Published:Updated:

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்

சர்ரியலிஸம் சல்வடோர் டாலி கனவின் புகைப்படங்கள்

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்

சர்ரியலிஸம் சல்வடோர் டாலி கனவின் புகைப்படங்கள்

Published:Updated:
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்

லையில் யதார்த்த உலகின் காரண-காரிய நடைமுறை தர்க்கத்தை முற்றாக நிராகரித்த இயக்கம் சர்ரியலிஸம். ஆழ்மன உலகிற்குள் கனவுகளின் பாதை வழியாக உள்நுழைந்து, கலைக் கற்பனைகள் மூலம் அதன் வாசல்களைத் திறந்து சஞ்சாரம் செய்த படைப்பியக்கம். இதற்கு முன்னோடியாக அமைந்தது ‘டாடா’ என்ற கலை இயக்கம். இது, அக்காலகட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ஃபாவிஸம் போலவோ, க்யூபிஸம் போலவோ ஒரு கலை பாணி அல்ல. அதிகாரத்துக்கு எதிராகக் கலகக் குரலாக எழுந்த ஒரு போராட்டக் கலை இயக்கமே டாடா. அதாவது, ஒரு குறிப்பிட்ட தன்மையில் அடையாளப் படுத்தக்கூடிய வெளியீட்டு பாணி அல்ல; அது ஒரு மனோபாவம். அக்காலகட்டத்திய சமூக, அரசியல், கலாசார மதிப்புகளுக்கு எதிராக உருவானது. தர்க்கபூர்வமா னவற்றுக்கும் அர்த்தபூர்வமானவற்றுக்கும் அப்பாற்பட்டது. ‘டாடா’ என்று இந்த இயக்கத்துக்குப் பெயர் வைத்த விதமே விநோதமானது. பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் அகராதிகளில் அங்குமிங்குமாகச் சில எழுத்துகளை எடுத்து அமைத்துக்கொண்ட பெயர். அர்த்தமற்ற ஒன்றாக இருக்க வேண்டும் என்ற பிரயாசையில் உருவானது.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்

முதல் உலகப் போர் (1914-18) காலகட்டத்தின்போது, கலைஞர்களிடம் ஆழமாகப் பதிந்த வெறுப்பு மற்றும் விரக்தி மனோபாவம்தான் டாடா இயக்கத்துக்கு ஊற்றுக்கண்ணாக அமைந்தது. போரின்போது, கூட்டாக நிகழ்த்தப்படும் மனிதக் கொலைகளைப் பித்துப்பிடித்த பார்வையாளனாகப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய கையாலாகத்தனத்தை உணர்ந்ததிலிருந்து உருவானது. தேசியம் என்ற கருத்தாக்கமே போருக்கு வித்திட்டது எனப் பலரும் கருதினர். இந்த வித்து முளை விடுவதற்கு அறிவும் தர்க்கமுமே காரணமென்று உணர்ந்தனர். அதனால்தான், நடைமுறை தர்க்கத்துக்கு அப்பாற்பட்டதாகவும், உள்ளுணர்வு சார்ந்ததுமாக அமையும் படைப்புச் செயல்பாடே தீர்வுக்கான ஒரே பாதை என்று அவர்கள் கருதினார்கள். நவீனக் கலை மட்டுமின்றி, இலக்கியம், இசை, தியேட்டர், நடனம், அரசியல் எனப் பல ஊடகங்களைத் தழுவியதாக இந்த இயக்கம் அமைந்தது. பழக்கப்பட்ட நடைமுறைகளையும் காரண-காரிய தர்க்கங்களையும் கடுமையாகத் தாக்குவதன் மூலம் புதிய வாசல்களைத் திறக்க முற்பட்டனர். கலையின் அடிப்படை நியதிகள் மீதும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். “டாடா எல்லாவற்றையும் புரட்டிப்போடுகிறது. எல்லாவற்றின் மீதும் காறித் துப்புகிறது. அதேசமயம், வாழ்க்கையில் எல்லாவற்றையும்போல டாடாவும் பயனற்றது. எல்லாமே முழுமுற்றான மடத்தனம்” என்று பிரகடனப்படுத்தினர்.

