Published:Updated:

தமிழகமே ஒரு பிக்பாஸ் இல்லமா?

தமிழகமே ஒரு பிக்பாஸ் இல்லமா?
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழகமே ஒரு பிக்பாஸ் இல்லமா?

சுகுணா திவாகர்

ட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையுமே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி இரண்டாகப் பிரித்திருக்கிறது. பிக்பாஸை முற்றாகப் புறக்கணித்தவர்கள், மூழ்கி முத்தெடுப்பவர்கள் என்று தமிழ் மக்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துவிட்டதைப் போல் ஒரு தோற்றம் நிலவுகிறது. தமிழ்நாடே பிக்பாஸ் ஹவுஸுக்குள் இருக்கிறதா, அல்லது தமிழ்நாடே பிக்பாஸ் ஹவுஸாக மாறிவிட்டதா என்ற குழப்பம் நமக்கு.

பிக்பாஸ் பற்றி நாளொன்றுக்குக் குறைந்தது மூன்று வீடியோக்களும் சில நூறு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பதிவுகளும் அதைவிட அதிகமான மீம்ஸ்களும் வந்துவிழுகின்றன. பிக்பாஸ் பற்றிப் பேசுவது ஒரு டிரெண்ட் என்றால் ‘நான் பிக்பாஸ் பார்ப்பதில்லை’ என்று சொல்லிக்கொள்வது இன்னொரு டிரெண்டாக இருக்கிறது. அப்படிச் சொல்வது அறிவுஜீவிகளுக்கான அடையாளமென்றும் நம்பப்படுகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில்தான் இருக்கிறது உண்மை.

வெகுஜன சினிமா, வெகுஜனப் பத்திரிகைகள் இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தனியாக ‘பண்பாட்டு ஆய்வு’ செய்வது அர்த்தமற்றது என்ற முடிவுக்கு ஒருசில அறிவுஜீவிகளாவது சமீபகாலங்களில் வந்துசேர்ந்திருக்கிறார்கள். எனவே கணிசமான தமிழ்நாடு பார்க்கும் ஒரு விஷயத்தை முற்றிலுமாகப் புறக்கணிப்பது சாத்தியமும் இல்லை, புத்திசாலித்தனமான காரியமும் இல்லை.

தமிழகமே ஒரு பிக்பாஸ் இல்லமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், ஒட்டுமொத்த உளவியல் ஆய்வுகளையும் பிக்பாஸை அடிப்படையாகக் கொண்டு முன்வைப்பதும், அதை ‘கம்யூன்’ போன்ற வாழ்க்கைமுறைகளுடன் ஒப்பிடுவதும் அபத்தம். அதேநேரத்தில் சமூகத்தில் பிரதிபலிக்கும் சில விஷயங்கள் பிக்பாஸிலும் எதிரொலிப்பதைக் கணக்கிலெடுக்க வேண்டும். எப்போதுமே அடுத்தவர் அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எல்லா மனிதர்களுக்கும் உண்டு. 30 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்கள், மாலை நேரங்களில் தெருக்களில் ஏதாவது ஒரு வீட்டின் திண்ணையிலோ, வாசலிலோ கும்பல் கும்பலாகப்  பெண்கள் கூடி அமர்ந்து புறணி பேசுவதையும், அதை மடியில் அமர்ந்தபடியோ படுத்தபடியோ குழந்தைகள் கேட்பதையும் பார்த்திருப்பார்கள். இப்போதெல்லாம் தெருக்களில் பெண்கள் கும்பலையோ, புறணி பேசுவதையோ பார்க்க முடிவதில்லை. மாறாக, தொலைக்காட்சிகளில் நெடுந்தொடர் ஒலியைக் கேட்க முடிகிறது.

