Published:Updated:

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 31 - உப்பாகப் போகிறீர்களா... குப்பையாகப் போகிறீர்களா?

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 31 - உப்பாகப் போகிறீர்களா... குப்பையாகப் போகிறீர்களா?
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 31 - உப்பாகப் போகிறீர்களா... குப்பையாகப் போகிறீர்களா?

டாக்டர் வெ.ஜீவானந்தம்

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 31 - உப்பாகப் போகிறீர்களா... குப்பையாகப் போகிறீர்களா?

டாக்டர் வெ.ஜீவானந்தம்

Published:Updated:
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 31 - உப்பாகப் போகிறீர்களா... குப்பையாகப் போகிறீர்களா?
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 31 - உப்பாகப் போகிறீர்களா... குப்பையாகப் போகிறீர்களா?

பினி போதையில் வீழ்ந்து கிடந்த சீன மக்கள், மாவோ என்ற மனிதரால் விழிப்புப் பெற்றனர். சீனம் வெற்று முழக்கங்கள் இன்றி முப்பது ஆண்டுகளில் வல்லரசானது. நாம் என்ன செய்தோம்? நவகாளி கலவரத் தீயை அணைக்க, செங்கோட்டை சுதந்திரக் கொண்டாட்டத்தை விட்டுவிட்டு, தனி மனிதப் படையாக வெறுங்கால் வீரனாகச் சென்ற மகாத்மாவைச் சாகடித்தோம். நாடு இன்றும் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. ‘சுதந்திரம் கிடைத்தால் மட்டும் போதாது, அதைக் காக்கும் தியாக மனம் கொண்ட புதிய தலைமுறை தேவை’ என்பதைத்தான் காந்தி, தனது மரணச் செய்தியாகத் தந்து சென்றார். நாம் ராஜ்காட்டில் அவரோடு சேர்த்து அதையும் புதைத்துவிட்டோம்.

மருத்துவத்தைக் காக்க அரசு, சட்டங்கள் போடலாம். ‘அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஆயிரம் அரிவாள்’ எனக் கனமான அரசியல் சாசனம் ஏளனமாகச் சிரிக்கிறது. புதிய சட்டங்கள் நமக்குத் தேவையில்லை. ‘நான் இல்லையென்றால் வேறு யார் செய்வார்... இப்போது செய்யவில்லையென்றால் இனி எப்போது செய்வது?’ என்று புறப்படும் புதிய மருத்துவர்கள் தேவை. இன்று பணப் பேராசையால், புனித மருத்துவம் வணிகமயமாக, சந்தைச் சரக்காக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசு செய்யட்டும் என்று காத்திருக்கும் காலமல்ல இது.

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 31 - உப்பாகப் போகிறீர்களா... குப்பையாகப் போகிறீர்களா?

‘‘என் முன்னே இரண்டு பைகள் இருந்தன. ஒன்று மருத்துவப்பை... மற்றது ஆயுதப்பை. இரண்டில் எதையாவது ஒன்றை எடுத்துக்கொண்டு நாட்டை மாற்றப் புறப்பட வேண்டும். நான் ஆயுதத் தோள்பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்” என்றார் டாக்டர் சே குவேரா. அப்படி தன்னலம் மறந்து, குடும்பத்தையும் சொத்துக்களையும் பட்டம் பதவிகளையும் துறந்து நாட்டுக்காக ஓடிய அன்றைய தலைமுறையின் கொடையே நாம் இன்று அனுபவிக்கும் விடுதலை.

அப்படி தன் கல்வியை, இளமையை, உழைப்பை, மக்களின் நல வாழ்க்கைக்கென அர்ப்பணிக்கும் முன்னோடிகள் நம் முன் ஏராளமாக உள்ளனர். அவர்களை அடையாளம் காண்பதும், காட்டுவதும், பின்தொடர்வதும் அவசியம். மக்கள் நம் மீது கொண்டிருந்த மகத்தான நம்பிக்கையை, புனிதத்தை மீட்டெடுக்க வேண்டிய காலமும் இதுவே. சென்னை அரசு மருத்துவமனையில் எளிய கதர் வேட்டியுடன் மாற்று மருத்துவத்தை உணர்த்திய தமிழ்ப்பற்றாளர் பேராசிரியர் தெய்வநாயகம்... புரட்சிகரமான நம்பிக்கைச் சுடராக ஒரு காலத்தில் காந்தி கிராமத்தை உருவாக்கிய டாக்டர் சௌந்திரம்மா... அவரது பாதையில் தொடரும் டாக்டர் கௌசல்யா... சோஷலிசச் சுடர் ஏற்று மராட்டியப் பழங்குடிகளுக்காக வாழ்ந்து, தன் வாரிசுகளை விட்டுச் சென்றுள்ள பாபா ஆம்தே... சிட்லிங்கிக் காடுகளில் வெறுங்கால் மருத்துவர்களை உருவாக்கிவரும் டாக்டர் ரெஜி, லலிதா... ஒடிசா காடுகளின் ஆதிவாசிகளைத் தேடிப்போகும் பினாயக் சென்... தனது சிறுநீரகத்தையும் தானம் செய்து, சிறுநீரகப் பாதிப்புக்கான டயாலிசிஸ் கருவிகளை வசதிமிக்க தர்மகர்த்தாக்கள் மூலம் வாங்கி ஏழை நோயாளிகளுக்கு உதவும் உமா ப்ரேமன்... இப்படி இன்னும் பல முகம் தெரியாத மருத்துவர்கள் நம்பிக்கைச் சுடராக ஆங்காங்கே வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களே இந்த உலகின் உப்பானவர்கள். இளம் தலைமுறை மருத்துவர்கள், கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து போகும் சிறு அளவிலான இந்த உப்பின் வாரிசுகளாகிச் சமுதாயத்துக்குச் சுவை கூட்டப் போகிறார்களாஅல்லது, குவிந்து கிடக்கும் பணக் குப்பையில் மேலும் ஒரு குப்பையாகி மக்கப் போகிறார்களா? இதுவே மருத்துவத் துறையின் முன் உள்ள கேள்வி. இந்தக் கேள்வியை இளம் மருத்துவர்கள் மனதில் உருவாக்கும் புதிய மருத்துவக் கல்வி தேவை.

சேர்க்கும் செல்வம் நிலையில்லை என்பதைச் சுனாமிகள் காட்டிச் செல்கின்றன. ஆனாலும், அலிபாபா குகையில் தங்கத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்ட காசிம் போலத்தான் சாகப் போகிறோமா? முடிவு செய்ய வேண்டிய தருணம் இது. நாம் விரும்பாவிட்டாலும் விரைந்து வந்து கொண்டிருக்கிறது ஊழிப் பேரலை. வறுமையில் உலகமே வாட, சில நூறு பேர் உலகின் வளங்களை உடமையாக்கிக்கொள்ளும் சமத்துவமற்ற வண்டி ஊர் போய்ச் சேராது. வானுயர்ந்த கார்ப்பரேட் மருத்துவமனைகளோ, அவர்களின் வெள்ளைக் கோட்டுக் கூலிகளோ நமக்குத் தேவையில்லை;   மலைப்பகுதி ஆதிவாசிகளுக்கும், கிராமத்தில் சத்துணவின்றி சோகையில் சாகும் கோடானு கோடிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புது வாழ்வு தரும் எளிய மருத்துவர்கள்தான் இன்றைய தேவை.

சின்னச் சின்ன மனிதர்கள், சின்னச் சின்ன இடங்களில் செய்யத் துவங்கும் சின்னச் சின்ன மாற்றங்களால் உலகே ஒரு நாள் மாறும். இன்னும் மனசாட்சியை அடகு வைக்காத அரசியல்வாதிகள், பழுத்த மரம் போலக் காய்த்துக்கொடுக்கும் நல்ல மனிதர்கள், தன்னை உலகுக்கு அர்ப்பணிக்கும் முகம் தெரியாத அஸ்திவாரக் கற்கள் காத்துக் கிடக்கின்றனர். இந்த உன்னத முத்துக்களை இணைக்கும் சிறு கம்பிதான் தேவை. அந்தக் கம்பி யார்? சமூகம் காத்திருக்கிறது.

(அடுத்த இதழில் முடியும்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!