மிகத் தீவிரமாக உருவெடுத்து, கலகக் குரலாக வெளிப்பட்ட ‘டாடா’ இயக்கம் மிகக் குறைந்த காலமே நவீனக்கலையில் நீடித்தது. 1924-ல் ஃபிரான்ஸில் ‘முதல் சர்ரியலிஸ அறிக்கை’ வெளியிடப்பட்டதை அடுத்து, ‘டாடா’ இயக்கத்தின் பெரும்பாலான படைப்பாளிகள் சர்ரியலிஸ இயக்கத்தில் இணைந்தனர். கனவுப் பிரதேசங்களையும் ஆழ்மன இயல்புகளையும் கலையில் வெளிப்படுத்துவதற்கான படைப்புச் செயல்முறைகளைக் கண்டடைவது என்ற சர்ரியலிஸத்தின் தீர்க்கமான குறிக்கோள், டாடாவாதிகளை வெகு இயல்பாக ஈர்த்ததில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. நடைமுறைத் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட உலகைப் படைப்பது என்ற அவர்களின் கலைப் பாதைக்கு மிக நெருக்கமாக இருந்த அதேசமயம், கலைத்துவத்திலும் சர்ரியலிஸ இயக்கம் அக்கறைகொண்டிருந்ததுதான் இந்த ஈர்ப்புக்கும் இணைப்புக்கும் முகாந்திரமாக அமைந்தது. அதுபோன்றே, டாடா இயக்கவாதிகள் மேற்கொண்ட படைப்பாக்கத்தின்போதான அந்நேரத்தியக் கற்பனா உத்திகளை சர்ரியலிஸம் தன் கலைப் பாதையில் சுபாவமாக இணைத்துக்கொண்டது. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஆழமாக உறைந்துகிடக்கும் நனவிலி சக்திகளின் கூறுகளைப் படைப்பு வெளியில் சலனம்கொள்ளச் செய்வதற்கு இத்தகைய வெளிப்பாட்டு முறைகள் அனுகூலமாக இருக்குமென சர்ரியலிஸவாதிகள் நம்பினர்.

அக்காலகட்டத்தில் செல்வாக்கு பெறத் தொடங்கியிருந்த உளவியல் மேதைகளான சிக்மண்ட் ஃப்ராய்டு மற்றும் கார்ல் யூங் ஆகியோரின் உளவியல் கோட்பாடுகள் சர்ரியலிஸவாதிகளுக்குப் பெரும் உந்துதலாக அமைந்தன. குறிப்பாக, ஃப்ராய்டின் கனவுகள் பற்றிய விளக்கங்களும், யூங்கின் தொன்மமாகத் தொடரும் கூட்டு நனவிலி (collective unconscious) பற்றிய சிந்தனைகளும் இந்த இயக்கத்தின் உத்வேகத்துக்கு உறுதுணையாகின. கனவுகளின் இயல்பை அறிவதில் சர்ரியலிஸவாதிகள் பெரு விருப்பம் கொண்டிருந்தனர். இந்த இயக்கத்தின் கோட்பாட்டுப் பிரதிநிதியாகத் திகழ்ந்த எழுத்தாளர் ஆந்த்ரே பிரெட்டன் தன்னுடைய அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கனவும் யதார்த்தமும் தோற்றத்தில் மிகவும் முரண்பட்டவையாகத் தோன்றக்கூடும். ஆனால், உண்மையில் கனவுதான் நம் யதார்த்தத்தின் பரிபூரண மெய்மை அல்லது ஆழ்மன யதார்த்தம்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்ரியலிஸ இயக்கத்தில் உருவான பேராற்றல் மிக்க படைப்பு சக்தி, சல்வடோர் டாலி (1904-89). ஸ்பானிய ஓவியர். சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் அதீத நாட்டம்கொண்டிருந்தவர். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே அவருடைய அப்பா, ஓவியம் வரைவதற்கென்று அவருக்குத் தனி ஸ்டூடியோ அமைத்துக் கொடுத்திருந்தார். இளம் வயதிலேயே ஃப்ராய்டின் உளவியல் பகுப்பாய்வுச் சிந்தனைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றவர். கனவுகளும் விந்தைக் கற்பனைகளும் மனித குணங்களை வடிவமைப்பதில் மையமாக இருப்பவை என்று டாலி கருதினார். ஆழ்மனதின் வெளிப்பாடுகளே கனவுகள் என்ற ஃப்ராய்டியச் சிந்தனை, கனவுகள் பற்றிய பரிசீலனைகள் மூலம் மனித மன மெய்மையை அறியும் கலை வேட்கைக்கு அவரை ஆட்படுத்தியது. 1929-ல், தன்னுடைய இருபத்தைந்தாவது வயதில், சர்ரியலிஸக் கலை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அந்த இயக்கத்தின் மகத்தான படைப்புச் சக்தியாக உருவெடுத்தார். தன்னுடைய சர்ரியலிஸ பாணி ஓவியங்களைப் பற்றி அவர், “கையால் வரையப்பட்ட கனவின் புகைப்படங்கள்” என்றார்.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்

1940-ல் டாலி சர்ரியலிஸ இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டார். பிறருடைய கவனத்தை ஈர்க்கும் வகையிலான அவருடைய விசித்திர நடவடிக்கைகளும், சுயமோக அறிக்கைகளும், சக படைப்பாளிகளை உதாசீனப்படுத்தும் அபிப்பிராயங்களும், படைப்புச் சக்தியைத் தவிர வேறு எதற்கும் எவருக்கும் அடங்க மறுக்கும் மனோபாவமும் சர்ரியலிஸ இயக்கத்திலிருந்து அவர் வெளியேற்றப்படுவதற்குக் காரணங்களாக அமைந்தன. எனினும், தனித்துவமிக்க ஆழ்மன யதார்த்த ஓவியங்களைத் தனிப்பெரும் சக்தியாக அவர் தொடர்ந்து படைத்துக்கொண்டிருந்தார். இத்தருணத்தில் அவர் வெளிப்படுத்திய பிரசித்தி பெற்ற அபிப்பிராயம் இது: “ஒரு பைத்தியத்துக்கும் எனக்குமுள்ள வித்தியாசம் நான் பைத்தியமில்லை என்பது; ஒரு சர்ரியலிஸவாதிக்கும் எனக்குமுள்ள வித்தியாசம் நான் சர்ரியலிஸவாதி என்பது.”

டாலி, தன்னுடைய சர்ரியலிஸப் படைப்புக் கோட்பாடாக, ‘சித்த பிரமை – விமர்சனபூர்வ அணுகுமுறை’ என்பதை முன்வைத்தார். பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதான படிமங்களை வெகுதீர்க்கமாகவும் நுட்பமாகவும் மிகுந்த துல்லியத்தோடும் கலைத்துவத்தோடும் சலனிக்கச் செய்யும் படைப்பாக்கச் செயல்பாடு இவருடையது. இதன்மூலம், கனவுப்பாங்கானதும், கற்பனையின் சிறகுகள் கொண்டதும், காரண-காரிய நடைமுறை அறிவுக்கு அப்பாற்பட்டதுமான ஒரு திட்பமான உலகை, புற உலக யதார்த்தத்தைப் போன்ற நம்பகத்தன்மையுடன் பிரத்தியட்சமாகப் படைப்பு வெளியில் புலப்படவைப்பதே டாலியுடைய கலைப் பிரயாசையாக இருந்தது. அதைத் தன் படைப்புகள் வழியாக மேதமையுடன் மெய்ப்பிக்கவும் செய்தார். டாலி, 1931-ல், தன்னுடைய 27-வது வயதில் படைத்த ‘நினைவின் விடாமுயற்சி’ (The Persistence of Memory) அவருடைய கலை அம்சங்கள் அனைத்தும் கூடி முயங்கிய ஓவியம். இது டாலியின் மிகவும் பிரசித்திப் பெற்ற ஓவியம் மட்டுமல்ல; சர்ரியலிஸ இயக்கத்தின் பேறாகவும் போற்றப்படுவது.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்


இந்த ஓவியத்தில் காலம் முடிவுற்ற, ஒரு கனவுப் பிரதேச நிலவெளியை டாலி படைத்திருக்கிறார். ஒருபோதும் மறையாத, மாயத்தன்மைகொண்ட சூரிய ஒளியில் அந்தப் பாலை நிலம் பிரகாசிக்கிறது. தொடுவானம் உச்சத்தில் இருக்கிறது. இந்த அடர்த்தியற்ற ஓவியக் கனவுவெளியின் இடப் பக்கத்தில் ஒரு மேடை போன்ற செவ்வக வடிவிலான அமைப்பின் இடது மூலையில் சிதைந்துகொண்டிருக்கும் ஒரு பாக்கெட் கடிகாரம் காணப்படுகிறது. அதை எறும்புகள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன. அதனருகில் உருகிக்கொண்டிருக்கும் ஒரு கடிகாரம் தொங்கிக்கொண்டிருக்கிறது. அதன்மீது ஒரு ஈ சாவகாசமாக நடந்து செல்கிறது. அந்தச் செவ்வக மேடையின் வலது மூலையிலிருக்கும் பட்ட மரத்தின் கிளையில் உருக்குலைந்த ஒரு கடிகாரம் தொங்கிக்கொண்டிருக்கிறது. அந்தச் செவ்வக மேடைக்குக் கீழே, நிலப் பகுதியில், குறிப்பிட்ட வடிவமற்ற ஓர் உருவத்தின் மையத்தில் ஒரு சிறு கடிகாரம் படுத்துக் கிடக்கிறது. ஓவியத்தில் கடிகாரங்கள் உருகிக்கொண்டிருக்கின்றன.

இந்தக் கனவு வெளியின் ஒவ்வொரு அம்சமும் மிகுந்த துல்லியத்தோடும், நுட்பமான விவரங்களோடும் கலை நேர்த்தியோடு உருவாக்கப்பட்டிருப்பதால், ஓர் அசல் நிலவெளி இயற்கைக் காட்சியின் நிஜத் தன்மையை இது வெகு இயல்பாகப் பெற்றிருக்கிறது. டாலியின் வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘கையால் வரையப்பட்ட கனவின் புகைப்படம்’ என உருவாகி மாய வசீகரம் கொண்டிருக்கிறது. பல்வேறு விதமான பரிசீலனைகளுக்கு இட்டுச் செல்லக்கூடிய கனவுலக ஓவியம்.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்

ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனைகள், கனவுகள் பற்றிய விளக்கங்கள், ஆழ்மனம் குறித்த அவதானிப்புகள் போன்றவை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மனித உடல் மற்றும் மனம் பற்றிய புதிய வெளிச்சத்தை அளித்தன. இந்தப் புத்தொளியில் பிரகாசித்ததுதான் டாலியின் கலைத்துவமிக்க படைப்புலகம். டாலி கூறுகிறார்: “என்றும் நிலைத்திருக்கும் கிரேக்கத்துக்கும் நம் சகாப்தத்துக்கும் இடையேயான ஒரே வித்தியாசம், சிக்மண்ட் ஃப்ராய்டு. கிரேக்க காலத்தில் மனித உடல், ஒழுக்கம் சார்ந்ததாக மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது அது பல ரகசிய இழுப்பறைகளால் நிறைந்திருக்கிறது; உளப் பகுப்பாய்வினால் மட்டுமே அவற்றை நாம் திறக்க முடியும் என்று ஃப்ராய்டு கண்டறிந்தார்” இந்தப் புரிதலின் ஒளியில் உருவான மற்றுமொரு முக்கியமான ஓவியம், 1937-ல் அவர் படைத்த, ‘எரியும் ஒட்டகச்சிவிங்கி’ (The Burning Giraffe).

இந்தக் கனவுப் பிரதேச நிலவெளி ஓவியத்தின் தளமும் பாலைவெளி போன்றதுதான். தொடுவானம் தாழ்வாக இருக்கிறது. தூரத்தில் நீல மலைகள் காணப்படுகின்றன. மாலை ஒளி, அந்த நிலப்பரப்பில் நீண்ட நிழல்களை விழச் செய்திருக்கிறது. எரிந்துகொண்டிருக்கும் ஒட்டகச்சிவிங்கி அமைதியாக நின்றுகொண்டிருக்கிறது. ஓவியத்தின் தலைப்பாக இருக்கும் இந்தப் படிமம், முன்புலத்திலிருக்கும் இரு பெண் உருவங்களைவிடவும் சிறியதாக இருப்பதோடு, அந்தப் பெண் உருவங்களைக் கடந்து தொடுவானத்தின் திசையில் நம் பார்வை நகரும்போது சாவகாசமாகக் காணக்கூடியதாகவும் அமைந்திருப்பது ஆர்வமூட்டும் ஓர் அம்சம்.

முன்புலத்திலிருக்கும் இரு பெண்களும் ஒருவருக்கொருவர் விலகியும் தனியாகவும் நின்றுகொண்டிருக்கிறார்கள். கவைக்கோல் பொன்றவற்றால், அவர்களுடைய பின்புறம் தாங்கப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். முன்னாலிருக்கும் பிரதான பெண் உருவத்தின் தோல் உரிந்துகொண்டிருக்க, அடியிலிருப்பதும் மறைந்திருப்பதும் வெளிப்படுகின்றன. அவளுடைய மார்புக் கூட்டிலிருந்து ஓர் இழுப்பறை திறந்துகொண்டிருக்கிறது. அவளுடைய வலது காலிலிருந்து ஏழு சிறிய இழுப்பறைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இவை ஃப்ராய்டு குறிப்பிடும், உளப்பகுப்பாய்வின் மூலம் திறக்கப்படக்கூடிய மனிதனில் நிறைந்து கிடக்கும் ரகசிய இழுப்பறைகள். “ஒவ்வொரு ரகசிய இழுப்பறைகளிலிருந்தும் சுய மோகத்தின் வாசனைகள் மேலெழுகின்றன” என்று டாலி ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். முன்னிருக்கும் பிரதானப் பெண் ஏதோ ஒன்றை அடைய எத்தனிப்பது போலிருக்கிறது. பின்னிருக்கும் பெண், சதை போன்ற ஒன்றைத் தன் ஒரு கையில் பிடித்துக்கொண்டிருக்கிறாள். அடக்கிவைக்கப்பட்ட உள்ளார்ந்த ஆசைகளின் வாழ்க்கை பற்றியதாக, ஆழ்மன உலகின் கலை வெளிப்பாடாக அமைந்திருக்கும் ஓவியம். “நம் நிறைவேறாத ஆசைகளைக் கனவுகள் நிறைவேற்றுகின்றன” என்கிறார் ஃப்ராய்டு. வெளியீட்டின் துல்லியமும், வண்ணங்களின் அபாரமும், வடிவ நேர்த்தியும் இணைந்து, டாலியின் மற்றுமொரு கனவுப் புகைப்படமாக இந்த ஓவியம் மிளிர்கிறது.

சொர்க்கத்துக்கும் பூமிக்கும் இடையேயான உறவு குறித்த ஈடுபாடு, டாலியிடம் பின்னாளில் வெளிப்பட்டது. டாலியின் மறுமலர்ச்சிக் காலம் என இது அறியப்பட்டது. டாலியின் இந்த ஆர்வத்துக்கு வித்திட்ட முதல் ஓவியம், அவர் 1947-ல் ஒரு போட்டிக்காக வரைய நேர்ந்த ‘புனித அந்தோணியாரின் இச்சை’ (The temptation of St. Anthony) என்பது. இதுவும் ஒரு சர்ரியலிஸ பாணி ஓவியம்தான். புனித அந்தோணியார், எகிப்திய நாட்டில் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த செல்வந்தர். அவர் தன்னுடைய லோகாயதப் பற்றுகளையும் பந்தங்களையும் உதறிவிட்டுத் தனிமையில் தன் இறைநம்பிக்கையைப் பேணி வந்தார். பாலைவனத்தில் அவர் தொடர்ந்து இறைவனைத் தொழுதபடியே இருந்தார். ஏனெனில், சாத்தான் தொடர்ந்து அவருடைய இச்சைகளைத் தூண்டியபடியே இருந்தான் என அவர் பற்றிய வரலாறு கூறுகிறது.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 10 - சி.மோகன்

டாலியின் மிகச் சிறந்த இந்த ஓவியமும், நாம் முன்னர் பார்த்த இரு ஓவியங்களைப்போலவே, பாலைவனம் போன்ற நிலவெளியைக் கொண்டிருக்கிறது. தாழ்வான தொடுவானம், நீல ஆகாயம், கருமையான மற்றும் இதமான மேகங்கள் என அமைந்த ஓவியவெளி. ஓவியத்தின் மையப்பரப்பிலிருந்து பின்புலம் மற்றும் மேல்பகுதி வரை ஓவியக் காட்சி செயல்வேகம் கொண்டிருக்கிறது. ஓவியத்தின் இந்தப் பகுதிதான், அதன் அளவாலும் அமைப்பாலும் நம் கவனத்தை ஈர்க்கும் மையமாக இருக்கிறது.

யானைகளின் அணிவகுப்பை ஒரு வலுவான வெண்குதிரை முன்நடத்தி வருகிறது. யானைகள் மிக நீண்ட, மிக மிக மெல்லிய ஈர்க்குச்சிக் கால்களுடன் பெரும் பாரங்களைச் சுமந்து வருகின்றன. அவை தாங்கிவரும் பாரங்கள் அனைத்துமே இச்சைகளைத் தூண்டுபவை. புலன் இன்பம், செல்வம், புகழ், அதிகாரம் என்றான இச்சைகள். முதல் யானையின் முதுகில் ஒரு நீரூற்றின் மீது ஒரு நிர்வாணப் பெண் சிற்பம் நின்றுகொண்டிருக்கிறது. அது தன் கைகளால் முலைகளை ஏந்திப் பிடித்திருக்கிறது. அடுத்த யானையின் மீது நினைவுச் சின்னமான ஒரு ஸ்தூபி. தொடரும் யானை மீது அரண்மனை போன்ற ஒரு வீடு; அதன் சாளரத்தில் ஒரு நிர்வாணப் பெண் உடல். தொலைவில் வந்துகொண்டிருக்கும் கடைசி யானை ஒரு செங்குத்தான கோபுரத்தைத் தாங்கியிருக்கிறது.

இச்சைகளைத் தூண்டும் இந்த அணிவகுப்புக்குக் கீழ், ஓவிய முன்புலத்தின் இடது மூலையில், புனித அந்தோணியார் ஆடைகளேதுமின்றி, தன் வலது கையில் ஒரு சிலுவையை அவற்றுக்கு எதிராக நிமிர்த்திப் பிடித்தபடி மண்டியிட்டிருக்கிறார். அந்த அணிவகுப்பு தன்னை அண்டாதவாறு நம்பிக்கையின் திடத்தோடிருக்கிறார். தூண்டல்களின் பிரமாண்ட அணிவகுப்புக்கும் புனித அந்தோணியாரின் சிறு உருவத்துக்கும் இடையே விரிந்திருக்கும் வெட்டவெளி, இச்சைகளிலிருந்து அவர் வெகுதூரம் தள்ளியிருப்பதைப்போலிருக்கிறது. புனித அந்தோணியாரின் திடமான நம்பிக்கையில், பலத்தின் குறியீடான குதிரை பயந்தும் மிரண்டும் போயிருக்கிறது. புனித அந்தோணியார் ஏந்தியிருக்கும் சிலுவை அவருடைய நம்பிக்கையாகத் துணை நின்று, தூண்டல்கள் அவரை அண்டாமல் தடுக்கிறது. மிக அற்புதமான சித்தரிப்பில் உயிர் கொண்டிருக்கும் ஓவியம்.

சிந்தனைகளின் தீர்க்கமும், கற்பனை வளமும், வண்ண - வடிவக் கலை நேர்த்தியும், படைப்புச் சக்தியும், அபாரக் கலை ஞானமும் மனித ஆழ்மன உலகின் வாசல்கள் திறந்துகொள்ளவும் அதற்குள் அவர் வெகு சுபாவமாகப் பிரவேசிப்பதற்குமான திறவுகோல்களாக டாலிக்கு அமைந்தன. அவற்றின் உறுதுணையோடு, நம் தன்மைகளை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றும் ஆழ்மனதின் மெய்மைகளைத் தன் கனவுப் படிமப் படைப்புகள் மூலம் கண்டடைந்தார். அவருடைய இந்தக் கலைக் கண்டுபிடிப்புகள் மிகவும் பெறுமதியானவை.

(பாதை நீளும்)