Published:Updated:

‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்!’’ - வைரமுத்து

‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்!’’ - வைரமுத்து
பிரீமியம் ஸ்டோரி
‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்!’’ - வைரமுத்து

சந்திப்பு : வெய்யில், சுகுணா திவாகர் - படங்கள் : ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்!’’ - வைரமுத்து

சந்திப்பு : வெய்யில், சுகுணா திவாகர் - படங்கள் : ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

Published:Updated:
‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்!’’ - வைரமுத்து
பிரீமியம் ஸ்டோரி
‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்!’’ - வைரமுத்து

மிழ்ச் சமூகத்தின் கலைப் பண்பாட்டுத்தளத்தில் திரையிசைப் பாடல்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. தமிழர் அழகியலில் உளவியலில் திரையிசைப் பாடல்கள் கொண்டிருக்கும் தாக்கம் ஆழமானது. வைரமுத்து எனும் பெயர் தமிழ்த் திரையிசை வரலாற்றில் எழுந்த ஒரு புதுப்பரிமாணம். மரபுக் கவிதை, புதுக்கவிதை, திரையிசைப் பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள் என இலக்கியத்தின் பெரும்பாலான வடிவங்களிலும் எழுதிச் செல்கிறவர். கம்பீரக் குரல், தாளகதியிலான உடல்மொழி, கேள்விக்கும் பதிலுக்குமிடையே நொடி தாமதமற்று ஒவ்வோர் எழுத்தும் சுத்தமாக வந்துவிழும் உரைநடைத் தமிழ், மனதுக்கு நெருக்கமான வார்த்தைகளை உச்சரிக்கும் வேளைகளில் பொங்கும் உணர்ச்சி என ஈரமான வைரமுத்து, மனம்விட்டுப் பேசினார். பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் ஒரு பொன்காலைப் பொழுதில் சந்தித்தோம்...

‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்!’’ - வைரமுத்து

“வைரமுத்து என்ற அடையாளம் உருவான புள்ளி எது?”

“வைரமுத்து என்ற பெயர் நான் தேர்ந்தெடுத்துக்கொண்டதில்லை. வைரமுத்து என்ற பெயரையே என் அடையாளமாகக் கருதினால், நான் அதைத் தடுக்கப்போவதில்லை. ஆனால், வைரமுத்து என்ற பெயர்தான் அடையாளம் என்ற அளவில் நான் சுருங்கிவிடவும் மாட்டேன். வைரமுத்து என்ற பெயரை எனக்குச் சூட்டியவர் என் தாத்தா. பின்னாளில் அந்தப் பெயரை, ‘கிராமத்துச் சாயலோடு இருக்கிறது, கிராமத்தினுடைய வெள்ளந்தித்தன்மை அதில் இருக்கிறது, இதை இன்னும் நவநாகரிகமாக மாற்றிக்கொள்ளக் கூடாதா?’ என்று சில பேர் என்னைக் கேட்டார்கள். சொல்லப்போனால், பாரதிராஜாவும் இளையராஜாவுமே என்னைக் கேட்டார்கள். ‘நான் பாரதிராஜா, இவர் இளையராஜா. நீங்கள் ஏன் கவிராஜா என்று வைத்துக்கொள்ளக் கூடாது?’ என்று கேட்டார்கள். ‘உங்கள் அன்புக்கு நன்றி. பெயர்க் கூட்டணிக்கு நன்றி. ஆனால், இந்தப் பெயரில், எனது மண், எனது பாரம்பர்யம், எனது கலாசாரம் ஒட்டியிருக்கிறது’ என்றேன். வடமொழி ஓசையோடு எனது பெயர் இல்லை என்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு. சுரேஷ், ரமேஷ், ஜெயராஜ் என்றில்லாமல் வைரமுத்து என்று வைத்தமைக்காக என் முன்னோர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்தப் பெயரின் அடையாளம் என்பதெல்லாம் பின்னாளில் வந்ததுதான். மனிதனின் அடையாளம், பெயரோ, உடையோ, உடலோ, உயிரோ அல்ல. செயல்தான் மனிதனின் அடையாளம். மனிதனிலிருந்து மனிதனை மொத்தமாகக் கழித்தபிறகும் எது மிஞ்சுகிறதோ, அதுதான் அவன் அடையாளம். எனது அடையாளத்தை நீங்கள் கண்டெடுப்பதற்கு இன்னும் நாளிருக்கிறது. நான் இன்னும் முற்றிலுமாகக் கழிக்கப்படவில்லை.”

“வாழ்வனுபவம், வாசிப்பனுபவம் இவை இரண்டும் ஒரு படைப்பாளி உருவாகுவதில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. உங்களுடைய ஆரம்பகால வாசிப்பனுபவம் எப்படியானது?”

“ஒன்று, வாழ்வின் அனுபவம். மற்றொன்று, வாசிப்பினுடைய பெருக்கம். இரண்டும்தான் படைப்புக்கு மூலம் என்று நீங்கள் கருதுகிறீர்கள். மூன்றாவதாக ஒன்றை நான் கருதுகிறேன். அது உள்ளுணர்வு (Intution). என்னைவிட அனுபவப்பட்டவர்கள் இந்த மண்ணில் ஆயிரம் பேர். என்னைவிட வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் லட்சம் பேர். ஆனால், என்னில் படைப்புத்திறன் இருக்கிறது என்று நீங்கள் கருதினால், அது வெளிப்பட்டது என்பது உள்ளிருக்கும் உள்ளுணர்வால், நரம்பின் ஒற்றைத்திரிபோல் எரிந்துகொண்டிருக்கிறதே அந்தச் சுடரால். இந்த மூன்றாவது விஷயம்தான் முக்கியமான விஷயம். அது எனக்குள் எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அதை யார் மூட்டியது என்று எனக்குத் தெரியாது. அந்தப் படைப்புச் சுடர் எனக்குள் இருக்கிறது என்று நான் கண்டுகொண்டபோது எனக்கு வயது 13. உள்ளிருக்கும் திரியைத் தூண்டிவிடுவதுதான்; உள்ளிருக்கும் தீயைத் தீப்பந்தம் செய்வதுதான் அனுபவம், வாசிப்பு இரண்டும். அந்தத் திரியைத் தூண்டித் தூண்டி எரிமலை செய்வதும் அதுதான். அப்படிப் பார்த்தால், என் வாசிப்பைவிட அனுபவங்கள் அதிகம் என்று நான் கருதுகிறேன்.

என்னுடைய முதல் வாசிப்பைச் சொன்னால், ஆச்சர்யப்படுவீர்கள். ஒரு மொழிபெயர்ப்பு நூலுக்குத்தான் நான் முதல் வாசகன். பதினொன்று அல்லது பன்னிரண்டு வயதிருக்கும். ஐந்தோ ஆறோ படித்துக்கொண்டிருந்தேன். என் தாய்க்கிராமமான, கரட்டுப்பட்டிக்கு விடுமுறையில் வந்திருந்தேன். வீட்டு ஓட்டுச் சாரத்தில் செருகி வைக்கப்பட்டிருந்தது ஒரு புத்தகம். அது விக்டர் ஹ்யூகோ எழுதிய ‘ஏழை படும்பாடு’ (Les Miserables). தமிழில் அதை மொழிபெயர்த்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். அதைப் படித்துவிட்டுப் புத்தகத்துக்குள் இப்படி ஓர் உலகம் இருக்கிறதே என்று வியந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்!’’ - வைரமுத்துபுத்தகங்களைப் பற்றி எனக்கொரு கருத்து உண்டு. அது எனக்கு நேர்ந்த அனுபவத்தைப் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். அல்லது எனக்கு நேராத ஓர் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்த இரண்டும்தான் வாசிப்பின் பயன். எஸ்கிமோக்களைப் பற்றி எனக்குத் தெரியாது. அந்த ஸ்லெட்ஜ் வண்டியில் நான் பயணப்பட்டது கிடையாது. அந்தப் பனிக்குகையில் நான் வாழ்ந்தது கிடையாது. ஆப்பிரிக்கக் காடுகளில் நான் மரம் வெட்டியதில்லை. ஆனால், ஆப்பிரிக்க நாவலை, சிறுகதையை, கவிதையைப் படிக்கிறபோது, அந்த ஆப்பிரிக்கக் காடுகளில் யானைகளோடு மனிதர்கள் மரம் இழுக்கிற அந்த அனுபவத்தை என் தோள்கள் வலிக்க உணர்ந்தால்தான், அது நல்ல படைப்பு. அதை புத்தகத்தின் வழியாக அடைவது சாத்தியம்தான்.

`ஏழை படும்பாடு’ நாவலில் ஜான் வல்ஜான் என்ற பாத்திரம் சாக்கடைக்குள் நடந்துபோகிற காட்சியை, நான் மூக்கைப் பிடித்துக்கொண்டு வாசித்தேன். அந்தச் சாக்கடையின் நெடி, அவன் அடைகிற துயரம், அந்தச் சின்ன வயதில் என்னை ஆழமாகப் பாதித்தது. வாசிப்பின் மீது ருசியை ஏற்படுத்தியது. பிறகு, நான் எளிமையான வாசிப்புக்கு வந்தேன். ஈசாப் நீதிக் கதைகள் எனக்குள் ஏற்படுத்திய கனவுகள் அதிகம். ஒவ்வொரு மிருகமும் பறவையும் அப்போது என்னுடன் பேச ஆரம்பித்தன. நானே சில பொழுது விலங்காகவும் பறவையாகவும் ஆகிற அனுபவங்களையும் அது எனக்குக் கொடுத்தது.

‘அந்தி நேரம் வந்தா
தலையெல்லாம் எண்ணிப்பாரு...
ஆடு மாட்ட சேர்த்து
எங்க வீட்டில் ஏழு பேரு’


என்று ‘கருத்தம்மா’ படப்பாடலில் எழுதியிருக்கிறேன். இப்படியான உயிர் நேசத்தை ஈசாப் நீதிக் கதைகளில் நான் அடைந்தேன்.

சாண்டில்யனைக் கடக்காமல், தமிழ்வாணனைக் கடக்காமல், ஜெகசிற்பியனைக் கடக்காமல், கல்கியைக் கடக்காமல், நீங்கள் வாசிப்பு அனுபவத்துக்கு வர முடியாது. இன்று சில பழுத்த எழுத்தாளர்கள், கல்கி என்ன செய்தார்; சாண்டில்யன் என்ன செய்தார் எனக் கேட்கலாம். ஆனால், மொழியின் தாழ்வாரத்தைக் கடப்பதற்கு அவர்கள் பயன்பட்டார்கள். தாழ்வாரத்தைக் கடக்காமல், நீங்கள் வாசலுக்கு வர முடியாது. வாசலைக் கடக்காமல், சாலைக்கு வர முடியாது. சாலையைக் கடக்காமல், பயணம் செய்ய முடியாது. அவர்களின் இலக்கியத் தரமென்ன? அவர்கள் எழுதிய இலக்கியத்தின் பரிமாணம் என்ன? அவர்களுக்குப் பின் நவீனத்துவம் தெரியுமா என்றெல்லாம் கேட்காதீர்கள். என் தாய் அதிகம் படிக்காதவளாக இருக்கலாம். நான் அவள் முலையில்தான் தாய்ப்பால் குடித்தேன். இல்லையென்றால், எனக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருந்திருக்காது.”

“கலைஞரின் மேடை மற்றும் திரைப்பட வசனங்களால் பெரிதும் தாக்கம் பெற்றதாகப் பல சந்தர்ப்பங்களில் நீங்கள் சொன்னதுண்டு. என்ன வகையிலான பாதிப்பு அது?”

“பதினொன்று பன்னிரண்டு வயதில் `ஏழை படும்பாடு’ வாசித்த பிறகு, என் பதின்மூன்றாம் வயதுக்குள் கலைஞரின் வசனங்களைக் கேட்கிறேன். இசைத் தட்டுகளில் இசை கேட்டுவந்த தமிழர்கள், இசைத்தட்டுகளில் வசனம் கேட்ட காலம் அது. 1952-ல் `பராசக்தி’ வெளிவருகிறது. 53-ல் நான் பிறக்கிறேன். நான் வளரும்போது, அது பக்கத்தில் வந்துவிட்டது. அதன் அருகில் நான் வளர்கிறேன். அன்று எனக்கு பாகவதர் தெரியாது. பி.யு.சின்னப்பா தெரியாது. இளங்கோவன் தெரியாது.

எம்.ஜி.ஆர். யுகமும், சிவாஜி யுகமும், கலைஞர் யுகமும், கண்ணதாசன் யுகமும் தோன்றிவிட்டன. இவர்கள் நான்கு பேரும் தமிழ்நாட்டை ஆக்கிரமித்த மேகங்கள். ஐம்பதுகளுக்குப் பிறகு பிறந்த யாரும் இவர்களுடைய துளிகள் படாமல் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. கலைஞரின் எழுத்து என்னை எப்படி ஈர்த்தது என்றால், வெறும் மொழியால் ஒலியால் மட்டும் ஈர்க்கவில்லை. கருத்தால் ஈர்த்தது. 13 வயதிலேயே நான் நாத்திகன் ஆனதற்கு அவரின் வசனங்கள் முக்கியமான காரணம் என்று கருதுகிறேன். கடவுளை எதிர்ப்பது என்பதும் மறுப்பது என்பதும் பாணியாக, ஒரு நாகரிகமாக, ஓர் அடையாளமாகக் கருதும் ஒரு காலம் இருந்தது. அப்படி பாணியாகவும், அடையாளமாகவும், நாகரிகமாகவும் மட்டும் ஒருவன் கருதியிருந்தால் தனது நடுத்தர வயதில் நாத்திகத்தைவிட்டு அவன் வெளியேறிவிடுவான். ஆனால், அவன் தர்க்கரீதியாக, உளவியல்ரீதியாக, சமூகரீதியாக நாத்திகத்தைப் புரிந்துகொண்டால், ஒருபோதும் அதிலிருந்து வெளியேற மாட்டான். எனக்குள் அப்படித்தான் அவரின் வசனங்கள் வந்து சேர்ந்தன. மற்றொரு காரணம், கலைஞரின் வசனங்கள் கவிதைக்குப் பக்கத்திலிருந்தன.

‘வந்தாரை வாழவைக்கும் வளமிகு தமிழகமே - நீ
சொந்த நாட்டுக்காரனையே சுரண்டுவது எத்தனை நாட்களாக?’
என்று எழுதுவதில் மோனை இருக்கிறது.


மோனைக்கும் மூளைக்கும் தொடர்பிருக்கிறது. இன்று எழுதப்படுகிற அழகான கவிதைகள்கூட நெஞ்சில் ஒட்டாமல் போவதற்கான காரணம், அதில் இசை வடிவம் இல்லை என்பதுதான். நவீனக் கவிதையின் வடிவத்தைப் போகிற போக்கில் அவன் உணர்ச்சி தீர்மானிக்கிறது. அதைக் குறையென்று சொல்ல முடியாது. ஆனால், அதற்கு நிரந்தரத்தன்மையும் மூளையில் ஏற்றிக்கொண்டு திருப்பிச் சொல்வதற்கான Repeated Value-ம் இல்லாமல் போவதற்கான காரணம் அதன் இசைத்தன்மையற்ற வடிவம். அது சரியா தவறா என்று நான் வாதாட வரவில்லை. அதில் படைப்பாளிக்கு ஒரு நஷ்டம் இருக்கிறது. உனது கவிதையை மீண்டும் நீயே சொல்ல முடிவதில்லை. உனது கவிதையை மேடையில் இன்னொருவன் முழங்க முடிவதில்லை.”

‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்!’’ - வைரமுத்து

“வரி வடிவத்தைவிட ஒலி முக்கியம் என்கிறீர்கள்... கொஞ்சம் விளக்க முடியுமா?”

“மொழி என்பது என்ன? இலக்கியமா, இலக்கணமா, கவிதையா, எழுத்தா? இது எதுவுமில்லை. மொழி என்பது ஒலி. எழுத்து இல்லாமல்கூட ஒலி இருக்கும். ஆனால், ஒலி இல்லாமல் எழுத்து இல்லை. எழுத்தை நான் எப்படிப் புரிந்துகொள்கிறேன் என்றால், எழுத்து என்ற ஒரு குறியீடு, ஒலியை ஊற்றி வைப்பதற்கான ஒரு கொள்கலன். ‘த’ என்கிற எழுத்துக்குள் ‘த’ என்கிற ஒலி ஊற்றப்பட்டிருக்கிறது. எழுதப்படும் எழுத்து கையெழுத்துக்குத் தக்கபடி கோணல் மாணலாக இருக்கலாம். ஆனால், ஒலி மாறாது. வீரமாமுனிவர், பெரியார் போன்றவர்கள் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்கள். ஆனால், ஒலி மாறியதா? இல்லை. அது மாறாது. எதிர்காலத்தில் எழுத்துச் சீர்திருத்தம் வரவே செய்யும். மின் ஊடகங்களுக்கு, தொலைத்தொடர்புச் சாதனங்களுக்கு ஏற்பத் தமிழ் தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டுமென்றால், நாணப்படாமல் தனது வடிவத்தை மாற்றிக்கொள்ள அது அனுமதிக்க வேண்டும். எழுத்து என்பது மாறி மாறி வந்ததுதான். ஒலி என்பது மாறாதது. இந்த ஒலி வழியாகப் பிள்ளைகளைப் பயிற்றுவியுங்கள்.

தமிழுக்கும் இன்னும் பல தேசிய மொழிகளுக்கும் நேரப்போகிற மிகப் பெரிய ஆபத்தை இப்போதிருந்தே எதிர்கொள்ளாவிடில், பல மொழிகளை நீங்கள் காவுகொடுக்க வேண்டியது வரும். மற்ற மொழிகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. என் தாய்மொழியைப் பற்றி எனக்குத் தெரியுமென்பதால், எதன்பொருட்டும் எனது மொழியை நான் இழக்கவோ, சிதைக்கவோ, அழிக்கவோ ஒருப்பட மாட்டேன். தாய்மொழியை நான் வெறும் அடையாளம் என்று மட்டும் நினைக்கவில்லை. அது வரலாற்றின் தொடர்ச்சி, பண்பாட்டின் நீட்சி என்று நினைக்கிறேன்.  எல்லாவற்றுக்கும் மேலாக மொழி எனது அடிப்படை அதிகாரம் என்று கருதுகிறேன்.”

“ஆங்கில எழுத்துருக்களைத் தமிழின் வரி வடிவமாகப் பயன்படுத்தலாம் என்கிறாரே ஜெயமோகன்?”


“எதற்குமே ஒரு மொழி தயாராக இருக்க வேண்டும். அப்படி ஓர் எழுத்து மாற்றம் வந்தால், அது ஆங்கிலமாக இருக்குமோ, இருந்து தொலைக்குமோ என்பது எனக்குத் தெரியாது.”

“உங்களுடைய தமிழைச் செழுமைப்படுத்தியது திராவிட இயக்கக் கலைச்செயல்பாடுகள் என்று சொல்கிறீர்கள். உங்களைக் கருத்தியல் ரீதியாக ஒழுங்கமைத்ததும் திராவிட இயக்கம்தானா? ஏனென்றால், திராவிட இயக்கம் என்ற பொதுப்பெயர் இருப்பினும் பெரியார் - தி.மு.க இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டே?”

