Published:Updated:

இரோம் ஷர்மிளா - திருமணத்துக்கு ஆதரவு... போராட்டத்துக்கு எதிர்ப்பு!

இரோம் ஷர்மிளா - திருமணத்துக்கு ஆதரவு... போராட்டத்துக்கு எதிர்ப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
இரோம் ஷர்மிளா - திருமணத்துக்கு ஆதரவு... போராட்டத்துக்கு எதிர்ப்பு!

கொந்தளிக்கும் கொடைக்கானல்

‘வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும்’ என்பர். இது இரோம் ஷர்மிளாவுக்கு மிகவும் பொருந்தும். மணிப்பூரில் ராணுவச் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து போராடிய அவருடைய திருமணமும் இப்போது சிக்கலில் மாட்டியிருக்கிறது.

இரோம் ஷர்மிளா, அயர்லாந்தைச் சேர்ந்த டெஷ்மண்ட் குட்டினிஹோ என்பவரைக் காதலித்து வந்தார். மணிப்பூர் தேர்தல் தோல்விக்குப் பிறகு கொடைக்கானலுக்கு வந்து தங்கியுள்ளார் ஷர்மிளா. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வதற்காக, கடந்த 12-ம் தேதி கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தனர். சார் பதிவாளர் ராஜேஷ், ‘‘சட்டப்படி இந்த மனு, அலுவலக நோட்டீஸ் போர்டில் ஒட்டப்படும். முப்பது நாள்களுக்குள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதபட்சத்தில், அதன்பின் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்’’ என்று தெரிவித்திருந்தார்.

அடுத்த நாளே, இரோம் ஷர்மிளா திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொடைக்கானல் பேத்துப்பாறையைச் சேர்ந்த தே.மு.தி.க பிரமுகரான மகேந்திரன் என்பவர், சார் பதிவாளரிடம் மனு கொடுத்தார். இதனால் திருமணத்தில் சிக்கல் எழுந்துள்ளது.

இரோம் ஷர்மிளா - திருமணத்துக்கு ஆதரவு... போராட்டத்துக்கு எதிர்ப்பு!

இது தொடர்பாக மகேந்திரனிடம் பேசினோம். ‘‘தன் இளமைக்காலம் முழுவதையும் மக்களுக்கான போராட்டத்தில் கழித்தவர் என்பதால், அவர் கொடைக்கானல் வந்தபோது காலில் விழுந்து வரவேற்றேன். ‘இங்கு அமைதியைத் தேடி வந்திருக்கிறேன்’ எனத் தெரிவித்தார். சர்வதேச சுற்றுலா நகரமான கொடைக்கானலுக்கு அமைதி தேடி வரும் அத்தனை நபர்களையும் ஆதரிப்பது எங்கள் கடமை. சுற்றுலா பயணிகளை நம்பித்தான் எங்கள் மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன்.

இந்நிலையில், திடீரென, ‘கொடைக்கானல் மக்களுக்காகப் போராடுவேன்’ என அவர் தெரிவித்தது எங்களுக்கு அதிர்ச்சி தந்தது. எங்களுக்குப் பல பிரச்னைகள் இருப்பது உண்மைதான். அதற்கெல்லாம் நாங்கள் போராடி, அமைதியான முறையில் சரிசெய்துகொண்டு இருக்கிறோம். இரோம் ஷர்மிளா போன்றவர்கள், சாதாரணமாக ஒரு சாலை மறியலில் ஈடுபட்டால்கூட அது சர்வதேச செய்தியாகும். இதனால் ‘கொடைக்கானல் அமைதியான இடம்’ என்ற பெயருக்குப் பங்கம் வரலாம். இதை ஒரு போராட்ட பூமியாக வெளியுலகம் பார்க்கத் தொடங்கினால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும். அதனால் எங்களது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எங்களுக்குக் கோடைக்காலம்தான் சீசன். ஆனால், நக்சல் நவீன் என்கவுன்ட்டர், வட்டக்கானலைத் தாக்க ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டது போன்ற காரணங்களால் கடந்த இரண்டு சீசன்களையும் இழந்தோம். தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக இந்த சீசனையும் இழந்துவிட்டோம். ‘இரோம் ஷர்மிளா போராட்டத்தால் அடுத்த சீசனும் பாதிக்கப்பட்டால் எங்கள் மக்களின் வாழ்வாதாரம் என்னாகுமோ’ என்ற அச்சத்தில்தான் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனுகொடுத்தேன்.

அவரது காதலர், சர்வதேச அளவிலான போராட்டக்காரர்களை ஒருங்கிணைக்கும் ஒரு சோஷியல் மீடியாவின் அட்மினாக இருக்கிறார். யார் யாரோ அவர்களை வந்து தினமும் பார்த்துச் செல்கிறார்கள். அவர்களைப் பற்றிய எந்த விவரமும் யாருக்கும் தெரியாது. அமைதியான எங்கள் மலை நகரத்துக்கு இவர்களால் ஆபத்து வருமோ என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. நாங்கள், அவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ‘கொடைக்கானலில் எந்தப் போராட்டத்தையும் நடத்த மாட்டோம். எங்களால் கொடைக்கானல் அமைதிக்கு பங்கம் வராது’ என்ற உத்தரவாதத்தை அவர்கள் அளித்தால், எங்கள் மக்களே முன்னின்று திருமணத்தை நடத்திவைக்கத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இரோம் ஷர்மிளா - திருமணத்துக்கு ஆதரவு... போராட்டத்துக்கு எதிர்ப்பு!

கொடைக்கானலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரா, ‘‘ஷர்மிளா இங்கு போராட்டம் நடத்துவதால், கொடைக்கானலின் வாழ்வாதாரமான சுற்றுலாத் தொழிலுக்குப் பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. அதிகாரிகள் தரப்பிலும் இவர் இங்கு நிரந்தரமாக தங்கியிருப்பதை விரும்பவில்லை. கொடைக்கானலுக்கு யார் யார் வருகிறார்கள் என்ற விவரம் காவல்துறையினரிடமே இல்லை. இங்கு பெரிய பாதுகாப்பு அமைப்பு இல்லை. இதனால் சுற்றுலாப் பயணிகளிடம் தேவையில்லாத அச்சம் எழும். மொத்தத்தில் கொடைக்கானலின் அமைதி பறிபோகும்’’ என்றார்.

கொடைக்கானலில் இரோம் ஷர்மிளாவுக்கு எதிர்ப்பு அதிகரித்திருக்கும் அதே நேரத்தில், சமூக ஆர்வலர்கள் செல்வகோமதி உள்ளிட்ட பலரும் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ‘‘அமைதிப் போராட்டத்தின் அடையாளமாகக் கருதப்படும் ஷர்மிளா பற்றி இப்படிப் பேசுவதே அபத்தம்’’ என்று கொதிக்கிறார்கள் அவர்கள்.

இரோம் ஷர்மிளா சார்பாக நம்மிடம் பேசிய அவரது வழக்கறிஞர் அப்துல் ஹமீது, ‘‘திருமணம் செய்துகொள்வது அவரது தனிப்பட்ட விருப்பம். இதில் தனிநபர்கள் தலையிட முடியாது. கொடைக்கானலின் அமைதியை நேசிப்பதால்தான் இங்கு குடியேறி இருக்கிறார். இந்த அமைதியைக் குலைக்க வேண்டும் என அவர் ஒருபோதும் நினைக்கவில்லை. தன் கணவரோடு அமைதியான வாழ்க்கை வாழவே அவர் விரும்புகிறார். ஆனால், எந்த முடிவையும் சுயமாக எடுக்கும் சுதந்திரம் அவருக்கு உண்டு. அதில் யாரும் தலையிட முடியாது’’ என்றார்.

- ஆர்.குமரேசன்
படங்கள்: வீ.சிவக்குமார்