Published:Updated:

வீணான திட்டங்கள்... விரயமான நிதி! - தோலுரித்துக் காட்டிய சி.ஏ.ஜி அறிக்கை

வீணான திட்டங்கள்... விரயமான நிதி! - தோலுரித்துக் காட்டிய  சி.ஏ.ஜி அறிக்கை
பிரீமியம் ஸ்டோரி
News
வீணான திட்டங்கள்... விரயமான நிதி! - தோலுரித்துக் காட்டிய சி.ஏ.ஜி அறிக்கை

வீணான திட்டங்கள்... விரயமான நிதி! - தோலுரித்துக் காட்டிய சி.ஏ.ஜி அறிக்கை

திட்டங்கள் தீட்டுவதில் தமிழக அரசு காட்டும் முனைப்பு, அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இல்லை. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கி, பல்வேறு துறைகள் வரை நஷ்டத்தைச் சந்தித்திருப்பதைத் தோலுரித்துக் காட்டியுள்ளது, தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை. இதன் சில பகுதிகள், படிக்கும்போதே நம்மைப் பதற வைக்கின்றன.

அதலபாதாளத்தில் போக்குவரத்துக் கழகங்கள்!

2015-16-ம் நிதியாண்டில், போக்குவரத்துத் துறையின் நிலை அதலபாதாளத்தில் இருந்துள்ளது. குறிப்பாக, இந்த ஓர் ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.2,602 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இது, முந்தைய நிதியாண்டை விட ரூ.300 கோடி கூடுதல் நஷ்டம். அதே நேரம், பொதுத்துறை நிறுவனங்களிலேயே அதிகமான பணியாளர்களைக் கொண்ட நிறுவனமாக போக்குவரத்துக் கழகமே உள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை மட்டும் ரூ.435 கோடி பாக்கி உள்ளது. இதில் ரூ.207 கோடி, போக்குவரத்துக் கழகங்களே ஒப்புக்கொண்ட இழப்பீட்டுத் தொகையாகும். கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகம் விளம்பர ஒப்பந்தத்தைச் சரிவரக் கையாளாமல் போனதால், ரூ. 9.58 கோடி வருவாயை இழக்க நேரிட்டது. அதேபோல், தனியார் வாகனங்களுக்குத் தவறான அனுமதி வழங்கியதால் ரூ. 6.59 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

திருமண நிதி உதவியிலும் தில்லுமுல்லு!

திருமண நிதி உதவித்திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள். ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாததாலும், கணினியில் ஏற்பட்ட பிழையினாலும் இந்தத் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் நடந்துள்ளன. 48 விண்ணப்பதாரர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பணம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே பயனாளி, திருமண உதவிக்காக இரண்டு விண்ணப்பங்கள் அளித்து, இரண்டு விண்ணப்பங்களுக்கும் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு விண்ணப்பத்துக்கு நான்கு கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திருமண உதவித்தொகை வாங்க அனைத்துத் தகுதிகளும் இருந்து, கணினி பிழையால் கடந்த ஓர் ஆண்டில் 2,096 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வீணான திட்டங்கள்... விரயமான நிதி! - தோலுரித்துக் காட்டிய  சி.ஏ.ஜி அறிக்கை

ஒரே நபர்... இரண்டு சாதிச் சான்றிதழ்கள்!

ஒரே நபருக்கு இரண்டு வெவ்வேறு சாதிச் சான்றிதழ்கள் வருவாய்த் துறையால் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, பல்வேறு சேவைகளுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் தாமதம் இருந்ததால், முழுமையான அளவில் அரசின் சேவைகள் மக்களுக்குச் சேரவில்லை. தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் பலனடைந்துள்ளார்கள். தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்குப் பலன்கள் மறுக்கப்பட்டுள்ளன. அதே போல, இலவச வேஷ்டி சேலை வழங்கியதில் ரூ.43.94 கோடி கூடுதலாக செலவாகியுள்ளது.

கிறுகிறுக்க வைக்கும் கிடங்கு வாடகை!

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகம் வழங்கப்படுகிறது. மாநிலப் பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதால், அதற்கு முன்பே இவை அச்சடிக்கப்பட்டு கிடங்குகளில் தேக்கப்பட்டன. இவ்வாறு கிடங்குகளில் வைக்கப்பட்ட பாடப் புத்தகங்களின் எடையளவு 12,000 மெட்ரிக் டன். இவை பயன்படாது என்பதால், மறுசுழற்சிக்காவது அனுப்பியிருக்க வேண்டும். அதையும்  அனுப்பாமல் கிடங்குகளில் தேக்கி வைத்திருந்ததனால் 2012-16 வரையிலான காலகட்டத்தில் மட்டும் கிடங்கு வாடகையாக ரூ. 13.37 கோடி ரூபாய் பணத்தை அரசு விரயமாக்கியுள்ளது.

கிரிக்கெட் சங்க பாக்கி ரூ.2,081 கோடி!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை கிரிக்கெட் மன்றத்துக்காக தமிழ்நாடு அரசு 7,48,453 சதுர அடி நிலத்தைக் குத்தகைக்கு விட்டுள்ளது. 1995-ம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்குக் குத்தகை உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. முதல் ஐந்து ஆண்டுகள் மட்டுமே குத்தகை வாடகையை அரசு பெற்றுள்ளது. அதன் பிறகான பதினைந்து ஆண்டுகளுக்குக் குத்தகை வாடகையை நிர்ணயிக்கவும் இல்லை, அந்தக் குத்தகைத் தொகையை வருவாய்த் துறை வசூலிக்கவும் இல்லை. 2000-16 காலகட்டத்துக்கான குத்தகை வாடகை ரூ. 2,081 கோடி, இதுவரை வசூலிக்கப்படவில்லை. 2015-ம் ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வைத்த கோரிக்கை மீது அரசு இன்னும் முடிவெடுக்க முடியாமல் உள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறையும் தப்பவில்லை!

ஆதிதிராவிட மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக, மாநிலங்களின் சிறப்புத் திட்டங்களைத் தவிர, மத்திய அரசும் நிதியுதவி செய்கிறது. 2009-15 காலகட்டத்தில் ஆதிதிராவிட நலத் துறையின் நிர்வாகச் செலவுகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.16.98 கோடி. ஆனால், ரூ.52.55 கோடியை அரசு செலவு செய்துள்ளது. இப்படி, ஆதிதிராவிட மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு என்று வந்த தொகையில் ரூ.35.57 கோடியை நிர்வாகச் செலவுக்கு எடுத்துக்கொண்டது அரசு. 2013-14 நிதியாண்டிலிருந்து 15,748 ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கவேண்டிய கல்வி உதவித்தொகையை ‘கணக்கு முடிக்கப்பட்டது... அப்படிப்பட்ட கணக்கு இல்லை... கணக்கு விவரம் பொருந்தவில்லை’ என்பது போன்ற காரணங்களைச் சொல்லி வழங்கவே இல்லை. இதையும் தணிக்கைக் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நிர்க்கதியில் நிர்பயா நிதி!

ஆயிரம் கோடி ரூபாய் நிர்பயா தொகுப்பு நிதியுடன் ‘நாட்டின் சாலைப் போக்குவரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்தல்’ திட்டம், மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம், பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களில், போக்குவரத்தை ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பதற்குக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும். சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு நகரங்கள், நிர்பயா நிதியைப் பெற தகுதிபெறுகின்றன. இந்தத் திட்டத்தில் இணைவதற்கான கருத்துருவை தமிழக அரசு, மத்திய அரசுக்கு அளிக்காமல் கால தாமதம் செய்ததால், தமிழக அரசு இதைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை வெள்ளமும் வடிகால் திட்டமும்!

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ), கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்குத் தமிழக அரசிடம் ரூ. 9,228 கோடி கோரியது. ஆனால், தமிழக அரசு ரூ. 2,500 கோடி மட்டுமே ஒதுக்கியதால், திட்டங்களை விரிவுபடுத்த முடியாத நிலை சி.எம்.டி.ஏ-வுக்கு ஏற்பட்டது. இந்தக் குழுமத்தின் கீழ் எவ்வித புவியியல், நீரியல் ஆய்வும் மேற்கொள்ளப்படாமல், மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டது. அதில், ரூ.54.33 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 51 வடிகால் வாய்க்கால்கள் மறுகட்டுமானம் செய்யவேண்டிய நிலையில் உள்ளன. மேலும், வளைந்து கொடுக்கும் தன்மையுடைய குழாய்களைப் பயன்படுத்தாமல், வார்ப்புக் குழாய்களைப் பயன்படுத்தியதால், ரூ. 35.97 கோடி தவிர்த்திருக்கக்கூடிய செலவும் ஏற்பட்டுள்ளது.

விரயமான காசோலைகள்!

சம்பளம் மற்றும் கணக்கு விவர அலுவலகங்களில் நடந்த ஆய்வில், காலாவதியான 56,593 காசோலைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் காசோலைகளின் மதிப்பு ரூ. 69.94 கோடி. 29 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் வழங்காமல், மாநில அரசும் பயன்படுத்தாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.

ஜொலிக்கும் நிறுவனங்கள்!

தமிழகத்தில் இயங்கும் 68 பொதுத்துறை நிறுவனங்களில், 41 நிறுவனங்கள் ரூ.811.27 கோடி லாபம் அடைந்துள்ளன. 21 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.15,684.69 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனங்களில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் ரூ.253.93 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மின்விசை நிதி அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், டைடல் பார்க், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் போன்ற நிறுவனங்களும் லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வீணான திட்டங்கள்... விரயமான நிதி! - தோலுரித்துக் காட்டிய  சி.ஏ.ஜி அறிக்கை

ஷாக் அடிக்கும் மின்சாரம்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், ரூ.12,756.59 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களிலே அதிகளவு நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனமாக இது இருந்துள்ளது. நீர் மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதைச் சரி செய்யாமல், காலதாமதம் செய்துள்ளனர். அதனால், தனியாரிடம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ததினால், கூடுதலாக ரூ.44.74 கோடி செலவாகியுள்ளது.

சுற்றுச்சூழலும் சிக்கல்களும்!

அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரானது, நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. வட சென்னை அனல் மின் நிலையம், தூத்துக்குடி அனல் மின் நிலையம் போன்றவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சுத்திகரிக்கப்படாமலே நேராகக் கடலுக்குள் செலுத்தப்படுகிறது. மேட்டூர் அனல் மின் நிலையத்திலிருந்து சுத்தம் செய்யப்படாத 64,459 கனமீட்டர் நீர், காவிரி ஆற்றுக்குள் வெளியேற்றப்பட்டுள்ளது. சாம்பல் கலந்த நீரைச் சுத்திகரிக்கும் இயந்திரம் செயல்படாமல் இருந்ததால், எண்ணூர் அனல் மின் நிலையத்திலிருந்தும் கழிவுநீர், கடலுக்குள் கலந்துள்ளது.

அனல் மின் நிலையங்களின் உலை சாம்பல் மூலம் ரூ. 625.93 கோடி வருமானம் கிடைத்திருந்தாலும், அதில் ரூ. 61.91 கோடி மட்டுமே சுற்றுச்சூழல் மேலாண்மைக்குச் செலவிடப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் எந்த வழிமுறைகளையும் மின் உற்பத்தி நிலையங்கள் பயன்படுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு சோறு பதமாக சுட்டிக் காட்டப்படும் இந்த முறைகேடுகள், ‘இது செயல்படாத அரசு’ என்று குட்டிக் காட்டுகிறது.

- அ.சையது அபுதாஹிர்
படம்: ஜெ.வேங்கடராஜ்

ரூ 4,381 கோடி வரி இழப்பு!

• வணிகவரி, ஆயத்தீர்வை, வாகனங்கள் மீதான வரி, முத்திரைத் தீர்வை மற்றும் பத்திரப்பதிவுத் துறை, மின் வரி போன்ற முக்கியத் துறைகளில் ஆய்வுமேற்கொண்டதில், குறைவான வரிவிதிப்பினால் ரூ. 4,381 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

• மதுரையில் மண்டல தடய அறிவியல் ஆய்வகத்தில் டி.என்.ஏ பிரிவு, 2011-ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்பப் பணியாளர்கள், குளிர்பதன வசதிகள் இருப்பதை உறுதிசெய்யாமலே, இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த நிறுவனம் முழுமையான அளவில் செயல்படவில்லை.

• மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ், மாவட்ட மூப்பியல் மருத்துவ நிலையங்கள் அமைக்க ரூ. 7.96 ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தமிழக அரசின் காலதாமத்தினால் அவை அமைக்கப்படவில்லை.

• சாலைப் பணிகளில் மதிப்பீட்டு வழிமுறைகளை தமிழக அரசு பின்பற்றாமல் போனதால், மத்திய அரசின் உதவியைப் பெறமுடியவில்லை. இதனால், தரமான சாலை வசதிகளை ஏற்படுத்தித்தர முடியவில்லை.

• போதிய கட்டட வசதிகள் ஏற்படுத்தாமல் போனதால், தமிழக அரசுப் பள்ளிகள் பலவற்றில் திறந்தவெளியில்தான் சத்துணவு வழங்கப்படுகிறது.