Published:Updated:

“இனி கொள்ளிடக் கரையும் பாலைவனம் ஆகும்!”

“இனி கொள்ளிடக் கரையும் பாலைவனம் ஆகும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இனி கொள்ளிடக் கரையும் பாலைவனம் ஆகும்!”

கதறும் கடலூரும் நடுங்கும் நாகையும்

நெடுவாசலும் கதிராமங்கலமும் போராட்ட அனலில் தகித்துக்கொண்டிருக்க... சத்தமில்லாமல் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 45 கிராமங்களை இணைத்து, பெட்ரோகெமிக்கல் மண்டலமாக அறிவித்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘‘காவிரி டெல்டா போலவே இனி கொள்ளிடம் நதிப் பகுதியும் பாலைவனம் ஆகிவிடும்’’ கொதிக்கிறார்கள், அந்தப் பகுதி மக்கள்.

தொடர்ச்சியான வறட்சியும், காவிரி நதி நீரில் தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியும், டெல்டாவின் பெரும்பகுதியைப் பாலைவனம் ஆக்கிவிட்டது. சில பகுதிகளில் மட்டும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்கிறார்கள். எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் இந்த விவசாயத்துக்கும் வேட்டு வைப்பதோடு, குடிநீருக்கும் திண்டாட வைக்கின்றன. இந்தக் கோபம்தான் நெடுவாசலிலும், கதிராமங்கலத்திலும் போராட்டமாக வெடித்திருக்கிறது. இந்தச் சூழலில்தான் இப்படி ஒரு அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.

ஆனால், இது நேற்று முடிவெடுத்து இன்று அறிவித்த திட்டம் இல்லை. தொழிற்பேட்டைகள் போல பெட்ரோகெமிக்கல் முதலீட்டு மண்டலங்களைத் தனியாக ஆரம்பிப்பது என்று மத்திய அரசு, 10 ஆண்டுகளுக்கு முன்பு கொள்கை முடிவு எடுத்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக மு.க.அழகிரி இருந்தபோது, இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுதான் இப்போது இறுதிநிலையை எட்டியுள்ளது.

“இனி கொள்ளிடக் கரையும் பாலைவனம் ஆகும்!”

45 கிராமங்களில் 57,345 ஏக்கர் நிலங்கள் இதற்காகக் கையகப்படுத்தப்படும். ஆனால், மத்திய அரசின் கொள்கை முடிவின்படி, ஒரு பெட்ரோகெமிக்கல் மண்டலம் என்பது சுமார் 250 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருக்க வேண்டும். எனவே, இந்த 45 கிராமங்களுமே மொத்தமாக தொழிற்சாலைகள் ஆகிவிடும். பெரும்பாலான கிராமங்கள் கொள்ளிடம் நதியையும் வங்கக் கடலையும் ஒட்டியுள்ளன. எனவே, விவசாய நிலங்களோடு, கடலும் சேர்ந்து பாதிக்கப்படும் என்ற அச்சம் இங்கு எழுந்துள்ளது. 

காவிரிப் பாசன விவசாயச் சங்கத் தலைவர் இளங்கீரன், “காவிரிப் பாசன மாவட்டங்களை நிரந்தரமாகப் பாலைவனமாக்கும் மத்திய அரசின் முயற்சி, இப்போது காவிரியைத் தாண்டி எல்லாப் பக்கமும் விரிவடைந்து இருக்கிறது. இந்த அநியாயத்துக்கு மாநில அரசு துணைபோவது, சகித்துக்கொள்ள முடியாத கொடுமை. மக்களை வாழ வைக்க வேண்டிய அரசு, இத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும். மீறினால் அது எங்கள் பிணத்தின் மீதுதான் நடக்கும்” என்றார் காட்டமாக.

‘டெல்டா நீராதாரம் பாதுகாப்பு மையம்’ அறக்கட்டளைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், “முப்போகம் சாகுபடிசெய்த டெல்டா விவசாயிகள் தற்போது, ஒரு போகச் சாகுபடிக்கே தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கிறார்கள். கொள்ளிடக் கரையும் அப்படி இனி ஆகிவிடும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் 13 மாவட்ட மக்களுக்குக் குடிநீர் செல்கிறது. இதற்கு உலை வைக்கும் வகையில் இத்திட்டத்தைக் கொண்டுவருவது வேதனை” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“இனி கொள்ளிடக் கரையும் பாலைவனம் ஆகும்!”

காவிரி டெல்டா விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம், “தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2008-ல் கோ-4 என்ற தீவனப் புல்லை அறிமுகம் செய்தது. இதை ஒரு ஹெக்டேரில் பயிரிட்டால் வரும் விளைச்சலில், 80 லட்சம் கனமீட்டர் பயோ மீத்தேன் எடுக்கமுடியும் என்று முன்னாள் தமிழக வனக்காவலர் டாக்டர் குமரவேல் கூறியிருக்கிறார். இதனைப் பின்பற்றி ஒரு லட்சம் ஹெக்டேரில் புல் பயிரிட்டால் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வருமானமும் கிடைக்கும், எரிபொருளும் கிடைக்கும். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ‘ஜெயன்ட் கிங் கிராப்’ என்ற புல் வளர்த்து, அதன்மூலம் பயோ எரிவாயு தயாரித்து ஒரு பெரிய நகரத்தின் எரிவாயுத் தேவையையே பூர்த்தி செய்கிறார்கள். அதனை நாமும் பின்பற்றினால் என்ன? இயற்கையைச் சிதைக்காத அறிவியல் வளர்ச்சிதான் இன்றைக்கு நாட்டுக்குத் தேவை. ஒரு கிலோ சாணத்தில் 40 லிட்டர் எரிவாயுவும், வீணாகும் ஒரு கிலோ உணவுப்பொருளில் 160 லிட்டர் எரிவாயுவும், உணவுக்குப் பயன்படாத எண்ணெய் வித்துக்களில் ஒரு கிலோ மூலம் 245 லிட்டர் எரிவாயுவும், ஒரு கிலோ கரும்பு சக்கையிலிருந்து 330 லிட்டர் எரிவாயுவும் எடுக்கமுடியும் என்று நிரூபித்துக்காட்டிய பின்னும் மத்திய, மாநில அரசுகள் அதனைச் செயல்படுத்தாமல் மண்ணையும், அதை நம்பிவாழும் மக்களையும் அழிக்க நினைப்பது ஏன்?

தேசியக் கச்சா எண்ணெய்த் தேவையில் ஒரு சதவிகிதம் மட்டுமே தமிழகத்தில் கிடைக்கும் எனக் கூறுகின்றனர். எரிவாயு தேவையில் மூன்று சதவிகிதம் மட்டுமே இங்கு கிடைக்கிறது. அதைவிட அதிக எரிசக்தி தரும் உற்பத்தி முறைகளைப் புறக்கணித்துவிட்டு, தமிழகத்தின் விளைநிலங்களைப் பாழாக்க வேண்டிய அவசியம் என்ன?” என்ற கேள்வியுடன் முடித்தார்.

“இனி கொள்ளிடக் கரையும் பாலைவனம் ஆகும்!”

பா.ம.க. மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பழனிச்சாமி, “ஏற்கெனவே கடலூர் சிப்காட், நாகை மாவட்டத்தில் உள்ள ஐந்து அனல்மின் நிலையங்கள் மூலம் சுற்றுச்சூழலும், நிலமும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல இப்பகுதியில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் கொண்டுவருவதை அனுமதிக்க முடியாது. இதை எதிர்த்து, மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்காக பா.ம.க எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறது” என்றார்.

எப்போதும் எழுப்பப்படும் அதே கேள்விதான்... மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் வளர்ச்சி நமக்குத் தேவையா?

- மு.இராகவன், க.பூபாலன்
படங்கள்: க.சதீஷ்குமார்