புறணி பேசுவது சீரியல் பார்ப்பதாக மாறியதைப் போல ‘பிக்பாஸ் பார்ப்பதாக’ அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. அதிலும் தாங்கள் ஓரளவு அறிந்த பிரபலங்களே, தங்களுக்கு இருக்கும் அதே பலவீனங்களோடு அம்பலமாகும்போது, அதைப் பார்க்கும் ஆர்வம் இன்னும் அதிகரிக்கிறது. சீரியலில் இருப்பது பாத்திரங்கள் என்பதும், நிகழ்வது நடிப்பு என்பதும் பார்வையாளர்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், பிக்பாஸிலோ ‘நடப்பதெல்லாம் உண்மையா... அல்லது இதுவும் இன்னொரு சீரியலா?’ என்ற குழப்பமும் பார்வையாளர்களிடத்தில் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. அதனாலேயே இதை சீரியஸாக எடுத்துக்கொண்டு விவாதிக்கத் தொடங்குகிறார்கள்.

நேரடி ரத்த உறவுகளாக இல்லாத பலர் கூடி வாழும் ‘கம்யூன்கள்’ என்பவை மாற்று வாழ்க்கைப் பரிசோதனை முயற்சிகள். வேலைப் பகிர்வு, அதிகார நீக்கம் ஆகியவைதான் அதன் அடித்தளங்கள். ஆனால், பிக்பாஸோ மேலும் மேலும் அதிகாரம் குறித்த வேட்கையைப் போட்டியாளர்களுக்கு ஏற்படுத்துகிறது. ஒருவரைப் பற்றி இன்னொருவர் பேசுவதை, அவருக்கே போட்டுக் காட்டி வன்மம் வளர்க்கப்படுகிறதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. எப்படியிருந்தபோதும் இதை கம்யூன் வாழ்க்கையோடு ஒப்பிட முடியாது. வேண்டுமானால் கூட்டுக்குடும்பத்துடன் ஒப்பிடலாம்.

‘கூட்டுக்குடும்பங்கள் எல்லாம் ஒழிந்துவிட்டன. அடுத்தடுத்த தலைமுறைகள் அற வாழ்வையும் பண்பையும் கற்றுக்கொள்ள கூட்டுக் குடும்பங்கள் உதவின. இப்போதைய தனிக்குடும்ப வாழ்வு, நம் பண்பாட்டுக்குத் தீங்கானது’ என்று ஆதங்கத்துடன் பேசுபவர்களை நாம் எப்போதும் பார்க்கலாம். உண்மையில் கூட்டுக்குடும்பங்கள் என்பவை பழமைவாதத்தைப் பாதுகாக்கும் அமைப்புதான். பெண்கள் அதிகம் சுரண்டப்பட்டது கூட்டுக்குடும்பங்களில்தான். சாதியமும் மூடநம்பிக்கையும் இளம் தலைமுறைக்கு அதிகம் புகட்டப்பட்டது கூட்டுக்குடும்பங்களில்தான். கூட்டுக்குடும்பங்கள் சிதைந்ததும் தனிக்குடும்பங்கள் உருவானதும் தமிழ்ச்சமூகத்தின் ஆரோக்கியமான நகர்வுகள். கூட்டுக்குடும்பங்கள் இறுக்கமாக இன்னும் தொடர்ந்திருந்தால், பெண்கள் இவ்வளவு தூரம் வெளியில் வந்து படிப்பதோ, வேலைக்குச் செல்வதோ, காதல் திருமணங்களோ சாத்தியமாகி இருக்காது.

ஆனால், பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் ‘இது ஒரு கூட்டுக்குடும்பம்’ என்று மறுபடி மறுபடி வலியுறுத்துகிறார்கள். அதுதான் இவ்வளவு அதிகாரங்களுக்கும் வக்கிரங்களுக்கும் காரணம் என்பதை அவர்களும் உணரவில்லை; பார்வையாளர்களும் உணரவில்லை. பிக்பாஸ் குடும்பத்தில் சுதந்திரமாக நடந்துகொள்கிற, சுயேச்சையாகச் செயல்படும் ஓவியாவுக்கு வாக்குகள் குவிகின்றன. ஆனால், உண்மையில் இப்படி சுயேச்சையான, சுதந்திரமான பெண்களை நம் குடும்பங்களில் இருந்து உருவாக்கி இருக்கிறோமா, அனுமதித்து இருக்கிறோமா என்பதைப் பார்வையாளர்கள் மறந்தும் சிந்திப்பதில்லை.

தமிழகமே ஒரு பிக்பாஸ் இல்லமா?

