நிழற்படகு
சாளரங்களின் குறுக்குத் தடுப்புகளைக் கடந்து
அனுமதியற்று உள் நுழைந்த
சூரிய ஒளி அலையில்
மிதக்கின்றது ஒரு தொட்டிலின் நிழல்.
மின்மினிக் கண்களை
மூடிக்கொண்டிருக்கும் மகவு
புடவைத் தொட்டிலினுள்
துடுப்புக் கால்களை அசைக்க
அலைகிறது நிழற்படகு.
அடுக்களை புகை மூட்டத்தில்
அலைகிற வளையல் கை
உப்பிற்கும் மிளகாய்க்கும்
ஓடுகின்ற வேளையில்
வீல்லென அழுகின்ற பிள்ளைக்கு
ஓடி வந்து “ப்பே...ப்பேபே...” யென
தாலாட்டுகிறாள்.
ஊமைத் தாயின் குரல் கேட்டு
முகம் மலர்ந்து சிரிக்கின்ற
அக் குழந்தையின் செவிக்குள்
“ஆராரோ ஆரிரரோ’’
என்றே கேட்கிறது.
- கோ

சாயல்
மிதமிஞ்சிய தனலில் தகிக்கும் வன்மம்
குதிரும் கணமொன்றிற்காக
நாவால் மீசையை நீவியபடியே
ஒரு கள்ளப்பூனையென காத்துக்கிடக்கிறது.
அதன் கொடும் பற்கள்
துரோகக் கற்களில் முன்பே கூர்தீட்டப்பட்டு
சிக்கும் இரையைக் கிழிக்க
தயார்நிலையில் இருக்கிறது.
இதழ்க்கடையில் மெல்லியதாய் விரியும்
போலிப் புன்னகையை
நீங்கள் நம்பிவிட்டதை நினைந்த பொழுதே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உவகையில் உடலைச் சற்றே
ஓசையின்றி சிலிர்த்துக்கொள்கிறது.
இயல்பாய் கவிழ்ந்த இருளை
அது தனக்குச் சாதகமாக்கியதன் பொருட்டு
வருத்தம்தான் இரவுக்கு.
ஆனால், அப்பூனையோ
எதன்பொருட்டும் கவலைகொள்ள நேரமின்றி
கருமமே கண்ணாயிருக்கிறது.
கனல் ஒளிரும் விழிகள்தான்
காட்டிக்கொடுக்கின்றன என
கைவசம் புகாரொன்றையும் வைத்திருக்கும்
அப்பூனையைக் கண்டு
நமக்கென்ன அச்சம்..?
ஒரு சாயலில் அது
என்னையோ உங்களையோ ஒத்திருக்கிறது எனும்போது!
- பாப்பனப்பட்டு வ.முருகன்

கீப் ரைட்
நெடுஞ்சாலை அகலப்படுத்த
வெட்டித் தீர்த்த மரங்களின்
மிச்சம் மீதி இருந்த வேர்கள்
அனிச்சையாய் இன்னும்
நீர் உறிஞ்சுகின்றன
மரத்தின் பசியாற்றும் தாய்மையொடு
புசிக்க மரமற்றது உணராமல்
ஊட்டாத முலைப்பாலாக
உறிஞ்சிய நீர் மண்ணில் கசிய
மண்ணுக்குள் ஈரம் அது
மனிதருக்கில்லா ஈரம்
நெகிழ்ந்து வழிவிட
நெடுஞ்சாலையில் கொதிக்கும் தார்
கொல் கருவியாய் இறங்கி
கருணைக் கொலை நடந்தேறியது
மண் மேல் நடந்த மரப் படுகொலைகள்
மரவேர் அறியாதே மடிந்தடங்கியது
அடங்கிய அச்சிறுவேர்கள்
நெடுஞ்சாலையின் இடது பாகத்தில்தான்
சாந்தி அடைந்து கொண்டிருக்கின்றன
ஆகவே நெடுஞ்சாலையில் வேகமாக பயணிப்பதென்றால்
தயவு செய்து வலது பாகத்திலேயே பயணிக்கவும்.
- நாகராஜ சுப்ரமணி