
டாக்டர் வெ.ஜீவானந்தம்
‘மக்களுக்கு எல்லாம் அரசு தரும்; எல்லாவற்றையும் இலவசமாகத் தரும்’ என்ற லட்சிய வேட்கை கொண்டிருந்த சோவியத்தும் சீனாவும் முடிந்து போய்விட்டன. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியா, ‘சர்வே ஜனா சுகினோ பவந்து’ என்பவையெல்லாம் வெறும் ஆசைப் பிரார்த்தனைகளாகிப் போய்விட்டன. ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்ற கவிக்கனவுகள் பொய்யாகி, ‘பணமே பிரதானம், அனைத்துக்கும் ஆசைப்படு’ என அலங்காரக் காவி கட்டி நவீன கார்ப்பரேட் குருக்கள் போதனை செய்யும் காலம் வந்துவிட்டது.
மனித ஜீவிதத்தின் அடித்தளங்களான கல்வி, மருத்துவம் என யாவும் பறிக்கப்பட்டுவரும் காலத்தில் ‘இங்கு வாழ்தல் சாத்தியமா’ என்ற ஓலம்தான் கேட்கிறது. இனி வாழ என்ன செய்வது? குழந்தை காலத்தில் படித்த புறாக் கதைதான் தீர்வு! சுயநலப் பேராசை வலையில் சிக்கிவிட்டோம். வலிமையற்ற புறாக்கள் கூடி, வலையுடன் பறந்து சென்று தப்புவதைத் தவிர வேறு வழியில்லை. ‘கூட்டுறவு’ என்பதைக்கூட பேராசையும் ஊழலும் கெட்டவார்த்தையாக்கி விட்டது. அதிகார வர்க்கத் தலையீடற்ற, மக்களுக்காக, மக்களேகூடி உருவாக்கும் புதிய கூட்டுறவுக்குத் திட்டமிட வேண்டும்.

மருத்துவம் மனிதகுல வாழ்வுக்கு அடிப்படை... தவிர்க்கவே முடியாத தேவை. ‘உணவே மருந்து’ என்ற காலம் போய், மருந்தே உணவாகிப் போன வலைக்குள் நுழைந்துவிட்டோம். இனி சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, அக்குபஞ்சர், வர்மம் என எதுவும் ‘ஆயுசு’ தராது என்ற விஷச் சுழலுக்குள் சிக்கிக்கொண்டோம். வாழ்க்கைமுறையில் மாற்றம் வராத வரை, உடனடித் தீர்வுக்கு அலோபதியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இதுதான் யதார்த்தம்.
ஒரு காலத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, நன்கு படிக்கும் இளைஞன், மருத்துவம் பயின்று, தனது மக்களுக்கு மலிவான மருத்துவ சிகிச்சைத் தந்த சமூகப் பொறுப்புணர்வு, இன்று அடித்தட்டிலிருந்து படித்து மேலே வருபவர்களுக்கும் இல்லாமல் போய்விட்டது. எல்லாம் படித்து முடித்தவுடன் எங்கோ இருக்கும், யாருக்கோ சேவை செய்து, கோடிகளைச் சேர்த்து, ‘கோடி போடவும்’ ஆளின்றி ஃப்ரீசரில் கிடக்க ஓடுகின்றனர். இதனால் கோடானு கோடி ஏழை, நடுத்தர மக்களுக்கான கல்வியும் மருத்துவமும் மறுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், கார்ப்பரேட் முதலாளிகளின் ஏகபோகப் பெருவணிகமாக மாற்றப்பட்டுவிட்டது. மருந்துகள், தனியார் பெருநிறுவனங்களின் லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றப்பட்டுவிட்டது. நியாயமான கட்டணத்தில் நடுத்தர வர்க்கத்துக்குச் சிகிச்சைகளை வழங்கும் சிறிய மருத்துவமனைகளின் கழுத்தை, நடைமுறைக்குச் சாத்தியமற்ற சட்டங்கள் இறுக்குகின்றன.
ஏழைகளுக்கு அரைகுறையாகவேனும் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகள் உள்ளன. பணக்காரர்கள் எந்த விலை கொடுத்தும் மருத்துவத்தைப் பெறுவதற்கு கார்ப்பரேட் மருத்துவமனைகள் உள்ளன. இடைப்பட்ட நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைக்கும் போக முடியாமல், கார்ப்பரேட்களிடம் போய் காசு கொட்டவும் முடியாமல், விழிபிதுங்கிச் சாகிறார்கள். இந்தப் பெருவாரியான மக்களுக்கு எளிய, ஏற்புடைய கட்டணத்தில், வெளிப்படையான மருத்துவம் கிடைக்கச் செய்வது அவசரமான தேவையாகும்.
‘இதை எப்படிச் செய்வது... யார் செய்வது?’ என்பதே கேள்வி. அவரவர் பசிக்கு அவரவர்தான் சாப்பிட்டாக வேண்டும். பெருகிவரும் மிடில் கிளாஸ், தனக்கான மருத்துவத் தேவைகளைத் தானே உருவாக்கிக்கொள்ள முன்வர வேண்டும். வணிகம் சார்ந்த இளைஞர்கள், ஆசிரியர்கள், ஐ.டி வல்லுநர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்கள் சிலர் கூடி, அடிப்படை மருத்துவத் தேவைகளை ஈடுசெய்யும் நடுத்தர மருத்துவமனைகளை உருவாக்க 5 முதல் 15 கோடி ரூபாய் தேவைப்படும். இவர்கள் இதை இரண்டாண்டு காலத்தில் சிறிது சிறிதாகத் தந்து உருவாக்கிவிட முடியும். இது ஏதோ கற்பனையல்ல. இப்படி ஒன்றல்ல... பத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை, பலதுறை மருத்துவமனைகளை, புற்றுநோய் மருத்துவமனைகளை உருவாக்கிய அனுபவத்தின் அடிப்படையில் இதைச் செய்ய முடியுமென உறுதியுடன் என்னால் கூற முடிகிறது.
சமூக அக்கறையுள்ள, ஓரளவு வசதியுள்ள 100 பேர் இதற்காக இணைய வேண்டும். இந்த மருத்துவமனைகளில், நியாயமான கட்டணத்தில் தமது சேவைகளை வழங்க, பலதுறைகள் சார்ந்த மருத்துவர்கள் முன்வர வேண்டும். இதை வெறுமனே சேவையாகச் செய்யுமாறு நான் பரிந்துரைக்கவில்லை. இதில் பணமாகப் பங்களிப்புத் தருவோர், தமது பங்களிப்புக்கான நியாயமான வருமானத்தைத் தொடர்ந்து பெற முடியும். நிர்வாகத்தில் பதவி, பங்கு, தம் வாரிசுகளுக்கும் பெருமைமிக்க சமூக கௌரவம், வருமானத்தைத் தந்து செல்ல முடியும். மருத்துவர்களுக்கும் வருமானத்தோடு மரியாதையும் மன நிறைவும் தரும் சேவை இது. இதில் மக்கள் வெளிப்படையான, நம்பிக்கைக்குரிய மருத்துவச் சேவையை ஏற்புடைய கட்டணத்தில் பெற முடியும்.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்கூட இப்பணிக்குத் தன்னலம் மறந்து உதவ முன்வந்தால், இத்தகைய முயற்சிகள் நாடு முழுவதும் வெற்றி பெற்று, மக்களுக்கும் பெரும் தொண்டாற்ற முடியும். அரசு தனது இடத்தை இலவசமாக, நீண்ட கால ஒப்பந்தத்தில் வழங்கி உதவலாம். வட்டியில்லாக் கடன் அல்லது குறைந்த வட்டிக் கடன் தந்து உதவலாம். இதற்கு உதவுவதில் அரசுக்கும் ஆதாயம் இருக்கிறது. இப்படிப்பட்ட மருத்துவமனைகள், மருத்துவத்துக்கான அரசின் நிதிச்சுமையைக் குறைக்கும். அரசு மருத்துவமனைகளின் நெரிசலையும் தவிர்க்கலாம்.
அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அக்கறை இருந்தால், இதற்கு உதவி செய்து இதை ஒரு சமூக இயக்கமாகவே மாற்ற முடியும். கேரளாவில் இப்படிப்பட்ட கூட்டுறவு மருத்துவமனைகளை அரசியல் கட்சிகளே கூட நடத்துகின்றன. அக்கறையுள்ள மனிதர்களின் கூட்டு முயற்சி மட்டுமே இதைச் சாதிக்கும்.
மக்களுக்காக, மக்களின் பங்களிப்புடன் செய்யப்படும் இதுபோன்ற முயற்சிகளின் வெற்றி, கல்வி போன்ற பிற துறைகளிலும் விரிவடையுமானால், நம்மால் மாற்றுச் சமூகத்தை உருவாக்கிவிட முடியும். ‘மாற்றம்’ இன்றைய உலகின் மந்திரச் சொல். தன்னலமும் சுரண்டல் வெறியும், லாப நோக்கமும் கொண்ட கார்ப்பரேட் கலாசாரத்துக்கு மாற்றான மக்கள்நேய மருத்துவத்தை உருவாக்க முயல்வோம். இருளைப் பழிப்பதைவிட, ஒரு சிறுவிளக்கேற்றுவது நலம் தருமே!
(நலம் பெறுவோம்)