Published:Updated:

சார்வாகன் - காந்தியமும் மார்க்சியமும் கலந்த இடதுசாரி... டாக்டர், எழுத்தாளர்! கதை சொல்லிகளின் கதை - 33

சார்வாகன் - காந்தியமும் மார்க்சியமும் கலந்த இடதுசாரி... டாக்டர், எழுத்தாளர்! கதை சொல்லிகளின் கதை - 33
News
சார்வாகன் - காந்தியமும் மார்க்சியமும் கலந்த இடதுசாரி... டாக்டர், எழுத்தாளர்! கதை சொல்லிகளின் கதை - 33

அவருக்கு இந்த வாழ்க்கையின் மீது எந்தப் புகாரும் இருக்கவில்லை என்பதோடு நிறைவான மனதோடுதான் இந்த உலகிலிருந்து விடைபெற்றுள்ளார். காலச்சுவடு வெளியிட்டுள்ள அவரது தேர்ந்தெடுத்த கதைத்தொகுப்பின் பிற்சேர்க்கையாக ஒரு மருத்துவ ஏட்டில் அவர் எழுதிய கட்டுரையின் பகுதியை வெளியிட்டுள்ளார்கள்.

பாகம்1- வ.வே.சு.ஐயர் பாகம்-2- ஆ.மாதவய்யா பாகம்-3- பாரதியார்
பாகம்-4-புதுமைப்பித்தன் பாகம்-5- மௌனி பாகம்-6 - கு.பா.ரா
பாகம்-7- ந.பிச்சமூர்த்தி பாகம்- 8 - பி.எஸ்.ராமையா பாகம்- 9 - தொ.மு.சி. ரகுநாதன்
பாகம்-10
- அறிஞர் அண்ணா
பாகம்-11- சி.சு.செல்லப்பா    பாகம்-12- ந.சிதம்பர சுப்ரமணியன்
பாகம் - 13 - எஸ்.வி.வி பாகம்-14-  தி.ஜ.ரங்கராஜன் பாகம்- 15.1  கல்கி
பாகம்-15.2 கல்கி பாகம்- 16- ராஜாஜி பாகம்-17 -அநுத்தமா
பாகம்18.1-கு.அழகிரிசாமி பாகம் 18.2- கு.அழகிரிசாமி பாகம் 19- கிருஷ்ணன் நம்பி
பாகம்-20- ல.சா.ரா பாகம்-21 - விந்தன் பாகம்-22-  மா.அரங்கநாதன்
பாகம்-23- ஜி.நாகராஜன் பாகம்- 24-  பெண் படைப்பாளிகள் பாகம்-1 பாகம்-25 - பெண் படைப்பாளிகள் பாகம்-2
பாகம்- 26 - ஆ.மாதவன்  பாகம்-27 - ஜெயகாந்தன் பாகம்-28 - கிருத்திகா
பாகம்-29 தி.ஜானகிராமன் பாகம்-30- அசோகமித்திரன் பாகம்-31-

எம்.வி.வெங்கட்ராம்

பாகம்-32
இந்திரா பார்த்தசாரதி
   

மிகுந்த குற்ற உணர்ச்சியுடன் எழுத்தாளர் சார்வாகனைப் பற்றிய இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். 70-களில் நான் எழுத ஆரம்பித்த நாள்களிலேயே சார்வாகனின் பெயரை சில சிற்றிதழ்களில் பார்த்திருக்கிறேன். ஓரிரு கதைகள் படித்திருக்கிறேன். என்றாலும் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் அவரை நான் வாசிக்கவில்லை. 2015-ம் ஆண்டில் அவருடைய மரணத்துக்குப் பிறகுதான் அவரை வாசித்து அடையாளம் கண்டேன். காந்தியமும் மார்க்சியமும் கலந்த இடதுசாரியாக அவர் வாழ்ந்திருக்கிறார். தொழுநோயாளிகளைக் குணப்படுத்தும் டாக்டராகத் தன் வாழ்நாளை அவர்களுக்காக முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட மாமனிதர் அவர். அரசாங்கம் கொடுத்த சம்பளத்துக்குமேல் ஒரு பைசாகூட அவர் நோயாளிகளிடமோ வேறு எவரிடமோ பெற்றதில்லை. மருத்துவத்தைச் சேவையாக மட்டுமே வரித்துக்கொண்ட அற்புதமான ஆளுமை அவர்.

தமிழகத்தின் வேலூரில் 1929-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் நாள் பிறந்தவர். 1954-ம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகள் இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தார். லண்டனில் திருமணம் நடந்தது. 80-களில் மூன்று ஆண்டுகள் போர்ட்லண்ட் நகரில் இருந்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட கைகளை மீண்டும் சரியாக்குவதில் சார்வாகன் கண்டுபிடித்த முறைகள்தாம் இன்றும் அவர் பெயரிலேயே வழங்கப்படுகின்றன. இதற்காக இவருக்கு 1984-ம் ஆண்டில் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இவரின் தாத்தா கிருஷ்ணய்யர், வேலூரில் காவல்துறையில் தமிழ்ச் சுருக்கெழுத்தராக இருந்தார். அவர் பெரியதொரு நூலகத்தை வைத்திருந்தார். அந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறிய வயதில் படித்து தனது படிப்பு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். எழுத்தில் ஆர்வம்கொண்ட இவர், கவிதைகளையும் சிறுகதைகளையும் சிற்றிதழ்களில் எழுதியுள்ளார். இவரின் `கனவுக்கதை’ என்னும் சிறுகதை, 1971-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக `இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றது. இவருடைய சிறுகதைகள் சில, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வெளியாகியிருக்கின்றன. இவர் எழுத்துகள், தொகுப்பாக 41 சிறுகதைகள் மற்றும் 3 குறுநாவல்கள் என 500 பக்கங்களுடன் `சார்வாகன் கதைகள்' என்ற பெயரில் புத்தகமாக நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு தொடர்பில் இருந்த எழுத்தாளர்கள் மிகக் குறைவு. எழுத்தாளர் பாரவி (இடையுறாத நட்புடன் இருந்தவர் இவர் ஒருவரே), எஸ்.வைத்தீஸ்வரன், அசோகமித்திரன், பிற்காலத்தில் சாருநிவேதிதா என வெகுசிலரே அவருடன் நேர்ப்பழக்கம்கொண்டிருந்தனர். அவரும் இந்தப் பக்கம் அதிக கவனம்கொள்ளவில்லை. எழுதியவற்றைப் பதிப்பிக்கவும் அவர் பெரிதும்  முயலவில்லை. யார் படிக்கப்போறாங்க என்கிற மனநிலையுடனே இருந்துவிட்டவர். இடதுசாரி மனோபாவம்கொண்ட அவரை இடதுசாரிகளும் தொடர்புகொள்ளவில்லை என்பதில்தான் என் குற்ற உணர்வு வேர்கொண்டுள்ளது.

அவருடைய இறுதி நாள்களில் அவரைச் சந்தித்தது பற்றி எழுத்தாளர் எஸ்.வைத்தீஸ்வரன் குறிப்பிடுகிறார்...

``கடைசியாக  அவர்  ஒருநாள்  அவசரமாக  என்னைத் தொலைபேசியில் அழைத்தார். 

``வந்து பார்த்துவிட்டுப் போய்விடுங்கள். அடுத்த மாதம் நான் இல்லாமல் போய்விடலாம்.''

எனக்குப் பதற்றமாக இருந்தது. சென்னையில் இருந்த அவரைப் பார்க்க நான் உடனே போனேன். தளர்ந்த நிலையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் இனிமையும் சிநேகமும் அவர் முகத்தில் இன்னும் பரவியிருந்தன.

``உங்களையெல்லாம் ஒரு தடவைப் பார்த்துவிடவேண்டுமென்றிருந்தது. இன்னும் ஓரிரு நண்பர்களிடமும் சொல்லிவிட்டேன். டாக்டராக இருப்பதால் இப்படி ஒரு தொல்லை. என் உடல்நிலை எனக்கே தெரிந்துபோய்விடுகிறது. என் பழைய அனுபவம் ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.  உங்களுக்குத்  தெரியுமா?  எங்கள்  குடும்பத்தில்  அத்தனை பேரும் டாக்டர்கள்! என் மனைவி உட்பட! என்ன பிரயோஜனம்?  தினப்படி  வழக்கமாக  என் மனைவி  என்னைத் தவறாமல்  விடியற்காலம்  எழுப்பிவிடுவாள். `வாக்கிங் கெளம்புங்கோ!'  என்று  உத்தரவு போட்டுவிட்டு மீண்டும் திரும்பிப் படுத்துக்கொள்வாள். சில காலத்துக்குப் பிறகு விடியலில்  அவள்  உத்தரவு   போடாமலேயே   அவள்  என்னை விரட்டுவதுபோல் எனக்குத் தோன்றி நான்  எழுந்துவிடுவதும் உண்டு!

பத்து வருஷத்துக்கு முந்தி  அன்றும்  நான்  அப்படித்தான் எழுந்து அவளை  நன்றாகப் போர்த்திவிட்டு வாக்கிங் போனேன். ஒரு மணி நேரம் கழித்துத்தான் வந்தேன். நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். நான் அவள் தூக்கத்தைக் கலைக்க விரும்பவில்லை.  நானே  காபி  தயாரித்துக்கொண்டு,  கூடத்தில் பேப்பரை விரித்துக்கொண்டு  உட்கார்ந்திருந்தேன். மணி 9:30 க்கு மேல்  ஆகிவிட்டது. அங்கே வந்த என் மகள் `ஏன்  அம்மாவை எழுப்பவில்லையா...  இன்னுமா தூக்கம்?` என்றாள்.

`தூங்கட்டுமேடீ... ஏதோ அசதியா இருக்கலாம்' என்றேன். 

`நோ... நோ... எழுப்புங்கள்  நேரமாகிவிட்டது' என்று உள்ளே போனாள். நான் உள்ளே போய் அவளை விதவிதமாக எழுப்ப முயன்றேன். அவள்  கண் விழிக்கவே இல்லை. கைகள் சில்லிட்டுப்போயிருந்தன. கலக்கமுடன் அவசரமாக இன்னோர் இதய டாக்டரைக் கூட்டிவந்து காண்பித்தோம்.  

`உங்கள்  மனைவி  இறந்துபோய்  இரண்டு மணி நேரம்  ஆகிவிட்டது' என்றார்.  

என்னால்  அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அவள் காலையிலேயே இறந்துபோய்விட்டாள். இரண்டு  மணி நேரமாக  மனைவி இறந்ததை  உணராமல் நான் காபி குடித்துக்கொண்டு கூடத்தில் ஆசுவாசமாக உட்கார்ந்துகொண்டிருக்கிறேன். இப்படி ஒரு விபரீதமான சோகமா எனக்கு?'' அவர் கண்ணில் ஈரம்  துளிர்த்தது. ``ஆனா,  இப்ப  என் விஷயத்தைப் பாருங்கள்.   என்  முடிவு எனக்கு அநேகமாக  நிச்சயமாகவே தெரிந்துவிட்டது. மாதம், தேதி, கிழமைகூடச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு  ஆண்டவன் எனக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டார். என் மனைவியைப்போல் நான் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் சாக முடியாது. இப்போது விடிந்தால் எல்லோருமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்  செய்தி  என்னுடைய சாவுதான். அப்படி ஒரு ராசி  எனக்கு!'' என்று  சிரிக்க முயன்றார்.

அவருக்கு பலமாக இருமல் வந்துவிட்டது. ``நிச்சயம் அடுத்த மாதம் வருவேன். இதே கதையை மீண்டும் என்னிடம் சொல்லி, நீங்கள் சிரித்துக்கொண்டிருப்பீர்கள் சார்... வரட்டுமா?'' என்று  விடைபெற்றேன்.

மூன்று நாள்கள்  கழித்து, அந்தச்  செய்தி அவர் குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டது.

டாக்டர் ஹரிஸ்ரீனிவாசன்  என்கிற  சார்வாகன்,  நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள் என நிறையவே எழுதியிருக்கிறார். அவருடைய சிறுகதை ஒன்றை முழுமையாக வாசிக்கலாம் இங்கே...

`எதுக்குச் சொல்றேன்னா…'

அவன் பேசிக்கொண்டே போனான்: ``என்ன செய்வது சொல்லுங்கள். நாம் என்ன, கேட்டுக்கொண்டா பிறந்தோம். இல்லை, நம்முடைய அப்பா-அம்மாவை நாமே தேடிக்கொண்டோமோ? யாரோ ரெண்டு பேர் என்னமாவோ முடிச்சுப் போட்டுக்கொண்டாங்க. நாம வந்து விழுந்தோம். பாலும் சர்க்கரையும் கலந்து வெக்கிறப்போ ஈ வந்து விழுந்த மாதிரி. இது பொருத்தமில்லையோ? அப்போ சிரங்கிலே புழுவந்து தோணின மாதிரின்னு வெச்சுக்குங்களேன். எதுக்குச் சொல்றேன்னா, நாம வந்ததுக்கு நாம பொறுப்பாளியில்லை. ஆனாலும் வந்துட்டோம். வந்த பிறகு போகிறதுக்குள்ளே இருக்கவேண்டிய பொறுப்பு மாத்திரம் நம்மதாயிட்டுது.

ஏன், நமக்குக்கூட சில சமயம் தோணுறதில்லையா, `எல்லாத்தையும் ஒழிச்சிட்டு ஒரேயடியாப் போயிட்டா என்ன?'ன்னு. ஆனா, எவ்வளவு பேர் அப்படித்  துணிஞ்சு செய்றோம். இயற்கையோட விதி நாம் இருக்கிறதுக்காகத்தான் வழி செய்துகொள்ளச் செய்யுதே தவிர இறக்கிறதுக்கு வகை செய்றதில்லை. ஆனாலும் அதிசயம் பாருங்க, நாம் இருக்கிற ஒவ்வொரு நாளும் சாவை நோக்கியே ஒரு படி. எதுக்குச் சொல்றேன்னா, வாழ்வுங்கிறது பொறுப்பற்ற வழியிலே ஆரம்பிச்சு, ஒருநாள் நிச்சயமா பொக்குன்னு போகிற போக்கற்ற வியாபாரம். இதுல எதுக்கய்யா நாம அநாவசியமா நம்மைக் கஷ்டப்பட்டு வறுத்தெடுக்கணும்.

என்ன வேதாந்தம் பேசறேன்னு பார்க்கிறீங்களா, வேதாந்தமும் இல்லை வெண்டைக்காயுமில்லை. அப்பட்டமான உண்மையைத்தான் சொல்றேன். உண்மைக்கும் பொய்க்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க. உண்மை மாதிரி இருக்கும்... ஆனால் அது உண்மையில்லை. அதுதானே பொய்? வேதாந்தமும் அந்த மாதிரி பொய். நீங்களே சொல்லுங்க நம்ம வாழ்விலே எது நிஜம்? நேத்து நடந்ததெல்லாம் போயிட்டுது. செத்துப்போனது. நாளைக்கு வரப்போகிறது வந்த பின்னாலேதான் நிச்சயம். அதுவரைக்கும் அதுவும் நிஜமில்லைதான். நாளைக்குக் குத்தப்போகிற முள் இன்னிக்கு வலிக்குதா? இல்லை, முந்தாநாள் தின்ன பாகற்காய் இன்னிக்குக் கசக்குதா? சும்மா பிணத்துலே ஊறுகிற புழு மாதிரி முந்தாநாள் நடந்ததிலேயே மனசை நெளிச்சுக்கிண்டிருந்தா எப்பிடி சுகம் வரும்? நாளான்னிக்கி வரப்போகிற ஜிலேபியை நினைச்சு நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டிருந்தால் இன்னிக்கு வயிறு நிறைஞ்சுடுமா?

தொடை மாமிசத்தைக் கடித்து இழுப்பதற்காகச் சில விநாடிகள் பேச்சை நிறுத்தின அவன் மீண்டும் தொடர்ந்தான். ``எதுக்குச் சொல்றேன்னா, இப்போ, இந்த நிமிஷம், இந்த க்ஷணம்தான் நிஜம். அதுதான் உண்மை. அதுதான் எனக்குத் தெரியும். அதனால்தான் என்னை உறைக்க முடியும். அதைத்தான் என்னால் உணர முடியும். மீதியெல்லாம் செத்ததோ, இல்லை இன்னம் பிறக்காத வெறும் கனவோதானே. ஆனாலும் பாருங்க, விஷயம் சுளுவாயில்லை. ஆழ்ந்து பார்த்தா இந்த நிமிஷம், க்ஷணம்கூட கொஞ்சம் வலுவில்லாததுதான். நிமிஷமோ விநாடியோ நின்னாதானே அதுதான் ஓடிக்கொண்டேயிருக்கே, இதுதான் இந்த விநாடின்னு நான் எதைச் சொல்றது? சொல்கிறப்பவே ஓடிப்போச்சே, வேறே விநாடி வந்துட்டுதே. இந்த வயத்தெரிச்சலுக்கு என்ன செய்கிறது? அப்போ நிஜம்னு ஒண்ணும் கிடையாதா? எல்லாம் பொய்யின்னா அதிலேயும் ஒரு சங்கடம் இருக்கு.”

பேச்சை நிறுத்தி, எலும்பைக் கடித்து, உள்ளே இருந்த மஜ்ஜையைச் சத்தத்தோடு உறிஞ்சிக்கொண்டே பேச்சை, விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்.

``எதுக்குச் சொல்றேன்னா, `நான்’ என்று சொல்லிக்கொள்கிற ஒண்ணாவது நிஜமா இருக்கணும். இல்லாதபோனா நானே, என் பேச்சும் எண்ணமும் உட்பட பொய்யாய்ப்போகிறேன். அதே மாதிரி இந்த விநாடி, இருக்கிறவரையில், நிஜமாக இருக்கணும். அது நிகழ்காலமா இருக்கிறதனாலேயே. ஆனா, `நான்’ என்கிறதே கடந்தகால அனுபவமும் எதிர்காலக் கனவுகளும் பிண்டமான ஒண்ணுதானே. எல்லாம் பொய்யால் ஆன `நான்’ மட்டும் எப்படி நிஜமாயிருக்க முடியும்? இப்படியெல்லாம் சந்தேகத்திலே கடைக்காலெடுத்து, காலத்தையும் கனவையும் செங்கல்லாக்கி எழுப்பின கட்டடம் நம்ம வாழ்க்கை.

இதுலே நகாசு வேலை – நல்லது கெட்டது, புண்ணியம் பாவம், ஒன்னது என்னது, ஒசந்தது தாழ்ந்தது, நாகரிகம் அநாகரிகம், கெளரவம் அகெளரவம், வேண்டியது வேண்டாதது, பிடிச்சது பிடிக்காதது – எத்தனை போங்கள், இதெல்லாம் யாரை யார் ஏய்க்கிறதுக்குன்னு எனக்கே வெளங்கலை.

எதுக்குச் சொல்றேன்னா, என்னைப் பொறுத்தமட்டிலே இதுலேயெல்லாம் அர்த்தமிருக்கிறதாகப் படவில்லை எனக்கு. நாம நல்லதுன்னு நினைச்சா நல்லது, இல்லையின்னா கெட்டது. நியூகினீக்காரன் நல்லதுன்னா தலையை வெட்டலையா, வெள்ளைக்காரன் நல்லதுன்னா வேண்டாதவங்களைச் சுட்டுப் பொசுக்கலையா, துரோணன்கூட ஏகலைவன் கட்டைவிரலைக் கடிச்சுக்கலையா, எல்லாம் மனசுலேதான் இருக்குங்குறேன்.

எதுக்குச் சொல்றேன்னா, இதோ பாருங்க... நீங்களும் நானும் இப்போ ரசிச்சுக்கிட்டுச் சாப்பிடுறோம், கறி எவ்வளவு ருசியாயும் மெதுவாயும் இருக்கு. இந்தக் கறி நடமாடிக்கிட்டிருந்ததைப் பற்றி யோசிக்கிறாமா. ரொம்பப் பேருக்கு யோசிக்கவே பிடிக்கிறதில்லை. ஏன் அப்பிடித் தெரியுமா? நடமாடுறப்போ அங்கே இருந்த உண்மை வேறே. அது அப்போ சாப்பிடுற வஸ்துவில்லை. இப்போ அந்த உண்மை இறந்தகாலமாய்ப்போச்சு. இது வேறே உண்மை. சாப்பிடுற உண்மை. இதுதான் இப்போ உண்மை. இதைச் செத்துப்போன பழைய உண்மையோடே எப்படிச் சேர்த்துப்பார்க்கிறது?

எதுக்குச் சொல்றேன்னா, நமக்கு புத்தி இருக்கு. விருப்பு வெறுப்பில்லாமல் கொஞ்சம் யோசனை பண்ணலாம். பண்ணணும். வார்த்தைகளைக் கண்டு மலைச்சுப்போகக் கூடாது. வார்த்தைகளோடே சண்டைபோடக் கூடாது, வார்த்தைதான் வாயிலேயிருந்து வந்தா காத்தாப்போச்சே! இதைப் பாருங்க, இந்தக் கறி இன்னைக்குக் காலையிலேகூட ஓடியாடிக்கிட்டிருந்தது. அப்போ அதுக்குத் தெரியாது, இப்போ நம்ம வயித்துக்குள்ளே போகப்போகிறோம்னு. கொஞ்சிற்று. பாட்டுப் பாடிற்று. ஒரு க்ஷணம் அது இருந்தது. ஒரு வெட்டு. மறு க்ஷணம் அது இல்லை. நமக்குச் சாப்பாடு. இதுதான் உலகம். இது என்ன மிருகம்னு கேட்கிறீங்களா, இதைப் பாருங்கள்.”

அவன் தன் ஜோல்னா பையிலிருந்து ஒரு சிறு குழந்தையின் தலையொன்றை எடுத்து வெற்றிப் புன்னகையோடு காண்பித்தான். நான் எச்சில் கையோடு அங்கேயிருந்து ஓடிவிட்டேன்.

1960-களின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் விஞ்ஞானியும் நாவலாசிரியருமான சி.பி.ஸ்நோ என்பார் எழுதிய புத்தகம் `TWO CULTURES'. அறிவியலும் இலக்கியமும் இருவேறு பண்பாடுகளாக இருப்பதுதான் இன்றைய உலகப் பிரச்னைகளுக்கு மூலம் என்பதாக அவர் விவாதிப்பார். நாம் மேலே உள்ள சார்வாகனின் கதையில் அவருடைய அறிவியல் மனமும் படைப்பு மனமும் ஒருங்கே இயங்கியிருப்பதைக் காண முடியும். கற்பனையும் தர்க்கமும் புரண்டு புரண்டு நகர்வதை அவதானிக்கலாம். 1964-க்கும் 1976-க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் அவர் அதிகமான கதைகளை எழுதியிருக்கிறார். அங்கதம் அவர் கதைகளின் தொனியாக அமையும். சுய எள்ளலை உள்ளடக்கிய கிண்டலான பார்வையில் அவர் தன் கதைகளில் நம் சமகால வாழ்வை விமர்சிக்கிறார். கதைகளில் எந்த முடிவையும் தீர்வையும் அவர் சொல்வதில்லை. ஆனாலும் வாசிக்கையில் நாம் உள்வாங்கிக்கொள்ள நிறைய கேள்விகளும் சிலிர்ப்புகளும் அவர் கதையில் இருக்கும்.

எமர்ஜென்சி சமயத்தில் 1976-ம் ஆண்டில் அவர் எழுதிய கதையான `புதியவன்’ எதையும் நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும் காலம் காலமாக அதிகாரம் எப்படி எளிய மக்களின் உளவியலில் அடிமை மனநிலையை உருவாக்குகிறது என்பதை நுட்பமாகப் பேசுகிறது.

`நடக்க முடியாதவள்’ என்கிற கதை ஒரு க்ளாசிக் கதை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக, இப்படியான ஒரு செவ்வியல் முடிவைப் பிற கதைகளில் வைக்காதவர் சார்வாகன்.

``வாழ்க்கையிலே அன்றாடம் விதவிதமான சம்பவங்களில் நாம் பங்கேற்கிறோம். அவற்றின் விளைவாக நமக்குப் பல்வேறு வகையான அனுபவங்கள் நேர்கின்றன. அவற்றுள் பல தங்கள் அடையாளத்தை நம்முள் நிரந்தரமாகப் பதித்துவிடுகின்றன. அந்த மாதிரியான அனுபவங்களில் சிலவற்றையாவது நாம் பலருக்கும் எடுத்துச் சொல்ல வேணும் என்று பெரிதும் விரும்புகிறோம். போன வருஷம் நிகழ்ந்த இந்தச் சம்பவமும் அந்த மாதிரியான அனுபவங்களில் ஒன்று” என்று தொடங்கும் `நடக்க முடியாதவள்’ கதை, புற்றுநோய் தாக்கப்பட்ட ரோகிணி என்கிற பெண்ணைப் பற்றிய கதை.

வேளாண் விஞ்ஞானிகளான இரு நண்பர்கள் கதை சொல்லியும் வாமன் தாமோதரும், இவர்களைச் சந்திக்க இன்னொரு விஞ்ஞானியும் இவர்களின் நண்பருமான ஆந்திரே மில்லர் ஹாலந்து நாட்டிலிருந்து வந்திருக்கிறார். வாமனும் அவரது மனைவி ரோகிணியும் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்திருந்த வேளாண் விஞ்ஞானி ஆராய்ச்சி மையத்தில் இருந்தார்கள். ஆகவே, கதை சொல்லியும் மில்லரும் அங்கே பயணிக்கிறார்கள். ரோகிணி நடுக்கூடத்தில் கட்டிலில் அமரவைக்கப்பட்டிருக்கிறாள். இடுப்புக்குக் கீழே செயல்பாடு இல்லை. அவளைப் பார்த்ததும் மில்லரின் முகத்தில் ஏற்பட்ட பாவங்களை நுட்பமாகக் கவனிக்கும் ரோகிணி அவரிடம் கடுமையான தொனியில் கேள்வி கேட்டு சீக்கிரமே அவரை அறைக்கு அனுப்பிவிடுகிறாள். தன்னை இப்போதே பிணமாக உணரும் அவர் மனம் அவர் முகத்தில் தெரிவதை அவள் கண்டுகொள்கிறாள். தன்னை நடுக்கூடத்தில் படுக்க வைத்திருப்பதை மில்லரின் மனம் ஏற்காததும் அவளுக்குப் புரிகிறது.

``நான்தான் இங்கே, வீட்டின் மத்தியிலே, என்னைப் படுக்க வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வாமனிடம் வற்புறுத்திச் சொல்லிக் கட்டிலை இங்கே போட வைத்தேன். நான் இன்னும் இந்த வீட்டின் எஜமானிதானே. இந்தக் குடும்பத்தின் தலைவியாகத்தானே இருக்கிறேன். இதன் அன்றாட வாழ்விலே, நடைமுறைகளிலே நான் எனக்கு உரிய பங்குபெற விரும்புகிறேன். அதற்கு எனக்குத் தகுதி இல்லையா என்ன?எனக்கு இன்னும் உயிர் இருக்கிறது அல்லவா? என்னால் இன்னும் பேச முடிகிறது, கண் பார்க்கிறது, காது கேட்கிறது, மூளையால் இன்னும் யோசிக்க முடிகிறது, அது போதாதா? என்னால் நடக்க முடியாது அவ்வளவுதானே? வீட்டுக்குள் ஓடியாடினால்தான் குடும்பத்தை நடத்த முடியுமா என்ன? என்னைத் தனிமைப்படுத்தி ஓரங்கட்டிவைக்க எனக்கென்ன தொத்துவியாதி ஏதாவது பிடித்திருக்கிறதா என்ன? இல்லை, பைத்தியம் பிடித்துப் பாயைச் சுரண்டிக்கொண்டிருக்கிறேனா? அப்படியொண்ணும் இல்லையே!”

நோயுற்ற ஒருவர் தனக்குரிய இடத்தைப் போராடிப்பெறும் கதையாக இதை வாசிக்கலாம். ஏற்கெனவே ஒருமுறை அவளுக்குக் கட்டி வந்து அதைச் சோதனைக்கு அனுப்பியபோது புற்றுநோய்க்கூறு இல்லை என்று ரிசல்ட் வருகிறது. அப்பாடா என்று விட்டுவிடுகிறார்கள். மீண்டும் அதே இடத்தில் கட்டி வருகிறது. இப்போது அது புற்றுநோய்க்கட்டிதான் என உறுதிப்படுகிறது. வாமனுக்குச் சந்தேகம் வந்து பழைய கட்டியை மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்த, தன் நண்பரான டாக்டரிடம் கேட்டுக்கொள்கிறான். மறு ஆய்வில் பழைய கட்டியிலேயே புற்றுநோய்க்கூறு இருப்பது தெரியவருகிறது. அடடா… இதை அப்போதே ஏன் கண்டுபிடிக்க முடியாமல் போனது? என்கிற வருத்தமும் கேள்வியும் எழுகிறது. இதை வாழ்வின் புதிர் என்று சொல்லாமல் தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்புதானே நம் வாழ்க்கை என்று வாசகர் ஊகிக்கும்விதமாக சார்வாகன் கதையை நகர்த்திச் செல்கிறார். அறிவியலும் புனைவும் புதிர்களும் நிறைந்த மனித வாழ்வையும் மனித மனதையும் படம்பிடித்த கதை இது.

அவர் நிறைய சிறுகதைகள் எழுதவில்லை. அதுபற்றி நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள தொகுப்பின் முன்னுரையில் அவரே இவ்வாறு குறிப்பிடுகிறார்.

``நான் உண்மையாக `எழுத்தாளன்’ என்றிருந்தால் இதைப்போல நாலைந்து மடங்கு எழுதிக் குவித்திருக்க வேண்டும். என் கைவிரல்கள் மரத்து மடங்கி விடவில்லையே. ஆகவே, இன்னமும் எழுதிக்கொண்டிருக்கவும் வேண்டும். இரண்டும் நேரவில்லை. நான் அவ்வப்போது ஏதேதோ எழுதியிருந்தாலும் என்னை எப்போதும் ஓர் எழுத்தாளனாகக் கருதிக்கொண்டதில்லை. இப்போதும் கருதிக்கொள்ளவில்லை.

… எனக்கு இன்னும் ஒருகுறை. 1988-ம் ஆண்டில் என்று நினைக்கிறேன். நான் இறந்துவிட்டேன் என்று கேள்விப்பட்டு (உண்மையில் இறந்தது சார்வாகனல்ல. சாலிவாஹணன் என்கிற முந்தின தலைமுறை எழுத்தாளர்) வல்லிக்கண்ணன் ஓர் இரங்கல் கட்டுரை எழுதியிருந்தார். எதில் பிரசுரித்தார் எனத் தெரியவில்லை. அந்த அரிய கட்டுரையைத் தேடுகிறேன்... தேடுகிறேன். இன்னும்தேடிக்கொண்டேயிருக்கிறேன். எனக்குத் தெரிந்து மார் ட்வயின் தவிர, வேறு யாருக்கும் இந்த அரிய பாக்கியம் கிட்டினதில்லை. மிகப்பல வருஷங்களுக்குப் பிறகு வ.க.வைச் சந்தித்தபோது அவரிடம் விசாரித்தேன். நடந்தது பற்றி வெட்கப்பட்டுக்கொண்டாரே தவிர, எங்கே பிரசுரித்தார் என்பது அவருக்கும் நினைவில்லை. அது யாரிடமேனும் இருந்தால் அதையும் அடுத்த பதிப்பில் (அப்படி ஒன்று வருமானால்) சேர்த்துவிடலாம்.”

தன்னை எழுதத் தூண்டியவர் என மூத்த படைப்பாளி தி.க.சி-யை நன்றியுடன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ``எழுதுங்கய்யா” என்று பார்த்தபோதெல்லாம் அவர் தூண்டியிருக்காவிட்டால், நான் இத்தனையாவது எழுதியிருப்பேனா என்பது சந்தேகம்தான் என்று குறிப்பிடுகிறார்.

ஆறு கண்டங்களுக்கும் பயணம் செய்து, பல்வேறு தேசங்களின் தொழுநோயாளிகளின் வாழ்வில் ஒளியேற்றிய அவரது செறிவான அனுபவங்களில் காலூன்றி அவர் எவ்வளவோ எழுதியிருக்கலாம். நமக்குக் கிடைக்கவில்லை. நாம் அவர் வாழும் காலத்திலேயே அவரை இனம்கண்டு வாசித்துக்கொண்டாடியிருக்க வேண்டும். கொள்வார் இல்லாததால் கொடுக்காமல்போன கலைஞன் சார்வாகன். எவருடைய எழுத்தைப்போலவும் இல்லாத தனித்துவத்துடன் மிளிரும் அவரது கதைகளை வாசிக்கையில் இந்த ஏக்கம் நம் மனதில் படர்கிறது. அவர் அளித்துள்ள இந்த 43 சிறுகதைகளும் சிறுகதை வரலாற்றில் நிச்சயம் இடம்பெறுகின்றன.

ஆனால், அவருக்கு இந்த வாழ்க்கையின் மீது எந்தப் புகாரும் இருக்கவில்லை என்பதோடு நிறைவான மனதோடுதான் இந்த உலகிலிருந்து விடைபெற்றுள்ளார். காலச்சுவடு வெளியிட்டுள்ள அவரது தேர்ந்தெடுத்த கதைத்தொகுப்பின் பிற்சேர்க்கையாக ஒரு மருத்துவ ஏட்டில் அவர் எழுதிய கட்டுரையின் பகுதியை வெளியிட்டுள்ளார்கள்.

``1980-களில் பிரேசில் நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த மனாவ்ஸ் என்ற சிற்றூருக்கு WHO குழுவினருடன் சென்றிருந்தேன். அங்கே தொழுநோய் மருத்துவமனை ஒன்று இருந்தது. அங்கு இருந்த நோயாளிகளைப் பரிசோதித்துக்கொண்டிருந்தபோது, மருத்துவர் ஒருவர் தொலைவில் நின்றிருந்த பெண்மணியைச் சுட்டிக்காட்டி ``அவர் உங்களைப் பார்க்க வேண்டுமென்று துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்”என்றார். `இங்கு இருப்பவர்களுக்கு உங்களுடைய அறுவைசிகிச்சை மூலம்தான் சிகிச்சையளிக்கிறோம். பத்து வருடங்களாகச் செயலிழந்திருந்த இந்தப் பெண்ணின் கை, கால்கள் சிகிச்சைக்குப் பிறகு சரியாகியிருக்கின்றன. அதற்குக் காரணமான உங்களுக்கு அவர் நன்றி கூற வேண்டுமாம்'' என்றார். அந்தப் பெண்ணிடம் சென்றேன். என்னை அருகில் பார்த்ததும் அவருக்கு சன்னதம் பிடித்ததைபோல ஆகிவிட்டது. எனக்குச் சற்றும் புரியாத போர்ச்சுக்கீசிய மொழியில் என்னென்னவோ பேசினார். கை, கால்களை ஆட்டிக்காட்டினார். என்னைக் கட்டிப்பிடித்தார். என் உடம்பு முழுக்கத் தடவிக்கொடுத்தபடி பாதி அழுகையும், பாதி சிரிப்புமாக ஏதேதோ பிதற்றினார். தென்னிந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் ஆரணி என்ற சிற்றூரில் வளர்ந்த ஒருவனிடம், ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டியுள்ள ஒரு கண்டத்தில் வசிக்கும் ஒரு பெண்மணி அவருடைய வாழ்க்கையை மீட்டெடுத்துத் தந்துவிட்டதாகச் சொல்லி ஆனந்தக் கூத்தாடி நெகிழ்ந்துகொண்டிருக்கிறாள். இதைவிடப் பெரிய விருது எனக்கென்ன வேண்டும்? நான் சரியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறேன் என்று அப்போதுதான் உணர்ந்தேன்.”

ஆனாலும் உங்கள் வாழ்வனுபவத்தின் சாரத்தைக் கதைகளாக நாங்கள் பெறவில்லை என்கிற குறை ஒன்றுள்ளது தோழர் சார்வாகன்!