எதார்த்தத்தில் ஜூலி மாதிரி, சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்ளும் பெண்களையே நம் குடும்பங்கள் உருவாக்குகின்றன. அதனால்தான் மருமகளாய் இருந்து ஒடுக்கப்பட்ட பெண், மாமியார் ஆனதும் தன் மருமகளை ஒடுக்கும் பெண்ணாக மாறுகிறாள். சமூகத்தில் நிலவும் சாதிய அதிகார மனநிலையையும் வர்க்க அதிகார மனநிலையையும் நூற்றுக்கு நூறு பிரதிபலிப்பவர் காயத்ரி ரகுராம். அவர் மற்றவர்களைத் திட்டும்  பெரும்பாலான வார்த்தைகளுக்குப் பின்னால் இருப்பது சாதிய மனநிலையும் வர்க்க மனநிலையும். இதை வன்மையாகக் கண்டிக்கும் தமிழர்கள், இதையெல்லாம் தாண்டிவிட்டார்களா என்று யோசித்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

பரணிக்கு பிக்பாஸ் குடும்பத்தில் நடந்ததுதான் கிராமப்புறத்தில் தலித் மக்களுக்கு நடப்பதும், பொதுவாக எல்லா இடங்களிலும் அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு நடப்பதும். இன்னமும்   பல  கிராமங்களில் இரட்டைக் குவளைகள் இருக்கின்றன; மனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலம் ஒழியவில்லை; அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளைக் கீழிறக்கியே பார்க்கிறோம். ஆனால், நாம் பரணி ஒதுக்கப்படுவதற்காகக் கவலையும் படுகிறோம்.

ஒரு பெண் தனக்கான காதலனைத் தானே தேர்ந்தெடுக்கும்போது ஆணவக்கொலை செய்து விட்டு, சுதந்திரமான ஓவியாவுக்கு ஆதரவுக்குரல் கொடுக்கிறோம். சமூகத்தில் நடக்கும் எந்த ஒரு அநீதியையும் தடுக்க முடியாத இயலாமையில், திரையில் தீயவர்களைத் தண்டிக்கும் எம்.ஜி.ஆருக்காக விசிலடித்தோம். இப்போது நாமே நேரடியாக ஓவியாவுக்கு வாக்களிப்பதன் மூலம் நம்மைநாமே சமநிலைப் படுத்திக்கொள்கிறோம். அப்படியானால் நமக்கான பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறோம் என்றுதானே அர்த்தம்?

மாநிலங்களின் உரிமைகளை மெல்ல மெல்லப் பறிக்கும் நீட் தேர்வு, இந்தித்திணிப்பு, மாட்டிறைச்சிக்கான தடை மூலம் கால்நடைகள் மீதான எளியவர்களின் பிணைப்பு பறிபோவது, ஜி.எஸ்.டி, இயற்கை வளங்களைச் சுரண்ட குறிவைக்கப்படும் நெடுவாசல்களும் கதிராமங்கலங்களும் என்று அடுத்தடுத்து அதிகாரம் நம் மீதான பிடியை இறுக்குகிறது. நாம் இதுவரை இயற்கைக்கு இழைத்த அநீதிகளுக்கான தண்டனைகளாகப் பருவமழை பொய்ப்பு, குடிநீர்ப் பிரச்னை, வெயில் உக்கிரம் என்று வாட்டுகிறது. இதில் நம் தவறையும் உணராமல், அரசு தன் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதையும் அறியாமல் இருக்கிறோம். யார் எதிர்க்குரல் கொடுத்தாலும் குண்டர் சட்டத்தில் தள்ளப்படலாம் என்னும் கருத்துச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல் உச்சம் பெற்றிருக்கிறது. ஆனால், நாமோ ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’ என்று பிக்பாஸ் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எப்போதும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம்.

பிரேக்லைன்:

பி
க்பாஸ் குடும்பத்தில் சுதந்திரமாக நடந்துகொள்கிற, சுயேச்சையாகச் செயல்படும் ஓவியாவுக்கு வாக்குகள் குவிகின்றன. ஆனால், உண்மையில் இப்படி சுயேச்சையான, சுதந்திரமான பெண்களை நம் குடும்பங்களில் இருந்து உருவாக்கி இருக்கிறோமா?