“பெரியாருக்கும் தி.மு.க-வுக்குமான கருத்தியல் வேறுபாடு என்பது பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு சின்னச் சமரசம் மட்டுமிருந்தது. ‘கடவுள் இல்லை... இல்லவே இல்லை’ - இது பெரியார். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ - இது அண்ணா. ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி’ - இது பெரியார். ‘இல்லை, தமிழ் பண்பட்ட மொழி’ - இது அண்ணா. இவ்வளவுதான் கருத்து வேறுபாடு. மற்றபடி தமிழின மீட்பு, தமிழர் மாட்சி, மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு என்பனவற்றை முன்னெடுத்துத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் 49-ல் தன் பயணத்தைத் தொடங்கியது. பின்னாளில் அதில் நேர்ந்த மாற்றங்கள், சிதைவுகள் பற்றி நான் இப்போது பேசவரவில்லை. அதுசார்ந்து எனக்கு ஆயிரம் கருத்துகள் உண்டு. அதைப் பதிவுசெய்யும் தளமும் இதுவல்ல. பெரியாருடைய கருத்து கருத்தியல்ரீதியாக எல்லோரையும் கவர்ந்தது. சிந்திக்கத் தெரிந்தவனையெல்லாம் தன் பக்கம் திருப்பியது. அதேசமயம், சிந்திக்கத் தெரியாதவனையும் தன் பக்கம் திருப்பியது திராவிட முன்னேற்றக் கழகம்.

பெரியார் சொல்கிறார், `நான் பேச்சாளன் அல்ல, எழுத்தாளன் அல்ல. நான் கருத்தாளன்’ பெரியாரைவிட எழுதியவர், பேசியவர் யாரும் இருக்க முடியுமா? ஆனால், அவர் பேச்சாளனுக்கும் எழுத்தாளனுக்கும் உண்டான சில அடிப்படை நியதிகள் தனக்கு இல்லை என்று நினைக்கிறார். அதன் பொருட்டே அப்படிச் சொல்கிறார். மொழியைத் தனது கைத்தடிபோலக் கருதுகிறார். தனது கருத்தைக் கடத்திச்செல்ல உதவும் ஒரு கருவி,மொழி. அவ்வளவுதான். என் கைத்தடியை எப்படி பூஜிக்க முடியாதோ அதுபோலவே மொழியையும் பூஜிக்க முடியாது என்று நினைக்கிறார். நாம் புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், அன்றைக்கு 50-களில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 3.1 கோடி, அதில் கற்றவர்களின் எண்ணிக்கை 20.8 சதவிகிதம். செய்தித்தாள்கள் வழியாக ஓரளவுக்குத்தான் மக்களைச் சென்றுசேர முடியும். ஜனநாயகக் கருத்துகளைப் பேச முடியும். இந்த ஜனத்தொகையில் இந்தக் கல்வியறிவு கொண்ட நாட்டில், அன்றைக்குப் பேசித்தான் ஓர் இயக்கம் மக்களை அடைய முடியும். அதற்கு அப்படியான ஒரு மொழி தேவைப்பட்டது. இன்றைக்கு எவ்வளவோ தொழிற்நுட்ப வளர்ச்சிகள், ஊடக வளர்ச்சிகள் வந்துவிட்டன; அன்று அப்படி அல்ல. சினிமாவிலும்கூட பொழுது போக்குக்கு நடுவே சில கொள்கைகளைச் சொல்லலாமே தவிர, முழுமையாகக் கொள்கைகளைச் சொல்ல முடியாது. இந்த நிலையில் மேடையில்தான் ஒருவர் சமரசமில்லாமல் பேச முடியும். அப்படி சமரசமில்லாமல் மேடையில் இருந்தவர் பெரியார். அதைப் பின்பற்றியவர்கள் அண்ணாவும் கலைஞரும்.  இதில், உள்ளதை உள்ளபடி சொன்னார் பெரியார். உள்ளதை உணர்ந்தபடி, உணரும்படி சொன்னார் அண்ணா. அவ்வளவுதான் வேறுபாடு.”

‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்!’’ - வைரமுத்து

“உங்களைத் திராவிட இயக்க எழுத்தாளர் என்று அடையாளப்படுத்த முடியுமா?”

“திராவிட இயக்கத்திலிருந்து முகிழ்த்து வந்த படைப்பாளி என்று நானே என்னை அடையாளப்படுத்திக்கொள்கிறேன். ஆனால், திராவிட இயக்கம் என்ற விரிகுடாவில் மட்டும் நீச்சலடிப்பவன் அல்ல நான். எனக்குப் பல்வேறு கடல்கள் இருக்கின்றன. மொழி என்ற ஓர் ஆற்று வழியே சென்று திராவிட விரிகுடாவில் கலந்த நான் அவ்வப்போது ஆவியாகி உலகம் சுற்றவும் ஆரம்பிப்பேன். அதனால், நான் திராவிட இயக்கத்துக்கு மட்டுமே உரியவன் என்றோ, திராவிட இயக்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவன் என்றோ என்னைப் பிரித்தறிய முற்படவில்லை.”

“ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு நண்பராக இருப்பதின் சாதகபாதகங்கள் என்ன?”

“ஒரு முதலமைச்சருக்கு என்னென்ன இன்ப துன்பங்கள் இருக்கும் என்பதை அவரோடு பக்கத்திலிருந்து அனுபவித்திருக்கிறேன். எனவே, முதலமைச்சர் குறித்த ஒரு படைப்பை என்னால் மிகச் சரியாக எழுத முடியும். அந்த அனுபவத்தை அவரிடமிருந்து வரித்துக்கொண்டிருக்கிறேன். இது சாதகம். பாதகம் என்னவென்றால், அவர் முதலமைச்சராக இருந்தபோது அவர் அணுக்கத்தில் இருக்க வேண்டும் என்ற என் ஆவலாலும் அவரது ஆவலாலும் நான் நிறைய  திரைவாய்ப்புகளை  இழந்திருக்கிறேன். இன்னொரு முக்கியமான சங்கடம், பழகிய ரகசியங்களைக் கற்போடு காப்பாற்றுவது.” (சிரிக்கிறார்)

“நேரடி அரசியலில் ஈடுபடும் எண்ணம் வந்திருக்கிறதா, இனிமேல் வருமா?”

“மனம்விட்டுச் சொல்லட்டுமா? இதுவரை எப்போதும் எங்கும் சொல்லாததைச் சொல்கிறேன். எல்லா அரசியல் கட்சிகளிலும் சிறந்த கோட்பாடுகள் இருப்பதாக நான் கருதுகிறேன். சிறந்த தலைவர்கள் இருப்பதாகவும் கருதுகிறேன். நல்ல எண்ணங்களும் லட்சியங்களும் அவர்களுக்கு வாய்த்திருப்பதாகப் பல நேரங்களில் நான் நம்புகிறேன். ஆனால், எல்லா கட்சிகளிலும் எனக்கு முற்றிலும் உடன்பாடில்லாத பல நிகழ்வுகள் இருப்பதையும் கவனிக்கிறேன். நான் ஓர் அரசியல் கட்சியில் இணைந்தால், அவர்களின் நன்மைக்கு வாழ்த்துப்பாட்டுப் பாடுகிற அந்த உரிமை, அவர்களது தீமையை எதிர்ப்பதற்குக் கிடைக்குமா? அவர்கள் செய்கிற எல்லா நன்மைகளையும் வாழ்த்துகிறபோது, அவர்களின் தவறுகளையும் வாழ்த்துவதற்கு எதிர்பார்ப்பார்கள். எனக்கு எல்லாவற்றையும்விட மனசாட்சி முக்கியம். தமிழைவிட, அரசியலைவிட, என்னைவிட, இலக்கியத்தைவிட, எனக்கு மனசாட்சி முக்கியம். உண்மையாக மனசாட்சிக்கு மட்டும் கட்டுப்படுகிற ஒரு கலைஞன், எந்த அரசியல் கட்சியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியாது. இன்னொன்று, என் சுதந்திரம் என்பது என் நேரத்தை நானே தீர்மானிப்பதில் இருக்கிறது. நேரடி அரசியலில் ஈடுபடுகிறபோது எனது நேரம், எனது எண்ணம் இரண்டுமே எனக்குச் சொந்தமில்லை. இந்த இரண்டும் எனது இலக்கியத்துக்கு எதிராக அமைந்துவிடும் என்று அஞ்சுகிறேன். தமிழகத்தில் உயர்ந்த கட்சிகளில் உயர்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கே தெரியாத பிழைகள், அந்தக் கட்சிகளில் நேர்ந்துகொண்டிருக்கின்றன. அந்தப் பிழைகளுக்கும் ‘ஜே’ போடுவது எனக்கு உடன்பாடாக இருக்குமா? அதனால்தான், பாவேந்தர் பாரதிதாசன் போன்ற பெருங்கவிஞன்கூட ஒரு கட்சி என்ற செப்புக்குள் சிக்கிக்கொள்ளாமல் திமிறித் திமிறி வெளியே வந்தான். கண்ணதாசனுக்கும் அது நேர்ந்தது. கடந்த காலக் கவிஞர்கள் பலரும் ஒரு கட்சிக்கே வாழ்க்கைப்படாமல் போனதும் அதனால்தான்.”

“காலந்தோறும் இலக்கியப் போக்குகள் மாறி வந்திருக்கின்றன. மரபிலிருந்து புதுக்கவிதைப்போக்கில் ‘வானம்பாடிகள்’ ஒரு திசை என்றால், நவீன இலக்கியத்தில் ‘எழுத்து’ ஒரு திசை. பிறகு அமைப்பியல், பின்நவீனம் எனக் கோட்பாட்டு ரீதியிலான புதிய உரையாடல்கள் வந்தன. இப்படி நீளும் இந்த இலக்கியத் தொடர்ச்சியில் எந்த இடத்தில் உங்களையும் உங்கள் படைப்புகளையும் பொருத்திக்கொள்கிறீர்கள்?”

``மாறிக்கொண்டிருக்கிற எல்லா வடிவங்களுக்கும் ஒரு கவிஞன் மாறிக்கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லாதது. ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் இருக்கிறது. வேறொரு முகத்துக்குச் சந்தை இருக்கிறது என்று என்னுடைய முகத்தை மாற்றிக்கொள்ள முடியுமா? பள்ளிக்குச் செல்லும் ஒரு மாணவன் நவ நாகரிகத் தாய்மார்களுக்கு நடுவே, பழைய புடைவை உடுத்திய வியர்வை வழியும் முகம்கொண்ட தன்னுடைய சொந்தத் தாயை ‘அம்மா’ என்று அடையாளப்படுத்தி அழைக்காமல், நாகரிக உடை அணிந்த நாரீமணியைத் தன் அம்மா என்று அழைத்தால் அது எவ்வளவு இழிவோ அவ்வளவு இழிவு அது. எங்களுக்கு என்று மரபு ரீதியிலான ஒரு முகமிருக்கிறது. அந்த மரபு முற்றிலும் பழைமை அல்ல. முற்றிலும் புனிதங்களை உடைப்பதல்ல. நவீன இலக்கியவாதிகள் பலர் புனிதங்களை உடைக்க வேண்டும் என்கிறார்கள். ஏன் எல்லா புனிதங்களையும் உடைக்க வேண்டும்?

‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்!’’ - வைரமுத்து


இந்தத் தேசத்தில் எழுத்துகளால் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது ஒரு கூற்று. மாற்றங்கள் நிகழ்கிற இடத்தில் எழுத்து நிகழ்கிறது என்பது இன்னொரு கூற்று. மகாகவி பாரதியார்  பாடி இந்த நாட்டுக்குச் சுதந்திரம் வரவில்லை. அப்படியென்றால், மற்ற மாநிலங்களுக்குச் சுதந்திரம் கிடைக்காமல் போயிருக்குமல்லவா என்பது சிலர் வாதம். சுதந்திரப் போராட்டத்தில் மகாகவி பாரதி பெற்றெடுக்கப்பட்டான். அந்தக் காலகட்டத்தின் ஓட்டத்தைப் புரிந்துகொண்டு அவன் கவிதை எழுதினான். காலம் கோரிக்கை வைத்தது, அவன் நிறைவேற்றிக்கொடுத்தான். அவ்வளவுதான். எழுத்தாளனால் சமூக மாற்றம் என்பது நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடியது. அப்படியும் நிகழும். ஆனால், எல்லா எழுத்துமா சமூகத்தை மாற்றிவிடுகின்றது? எனவே ஒரு படைப்பாளன் அத்தனை இலக்கியக் கொள்கைகளின் பின்னால் போவது என்பது பிழையான ஒரு மூடநம்பிக்கை. உங்களது உண்மையான நம்பிக்கையை எழுதுங்கள்; அந்த எழுத்து தனக்குத் தேவையான வடிவத்தை,  கோட்பாடுகளை தானே தேடிக்கொள்ளும். நான் மரபுக் கவிதையில் தொடங்கினேன். புதுக்கவிதைக்கு வந்தேன். வந்தபோதுகூட மரபுக் கவிதைகளின் வேர்களை நான் விட்டுவிடவில்லை. புதுக்கவிதையின் பூக்களை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால், மரபின் சில அடிப்படையான விழுமியங்களை நான் இழந்துவிடவில்லை. கவிதைகள் மாறிக்கொண்டே போகலாம். நானும் மாறிக்கொண்டே போனால், என் காலத்தின் மீதே எதிர்காலத்தில் சந்தேகம் வரும். சில கோட்பாடுகளையும், விழுமியங் களையும், வடிவக் கொள்கைகளையும் பிடிவாதமாகப் பின்பற்றுகிறேன். அதில்தான் நான் நிலைப்பேன்.”

“நவீனக் கவிஞர்கள் உங்கள் கவிதைகளைப் பொருட்படுத்துவதில்லை என்பதில் உங்களுக்கு ஆதங்கம் உண்டா?”

“இல்லை. பண்டிதத்தளத்தில் இயங்கும் விமர்சனங்கள் மக்கள் தளத்தில் இயங்கும் படைப்புகளை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொண்டதில்லை. கம்பனுக்கு ஒட்டக்கூத்தனிடம் நேர்ந்தது, கோபாலகிருஷ்ணபாரதிக்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் நேர்ந்தது, பாரதிக்கு மடங்களில் நேர்ந்தது, பாரதிதாசனுக்கு வருணாசிரமத்திடம் நேர்ந்தது, கண்ணதாசனுக்கு இலக்கணப் பண்டிதர்களிடம் நேர்ந்தது, நிகழ்கால மக்கள் கவிதைகளுக்கும் நேரவே நேரும். விமர்சனம் உதிர்ந்துபோகும். நல்லிலக்கியம் நிலைக்கும். எனது கவிதைகளைப் பொருட்படுத்த வேண்டும் என்று நான் விமர்சகர்களை எதிர்பார்ப்பதில்லை. நான் வாசகர்களையே மதிக்கிறேன். தமிழ்நாட்டில் அதிகமான பதிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கிற கவிதைப் புத்தகங்கள் என்னுடையவை என்று இலக்கிய உலகத்துக்குத் தெரியும். அதிகமான எண்ணிக்கையே தரமாகிவிடுமா என்றும் கேட்கலாம். திருக்குறளும் பாரதி கவிதைகளும் தமிழில் அதிக எண்ணிக்கை கண்டவை. அதனால், தரம் குறைந்தவை அல்ல. அதனாலேயே அந்த உயரத்துக்கு என் படைப்பை ஏற்றிவைத்துக்கொள்ளவும் விரும்பவில்லை. விமர்சனமும் ஒரு கலை, விமர்சனமும் ஓர் இலக்கியம் என்று நம்புகிறவன் நான். எந்த விமர்சகரையும் நான் காயப்படுத்த விரும்பவில்லை. இலக்கியத்தின் வழியாக நான் அன்பை விதைக்க, மானுடத்தை வளர்க்க விரும்புகிறேன். அதுவே என் விருப்பம். எனது எதிர்வினை மிகக் கூர்மையானது. நான் அதை வாளாக எடுத்து வீசுவதைவிட வாளாவிருப்பதே சிறந்தது. அதனால், என் வாளை உறைக்குள் போட்டு, ஒரு பூட்டும் போட்டுப் பூட்டிவைத்திருக்கிறேன். வேண்டாம். வாள் வீசக்கூடிய காலம் இது இல்லை. இது அன்பிற்கான காலம்.”

‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்!’’ - வைரமுத்து

“அறிவுத்தளத்தில் ஒரு பாடலாசிரியர், கவிஞரைவிடவும் குறைத்து மதிப்பிடப்படுகிறார். மக்கள் மத்தியில் பாடலாசிரியரைவிடவும் கவிஞர் குறைத்து மதிப்பிடப்படுகிறார். இந்த முரண்பட்ட இரண்டு யதார்த்தங்களை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்?”

“பாடலாசிரியனுக்கு ஏன் உயர்வு என்று கேட்டால், அவனுக்கான மக்கள் தொடர்பு, விளம்பரம், அவன் ஈட்டுகிற பணம் போன்றவற்றால் உயர்வாகக் கருதப்படுகிறான். ஏன் தரம் தாழ்ந்து கருதப்படுகிறான் என்றால், அவன் பாடலில் எழுதுகிற கருத்தெல்லாம் அவன் கருத்து அல்ல. அது கதாபாத்திரத்தின் கருத்து. ஆனால், கவிஞன் அப்படி அல்ல. இவனுக்குப் பணம் கிடையாது; விளம்பரம் கிடையாது; அதே சமயம்  இவன் நினைத்ததை மட்டுமே எழுதுகிறான். மக்களுக்குத் தேவையானதை எழுதுகிறான். இது கலைக்கும் தொழிலுக்குமான இடைவெளி. சமரசமுடையது தொழில்; சமரசமற்றது கலை. சமரசம் உள்ளவன் சற்றே தாழ்வாகக் கருதப்படுகிறான்; சமரசமற்றவன் மேன்மையாகக் கருதப்படுகிறான்.”

“கவிஞர் என்ற பொதுவான அடையாளங்களைத் தாண்டி, கவியரசு, கவிப்பேரரசு, கவிக்கோ போன்று பெயருக்கு முன் இட்டுக்கொள்ளும் அடையாளங்கள் எல்லாம் முடியாட்சிக் காலப் பழைமைகளின் எச்சங்கள். இவை ஜனநாயக காலத்துக்குத் தேவை என்று நினைக்கிறீர்களா?”


“ஜனாதிபதி சாரட் வண்டியில் வருவதுகூட முடியாட்சியின் எச்சம்தான். மாற்றிவிடலாமா? தமிழ்நாட்டில் கலைஞர்கள்மீது ஒரு கொஞ்சுதல் உண்டு. இதுதான் இங்கு அடிப்படையான விஷயம். தமிழர்கள் கலைகளைக் கொஞ்சிக் கொஞ்சி வளர்ப்பார்கள். தங்களுக்குப் பிடித்தமானவர்களைக் கொஞ்சுவார்கள். அந்தக் கொஞ்சுதல் என்பதுதான் கலைஞர்களுக்கான ஊக்கம். இந்தப் பட்டங்கள் எல்லாம் நாங்கள் தேடிப்போனதல்ல. ‘கவியரசு’ என்பது தமிழ் வளர்ச்சி மன்றம் என்னைக் கொஞ்சிக் கொடுத்தது. ‘ ‘கவியரசு’ என்ற பட்டம் கண்ணதாசனுக்குத்தான் உரியது, நீ எப்படி இட்டுக்கொள்ளலாம்?’ என்று கேட்டார்கள்.  ‘ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் என்று சொல்வதுபோல நான் இரண்டாம் கவியரசாக இருந்துவிட்டுப் போகிறேன்’ என்று வேடிக்கையாகச் சொன்னேன். அப்போதும் அவர்கள் சம்மதிக்கவில்லை. சரி வேண்டாம், ‘கவியரசு’ கண்ணதாசனுக்கு மட்டுமே உரியது என்று பட்டத்தைத் துறந்துவிட்டேன். கலைஞர் அப்போது முதலமைச்சராக இருந்தார். ‘அதை ஏன் துறந்தீர்கள்? அது நீங்களாகப் போட்டுக்கொண்ட பட்டமில்லையே... உரியவர்கள் கொடுத்ததுதானே?’ என்று சொன்னார். ‘இல்லை அய்யா, சிலருக்கு அதில் விருப்பமில்லை;  வருத்தப்படுகிறார்கள். கவிஞன் ஒரு சமூகத்துக்கு மகிழ்ச்சி அல்லவா தர வேண்டும். ஆகவே, நான் அதைத் துறந்து அவர்களுக்கு மகிழ்ச்சி தந்துவிட்டேன்’ என்றேன். அதற்குப் பிறகு, ‘பெய்யெனப் பெய்யும் மழை’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது கலைஞர் அரங்கத்தில். என் மனைவி முன்னுரை சொல்கிறார். பின் நான் கவிதையை அரங்கேற்றுகிறேன். கலைஞர் பேச வருகிறார். ‘இந்தச் சபையில் துணைவேந்தர்கள் இருக்கிறீர்கள், நீதியரசர்கள் இருக்கிறீர்கள், அதோ அப்துல் ரகுமான் இருக்கிறார், ஈரோடு தமிழன்பன் இருக்கிறார், கவிஞர் குலோத்துங்கன் இருக்கிறார், பெரும் புலவர்களும் தமிழறிஞர்களும் இருக்கிற இந்தச் சபையில் உங்களுடைய வாழ்த்துகளோடு நான் வைரமுத்துவுக்கு ஒரு பட்டம் தருகிறேன். இன்று முதல் அவர் ‘கவிப்பேரரசு’ ’என்றார். சபையோர் கைதட்டினார்கள். கலைஞர் கொஞ்சிக் கொடுத்த பட்டம் அது.  ‘கவிப்பேரரசு’ என்று இட்டுக்கொள்வது, எனக்கு ஒரு பெருமை என்பதற்காக அல்ல. கொடுத்தவர் கலைஞர்... அதை மதிக்க வேண்டும் என்பதற்காக நான் அதைப் போற்றி வைத்திருக்கிறேன்.”

“கவிஞரான உங்களுக்கு ஏன் சிறுகதை, நாவல் போன்ற வடிவங்களும் தேவைப் படுகின்றன?”


“ஆழமாகச் சொல்வதற்குக் கவிதையையும் அகலமாகச் சொல்வதற்கு உரைநடையையும் நான் வைத்திருக்கிறேன். எனக்கு விரிவு தேவைப்படுகிறபோதெல்லாம் நான் உரைநடைக்கு வருகிறேன். செறிவு தேவைப்படும்போதெல்லாம் கவிதைக்குப் போகிறேன். கவிஞன் என்பவன் கவிஞனாக மட்டுமே இருந்தால், வெறும் 1,200 (ஒரு கவிதை நூலின் விற்பனை எண்ணிக்கை) பேருக்கு மட்டுமே சொந்தமானவன். உரைநடைக்குப் போனால், அவன் மக்கள் மயமாவதற்கான வாய்ப்பைப் பெறுகிறான். இன்று மக்களின் வாசிப்பு என்பது கவிதையைவிட உரைநடையில்தான் அதிகம் நடக்கிறது. ஊளைச்சதையற்ற உரைநடையைச் செதுக்குவதற்குக் கவிதை கொடுத்த பயிற்சி பயன்படுகிறது.”

“ஒரு நேர்காணலில் ஞானபீட விருதுக்குத் தகுதியானவர்களாக கி.ரா, அசோகமித்திரன் இருவரையும் குறிப்பிட்டு இருந்தீர்கள். நீங்கள் மூவருமே சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள். அவர்களது படைப்புகளுக்கும் உங்களது படைப்புகளுக்குமான இடைவெளி என்பது என்னவாக இருக்கிறது என்று கருதுகிறீர்கள்?”

“நீங்கள் குறிப்பிடும் இந்த இரண்டு மூத்த எழுத்தாளர்களும் திட்டமிட்டு உரைநடையில் அலங்காரத்தை உடைத்து உதறி எறிந்துவிட்டார்கள். அலங்காரம் இருந்தால், அது கதை அல்ல; கலை அல்ல என்பது அசோகமித்திரன் கொள்கை. என்ன நிகழ்வோ; எது மட்டும் தேவையோ, அது மட்டும் போதும் என்பது அவரது நம்பிக்கை. ஒரு கணத்தின் அதிர்வு போதும் ஒரு கதைக்கு என்று நினைப்பவர் அசோகமித்திரன். ஒருவன் இன்னொருவனிடம் கடன் கேட்கப் போகிறான், கடைசிவரை அவனால் கடன் கேட்கவே முடியவில்லை. இது போதும் அவருக்கு. அதை அலங்காரம் சேர்க்காமல் செயற்கையாக இல்லாமல் எழுதிவிடுவார்.

கி.ராவின் மிகப்பெரிய பலமே அவர் கல்வியாளர் இல்லை என்பதுதான். பள்ளியில் கற்றிருந்தால், அவர் பாஷையில் சொல்வதென்றால் அவரது எழுத்துக்குக் ‘கிருத்திரியம்’ வந்திருக்கும். அந்தக் கிருத்திரியம் இல்லாமல் இருப்பதே அவர் பள்ளிக்கூடம்போய் ஒழுங்காகப் படிக்கவில்லை என்பதால்தான். வாழ்க்கை, மொழி, சந்தித்த மனிதர்களை எழுதுகிறார் கி.ரா. அவரின் எழுத்துகளை வட்டார மொழிக்கு அமைந்த கல்வெட்டுகளாகக் கருதுகிறேன்.

நானோ, யதார்த்தம் எவ்வளவு முக்கியமோ, அதில் கலைத்தன்மையும் முக்கியம் என்று நினைக்கிறேன். அந்தக் கலைத்தன்மையை வர்ணத்தைப்போல நான் பூசிச் சேர்ப்பதில்லை. அது இலையில் பசுமைபோல, மலரில் மகரந்தம்போல, இழைந்திருக்க வேண்டும். உடலில் உதிரம்போல உள்ளிருக்க வேண்டும். மழையில் கரைந்துவருகிற நைட்ரஜனைப் போல என் படைப்பில் கலை கலந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதுதான் எனது படைப்புக்கும் அவர்கள் படைப்புக்குமான வேறுபாடாக நான் கருதுகிறேன். அழகியல் உணர்வில்லாத மனிதன் யார் சொல்லுங்கள்? அந்த அழகியல் என் படைப்பில் சற்றுத் தூக்கலாக இருப்பதாகப் பாராட்டுகிறவர்களும் உண்டு; குற்றம் சாட்டுகிறவர்களும் உண்டு. என் எழுத்துகளில் தமிழியத்தின் தொடர்ச்சியான ஆதி அழகியல் உண்டு.”

‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்!’’ - வைரமுத்து

“பெண்ணியம், தலித்தியம் சார்ந்த உரையாடல்களை, படைப்புகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``காலத்தின் தேவையாகப் பார்க்கிறேன். அதேசமயம், இலக்கியத்துக்கு இனக்குழுக்களின் பெயர்களைச் சூட்டாதீர்கள் என்கிறேன். கறுப்பர்கள் இலக்கியம் படைக்கலாம், ஆனால், அது கறுப்பு இலக்கியம் அல்ல. என் தலித் சகோதரர்கள் இலக்கியம் படைக்கட்டும். இலக்கியத்தைப் படித்து அது எந்த இலக்கியம் என்று வாசகர்கள் தெரிந்துகொள்வார்கள். அதற்குப் பெயர்கள் வேண்டாம்.”

“கிராமம் சார்ந்த, வட்டார அழகியல் மிக்க உங்கள் படைப்புகளில் கிராமத்தின் சாதிய முரண்களைப் பார்க்க முடியவில்லையே? அதைப் பதிவுசெய்வது குறித்து உங்கள் மனநிலை என்ன?”

“எனது இலக்கியத்துக்குச் சத்தியம்தான் மூலம் என்று நினைக்கிறேன். நான் பாராத வாழ்க்கையை எழுத முடியுமா? நான் கேளாத மொழியைப் பதிவுசெய்ய முடியுமா? நான் வாழ்ந்த வாழ்க்கை, நான் பட்ட வலி, பெற்ற பாடம், சந்தித்த மனிதர்கள், அவர்களின் கண்ணீர், துயரம், காதல், காமம், இழப்பு, இறப்பு இவையெல்லாம் நான் பார்த்தது. நிஜ முகங்களைப் பதிவுசெய்வதாக இருந்தால், நான் சின்ன வயதிலிருந்து பார்த்த என் சமூகம் சார்ந்த விஷயங்களைத்தான் பதிவுசெய்ய வேண்டியதிருக்கும். ஆனால், அது இன்னொரு சமூகத்துக்கு விரோதமாகவோ, அந்தச் சமூகத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பதாகவோ இருந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

`கள்ளிக்காட்டு இதிகாசம்’ படித்துவிட்டு ஒருவர் மேடையில் பேசினார், ‘பேயத்தேவர் என்கிற பெயரை எடுத்துவிட்டுப் பெரியசாமிக் கவுண்டர் என்று போட்டால் அதுதான் எங்கள் குடும்பத்தின் கதை’ என்றார். இந்தப் பொதுமைதான் முக்கியமானது. ஒரு சாதியையோ ஒரு சமூகத்தையோ அடையாளப்படுத்துவது எனது நோக்கமல்ல. புஞ்சை வெளிகளில் வானத்தை நம்பி வாழ்கிற, படிப்பறிவற்ற ஏர்க்கலப்பையையும் மாட்டையும் தன் கைகளையும் நம்புகிற, மனிதனின் சமூக வாழ்க்கை என்பது தமிழ்நாட்டின் பொது வாழ்க்கை. அந்தப் பொது உண்மையை நான் பார்த்த அளவில் எழுதுவதற்காக என் சமூகத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டேன். யதார்த்தத்துக்காக, சத்தியத்துக்காக. அது ஒரு சாதிக்கு மட்டுமே உரியதன்று.”

“சில குறிப்பிட்ட சாதிகளை, அதன் பண்பாட்டு அடையாளங்களைப் பெருமிதமாக அடையாளப்படுத்தி வெளிவரும் சினிமாக்கள் பல காலமாக வந்தபடி இருக்கின்றன. சாதியை விமர்சித்து வரும் சினிமாக்களும் அவ்வப்போது வருவதுண்டு. இப்போது தலித் அரசியலை நேரடியாகப் பேசும் சினிமாக்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“தலித்துகள் ஏன் சினிமா எடுக்கக் கூடாது. அவர்களின் வாழ்க்கையை யார் சொல்வது? அவர்களின் வாழ்க்கை துண்டு வாழ்க்கையாகச் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, மொத்த வாழ்க்கையாகச் சொல்லப்படவில்லை. தலித் வாழ்க்கையை வாழ்ந்த ஒரு கலைஞன்தான் அதை முழுமையாகச் சொல்ல முடியும். அதே சமயம், எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலைத்துறைக்கு வந்தாலும், தங்கள் சமூகம்தான் பெருமிதமான சமுதாயம் என்று உயர்த்திப் பிடிப்பது சாதியச் சண்டைகளுக்கு வித்திட்டுவிடும். தங்கள் சமூகத்தின் பெருமைகளைச் சொல்லுங்கள். தங்கள் சமூகத்தின் சிறப்புகளைச் சொல்லுங்கள். கடைசிவரைக்கும் போராடுகிற போராட்டத்தைச் சொல்லுங்கள். இன்னொரு முக்கியமான விஷயம், தலித்துகளைப் பற்றி தேவர்கள் படமெடுக்க வேண்டும். தேவர்களைப் பற்றி தலித்துகள் படமெடுக்க வேண்டும். அதுதான் சமூக நல்லிணக்கத்தை உண்டாக்கும்.”

“திராவிட அரசியல் குறித்துக் குற்றம் சாட்டும் படம் ‘இருவர்’. அந்தப் படத்தில் பணிபுரியும்போது ஏதேனும் சங்கடங்கள் ஏற்பட்டனவா?”

“ஒன்றுமே கிடையாது. சொல்லப்போனால், நான் நன்கு உழைத்தேன். எம்.ஜி.ஆர் படங்களுக்குப் பாடல் எழுத முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு. எழுதியிருந்தால் எவ்வளவு இலக்கியம் பண்ணியிருக்கலாம் என்று நினைத்துப் பார்ப்பேன். ஏனென்றால், நான் முதலில் எம்.ஜி.ஆரின் ரசிகன். பிறகுதான் சிவாஜி ரசிகன். அவர் 77-ல் முதலமைச்சர் ஆகிறார். நான் 80-ல்தான் பாட்டெழுத வருகிறேன். நான் அவருக்கு எழுதிய ஒரே பாட்டு அவரது இறுதி ஊர்வலத்துக்கானது. ஆகவே, என் தமிழ் எம்.ஜி.ஆருக்குப் பயன்படவே இல்லை.

50-களில் 60-களில் பாட்டெழுதி யிருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்று அறிந்துகொள்ளும் ஒரு வேட்கை இருந்தது எனக்கு. அந்த வேட்கையை முழுமையாகத் தீர்த்துக்கொண்ட படம்தான், `இருவர்.’ மணிரத்னமும் ஏ.ஆர்.ரஹ்மானும் நானுமாகச் சேர்ந்து இயங்கிய படங்களில் சிறந்த பாடல்களைக் கொண்ட படமாக நான் ‘இருவர்’ படத்தைத்தான் சொல்வேன்.”

“கலைஞருக்கு அந்தப் படத்தில் விமர்சனம் இல்லையா?”

“ `இருவர்’ படத்தை முதலில் அவர் பார்க்கவில்லை. ஆனால், அவருக்குத் தவறாகவே சொல்லப்பட்டுவிட்டது. ‘எப்படி இருக்கு அந்தப் படம்?’ என்று என்னிடம் கேட்டார். ‘யார் சொல்வதையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அதில் உங்கள் புகழைச் சிதைக்கிற வகையில் எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் படத்தைப் பார்த்துவிட்டு முடிவுக்கு வாருங்கள்’ என்று சொன்னேன். அவர் படம் பார்த்துவிட்டு, ‘அப்படி ஒண்ணும் இல்லையே...’ என்றார்.”

“பாடல் எழுதுவதைத் தாண்டி, இசையமைப்பு, இயக்கம், நடிப்பு என்று சினிமாவின் வேறு துறைகளில் வேலை செய்யும் ஆர்வம் இல்லையா?”

“எனக்கு மொழிஅறிவைத் தவிர எதுவுமே தெரியாது. மற்ற விஷயங்களில் நான் ஒரு ‘பூஜ்யம்.’ பாடலாசிரியர்களில் என்னையும் பட்டுக்கோட்டையையும் தவிர எல்லோருமே படம் தயாரித்திருக்கிறார்கள். கண்ணதாசன், மருதகாசி, ஆலங்குடி சோமு, வாலி, புலமைப்பித்தன் எல்லோருமே படம் தயாரித்திருக்கிறார்கள். நான் சில கட்டுப்பாடுகளை எனக்கு வைத்திருக்கிறேன். அதை இன்றுவரை கடைப்பிடித்தும் வருகிறேன். படம் நடிப்பதில்லை, படம் எடுப்பதில்லை, எழுத்து தவிர எந்தவொரு சினிமா வியாபார உறவும் வைத்துக் கொள்வதில்லை. அதேபோல் சினிமாவுக்கு என்று இருக்கக்கூடிய சில ‘சாயங்காலக் கொள்கை’களையும் கடைப்பிடிப்பது இல்லை.” (சிரிக்கிறார்)

“தமிழ் சினிமா இன்று பலவிதமான பரிசோதனைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. இன்றைக்குப் பாடல்களிலும்கூட அப்படியான ‘முயற்சிகள்’ நடக்கின்றன. நாயகர்களே பாடலாசிரியர்களாக மாறுவது, ‘மாமா டவுசர் கழண்டுச்சே’, ‘ஷூட் த குருவி’ போன்ற பாடல்களையெல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இது ஒரு கலையின் ஜனநாயகம். இந்திய ஜனநாயகம் எவ்வளவு விபத்துகளைச் சந்தித்ததோ, கலையின் ஜனநாயகமும் அவ்வளவு விபத்துகளைச் சந்தித்துதான் சரியாகும். முதலில் அவர்களை எழுதவிடுங்கள்.”

“ஆயிரக்கணக்கான ட்யூன்களைக் கேட்டிருப்பீர்கள். கேட்டமாத்திரத்தில் திகைக்கச் செய்த ஒரு சில ட்யூன்கள்...”

‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்!’’ - வைரமுத்து“ ‘முதல்மரியாதை’, ‘சிந்து பைரவி’, ‘பூவே பூச்சூடவா’, ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘கருத்தம்மா’ படங்களின் பாடல்களெல்லாம் அப்படியானவைதான். இளையராஜாவோடு வேலைசெய்த அந்த 80-களின் நாள்கள் ரொம்ப சுகமான காலங்கள்.”

“தேசிய இன மொழிகள், அடையாளங்கள், பண்பாடுகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் இன்றைய இந்தியச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“தேசியப் படையெடுப்பு, சர்வதேசியப் படையெடுப்பு என்று இரண்டு படையெடுப்புகளை இந்தியாவின் தேசிய இனங்கள், குறிப்பாகச் சிறுபான்மை தேசிய இனங்கள் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.  ‘ஒரே வரி, ஒரே இந்தியா’ என்று தொடங்கிய ஒரு திட்டம், `ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே பண்பாடு’ என்பதை நோக்கிச் செல்லலாமோ என்ற சிந்தனை நாட்டில் விதையூன்றப் படுவதாக ஓர் அச்சம் நிலவுகிறது. எனது கருத்து என்னவென்றால், வேற்றுமை என்ற ஒன்று கொண்டாடப்படுகிற வரைக்கும்தான் இந்தியா ஒன்றாக இருக்கும். வேற்றுமையின் அடையாளங்களை, பெருமைகளை, அழகுகளைப் போற்றக்கூடிய தேசம்தான் ஒற்றுமையாக இருக்கும். வானவில்லில் ஒற்றை நிறம் என்பது எவ்வளவு இயற்கைக்கு விரோதமோ, தேசத்தில் ஒரே மொழி ஒரே பண்பாடு என்பதும் தேச விரோதம். இதைப் புரிந்துகொண்டு முடிவெடுப்பவர்கள் சரியான திசையில் தேசத்தைச் செலுத்துவார்கள் என்று  நம்புகிறேன்.”

“நீங்கள் உங்கள் படைப்புகளில் அரசியல் பேசியிருக்கிறீர்களே தவிர, எந்தச் சமூகப் பிரச்னை சார்ந்த போராட்டங்களுக்கும் நேரடியாக வந்ததில்லை. ஒரு படைப்பாளி சமூகப் பிரச்னைகளின்போது நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராடத் தேவையில்லை என்று நினைக்கிறீர்களா?”

“வேல் வடித்துக்கொடுப்பவன் அத்தனை பேரும் போருக்கு வர வேண்டுமா? வேல் வடித்துக்கொடுப்பதல்லவோ அவனது பெருமை.  வாள் வடித்துக் கொடுப்பதல்லவோ அவனது திறமை. ஆயிரம் பேருக்கு வேல் வடித்துத் தருபவனும், பத்தாயிரம் பேருக்கு வாள் சமைத்துத் தருபவனும் கலைஞன், எழுத்தாளன். அவனே கத்தியெடுத்துச் சென்று சண்டையிட வேண்டுமென்பது அவசியம் இல்லை. பழங்காலத்தில் புலவர்கள்கூட அரசனுடன் போர்க்களத்துக்குச் சென்று, அரசனின் யானையில் நின்று போர்க்களத்தைப் பார்வையிட்டு இலக்கியம் செய்திருக் கிறார்களே தவிர, அவர்களொன்றும் அரசனுக்குத் துணையாக வாள்வீசிக் கொண்டு திரியவில்லை. எழுத்தாணி இவன் வேலை. ஈட்டி அவன் வேலை. ஈட்டி ஏந்திய கைகளில் எழுத்தாணியும், எழுத்தாணி ஏந்திய கைகளில் ஈட்டியும் எல்லா காலங்களிலும் சிறந்ததல்ல.

“ஈன்று புறந்தருதல் என்றலைக்கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல்
கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”
என்ற புறப்பாட்டும் என் கருத்தை முன் மொழிந்திருக்கிறது.”

‘‘இலக்கியத்தைவிட எனக்கு மனசாட்சி முக்கியம்!’’ - வைரமுத்து

“13 வயதிலேயே நாத்திகர் ஆகிவிட்டதாகச் சொல்கிறீர்கள். சிறுதெய்வ வழிபாடு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“சிறுதெய்வ வழிபாடு என்பது, ஒவ்வோர் இனக்குழுவுக்குமான வழிபாட்டுரிமை. தங்கள் சுதந்திரத்தைத் தாங்களே கொண்டாடிக் கொள்வதற்கான உத்தி. அது இல்லையென்றால், சாதிக் கலவரம் வந்துவிடும். ஏனென்றால், எந்தக் கோயில் எனக்கு மறுக்கப்பட்டதோ, அந்தக் கோயிலை நீ வைத்துக்கொள். தெய்வத்தை நான் வைத்துக்கொள்கிறேன் என்பதுதான் சிறுதெய்வ வழிபாடு. இது மிகப்பெரிய சமூக விஞ்ஞானம். எல்லா சிறுதெய்வங்களும் ஒரு காலத்திய முன்னோர்கள்தான்.  ஓர்  இனக்குழுவுக்கு ஆபத்து வரும்போது போராடித் தன் உயிரை மாய்த்துக்கொள்கிற ஒருவன்தான், ஒருத்திதான் தெய்வமாகிறான்/தெய்வமாகிறாள். அவன்தான் கருப்பு. அவன்தான் சுடலை அவள்தான் ஒச்சாயி. அவள்தான் பேச்சி. மூலம் தேடி நகர்ந்தால், எல்லா தெய்வங்களுக்குக் கீழேயும் ஒரு மனித எலும்பு இருக்கிறது.”

“விஞ்ஞானத் தொழில்நுட்பங்கள் குறித்துப் பாடல்களிலும் கவிதைகளிலும் பதிவுசெய்கிற நீங்கள், ஏன் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்குவதில்லை?”


“நான் பத்திரிகைகளின் குழந்தை. எனக்கு இணக்கமான, என்னை வளர்த்துவிட்ட பத்திரிகைகளோடு நான் பங்கீட்டிலிருக்கிறேன். நான் பத்திரிகைகளில் ஊடாடுவதெல்லாம் சமூக வலைதளங்களுக்கு வந்துவிடுகின்றன. பிறகு நான் ஏன் தனியாக வலைதளங்களில் இயங்க வேண்டும்?”

“அறமதிப்பீடுகள் வீழ்ச்சி அடைந்துவரும் இந்தக் காலகட்டத்தை ஒரு கவிஞராக எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``சர்வதேசக் கலாசாரத்தின் மோதலைத்தான் மிகப்பெரிய காரணமாக நினைக்கிறேன். ஐரோப்பிய அமெரிக்கக் கலாசாரத்தைப் போலல்ல ஆசியக் கலாசாரம். அது மிக மிக மாறுபட்ட ஒன்று. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஐரோப்பாவிலிருந்து மதம் வெளியேறிவிடும். இப்பொழுதே சர்ச்சுகள் எல்லாம் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களாக மாறிக்கொண்டு வருகின்றன. கடவுள் நம்பிக்கை அங்கே குறைந்துவிட்டது. கடவுளை மையப்படுத்திச் சொல்லப்பட்ட அச்சுறுத்தல்கள் நீங்கிவிட்டன. அச்சுறுத்தல்கள் போனதனால் ஒழுக்கத்தைப் பற்றிய பிடிப்பு போய்விட்டது. இன்று, ஒழுக்கமாக இருப்பது நுகர்வுக் கலாசாரத்துக்கு எதிரானது என்ற ஒரு கருத்து வந்திருக்கிறது. நுகர்வுக் கலாசாரத்தின் முன்னால் எல்லா விழுமியங்களும் நொறுங்குகின்றன. கலாசார மாற்றம் என்பது பிற தேசங்களிலிருந்து முன்பு நடந்துவந்தது. பிறகு ஓடிவந்தது, பின் பறந்து வந்தது. இப்போது உங்கள் வீட்டுக் கூரையைப் பிய்த்துக்கொண்டு உங்கள் படுக்கையறைக்குள் குதிக்கின்றது. துய்ப்பது முக்கியம். அந்தத் துய்ப்பிற்குப் பொருள் முக்கியம். அந்தப் பொருளை எவ்வழியிலும் ஈட்டலாம் என்கிற நிலை, அது பழைய மதிப்பீடுகளைச் சிதறடிக்கும்.’’

“ ‘மொழிகள் மாறினாலும் இந்திய இலக்கியம் ஒன்று’ என்று ஒப்புக்கொள்ள முடியுமா?”

“இந்திய இலக்கியம் மட்டுமல்ல; உலக இலக்கியமே ஒன்றுதான். வெவ்வேறு நாசிகளால் சுவாசிக்கப்பட்டாலும் காற்று என்பது ஒன்றுதான். மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் மட்டும் இல்லையென்றால், பன்முகப்பட்ட இந்தியக் கலாசாரத்தை நாம் புரிந்துகொண்டிருக்க முடியாது. தாகூரை வங்காளிகளுக்கு இணையாகத் தமிழர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்; போற்றுகிறார்கள். பல தமிழர்களின் வீட்டுச் சுவர்களில் தாகூரின் படத்தையும் நீங்கள் பார்க்கலாம். ஆனால், நிகழ்காலத்தில் நல்லிலக்கியங்கள் பல மொழிபெயர்க்கப் படாமல் இருப்பது இலக்கிய நஷ்டம். அசோக் வாஜ்பாயின் இந்திக் கவிதைகள் – கமலேஷ்வர் எழுதிய கித்னே பாகிஸ்தான் – மலையாளத்தில் மோகனன் சிறுகதைகள் - கன்னடத்தில் சந்திர சேகரா கம்பாராவின் முழுக் கவிதைத் தொகுதி – தெலுங்கில் நாராயண ரெட்டியின் இலக்கியங்கள் – இந்தியில் குல்சாரின் தேர்ந்த பாடல்கள் போன்ற சமகால இலக்கியங்கள் எல்லா மொழிகளிலும் சென்று சேர வேண்டும்.

சாகித்ய அகாடமி கள்ளிக்காட்டு இதிகாசத்தை 23 மொழிகளில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறது. இந்தியில் வெளியாகிவிட்டது. மலையாளத்தில் முடிந்துவிட்டது. ஆங்கிலம் – தெலுங்கு – கன்னடத்தில் வேலைகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. நான் மொழிபெயர்ப்பதில் மட்டும் நிறைவுற மாட்டேன். அந்தந்த மொழிகளின் இலக்கியச் சந்தையில் அதைக்கொண்டு சேர்ப்பது எப்படி என்று அடுத்த அறைகூவல். பல மொழிபெயர்ப்புகள் விலைப்பட்டியலில் மட்டுமே வாசிக்கப்படுகின்றன. எனக்கொன்று தோன்றுகிறது. அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் அந்தந்த மொழிபெயர்ப்புக்கு ஓர் அறிமுகவிழா நிகழ்த்த ஆசைப்படுகிறேன். இந்தியா முழுக்கச் சுற்ற வேண்டியிருக்கும்; சுற்றுவோம்.”

“இந்திய விவசாயத்தின் பிரச்னைகளை  ‘மூன்றாம் உலகப்போரி’ல் முன்கூட்டியே எழுதி இருந்தீர்கள். இன்றைய பிரச்னைகளுக்கு அதில் தீர்வு இருக்கிறதா?”

“மூன்றாம் உலகப்போருக்கு எழுதப்பட்ட முன்னுரையின் பிற்பகுதியே தீர்வுக்கான திசைகளைக் காட்டியிருக்கிறது. இந்திய விவசாயம் புறக்கணிக்கப்பட்டால் அல்லது சிதைக்கப்பட்டால், இந்தியக் கலாசாரத்தின் பொருளாதாரத்தின் முகமே சிதைந்துவிடும். இதுவரை இந்தியாவைக் கட்டிக்காத்துவரும் சகிப்புத்தன்மை என்ற கயிறு அறுந்துவிடும். சுயமரியாதையோடு வாழும் இந்திய வேளாண் சமூகம் நகரத்துச் சேரிக்குள் எலி வாழ்க்கை வாழும். ஏதுமற்றவன் வன்முறையில் இறங்குவான். நகரக் கட்டமைப்புகளை அவன் உடைப்பான். 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிந்திக்க வேண்டிய காலம் இப்போது தொடங்கிவிட்டது. தொலைக்காட்சியில் ஒரு செய்தி பார்த்தேன். துப்பாக்கிகளின் பாதுகாப்போடு தக்காளி வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. மூன்றாம் உலகப்போரில் எழுதியிருந்தேன். 2050-ல் எல்லோர் கையிலும் தங்கம் இருக்கும்; தக்காளி இருக்குமா? அதன் தொடக்கம்தான் இது.

எல்லோருக்கும் கழிப்பறையும் குளிப்பறையும் உறுதி செய்யப்படாதவரை இந்தியா சுதந்திரம் பெற்றதாகச் சொல்ல முடியாது என்று ‘ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’ என்ற நாவலில் 1991-ம் ஆண்டு எழுதியிருக்கிறேன். அதை நோக்கி நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது. கழிப்பறை கட்டலாம். தண்ணீர்...? தண்ணீருக்கு உத்தரவாதம் இல்லாத கழிப்பறை வியாதியின் கிடங்கு. தண்ணீருக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டுக் கழிப்பறை கட்டத் தொடங்குங்கள்.”

“கலைஞரைச் சமீபத்தில் சந்தித்தீர்களா? எப்படி இருக்கிறார்?”

“நேற்று (20.07.2017) முன்னிரவில் 7.30 மணி முதல் 8.45 வரையில் அவரைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். 8.20-க்கு ராஜாத்தி அம்மாள் வந்தார். அது வரை நானும் கலைஞரும் மட்டும் அமர்ந்திருந்தோம். அவர் வாயிலிருந்து ஒலி மட்டும்தான் வரவில்லையே தவிர, மொழி வந்தது. பார்த்தவுடன் கையைப் பிடித்துக்கொண்டார். நான் நின்று கொண்டேயிருந்தேன். அவரது சக்கர நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார். ‘உட்காருங்க...’ என்று சொன்னார். உதடுகள் அசைகின்றன. ஆனால், ஒலி வராமல் காற்று வருகிறது. ‘உட்காருங்க...’ ஒலியைக் காற்று வடிவமைத்தது. நான் புரிந்துகொண்டேன். தெளிவாக இருக்கிறார் கலைஞர். நான்தான் அவரிடம் நெடுநேரம் பேசிக்கொண்டி ருந்தேன்.  அவர் கேட்டுக்கொண்டேயிருந்தார். இடையில் பேசுவதற்கு முயற்சி செய்கிறார். அந்தச் சொற்களை என்னால் அனுமானிக்க முடியவில்லை. அந்தச் சோகத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை. குழாய் வழியான சுவாசிப்பு இடையூறு செய்கிறது. குழாய் நீக்கப்பட்டால், நீங்கள் பழைய கலைஞரையே திரும்பப் பார்க்கலாம். நினைவாற்றல் இருக்கிறது; ஒலி மட்டும் வந்துவிட்டால், அவர் பிரசாரத்துக்கேகூட வருவார் என்று நினைக்கிறேன். அவரை வாராவாரம் சென்று பார்த்துக்கொண்டி ருக்கிறேன். அவரைப் பார்க்கவில்லை என்றால் நானும், என்னைப் பார்க்கவில்லை என்றால் அவரும் ஏங்கிப் போகிற உணர்வை இருவரும் அடைகிறோம். அவர் விரைவில் நலம் பெறுவார்.”

“வைரமுத்து என்ற கவிஞரை தமிழ்ச் சமூகம் என்னவிதமான அடையாளத்துடன் புரிந்துகொண்டிருப்பதாக நினைக்கிறீர்கள்?”

``நான் எல்லா சமூக மட்டத்திலும் பழகியிருக்கிறேன். எழுத்தறிவே இல்லாத பாமரர்கள் எனக்குப் பெரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். கொஞ்சம் எழுத்தறிவு பெற்ற நபர்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அறிவுஜீவிகளிலும் எனக்கு வாசகர்கள் உண்டு. ஆனால், எழுத்தறிவில்லாத பாமர மக்கள் என்னிடம் எப்படித்தான் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு எழுத்தைத் தாண்டி என் பாட்டு போய்ச் சேர்ந்திருக்கிறது. நடுத்தரவர்க்க மனிதர்கள், இவர் கொஞ்சம் கர்வி என்று நினைக்கிறார்கள். அறிவுஜீவிகள் இவன் வாழத் தெரிந்த சாமர்த்தியசாலி என்று நினைக்கிறார்கள். முதியவர்களும் குழந்தைகளும் தொட்டுப் பேசுகிறார்கள்... என்னை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நேர்மையான ஒரு படைப்பாளி, எப்போதும் போராளி, யாரையும் காயப்படுத்தாத மனிதன், முடிந்த அளவுக்கு நன்மை செய்கிற ஒரு கிராமத்தான். இப்படிப் புரிந்துகொண்டால் போதும். என்னைப் படைப்பாளி என்று காலம் சொல்லட்டும். நல்ல மனிதன் என்று நிகழ்காலம் சொல்லட்டும்.”

“இப்போது என்ன எழுதிக்கொண்டிருக் கிறீர்கள்?”


“மூவாயிரம் ஆண்டு நீண்ட தமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கியமான முன்னோடிகளின் அறிமுக வரிசையை எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்றைய தலைமுறையில் பலபேர் இலக்கியம் கற்பதில்லை. உலகத்துத் தகவல் எல்லாம் உள்ளங்கையில் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். தனக்கு எது தேவையோ அதை மட்டும் கற்றுக்கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். நான் ஏன் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று கேட்கும் ஒரு தலைமுறை வந்துவிட்டது. அதனால், நினைவாற்றலும் குறைந்துபோய்க்கொண்டிருக்கிறது. இந்தத் தமிழ்த் தலைமுறை நீண்ட நூல்களை வாசிக்கத் தயாராக இல்லை. இதில், திருவள்ளுவர்,  கம்பர், இளங்கோவடிகள், அப்பர், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், கலைஞர் எனத் தமிழுக்குத் தடம் சமைத்த இலக்கிய கர்த்தாக்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறேன். இன்னும் தொல்காப்பியர் தொடங்கி சமகாலப் படைப்பாளிகள் பலரும் என் பட்டியலில் இருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த ஆராய்ச்சித் தொடரை எழுதிவருகிறேன். இளைய தலைமுறையிடம் எளிய வகையில் இவர்களைக் கொண்டுசேர்க்கும் எனது முயற்சி இது. ஏனென்றால், புதியவர்கள் தமிழைவிட்டுத் தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். மொழி என்பது இவர்களது வாழ்வின் கடைசித் தேவையாக இருக்கிறது. இலக்கியம் என்பது அவர்களுக்குத் தேவையில்லாத ஒரு விஷயமாக இருக்கிறது. அவர்களுக்குத் தமிழின் மீது, இலக்கியத்தின் மீது ருசி ஏற்படுத்த வேண்டும், அவர்களை வாசிக்கவைக்க வேண்டும். மூன்று மாதங்கள் போராடி ஒரு கட்டுரை எழுதுகிறேன். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இந்த ஒரு புத்தகம் இருந்தால் தமிழை அறிமுகம் செய்துகொள்ளலாம் என்பது எனது கருத்து. அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கும் இந்தப் புத்தகம் முதல் நாள் அன்றே லட்சம் பிரதிகள் விற்கும் என்று அனுமானிக்கிறேன்.”

“புகழும் பிரபலத்தன்மையும் உங்கள் சுதந்திரத்தைப் பறித்துவிட்டதாக உணர்கிறீர்களா?”

“சில நேரங்களில் உணர்கிறேன். அப்போது சுதந்திரம் பறிக்கப்பட்டதாக நினைக்கவில்லை; கட்டுப்படுத்தப் பட்டதாகவே நினைக்கிறேன். கூட்டுப்புழு அந்தச் சுதந்திரத்தை இழப்பது சிறகு முளைக்கத்தான் என்று என்னைத் தேற்றிக்கொள்கிறேன்.”

“போதும் என்று எப்போதாவது தோன்றியிருக்கிறதா?”


“சுவாசித்தது போதும் என்று எப்போதாவது தோன்றுமா? சுவாசம் படைப்பு இரண்டும் ஒன்று. அனிச்சைச் செயல்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism