாரத்தில் பேசினோம். “ஸ்ரீதரின் பெரும்பாலான சொத்துகள் அவரின் மகள் தனலட்சுமி பெயரில் இருக்கிறது. 200 கோடி ரூபாய் அளவில் ஹவாலா பணம் ஸ்ரீதருக்குச் சென்றிருக்கிறது. ஏ.எஸ்.பி ஸ்ரீநாத் இருந்தவரை, ஸ்ரீதரால் காஞ்சிபுரத்தில் காலடி எடுத்து வைக்க முடியவில்லை. ஸ்ரீநாத் இல்லாத சூழலில் மீண்டும் காஞ்சிபுரத்துக்கு வந்து ராஜ்ஜியம் செய்ய நினைக்கிறார் ஸ்ரீதர். அதற்குத்தான் தன் மகனை இந்தியாவுக்கு அனுப்பி ஆழம் பார்த்தார். ஸ்ரீதரின் மகன் போலீஸ் விசாரணை வளையத்தில் இருக்கும்போதே, ஸ்ரீதரின் குற்ற நடவடிக்கைகள் மீண்டும் அதிகரித்துவிட்டன. காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள ஒரு கட்டடத்தை வாங்க ஸ்ரீதர் முயன்று வருகிறார். இதேபோல் காரை, வேடல், ஏலியூர் போன்ற கிராமங்களில் மிரட்டி நிலங்களை வாங்கத் தொடங்கி விட்டார்கள். ஸ்ரீதருக்கு உடந்தையாக அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஒருவர் உள்பட பலரும் பரபரப்பாகச் செயல்படத் தொடங்கிவிட்டார்கள். ஸ்ரீதரின் மகன் விசாரணைக்கு வரும்போது அவருடன் ஒரு வழக்கறிஞர் படையே வருகிறது. போலீஸிலும் பலர் ஸ்ரீதருக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்’’ என்றார்கள்.

சந்தோஷ்குமார் தரப்பில் விளக்கம் பெறுவதற்காக அவர் வீட்டுக்குச் சென்றோம். “அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. எப்போது வருவார் என்பதும் தெரியாது” என்று வீட்டில் இருந்தவர்கள் பதில் அளித்தார்கள்.

மீண்டும் வருகிறார் ஸ்ரீதர்? -  கலக்கத்தில் காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானியிடம் பேசினோம். “சந்தோஷ்குமாரிடம் நடத்தப்படும் விசாரணை குறித்து எதுவும் சொல்ல முடியாது. ஸ்ரீதரை எப்படிக் கைதுசெய்வது என்பது குறித்து விவாதித்து வருகிறோம். ஸ்ரீதருக்கு ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் விடப்பட்டிருக்கிறது. ஸ்ரீதரின் பணப்பரிவர்த்தனை முழுவதும் சந்தோஷ்குமாருக்குத் தெரியும். அதனால் அவரிடமும் விசாரணை செய்து வருகிறோம். விரைவில் ஸ்ரீதர் பிடிபடுவார்” என்கிறார் உறுதியாக.

- பா.ஜெயவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு