Published:Updated:

அவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன்

அவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன்
பிரீமியம் ஸ்டோரி
அவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன்

ஓவியங்கள் : செந்தில்

அவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன்

ஓவியங்கள் : செந்தில்

Published:Updated:
அவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன்
பிரீமியம் ஸ்டோரி
அவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன்

சிலம்பு ஊருக்குத் திரும்பியபோது ஊரைச் சூழ்ந்திருக்கும் காட்டிலிருந்த மரங்கள் இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்தன. நாகத்தோப்பில் இருக்கிறவர்களிலேயே சிலம்பு ஒருவன்தான் இங்கு ஆறுமாதமும், ரெட்டித்தோப்பில் ஆறு மாதமும் இருப்பவன்.

நாகத்தோப்பில் உள்ள பலரும் பெங்களூருக்கும் திருப்பூருக்குமாக வேலை தேடிப் போய்வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால், அவர்களில் யாருடைய போக்குவரத்திலும் சிலம்புவின் காலக்கிரமத்தையோ ஒழுங்கையோ பார்க்க முடிவதில்லை.

அவன் ஊருக்குள் வருகிறான் என்றால், சனங்கள் அதைப் பங்குனி மாதம் என்று நிச்சயமாகச் சொல்லிவிடுவார்கள்.பிற்பாடு மீண்டும் ஆம்பூருக்குப் போவதற்கான தனது முஸ்தீபுகளை மேற்கொள்கிறான் என்றால், அது காற்றடிக் காலத்துக்குப் பிந்தைய ஆவணி. பல ஆண்டுகளாக இது மாறியதில்லை.

அன்று காலையில், முகத்தில் படியும் பக்குவத்தில் வெயில் இருந்தபோது, மேட்டுப்பள்ளி நாலுவழிச் சாலையில் டவுன் வண்டியில் வந்து இறங்கி, ஊரைப் பார்த்து நடந்தான் சிலம்பு.அந்த இடத்திலிருந்து தொடங்குகிற காட்டு வழியில் நாகத்தோப்புக்குப் போகவேண்டுமென்றால், மூன்று மைல் நடக்க வேண்டும்.

நேற்று அவன் ரெட்டித்தோப்பில் இருந்தான். மேகராணி அவனுடன்  பேசியதிலிருந்து அவன் மனம் அஞ்சனாவதியின் மீது அதிகப்படியான வாஞ்சையைக்கொண்டுவிட்டிருந்தது.சிலம்புடன் இரண்டு நாள்களுக்கு மனத்தாங்கலாக இருந்த மேகராணி, அவனை நேருக்கு நேர் முகம்கொண்டு பார்த்ததும்  ‘களுக்’கெனச் சிரித்துப் பேசிக்கொண்டாள்.

“உங்கூட இந்த ரெண்டு நாளைக்கிப் பேசாம இருந்தது ஏதோ ஆயுசு முழுசும் இருந்த மாதிரியில்ல இருக்கு?”

சிலம்புவுக்குச் சுருக்கென்றது. மேகராணியின் சொற்கள் அவனை முட்டித்தள்ளி தலைக்குள்ளிருந்த எதையோ ஒன்றைத் திறந்துவிட்டன. இம்முறை ஊருக்குப் போகும்போது அஞ்சனாவதியிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும்.தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டான்.

அவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன்

‘இவ்ளோநாளா அஞ்சனாவதிகூட நாம ஏன் பேசல? அவளே பேசலன்னாலும் நாம எப்பிடியாவது அவ வாயப் புடுங்கிப் பேசியிருக்கத்தாலியா? நமக்கு அவ்ளோ புத்தியா கெட்டுப்போயிருந்திச்சி?’ 

காட்டுவழியில் நடந்துகொண்டிருந்த போது, அவன் மனம் மேகராணியிடம் பேசுவது சம்பந்தமாகவே அசைபோட்டது.அவளைப் புதிதாகப் பார்ப்பதைப்போல மனம் வெறிகொண்டிருந்தது.

‘அவ பேசாக்காட்டியும் இனிமேல்டுக்கு நாம பேசறத நிறுத்தக் கூடாது. ஓணுமின்னா அவ காலைக் கையைக்கூட புடிச்சிக்கலாம். தப்பு ஒண்ணுமில்ல’ எப்படியெப்படியோ நினைத்துக்கொண்டான் சிலம்பு.

ஒரு முடிவெடுத்தவனாய் நிதானம் கொண்டவன் வறண்ட தனது பார்வையைக் காட்டின் மீது வீசினான். எடுத்த எடுப்பிலேயே அவன் பார்வைக்குத் தேன்கல் பாறை இருக்கிற மேற்கு திசை மலைத்தொடர் காய்ந்து, சாம்பல் பூத்துத் தெரிந்தது.மலையிலிருக்கும் பாறைகளும் சரிவுகளும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தன.

மர அணைப்பு இல்லாததால் பார்வைக்குத் துலக்கமாகத் தெரிந்த வழுக்குப்பாறையில் போன மழைக்கு ஜவுக்கெடுத்துக் கொட்டிய தண்ணீர், சாக்கை சாக்கையாக வரியோடியிருந்தது. இலைகளின்றி சிமிர் சிமிராக நின்ற மரங்களுக்கு இடையில் துளிர்த்திருந்த ஒன்றிரண்டு வேம்பும், ஆசாவும்கூட காட்டுக்குப் பசுமையைத் தரவில்லை. காடு முழுக்கவே துரிஞ்சியும் சீக்கைப் புதருமாக இருந்தால் தப்பி முளைத்திருக்கும். அவையும் பாவம் என்னதான் செய்யும்?

நெளிநெளியாகச் சென்ற காட்டுப்பாதையின் ஓரங்களிலிருந்த புளியனும் புங்கனும் அவனுக்குச் சற்று ஆறுதலைக் கொடுத்தன.குண்டாலம்மன் பாறைக்குப் பக்கத்தில் ஒற்றையாகத் துளிர்த்திருந்த அரசின் தளிர்களில் பழுப்பு அடர்ந்திருந்தது.அங்கங்கே அவன் கண்களுக்குப் பசுமையாக ஒன்றிரண்டு ஆலமரங்கள் தெரிந்தன.அவற்றில் சில கருத்தப்பனைகளைப் பின்னிக்கொண்டு வானில் ஏறின. அந்த வழியில் இப்படி அனேகம் உண்டு. சில பனைகள் ஆலின் இறுக்கமான தழுவலில் தன்னைக் கரைத்துக்கொண்டவை.

அந்த ஆலமரம் ஒரு பெருந்தனக்காரர் வீட்டுப் பெண்ணாம். அவளுக்குச் சடைசடையாக பின்னந்தொடைவரைக்கும் தழைந்து ஊஞ்சலாடும் கூந்தலாம். கருத்தப் பனையோ அவள் வீட்டில் வேலை பார்த்த வாலிபனாம். இண்டு பேருக்கும் ஒருத்தர் மேல் ஒருத்தருக்குக் கொள்ளைப் பிரியம்.இதை  எப்படியோ தெரிந்து கொண்டிருந்தானாம் பெண்ணின் அப்பங்காரன். வயசு வேகத்தில் அந்தச் சோடி தனிமையில் இருந்தபோது, ரெண்டு பேரையும் ஒரே வெட்டாக வெட்டிப் போட்டானாம். போன ஜென்மத்தில் சேர முடியாத அந்தச் சோடி, இந்த ஜென்மத்தில் இப்படிப் பனையும் ஆலுமாகத் தழுவி வளர்கிறதாம்.

சிலம்பு தன் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லும் கதை அம்மரங்களைப் பார்த்ததும் ஞாபகத்துக்கு வந்துபோனது. இலேசாக மூச்சு வாங்கியது. ஒரு புங்கமரத்தினடியில் உட்கார்ந்தவனாக பீடி ஒன்றைப் பற்றவைத்து இழுத்தான். அண்ணாந்து புகையை விட்டபோது புங்கையின் கரும்பச்சை இலைகளும், பொறிப்பூக்களும் அவனுள்ளே கிலேசத்தை உண்டாக்கின. அம்மரத்தை சிறு தேனீக்களின் கூட்டம் மொய்த்திருந்தது.பூங்கொத்துகள் ஒவ்வொன்றிலும் சில செம்பட்டி வண்டுகள் அசையாமல்  அமர்ந்திருந்தன. காட்டின் பேரமைதியில் தன்போக்கில் நிகழ்ந்தபடியிருக்கும் உயிர் இயக்கம் அவனைக் கிளர்த்தியது. அப்போது குளிர்ந்து வீசிய காற்றில் அவனுக்குத் தூக்கம் சொக்கியது.

“புங்க மர நெழலும் கூத்தியா ஊட்டு சொகமும் ஒண்ணுன்னு சும்மாவா சொன்னாங்க?”

சிலம்புவின் வாய் தானாகவே முனகிக் கொண்டது. மைனாக்கள் கிறீச்சிடுவது அவ்வப்போது கேட்டது. எங்கிருந்தோ வந்த ஒரு செம்போத்து அவனைப் பார்த்துக்கொண்டே உன்னிப் புதருக்குள்ளே ஓடியது. சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவன் எழுந்து நடந்தான். காடு அவனை உள்வாங்கி வளர்ந்துகொண்டே போனது.

ஊருக்கு எதிரில் ஓடும் துங்கலாற்றை சிலம்பு நெருங்கியபோது கரையின் இருமருங்கிலும் நாகத்தோப்பு ஊர் சனங்கள் நூறு நாள் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.ஆற்றின் கரைகளில் அடர்ந்து வளர்ந்திருந்த கொருக்கைப் புதர்களை அவர்கள்  வெட்டினார்கள். சிலர் கொத்துவதும் செதுக்குவதுமாக இருந்தனர்.

“இந்தச் செடிங்க இருந்துட்டுத்தான் போட்டுமே. என்னா இப்போ? வெய்யிலுக்கு இதுங்களையும் வெட்டி கட்டாந்தரையாக்கிப்புடணுமா?’

அவனுக்குக் கடும் கோபம் வந்தது.அங்கிருந்தவர்களுக்குக் கேட்கும் படியாகவே சொல்லிவிட்டுப் பெருஞ்சத்தத்தோடு காறல் போட்டுத் துப்பினான். 

பாலத்தைத் தாண்டியதும் ஊர்ப்பெண்கள் சிலர் அவனை வழிமறிப்பதைப் போல போனார்கள். அவர்களில் சிலர் அவன் வாயைப் பிடுங்கினார்கள்.

“என்னாயா மாமா, ஆம்பூரு அத்தைக்காரி இப்பதான் உட்டாளா? என்னா அது மூட்ட? எனுக்கும் கொஞ்சம் பிரிச்சிக் கொடுத்துட்டுப் போயேன்.”

“ஏண்டி இங்க ஆறுமாசம், அங்க ஆறு மாசம். இப்ப அவம் மூட்டைய உனுக்கும் பிரிச்சிக் குடுத்தா, அப்பறம் கெழவன் உன்னொரு ஆறு மாசத்துக்கு எங்கடி போவான்?”

“அதப்பத்தி உங்க ரெண்டுபேருக்கும் என்னா கவல? எங்கூட வர்றதுன்னா சொல்லுங்க. அங்கங்க மூணு மாசம்னு இருந்துக்கிறேன்.”

“பாத்தியாடி கெழவனுக்கு ஆசைய?”

“யாரடி கெளவன்னு சொன்னீங்க..?”

அவர்களிடையே எழுந்த சிரிப்பலை எதிர்க்குன்றில் மோதித் தெறித்தது.சிலம்புவின் கண்கள் அஞ்சனாவதியைத்தேடின. அவளும் இப்படி வேலை செய்பவள்தான். பாலத்தின்  பக்கத்தடுப்புச்சுவருக்குப் பக்கத்தில் நின்றிருந்த பெண்ணொருத்தி, ஒரு குத்து நார்ப்பூண்டுச் செடியைப் பிடுங்கிக்கொண்டு நிமிர்ந்த போது அவன் கண்களில் பட்டாள்.இருவரும் பார்த்துக்கொண்டார்கள்.ஆனால், அது அவளில்லை. அஞ்சனாவதி எங்கிருக்கிறாள் என்று தேடினான் சிலம்பு.

பாலத்தை ஒட்டியபடி சற்றுத் தொலைவில் அஞ்சனாவதி வேலைசெய்துகொண்டிருந்தது தெரிந்தது. அவள் அங்கிருந்தபடியே அவனைக் கூர்ந்து பார்த்தாள். அண்மைக் காலங்களில் வேறெப்போதும் இல்லாதபடிக்கு அவள் பார்வையில் கனிவு கூடியிருந்ததை உணர்ந்தான் சிலம்பு. அவளருகில் உடனே சென்று பேச வேண்டும் என்று அவன் மனம் வாதித்தது. இப்போது போகாமல் இருப்பதுவும் நல்லதுதான் என்று சொன்ன அவன் உள்மனம், அவளைத் தனித்துப் பார்த்திடும் சூழலுக்காக வகை தேடியது.

முன்பெல்லாம் அவன் பூந்துடைப்பக் கட்டுகளை எடுத்துக்கொண்டு தொலைதூரத்து ஊர்களான நெல்லுபட்லா, பலமனேரி என்று வியாபாரத்துக்குப் போகின்றபோது நான்கைந்து நாள்களுக்குக்கூட அங்கேயே தங்கிவிடுவான்.திரும்பிவரும்போது பார்த்த மாத்திரத்திலேயே இருவர் உடலும் தகிக்கும். மனங்கள் உருகி ஓடும்.தனிமையில் அவளின் எலும்புகள் நொறுங்கும் மட்டும் அணைப்பான். பேய் மாதிரி நடந்துகொள்வான். இப்போது அவனுக்கது செறிக்கவொண்ணாக் கனவு. காலப்போக்கில் ஒரே ஒரு பார்வை மட்டுமே எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுவிடுகிறது அவனுக்குத் துக்கமாக இருந்தது.

“என்னா மாமா, அத்தையத் தேடறியா? வுட்டா இப்பவே அவளக்கூப்புட்னு போயிடுவ போலக்கீதே!”

முறைப்பெண்ணொருத்தி மீண்டும் அவனை வம்புக்கிழுத்தாள்.அஞ்சனாவதியின் சாயலில் இருந்தவளின் முதுமுகத்தில் அப்பெண்களின் பேச்சு இலேசான சிவப்பைப் படர்த்தி அழகூட்டியது.

“இவ்ளோ நாளா உங்க அத்தக்காரி இருந்தா. இப்ப நீ ஓணுமினா உம் மாமங்கூட போடி.”

மீண்டும் எழுந்த சிரிப்பில் அங்கு வெயில் துள்ளியது. சிலம்புவால் அதற்கு மேலும் அங்கு நிற்க முடிய வில்லை. அஞ்சனாவதியைப் பார்த்துக்கொண்டே அங்கிருந்து ஊரை நோக்கிப் போனான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன்வீட்டில் நுழைந்ததும் கைப்பையை வைத்துவிட்டு சினேகிதக்காரர்களைப் பார்ப்பதற்குப் போனான் சிலம்பு.ஊருக்கு மேற்காகத் தனிமையில் இருந்த பள்ளிக்கூடத்து வாசலில் போய் நின்று பேரப் பிள்ளைகள் இருவரையும் கூப்பிட்டு உச்சிமோந்தான். கையிலிருந்த தின்பண்டப் பொட்டலத்தை அவர்களிடத்தில் தந்தான்.

“தாத்தாயா, அப்பாவும் அம்மாவும் புளி உசுக்கப் போயிக்கீறாங்க. ஆயா நூறு நாளு வேலைக்கிப் போய்க்கிது.”

“ஊருக்கு வரச்சொல்லோ உங்காயாவத் தேடனேன். அங்கதான் இருந்த மாறித் தெரிஞ்சிச்சி.”

ஊரை ஒரு வலம் வந்துவிட்டு அவன் வீட்டுக்குத் திரும்பியபோது உச்சிவேளை ஆகியிருந்தது. இன்னமும் அஞ்சனாவதி வந்திருக்கவில்லை. அவளைக் காலையில் பார்த்தும் பேச முடியாதது நெருடியது.

அவனுக்குப் பசித்தது. ஆனால், வீட்டில் தண்ணீர் மொண்டு குடிப்பதற்கும் மனம் வரவில்லை. அஞ்சனாவதி வரட்டும் என்று நினைத்தான். வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் கும்பல் புளிய மரங்களுக்கடியில் போய்ப் படுத்துக்கொண்டான்.

சிலம்பு விழித்தபோது வெயில் பழுத்திருந்தது. அவன் கண்ணயர்ந்த மரத்தடியில் சில பறவைகளின் சத்தங்கள் கேட்டன. மரங்களை ஒட்டிப் போகின்ற பாதையில் அருகாமை நிலங்களுக்குச் சென்று சிலர் தண்ணீர் பிடித்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் தன் பேத்தியைப் பார்த்ததும் சத்தம் போட்டான் சிலம்பு.

அவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன்

“எம்மாடி வெள்ளச்சி, உங்காயா வந்துட்ச்சா? எனுக்குப் பசியாக்கீதுன்னு சொல்லு எம்மா.” 

 படுக்கையிலிருந்து எழாமலேயே அவன் அஞ்சனாவதிக்காக நெடுநேரம்  காத்திருந்தான். அஞ்சனாவதி வரவில்லை.அவனுக்குக் கேள்வி எழுந்தது. இதற்கு முன்பு எத்தனையோ முறை இப்படி அவன் வந்து இங்கே படுத்துக்கொண்டிருந் திருக்கிறான். அப்போதெல்லாம் அவள் தண்ணீரோடும் சாப்பாடோடும் வந்து எழுப்புவாள். இரண்டு பேரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.வியாபாரத்துக்காக ஊரிலிருந்து அவன் போன பின்பு அவளுக்கு  நடந்தவற்றை அவளும், அவனுக்கு நடந்தவற்றை அவனும் நேரத்தைச் சட்டைசெய்யாமல் பேசிக்கொள்வார்கள்.

அதற்குப் பிறகும் இது தொடர்ந்தது.அப்போதும் சாப்பாட்டையும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு வந்து, காய்ந்த இலைச் சருகுகளை மிதித்துச் சப்தமெழுப்பியபடி மௌனமாக நின்றிருக்கிறாள் அஞ்சனாவதி. அவனுக்கு மட்டுமே நுண்மையாகக் கேட்டுவிடுகின்ற, அவள் மனக்கிடங்கிலிருக்கின்ற தொல்லொலிக்குத் துள்ளத் துடித்து எழுந்திருக்கிறான்.

அவன் எழாத அரிதான சில சமயங்களில் அஞ்சனாவதி தன் பெரிய மகனைக் கூப்பிடுவதைப்போல முகத்தை எங்கோ வைத்துக்கொண்டு ‘டேய் நைனா’ என்று கூப்பிட்டிருக்கிறாள். ‘டேய்’ என்பது அவனுக்கொரு கமுக்கச் சொல். தனிமையின் லயிப்பில் அவள் அவனை எப்போதாகிலும் டேய் என்பதுண்டு. அவன் எழுந்து அண்ணாந்து பார்த்ததும் ஒரு சொல்லையும் உதிர்க்காமல் சாப்பாட்டை முன்னால் வைத்துவிட்டுப் போயிருக்கிறாள்.

சில நேரங்களில் அவனை முகங்கொண்டு பார்க்காமல், அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை காட்டைப் பார்த்தபடிக்கு அங்கேயே அமர்ந்தும் இருந்திருந்திருக்கிறாள். அவள் தன்னோடு பேசாமல் போனாலும், அவள் அவனுக்கு வழங்கிடும் ஏற்பும் ஒப்புகையும் அந்த அருகாமைதான் என்பதை சிலம்பு அறிவான். ரெட்டித்தோப்பிலிருந்து திரும்பி வரும்போதெல்லாம் அவளைப் பார்க்கும் வரையிலும் அவனுக்குத் தவிப்புதான்.

இன்னும்கூட அஞ்சனாவதியைக்காணோம். சிலம்பு, வீட்டுக்கு எழுந்து போவதற்குத் தயங்கினான். ஒருவேளை இந்த நேரத்துக்கு மருமகள் வந்துவிட்டிருக்கலாம். அவனுக்கு மெள்ள மெள்ளக் கோபம் அதிகரித்தது. அவ்வழியாக தண்ணீர்க்குடத்துடன் போன வெள்ளச்சியிடம் மீண்டும் கேட்டான்.

“உங்காயாக்கிட்ட சொன்னியாமா?”

“சொன்னன்யா.”

மீளவும் அவனுடைய நீண்ட காத்திருத்தலுக்கு அவள் வரவில்லை. சிலம்பு படுத்திருந்த கும்பல் புளியமரத்தடியை எங்கோ போய்விட்டுத் திரும்பிய மையிருள் மெள்ள மெள்ளப் பற்றியது.

‘எவ்ளே நாளுக்குப் பின்ட்டு வர்றோம்.ஏன் வந்து பாக்கல? சொல்லுதான் அத்துப் போச்சி. மூஞ்சக்கூடவா வந்து காட்டக்கூடாது? எல்லாமே முடிஞ்சிப்போச்சோ?’

எழுந்து சென்று அவள் எங்கிருக்கிறாள் என்று பார்த்துப் பேசிவிடுவோமா என நினைத்தான் சிலம்பு. அதற்கு இடங்கொடாமல் அவன் மனதை வீம்பு பீடித்தது.

‘நாமளேதான் போணுமா? அவளே வந்தாதான் என்னா?’

சிலம்புவின் நெஞ்சு காந்தியது. இந்தக் காட்டுமரங்களைப்போல சொற்களை உதிர்த்துவிட்டு நிற்கும் அவளிடத்தில் மீளவும் தனக்காகக் கொஞ்சம் சொற்கள் துளிர்த்திடும் என்றே அவன் நம்பகம் கொண்டிருந்தான். இப்போது எதுவுமே இல்லை. சிலம்பு நொறுங்கிப்போனான். அவனுக்கு ஒன்றும் விளங்க வில்லை. சடாரெனக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. மனம் முற்றிலுமாக இருண்டு கழிவிரக்கம் கொண்டுவிட்டது.

****

தன்னுள்ளாகவே குமைந்து கொண்டிருந்தாள் அஞ்சனாவதி. அப்படி அவன் போய்விடுவானென்று அவள் துரும்பளவும் நினைக்கவில்லை.

‘கிட்ட வந்து ஏன் ஒரு வார்த்த பேசல? இது அதுயில்ல. என்னப் பார்த்துட்டும் ஏதோ தெருவுல போறவனப்போலத் தாண்டிப் போறது வேற யாரானாத்தான் இருக்கணும்.’

கசப்பும் துக்கமும் உந்தியது. நூறு நாள் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வருவதற்குள் பொழுது சாய்ந்துவிட்டது.அதிகாரி வருவதாகச் சொல்லி மேற்பார்வை பார்க்கிறவன் எல்லோரையும் நிறுத்தி வைத்துவிட்டான். வேலைசெய்த களைப்பிலும், வெயிலுக்குச் சுணங்கியும் மர நிழலிலும், செடி நிழலிலும் ஆங்காங்கே படுத்திருந்தார்கள் சனங்கள்.

அஞ்சனாவதிக்கு நெஞ்சு கனத்தது. ஒரு எட்டு வீடு வரைக்கும் ஓடிப்போய் வந்துவிடலாமா என்று தவித்தாள். அவளின் நிலையாமையை ஊகித்தவர்களாகச் சில பெண்கள் சீண்டிச் சீண்டிப் பேசினர்.

“எப்பா சாரே, நாங்க ஓணும்னா சாங்காலமாவே போறோம். அஞ்சனாவ மட்டும் இப்ப அனுப்பிச்சிடேன் கொஞ்சம்.”

“ஏய் கொஞ்சம் சும்மாயிருங்களே…”

நேற்றிலிருந்தே அஞ்சனாவதியின் மனம் வாதித்துக்கொண்டிருந்தது. அவர்களின் நூறுநாள் வேலையை மேற்பார்வை பார்க்கிறவன் தொலைதூரத்திலிருந்து வருகிறவனாக இருந்தான். அவனுக்குக் கை உடைந்ததிலிருந்து தினமும் யாராவது ஒருவர் அவனை வண்டியில்  உட்காரவைத்துக் கொண்டுவந்து விடுவதும் அழைத்துப் போவதுமாக இருந்தார்கள். நேற்று அவன் மனைவி அழைத்துக்கொண்டு வந்தாள்.பெண் ஒருத்தி இருசக்கர வண்டி ஓட்டுவது அவர்களுக்கெல்லாம் அதிசயமாக இருந்தது.

“உனுக்குக்கூட வண்டி ஓட்டத் தெரியுதாம்மா?”

“மொதல்ல தெரியாது. அப்புறமா இதோ இதுக்காகத்தான் கத்துக்கிட்டேன்.”

அப்பெண் எழுதிக்கொண்டிருந்தவனைப் பார்த்துக் கை காட்டிவிட்டு,  அஞ்சனாவதிக்குப் பதில் சொன்னதும் உடல் சிலிர்த்துக் கொண்டது. வீட்டுக்குப் போகும்போது மேற்பார்வையாளனின் மனைவி மீண்டும் மீண்டும் அவள் மனதில் வண்டியோட்டினாள். அவன் மெதுவாக அந்த வண்டியில் ஏறி சௌகர்யமாகப் பின்னால் உட்கார்ந்துகொண்டதும் அவள் திரும்பி அவனிடம் `போகலாமா’ எனக் கேட்டுவிட்டு லாகவமாக வண்டியை ஓட்டிக்கொண்டு போவதையும், அவர்கள் பேசிச் சிரித்துக்கொள்வது வண்டியோசையோடு சேர்ந்து காட்டில் எதிரொலிப்பதையும் அடிக்கடி நினைத்தாள்.அவளுக்குத் தன்மீது கசப்புப் பெருகியது.

‘இவ்ளோ நாளா நாம ஏன் அதுகூடப் பேசல? அதே பேசலன்னாலும் நாம எப்பிடியாவது அது வாயப் புடுங்கிப் பேசியிருக்கத்தாலியா? நமுக்கு அவ்ளோ புத்தியா கெட்டுப்போயிருந்திச்சி? அது பேசாட்டியும் இனிமேல்டுக்கு நாம பேசறத நிப்பாட்டக் கூடாது. ஓணுமின்னா அதுங்கால, கையக்கூடப் புடிச்சிக்கலாம். தப்பு ஒண்ணுமில்ல.’

காலையில் எழுந்ததும் வாசலில் காகமொன்று ஓயாமல் கத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தாள் அஞ்சனாவதி. பட்டியிலிருந்து ஆட்டுக் குட்டிகளும் கன்றுகளும் வெளியேறித் துள்ளிக்கொண்டிருந்தன. வெள்ளச்சியும் இன்னும் சில பிள்ளைகளும் அவற்றைத் துரத்தி விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

‘அது ஒருவேள இன்னிக்கி வருமோ?’

ஒரு கணம் கண்கள் கலங்கின.திரைபோட்ட கண்ணீரினூடே நீண்ட தெரு மங்கிக் குலைந்தது. நூறுநாள் வேலைக்குப் போகின்ற வரையிலும், வீட்டிலிருந்த யாரோடும் தன்னால் சரியாகப் பேச முடியவில்லை என்பதை உணர்ந்தாள்.காலையில் காட்டாற்றுப் பாலத்துக்கு அருகில் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென்று எழுந்த சிலம்பனின் குரல் அவளை உலுக்கிப்போட்டது.

கீழே குனிந்தபடி தும்பைச்செடிகளைப் பிடுங்கிக்கொண்டிருந்த அத்தருணத்தில் அவள் கண்களில் கதகதவெனக் கண்ணீர் பெருகியது. சுற்றிலும் ஆள்கள். முந்தியை எடுத்து முகம் துடைத்துக்கொண்டு மனதை இறுக்கியபடி அவன் நின்றிருக்கும் இடத்தைத் திரும்பிப் பார்த்தாள். அவனும் பார்த்ததுபோலத்தான் தோன்றியது. ஆனால், அவன் கிட்டத்தில் வரவில்லை.

வீட்டுக்கு நடந்தபோது, ‘திண்ணையில காத்திருந்து அது தன்னை எதிர்கொண்டு அழைக்கும்’ என்று பலமாக நம்பினாள் அஞ்சனாவதி. தொலைவிலேயே வீடு தெரிந்தாலும் அருகில் போகிறவரைக்கும்கூட அவள் திண்ணையைப் பார்க்கவில்லை.உள்ளே நுழைந்ததும் கபீர் என்று இருந்தது.திண்ணையில் யாருமில்லை. புழக்கடைக்குப் போய்வந்து வாசலில் நின்றபோது மருமகள் அவளிடத்தில் சொன்னாள்.

அவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன்

“இந்தக் கேவுர கொஞ்சம் ஒக்காந்து நோம்பிடு அத்த. போயி அரச்சினு வந்திர்றேன். ரவுக்கு களிகளாற ஒண்ணுமேயில்ல.”

கேழ்வரகை நோம்பிக்கொண்டிருக் கையில் தண்ணீர் எடுத்துவரும் வெள்ளச்சியிடம் கேட்டாள் அஞ்சனாவதி.

“எம்மாடி, உங்கத் தாத்தாவப் பாத்தியா?”

“உம்… கும்புப்புளியாமரத்தாண்ட படுத்துனுகீது.” 

இருட்டு கூடக்கூட அஞ்சனாவதியின் மனம் துடிக்கத் தொடங்கியது. வயிற்றில் எழுந்த அனல் மேலேறி நெஞ்சைத் தீய்த்தது.அஞ்சனாவதி வீட்டைவிட்டு வாசலில்கூட போய் நிற்கவில்லை. அடிக்கடி தாழ்வாரத்தை மட்டும் பார்த்துக்கொண்டாள். அங்கு  உட்கார்ந்துகொண்டுதான் அவன் அவளிடத்தில் எதுவொன்றையும் கேட்பான்.

‘அது ஏன் வரவில்லை? நாமளேதான் அடிமெறிச்சினு போணுமா? எப்பிடிக்கீறன்னு வந்து ஒரு வார்த்த கேட்டுட்டாத்தான் என்னா கொறஞ்சி போயிடும்?’

காட்டுப் பக்கமாக எழுந்து சென்று கனத்த மனதோடு ஒரு பாறையின் மேல் மல்லாந்து படுத்திருந்தான் சிலம்பு.நட்சத்திரங்கள் மொய்க்கும் வானத்தைப் பார்த்தபடி, தனக்கும் அஞ்சனாவதிக்கும் இடையில் திடீரென்று பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தைக் குறித்த நினைவுகளில் ஆழ்ந்தான்.
அவனும் அஞ்சனாவதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே வளர்ந்தவர்கள்.காட்டுக்காகப் போகின்ற, ஊரின் ஒரேயொரு நடுவீதியில் அவர்களின் வீடுகள் இருந்தன.அவள் ஆடு மேய்க்கவும், அவன் தேனெடுக்கவும் பழகிய நாட்களில் ஒருவரோடு ஒருவர் பழகிக் கொண்டார்கள். காட்டின் நடுவில் வெகுதூரத்திலிருக்கும் துங்கலாற்றுத் தாமரைக்குளம் வரைக்கும் ஒருமுறை போயிருந்தபோது இருவரின் தேகத்திலும் அனல் பற்றிக்கொண்டது.

தாமரைக்குளத்துக்குக் கிழக்கே பெரும்பாறைக்கு நடுவிலிருந்த கல்திட்டையின் கீழே காலநேரம் அறியாது அவர்கள் தழுவிக்கிடந்தார்கள். அஞ்சனாவதி காடெங்கும் பூத்திருந்த கிருஷ்ணக்கொண்டைப்பூக்களைக்கொண்டு மாலை பின்னி சிலம்பனுக்குப் போட்டாள். பெரும் பாறையின் துறைகளில் அடர்ந்திருந்த பெருந்தேனடைகளைப் பிழிந்து அஞ்சனாவதியைக் குளிப்பாட்டினான் சிலம்பு.

காட்டுப் பழங்களும், சுனை நீரும்கொண்டு அங்கேயே கிடந்தவர்களை நாகத்தோப்பிலிருந்து ஆடு தேடிப் போனவர்கள் கண்டுபிடித்துக் கூட்டிவந்து ஊர் நடுவில் நிறுத்தினார்கள். ஊர் சனக்கட்டு அவர்களை இணையாக ஒப்புக்கொண்டுவிட்டது.

ஊரிலேயே அன்யோன்யமானவர்கள் என்று பெயரெடுத்திருந்த அவர்களின் வாழ்க்கையிலுமா அப்படி நடக்கும் என்று அப்போது ஊரார் வியந்து பேசிக்கொண்டார்கள். அப்படியொரு பேச்செழுந்தபோது சிலம்புக்கும் அஞ்சனாவதிக்கும் கொஞ்சமாக நரை கண்டிருந்தது.

நாகமலைக்காட்டில் இருப்பதையெல்லாம் அறிந்தவர்கள் சிலம்பும் அஞ்சனாவதியும். இருவரும் பருவத்துக்கு ஏற்றார்போல விறகும், காட்டுப் பழங்களும், தேனும், கிழங்கும், ஆட்டுத்தழையும் எடுத்துவந்து பக்கத்துச் சிறுநகரில் விற்பார்கள். சில நேரங்களில் அஞ்சனாவதி தழுவு பெரிய சுமைகளாக மஞ்சுப்புற்களை அறுப்பாள்.தெற்குக் காட்டுக்குள் வெகுதூரத்திலிருக்கும் துங்கலாற்று தாமரைக்குளம் வரை சென்று, துடைப்பப் புற்களில் நீண்டு வளர்ந்திருக்கும் மெல்லிய கதிர்களைப் பூந்துடைப்பத்துக்கு என அரியரியாய் அறுத்து, வீட்டுக்குக் கொண்டுவருவாள்.

காட்டிலாகா அதிகாரியின் கெடுபிடிகளுக்குப் பிறகு சிலம்பு பூந்துடைப்பக் கட்டுகளை ஊரூராய்க் கொண்டுசென்று விற்பதோடு நிறுத்திக் கொண்டான். இலத்தேரி, வழித்துணையான் குப்பம், மேல்பட்டி, ஆம்பூர் என சுற்றுப் பக்கத்துச் சந்தைகளுக்கெல்லம் அவன் போவான்.

சந்தைகளில் அவனே உட்கார்ந்து விற்பான். சில நேரங்களில் அங்கிருக்கும் சில்லறை வியாபாரிகளிடம் துடைப்பக் கட்டுக்களைப் போட்டுவிட்டும் வந்துவிடுவான். அடைமழைக் காலம் ஒன்றில் ஆம்பூர் சந்தைக்கு வியாபாரத்துக்கு என அவன் போயிருந்தபோது, சந்தையில் கடைபோடும் மேகராணியின் வீட்டில் தங்க நேர்ந்தது.

ஆம்பூருக்கு அவன் போய்ச்சேர்ந்த அன்று திடீரென பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டது. வாகனங்கள் எதுவும் போகவில்லை. நாகத்தோப்புக்கு போய்ச்சேரும் எல்லா திக்குச் சாலைகளையும் வழிமறித்திடும் ஆறுகளில் பெருவெள்ளம்.வெள்ளம் வடிய வாரத்துக்கும் மேலாகிவிடும் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.நுரைவெள்ளத்தில் சிக்குண்டு கொருக்கைப்போல் படபடத்திடும் சிலம்பை, மேகராணி ரெட்டித்தோப்பிலிருக்கும் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டாள்.

வெள்ளம் வடிந்து மூன்று வாரங்கள் ஆன பின்பு  சிலம்பு வீட்டுக்குத் திரும்பினான்.வியாபாரத்துக்குப் போனாலும் வெளியில் தங்குவது ஒரு வாரம்தான். இப்படிப் பல நாள்களுக்கு வராமல் இருந்ததில்லை.அவனைக் காணாமல் தவித்துப் போனாள் அஞ்சனாவதி. அவளும் மகன்களும் எங்கெங்கோ போய்த் தேடிவிட்டு வந்தார்கள்.

பூடகமாகப் பார்த்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவனைக் கட்டிக்கொண்டு அழுதாள் அஞ்சனாவதி. முதல்முறை அஞ்சனாவதிஇடத்தில் வெள்ளக் கதையைச் சொன்னவன் அடுத்தடுத்த முறைகளில் வேறுவேறு கதைகளைச் சொன்னான். பிறகு அவளுக்கே முழுக்கதையும் தெரிந்துவிட்டது. நொறுங்கிப் போனாள் அஞ்சனாவதி. பெரியமகன் சிலம்பை அடிப்பதற்கே வந்துவிட்டான்.

“பேரப்புள்ள எடுத்துட்டபினிக்கும் இப்பிடியா? வெக்கமாயில்ல?”

அதற்குப்பிறகு சிலம்புடனான அஞ்சனாவதியின் பேச்சு ஒரேயடியாய் அற்றுப் போய்விட்டது.  
 
நன்றாக இருட்டிவிட்டது. வானத்தில் சுக்கைகள் பிரகாசமாகத் தெரிந்தன.பாறையைச் சுற்றிலுமிருந்த புதர்களில் சலசலப்பும் இறக்கையடிப்புகளும் கூடிவிட்டன. இடைவிடாமல் சில்வண்டுகளின் சத்தம். காதருகில் வந்து சுற்றிய காட்டுக்கொசுக்கள் விட்டுவிட்டு கடித்தன.
“ஓ… தாத்தாயா… உன்ன அப்பா கூப்புட்து…”

வீட்டோரத்தில் நின்றபடி வெள்ளச்சி கூப்பிடும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

‘அப்பகூட அவ கூப்புடல?’

பாறையிலிருந்து இறங்கி நடந்தான் சிலம்பு. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தபோது வெள்ளச்சி அவனுக்கு எதிரில் சாப்பாட்டை வைத்துவிட்டுப் போனாள்.நடுவாசலோரத்தில் உட்கார்ந்திருக்கும் அஞ்சனாவதியை மெல்லிய இருட்டினூடே பார்த்தான் சிலம்பு. அவள் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

****

மறுநாள் சிலம்பு வீட்டில் இல்லை. இரவு அவன் முன்னால் வெள்ளச்சி வைத்த சாப்பாடு அப்படியே இருந்தது. அதிலிருந்து சோற்றுப் பருக்கைகளை எறும்புகள் இழுத்துச் சென்றுகொண்டிருந்தன. அப்பன் அந்த ராத்திரியில் எவ்விதம் ஆம்பூருக்குப் போயிருப்பான் என நினைத்து கொண்டிருந்தான் மகன். சிலம்பு தன் காலக்கிரமத்தைத் திடீரென்று மாற்றிக்கொண்டது ஊர் சனங்களுக்கு வியப்பாக இருந்தது. பார்க்கிறவர்களெல்லாம் அஞ்சனாவதியைக் கேட்டார்கள்.

“யாரு இல்லேன்னும் இங்க யாரும் அழுதுனு இல்ல.”

எல்லோருக்கும் சேர்த்து அவளிடமிருந்து ஒரே பதில் வந்தது. சிலம்பு ஊரைவிட்டுப் போய் பத்து நாள்களுக்கு மேல் ஆகியிருந்தது.வெய்யில் தகிக்கத் தொடங்கிவிட்டது.குடிக்கத் தண்ணீர் இன்றி ஊருக்குள் நுழைந்த காட்டு விலங்குகள் ஊராரின் சட்டிகளில் தினந்தோறும் கொதித்தன.

ஊரில் மாமிச வெறியடங்காதவனாக இருந்த யானைக்கொல்லி பொன்னன், தனியனாக ஒருநாள் இரவில் தனது கள்ளத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு  வேட்டைக்குப் போனான். தெற்குக்காட்டில் வெகு தொலைவிலிருக்கும் துங்கலாற்றின்  தாமரைக்குளத்தருகில் அவன் மான்களுக்காகப் பதிவிருந்தபோது அழுகிய விலங்கொன்றின் நாற்றம் அடித்தது.விடிந்ததும் அதை என்னவென்று பார்த்த பொன்னன் ஊரை நோக்கிப் பேய்போல ஓடிவந்து கத்தினான். உடனே ஊரில் வறண்ட காற்றோடு பேச்சு பரவியது.

பத்துப்பதினைந்து பேர்களாகத் துங்கலாற்றுத் தாமரைக்குளத்துக்குப் போனார்கள். குளத்தின் மேற்குக்கரையில் கருத்தப் பனையைப் பின்னிக்கொண்டு வளர்ந்திருந்த இளம் ஆலமரத்தின் கிளையொன்றில் காற்றுக்கு ஆடிக்கொண்டிருந்தது சிலம்புவின் பிணம்.புழு புழுத்து வற்றி உலர்ந்திருந்தது உடல்.அங்கு கண்படு மட்டும் தெரிந்த சமவெளியில் மண்டிக்கிடந்த துடைப்பப் புற்கள் தீயில் கருகியிருந்தன.

தேடிப்போன ஊர்க்காரர்கள் கயிற்றை அறுத்து இறக்கிய சிலம்புவின் உடலை ஆலமரத்தின் வேரருகிலேயே குழி தோண்டி வைத்துவிட்டு அதை மூடாமல் பீடியைப் புகைத்தபடி உட்கார்ந்திருந்தார்கள். அஞ்சனாவதியும் மகன்களும் இன்னும் வரவில்லை. அங்கு திடீரென  பருந்துகளின் நடமாட்டம் அதிகரித்துக்கொண்டு வந்தது.

“அதுக்குள்ள கருடஞ் சுத்துதுங்க பாரு. செந்நாயிங்க வேற வந்திரப்போதுப்பா. இந்தப் பக்கம் அதுங்க நடமாட்டம் உண்டு.”

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அழுகுரல்கள் நெருக்கமாகக் கேட்டன. சிலம்புவின் மகன்களும் மருமகள்களும் புலம்பிக்கொண்டு வந்தார்கள். முன்னால் ஓடிவந்த அஞ்சனாவதியின் மாரடிப்பில் காடு அதிர்ந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism