Published:Updated:

தலைமை மாறியும் நிலைமை மாறாத நடிகர் சங்கம்!

தலைமை மாறியும் நிலைமை மாறாத நடிகர் சங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தலைமை மாறியும் நிலைமை மாறாத நடிகர் சங்கம்!

தன்னிச்சையான போக்கு... ஆல் இன் ஆல் நண்பர்கள்...

டிகர் சங்கத்தில் அணி மாறினாலும் பிணி மாறவில்லை என்ற புலம்பல் கேட்கிறது. ‘‘தேர்தல் களத்தில் நிற்பதே அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்மை நடந்திடவும் நடிகர் சங்கத்துக்கான இடத்தில் கட்டடம் அமைக்கவும்தான்’’ என்று தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்தார் விஷால்.  இப்போது இவர் மீதே புகார்கள். சரத்குமார் - ராதாரவி டீம் போலவே விஷால் தலைமையிலான நிர்வாகிகளும் தன்னிச்சையாக செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. 
 
கட்டடம் கட்டத் தடை!

சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நடிகர் சங்கத்தின் பொறுப்பிலிருந்தபோது, சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான இடத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கப் போவதாகக் குற்றச்சாட்டு கிளம்பி, அது விஸ்வரூபம் எடுத்தது. 2015-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றதுமே, ‘‘சங்கத்தின் கணக்கு வழக்குகள் ஆராயப்படும். நடிகர் சங்கத்தின் இடம் மீட்கப்பட்டுக் கட்டடம் கட்டப்படும்” என்ற வாக்குறுதிகளை வீசினார்கள். ஆனால், கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றதுமே, ‘40 அடி பொதுச்சாலையை ஆக்கிரமித்துக் கட்டடம் கட்டப்படுகிறது. அந்த இடத்தின் மதிப்பு 40 கோடி ரூபாய். கட்டுமானத்துக்குத் தடைவிதிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கன், அண்ணாமலை ஆகிய இரண்டு பேர் வழக்குத் தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம், இப்போது தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது விஷால் அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த வழக்கால், கட்டடத்துக்கு நிதி உதவி செய்வதாக சொன்ன பலரும் அமைதியாகிவிட்டார்கள்.

தலைமை மாறியும் நிலைமை மாறாத நடிகர் சங்கம்!

ஆல் இன் ஆல் நண்பர்கள்!

‘‘நடிகர் சங்கத் தலைவராக நாசர் இருந்தாலும், செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் எல்லாம் விஷால், கார்த்திக், பொன்வண்ணன் ஆகியோரின் கையில்தான் உள்ளது’’ என்கிறார்கள் நிர்வாகிகள் சிலர். விஷால் அணி மீது சுமத்தப்படும் மிகப் பெரிய குற்றச்சாட்டு, தங்களுக்கு வேண்டியவர்களுக்கே பதவி தருகிறார்கள் என்பது. நடிகர் சங்கத்தின் மேலாளர் பதவிக்கு வந்திருக்கும் பாலமுருகன், முன்பு விஷாலின் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.  ‘‘இவரை எதற்காக நடிகர் சங்கத்துக்குள் கொண்டுவந்தார்?’’ என்று பலரும் கேட்கின்றனர். நடிகர் சங்கத்துக்குச் சட்ட ஆலோசகராக கிருஷ்ணன் என்பவரை நியமித்துள்ளார் விஷால். இவர் விஷாலுடன் படித்தவர். நடிகர் சங்கத்தின் ஆடிட்டராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜோசப் கந்தசாமி, நடிகர் கார்த்தியின் ஆடிட்டராக இருக்கிறார். அதே போல் நடிகர் கார்த்தியின் நண்பர் ஒருவருக்கும் நடிகர் சங்கத்தின் முக்கிய அலுவல் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்படி விஷாலும், கார்த்திக்கும் செய்திருப்பது நடிகர் சங்கத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

ஊழல் வழக்கு என்ன ஆனது?

நடிகர் சங்கத்தின் முந்தைய நிர்வாகிகள்மீது, சங்கத்தின் பணத்தைக் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 1 கோடியே 60 லட்சம் ரூபாய் பணத்தைச் சரத்குமார் தரப்பு கையாடல் செய்ததாக விஷால் அணியினர், பதவிக்கு வந்தவுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அது நீதிமன்றத்தில் சிவில் வழக்காக நிலுவையில் உள்ளது. சென்னையை அடுத்த வேங்கடமங்கலத்தில், நடிகர் சங்கத்துக்குச் சொந்தமாக இருந்த 26 சென்ட் இடத்தை ராதாரவி - சரத்குமார் அணி விற்றுவிட்டதாகப் புகார் இருந்தது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த இடம் மீட்கப்படும் என்று பொதுக்குழுவிலே விஷால் அறிவித்தார். ஆனால், அதன்பின் எந்த நடவடிக்கையும் இல்லை. ராதாரவியும் சரத்குமாரும் சேர்ந்து நடிகர் சங்கத்தின் பெயரில் புதிய டிரஸ்ட் தொடங்கி, அதை வைத்து வருமானவரித் துறையில் கணக்கு காட்டியதையும் விஷால் அணியினர் கண்டறிந்தனர். கிரிமினல் குற்றமான இதன்மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ‘‘சரத்குமார் மீதான வழக்குகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதற்கு ஒரு பின்னணி உண்டு. சரத்குமார் தரப்பு, விஷால் தரப்புடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது’’ என்று ஒரு குற்றச்சாட்டையும் கிளப்பியுள்ளார்கள் சில நிர்வாகிகள்.

நடிகர் சங்கக் கட்டடத்துக்கான பிளானை, விஷால் தலைமையிலான நிர்வாகிகள்தான் முடிவு செய்தார்கள். 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறிய கல்யாண மண்டபம், டப்பிங் ரூம் உள்ளிட்டவையோடு இந்த மண்டபம் அமைய இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், முறைப்படி டெண்டர் விடாமல், விஷாலின் நண்பர் நிறுவனத்துக்குப் பணி ஒதுக்கியிருப்பதாக சர்ச்சை வெடித்தது. அதன்பிறகே பிளானிங் கமிட்டி அமைத்து, அதன் மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலைமை மாறியும் நிலைமை மாறாத நடிகர் சங்கம்!

தன்னிச்சையான போக்கு!

சங்கக் கட்டட விவகாரம் குறித்து, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.சேகர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், தன்னிச்சையான போக்கு குறித்தும் 15 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளிக்காமல், ‘உங்களைச் சங்கத்திலிருந்து ஏன் நீக்கக் கூடாது’ என்று எஸ்.வி.சேகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். பதிலுக்கு எஸ்.வி.சேகரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு இதுவரை பதில் இல்லை. 

இதுகுறித்து எஸ்.வி.சேகரிடம் கேட்டபோது, ‘‘நடிகர் சங்கத்தில் பல அறிவாளிகளும் திறமையானவங்களும் இருக்காங்க. அவங்களிடம் கேளுங்க’’ என்றார். சரத்குமாரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவதற்குப் போராடிய பூச்சி முருகனிடம் கேட்டபோது, ‘‘நடிகர் சங்கம் பற்றி இப்போது ஏதும் என்னால் சொல்ல முடியாது” என்று ஒதுங்கிக்கொண்டார்.

‘‘புதிய குற்றச்சாட்டைக் கூறச் சொல்லுங்கள்!”

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விஷாலிடம் கேட்டபோது, ‘‘இதுவரை இல்லாத வகையில் நடிகர் சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக நடக்கின்றன. கட்டடத்தின் ஆர்க்கிடெக் ஒப்பந்தம்கூட நிர்வாகிகளிடம் கேட்டுத்தான் வாங்கினோம். அந்த ஆவணங்கள் நடிகர் சங்க அலுவலகத்தில் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் வந்து பார்த்துக்கொள்ளலாம். எனக்கு வேண்டியவர்களைப் பொறுப்புக்குக் கொண்டுவரவில்லை. திறமையானவர்களைத்தான் கொண்டுவந்துள்ளோம். முறையாகச் சங்க நிர்வாகிகளிடம் அனுமதி பெற்றுத்தான் நியமித்தோம். சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ‘மினிட் புக்’கில் முறையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. என்மீது குற்றம்சாட்டும் நபர்களை இனியாவது புதிய குற்றச்சாட்டைச் சுமத்தச் சொல்லுங்கள், இதையெல்லாம் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது” என்றார்.

விஷால்- கார்த்தி அணிக்குத் தலைவலி ஆரம்பம் ஆகிவிட்டது!

- அ.சையது அபுதாஹிர்,

படம் : ஜெ.வேங்கடராஜ்

உருவாகிறது போட்டி சங்கம்!

வி
ஷாலுக்கு ஆதரவாக நடிகர் சங்கத் தேர்தலில் பணியாற்றியவர் பி.ஆர்.ஓ சங்கய்யா. இப்போது இவரைச் சங்கத்திலிருந்து நீக்கிவிட்டனர். இவர், ஜே.கே.ரித்திஷ் ஆதரவாளராக சொல்லப்படுகிறார். ‘‘சங்கையா இப்போது ‘தமிழக திரைப்பட நடிகர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிய சங்கம் ஒன்றைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விஷால் அணியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பாக இருப்பவர்களை இந்தச் சங்கத்தில் இணைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார்’’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.