Published:Updated:

‘‘நண்பர்களை பரிசளிக்கும் புத்தகங்கள்!’’ - ந.முருகேசபாண்டியன்

‘‘நண்பர்களை பரிசளிக்கும் புத்தகங்கள்!’’ - ந.முருகேசபாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
‘‘நண்பர்களை பரிசளிக்கும் புத்தகங்கள்!’’ - ந.முருகேசபாண்டியன்

சந்திப்பு: வரவனை செந்தில் - படங்கள் : சதிஷ்குமார்

‘‘நண்பர்களை பரிசளிக்கும் புத்தகங்கள்!’’ - ந.முருகேசபாண்டியன்

சந்திப்பு: வரவனை செந்தில் - படங்கள் : சதிஷ்குமார்

Published:Updated:
‘‘நண்பர்களை பரிசளிக்கும் புத்தகங்கள்!’’ - ந.முருகேசபாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
‘‘நண்பர்களை பரிசளிக்கும் புத்தகங்கள்!’’ - ந.முருகேசபாண்டியன்

``இரண்டாம் வகுப்புப் படிக்கும்போதே நாளிதழ்களைப் பார்க்கும் வழக்கம் வந்துவிட்டது. அதில் வரும் படக்கதைகள், நகைச்சுவைப் பகுதிகளைப் படித்துப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டேன். கிராமத்துப் பள்ளியில் படித்தாலும் வாசிக்கும் பழக்கம் பால்யத்திலேயே வந்துவிட்டது. நான்காம் வகுப்பு படிக்கும்போது நூலகத்தில் சிறுவர் இதழ்களைப் புரட்டிப்பார்க்கத் தொடங்கினேன். ஒருநாள் நூலகரிடம் சென்று, `உள்ளே இருக்கும் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துக்கொண்டுபோய் வாசிக்கலாமா?’ எனக் கேட்டேன். என் வயதைக் கேட்டார் நூலகர். `பதினொன்று’ என்றேன். `பெரியவர்களுக்கு மட்டும்தான் தர முடியும். வீட்டிலிருந்து பெரியவர்களை அழைத்து வா’ என்றார். என் அண்ணனை அழைத்து வந்தேன். அவரின் பெயரில் அனுமதிச் சீட்டு கொடுத்தார். அன்று நூலகத்துக்குள் நுழைந்தது, இன்றுவரை அங்குதான் இருக்கிறேன்” தான் வாசிக்கத் தொடங்கிய காலத்தை ஆர்வத்துடன் நினைவுகூர்ந்தார் ந. முருகேச பாண்டியன்.

‘‘நண்பர்களை பரிசளிக்கும் புத்தகங்கள்!’’ - ந.முருகேசபாண்டியன்

``நான் வாசித்த முதல் புத்தகம் காந்தியார் எழுதிய `சத்திய சோதனை’. அதன் பிறகு, தமிழ்வாணன் அவர்களின் நாவல்கள். `சத்திய சோதனை’ நூலைப் படித்தபோது காந்தி குறித்த பிம்பங்கள் நொறுங்கி, என் மனதுக்கு மிக நெருக்கமானவராகக் கிடைத்தார். அதே காலகட்டத்தில் சிரஞ்சீவி, பிடி.சாமி போன்றோர் எழுதிய திகில் கதைகள், மர்மக் கதைகள் போன்றவற்றில் ஆர்வம் ஏற்பட, அவற்றைத் தேடித் தேடிப் படித்தேன். பிறகு `பொன்னியின் செல்வன்’. அது புனைவு என உணரவே, பல ஆண்டுகள் ஆகின. அதைத் தொடர்ந்து  சாண்டில்யன், ஜெயகாந்தன், ஆர்.சண்முகசுந்தரம் போன்றோரின் புத்தகங்கள் அறிமுகமாகின. கல்லூரிக்குச் சென்ற சில நாள்களிலேயே இடதுசாரி எழுத்துகள் அறிமுகம். கார்க்கியின் `தாய்’ நாவலைப் படித்தபிறகு சிறிதாக ஒரு திருப்புமுனை கிடைத்தது.  ஜார்ஜ் பொலிட்சரின் `மார்க்ஸிய மெய்ஞானம்’, ராகுல சாங்கிருத்தியாயனின் `வால்காவிலிருந்து கங்கை வரை’ ஆகிய புத்தகங்களைப் படித்தேன். இந்த மூன்று புத்தகங்களும் எனக்குள் ஒரு சமூகப் பொறுப்பை விதைத்தன. அந்தக் கல்லூரிக் காலத்திலேயே `அஃக்’, `கணையாழி’ போன்ற சிறுபத்திரிகைகளும் அறிமுகமாகிவிட்டன. ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னைச் செதுக்கும் வேலையைப் புத்தகங்கள் சிறப்பாகச் செய்தன. பள்ளிப் பருவத்தில் தொடங்கி இன்றுவரை புத்தகங்கள் என்னுடன் பேசியபடியே இருக்கின்றன. `முருகேசபாண்டியன்’ என்கிற அகத்தின் உருவாக்கத்தில் புத்தகங்களின் பங்கே அதிகம்.

16 வயதில் நியூ செஞ்சுரி புத்தகக் கடைக்குள் நுழைந்தபோது எழுந்த மகிழ்ச்சி, இன்றைக்கும் நினைவிருக்கிறது. அங்குதான் அன்டன் செகாவ், டால்ஸ்டாய், மாக்ஸிம் கார்க்கி போன்றோர் அன்றைய என் வயதில் வாங்கும் விலைக்குக் கிடைத்தார்கள்.  இரண்டு முறை புத்தகம் வாங்கிவிட்டாலே அந்த வாடிக்கையாளருக்கு என்ன மாதிரியான புத்தகம் பிடிக்கும் என நாடி பிடித்துவிடும் திறமைசாலிகள் பழைய புத்தகக் கடைக்காரர்கள். அன்றைக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை ஒட்டி நிறைய புத்தகக் கடைகள் இருக்கும். நான் போனாலே எனக்கான புத்தகங்களை கடைக்காரர் எடுத்துவைத்துவிடுவார். அதுபோலவே திருச்சி ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள ராக்கின்ஸ் தெருவிலும் மிகச் சிறந்த புத்தகங்களைக்கொண்ட பழைய புத்தகக் கடைகள் இருந்தன. சென்னைக்குப் போவதென்றாலும் சரி, வருவதென்றாலும் சரி, திருச்சியில் இறங்கி ராக்கின்ஸ் தெருவில் ஒரு நடை சென்றுவிட்டுத் திரும்புவது வழக்கம். சேமிப்பு என்கிற நோக்கத்தைத் தாண்டி, நண்பர்களுடன் பரிமாறிக் கொள்ளவும் வாங்குவது உண்டு. இதையெல்லாம் தாண்டி வாசிப்பு என்பது மிகவும் தேவையாக இருந்தது. அப்போது எந்த எழுத்தாளரைச் சந்திக்கப்போவதாக இருந்தாலும் அவர்கள் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் முதலில் கேட்பது `என்ன வாசித்தீர்கள்?’ என்றுதான்.  `இன்ன புத்தகம் வாசித்தேன்’ என்று தெரிவித்தால், அது குறித்த கேள்விகளை அடுத்தடுத்து கேட்பார்கள். ஆகவே நாம் குறிப்பிடும் புத்தகத்தை உண்மையிலேயே கவனத்தோடு வாசித்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது.

புத்தகங்கள், அற்புதமான நண்பர்களைப் பரிசளிக்கும். 1978-ம் ஆண்டு வண்ணதாசன் எழுதிய `கலைக்க முடியாத ஒப்பனைகள்’  சிறுகதைத் தொகுப்பைப் படித்துவிட்டு திருநெல்வேலிக்குப் போய் அவரைச் சந்தித்தேன். அதேபோல் கலாப்ரியாவின் `சுயம்வரம்’ குறுநாவலைப் படித்துவிட்டு இடைக்கால் போய்ப் பார்த்தேன். பிறகு, கோவில்பட்டியில் தேவதச்சன், அப்பாஸ், கௌரி சங்கர் எனப் படைப்பாளிகளைத் தேடித் தேடிப் போய்ப் பார்த்தேன். நான் மட்டுமல்ல, எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி போன்றோரும் படித்துவிட்டு எழுத்தாளர்களைத் தேடிப்போய்ப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்களுடனே தங்கி, பேசி வந்த போக்கு இன்று குறைந்துவிட்டது. இன்று நான்காவது தலைமுறை எழுத்தாளர்கள்வரை நட்புடன் இருக்க முடிகிறது எனச் சொன்னால், அதற்குக் காரணம் புத்தகங்கள்தான்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘நண்பர்களை பரிசளிக்கும் புத்தகங்கள்!’’ - ந.முருகேசபாண்டியன்

``தான் எவ்வளவு வேகமாகப் படிக்கப்பட வேண்டும் என ஒரு புத்தகம்தான் தீர்மானிக்கிறது. சாண்டில்யன், கல்கி போன்றோரின் எழுத்துகள் என்றால், ஒரு மணி நேரத்தில் 110 பக்கங்கள் படித்துவிடுவேன். மற்ற தீவிர இலக்கியப் புத்தகங்கள் என்றால், குறைந்தது 80 பக்கங்கள் படித்துவிடுவேன். இந்தப் பழக்கம் எப்படி ஏற்பட்டது என்றால், ஒருமுறை டால்ஸ்டாயின் `அன்னா கரீனினா’ நாவலின் தமிழ்ப் பதிப்பு சென்னையில் ஒருவரிடம் இருப்பதாகக் கேள்விப்பட்டு வாங்கச் சென்றேன். அவர் `இது விற்பனைக்குக் கிடையாது. இரண்டு நாள்களில் படித்துவிட்டுத் தர வேண்டும்’ என்றார். இத்தனைக்கும் அவர் நண்பர்தான். 900 பக்கங்கள்கொண்ட நாவல் அது.  மாலை 8 மணிக்கு வாசிக்க ஆரம்பித்தேன். காலையில் 6 மணிக்கு வாசித்து முடித்துவிட்டேன். அவர் நான் வாசிக்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டதாக நினைத்திருப்பார்.

நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் மனச்சிக்கலிலிருந்து விடுதலை கொடுக்கும் ஆற்றல், புத்தகங்களுக்கு உண்டு என்றே முழுமையாக நம்புகிறேன். மி. யூ. லேர்மன்தவின் `நம் காலத்து நாயகன்’, எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் `போரே நீ போ’

‘‘நண்பர்களை பரிசளிக்கும் புத்தகங்கள்!’’ - ந.முருகேசபாண்டியன்


பா.சிங்காரத்தின் `புயலிலே ஒரு தோணி’ இந்த மூன்று புத்தகங்களையும் பத்து முறைக்குமேல் படித்திருப்பேன். மூன்றுமே சாகசம் சார்ந்த நாவல்கள். எப்போதும் என் சோர்வைப் போக்கும் புத்தகங்கள் இவைதான்.

நான் தொழில்ரீதியாகவும் நூலகராக இருந்ததால், அரிய புத்தகங்களைக் கடந்துவரும் வாய்ப்புகள் நிறைய கிடைத்தன. ஆனால், நம் காலத்துக்குப் பிறகு இவை கண்டுகொள்ளாமல் போய்விடும் வாய்ப்பு அதிகம் என்பதால், `தனியுடைமை ஆக்காமல் பொதுவாக நூலகத்திலிருப்பதே அனைவருக்கும் பயன்’ என நினைப்பேன். என் புத்தகச் சேகரிப்பில் எனக்குப் பிடித்த புத்தகங்கள் மட்டுமே உண்டு. அப்படி இருப்பவற்றில் அரியதாகவும் சிறப்பானதாகவும் நான் கருதுவது என்னிடம் இருக்கும் பாரதிதாசன் நாற்பதுகளில் நடத்திய `குயில்’ பத்திரிகையின் முதல் பிரதியைத்தான்.”

``என் மகன் பத்தாவது தேர்வு எழுதிக்கொண்டிருந்தார். கடைசித் தேர்வு. நான் அழைத்து வருவதற்காகச் சென்றிருந்தேன். தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் ஒன்றுசேர்ந்தாற்போல் தங்கள் புத்தகங்களைக் கிழித்துக் காற்றில் பறக்கவிட்டபடி வீட்டுக்குச் சென்றனர். அந்தக் காட்சியைக் கண்டு திகைத்துப்போய் நின்றேன். மாணவர்கள் கிழித்து எறிந்து ஏதோ தாங்கள் விடுதலை பெற்றதைப் போன்ற உணர்வை வெளிப்படுத்தும் அளவுக்குப் புத்தகங்கள் மனரீதியாக அவர்களை அழுத்தியுள்ளன. புத்தகங்கள் என்பது, சிறகுகள் அல்லவா. சிறகுகள் சுமை அல்லவே. ஆனால், நம் கல்விச்சூழல் அவர்களை அப்படி உணரவைப்பதாகவே நினைக்கிறேன். என்னதான் ‘கின்டில்’ உள்ளிட்ட நவீன வாசிப்பிற்கான கருவிகள், முறைகள் வந்துவிட்டாலும், தமக்கே உரிய வாசனைகளுடன் திறந்துகொள்ளும் காகிதத்தாலான புத்தகங்களை வாசிப்பது அலாதியான அனுபவம்தான். அது, இந்த உலகம் உய்யும்வரை தொடர வேண்டும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism