Published:Updated:

டீன் ஏஜைக் கொல்லும் கொடூர விளையாட்டு!

டீன் ஏஜைக் கொல்லும் கொடூர விளையாட்டு!
பிரீமியம் ஸ்டோரி
டீன் ஏஜைக் கொல்லும் கொடூர விளையாட்டு!

தற்கொலையைத் தூண்டும் திமிங்கலம்...

டீன் ஏஜைக் கொல்லும் கொடூர விளையாட்டு!

தற்கொலையைத் தூண்டும் திமிங்கலம்...

Published:Updated:
டீன் ஏஜைக் கொல்லும் கொடூர விளையாட்டு!
பிரீமியம் ஸ்டோரி
டீன் ஏஜைக் கொல்லும் கொடூர விளையாட்டு!

ரு விளையாட்டு... இதில் ஜெயிக்க வேண்டும் என்றால், தற்கொலை செய்துகொள்ள வேண்டும். ‘‘இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான விளையாட்டை யாராவது ஆடுவார்களா?’’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், ரஷ்யாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இதை விளையாடி 130 பேர் இதுவரை செத்துப் போயிருக்கிறார்கள். ‘‘இதுபோன்ற மேற்கத்திய சமாசாரங்கள் இந்தியாவுக்கு வராது’’ என்று நீங்கள் நினைத்தால்... ஸாரி! கடந்த வாரம் மும்பையின் அந்தேரியில் 14 வயது பள்ளி மாணவன் மன்ப்ரீத், தான் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டான். அவனது மொபைல் போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்து விசாரித்த மும்பை போலீசார், ‘ப்ளூ வேல் சேலஞ்ச்’ (Blue whale challenge) என்ற ஆன்லைன் தற்கொலை விளையாட்டே அவன் மரணத்துக்குக் காரணம் என உறுதி செய்துள்ளனர்.

டீன் ஏஜைக் கொல்லும் கொடூர விளையாட்டு!

மொட்டை மாடி சுற்றுச்சுவரிலிருந்து எப்படி குதிப்பது என்று ஒரு வார காலமாகவே மன்ப்ரீத் நோட்டமிட்டு வந்தானாம். சாவதற்கு முந்தைய தினம்கூட, “அடுத்த வாரம் திங்கள்கிழமை முதல் நான் பள்ளிக்கு வரமாட்டேன்” என்று மன்ப்ரீத் சொல்லி விடைபெற்றிருக்கிறான். ஏனோ நண்பர்கள் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அவன் நடவடிக்கைகளில் கடந்த ஒரு வார காலமாகவே மாற்றங்கள் தென்பட்டதை உணர்ந்த பெற்றோர், அவன் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

மொட்டை மாடி சுவரில் உட்கார்ந்தபடி தன் கால்களை மட்டும் புகைப்படம் எடுத்துக்கொண்ட மன்ப்ரீத், “என்னுடைய படம் மட்டுமே உங்களிடம் விரைவில் மீதமிருக்கும்” என்று குறிப்பெழுதி விட்டுச் சென்றுள்ளான். பக்கத்து வீட்டின் மாடியில் இருந்தவர் பார்த்து, பதறிப் போய் அவனை எச்சரித்து ஓடி வருவதற்குள் அவன் கீழே விழுந்து செத்துப் போனான்.

திமிங்கலங்கள் தற்கொலை செய்துகொள்வதாக ஒரு நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கையைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் ‘ப்ளூ வேல்’ என்ற பெயருடைய இந்த ஆன்லைன் விளையாட்டு/சவால். வாட்ஸ்அப் குழுக்களில் இதுபற்றி செய்திகள் பறந்து கொண்டிருக்க, சில அடிப்படைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

‘ப்ளூ வேல்’ என்பது ஒரு மென்பொருள் அல்ல. டவுன்லோடு செய்துகொள்ள முடியாது. ‘ப்ளூ வேல்’ என்ற பெயரில் சில மென்பொருள்கள்  கிடைத்தாலும், அவற்றுக்கும் இந்த வக்கிர விளையாட்டுக்கும் சம்பந்தமில்லை. உங்களுடைய கம்ப்யூட்டரிலோ அல்லது மொபைல் போனிலோ விளையாடும் ஆட்டமல்ல இது. எந்தவொரு குறிப்பிட்ட இணையதளத்திலும் இதை விளையாட முடியாது. Play station அல்லது Xbox போன்ற சாதனங்களைக் கொண்டும் விளையாட முடியாது. பலவீனமான டீன் ஏஜ் ஆட்களை அடையாளம் கண்டு அவர்களே ஆன்லைனில் அழைப்பு விடுக்கின்றனர்; சிலர் தாங்களாகவே போயும் சிக்குகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டீன் ஏஜைக் கொல்லும் கொடூர விளையாட்டு!

‘ப்ளூ வேல்’ என்பது மென்பொருள் இல்லை. ஒரு கோட்பாடு. கொடூரமான கோட்பாடு. விளையாடுபவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் வலி தரும் கோட்பாடு. இணைய சமூக ஊடகங்கள் மூலம் பலவீனமான சிறார்கள் மற்றும் இளைஞர்களைத் தற்கொலைக்குத் தூண்டுவதே ப்ளூ வேல் சேலஞ்ச். ‘Curator’ என்ற அடையாளம் தெரியாத நபர் இந்த ஆட்டத்தை நடத்துவார். #bluewhalechallenge, #curatorfindme, #i-am-whale என்ற பல்வேறு புனைப்பெயர்களைக் கொண்ட நபர்கள் இணையத்தில் உலா வருகின்றனர். இந்த விளையாட்டை ஆடும் நபர், சுமார் 50 சிறிய வேலைகளை விளையாட்டின் கட்டளைப்படி செய்ய வேண்டி வரும். நள்ளிரவில் தூக்கத்திலிருந்து விழிப்பது, மோசமான பாடல்களைக் கேட்பது, திகில் படம் பார்ப்பது, கத்தியால் கையில் கீறி ரத்தம் சொட்டச் சொட்ட உருவங்கள் வரைவது என்று நீளும் இந்தப் பட்டியல் ‘தற்கொலை செய்துகொள்ளவேண்டும்’ என்று முடிகிறது.

பிள்ளைகள் தங்களுடைய ஆன்லைன் செயல்பாடுகள் பற்றி மனம்விட்டுப் பேசுவதில்லை. இத்தகைய வக்கிர விளையாட்டுகளால் ஏற்படும் பின்விளைவுகளை அவர்கள் உணர்வதில்லை. விளையாட இறங்கிவிட்டால், இடையில் பின்வாங்க முடியாது. ‘சொன்னதைச் செய்யாவிட்டால், உங்கள் பெற்றோரைக் கொன்றுவிடுவோம்’ என்று மிரட்டல் வரும். எல்லாவற்றையும் இத்தனை நாள் மறைத்துவிட்டு, மாட்டிக்கொண்டபின் அது பற்றிப் பேசவும் பயம் வந்துவிடுகிறது.
‘Your Dost’ (www.yourdost.com) என்ற நிறுவனம், மனச்சிதைவு போன்ற மனநோய்களுக்கு ஆறுதல் தந்து பேசும் ஆலோசகர்களைக் கொண்ட நிறுவனம்.

தற்கொலை எண்ணம் மேலோங்கி நிற்கும் நபர்களுக்கு கவுன்சலிங் தந்து ஆற்றுப்படுத்தும் இந்த நிறுவனம், கடந்த மே மாதமே இந்த விபரீத விளையாட்டு பற்றி எச்சரித்து இருந்தது. Your Dost நிறுவனர்களில் ஒருவரான புனீத் மனுஜாவிடம் பேசினோம். ‘‘ப்ளூ வேல் மட்டுமன்றி பல வக்கிரமான ஆன்லைன் விளையாட்டுகள், டீன் ஏஜ் பருவத்தினரை ஈர்த்து நாசம் செய்கின்றன. கூட்டுக் குடும்ப முறை உடைந்து அப்பா, அம்மா, குழந்தை எனக் குடும்ப முறை மாறியது இந்த விபரீத விளையாட்டுகள் பிரபலமாவதற்கு முக்கியக் காரணம். தனிமையில் வாடும் பிள்ளைகள், சமூக ஊடகங்களில் தஞ்சமடைகின்றனர்” என்றார்.

பெற்றோர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சுமார் 50 நாள்கள் தொடர்ந்து இந்த விளையாட்டு ஆடப்பட வேண்டும். யோசிக்கும் திறன், உரையாடும் திறன், ஞாபக சக்தி என எல்லாம் குறைந்து, வெற்றி பெற வேண்டும் என்ற வெறியே மிஞ்சும். 50 நாள்கள் வரை தங்கள் குழந்தைகளிடம் காணப்படும் மாறுதல்களைப் பெற்றோர் கவனிக்காவிட்டால் அது யாருடைய குற்றம்?” என்று காட்டமாகக் கேட்டார் ஒருவர்.

டீன் ஏஜைக் கொல்லும் கொடூர விளையாட்டு!

இந்த விளையாட்டை உருவாக்கியவர், ரஷ்யாவைச் சேர்ந்த பிலிப் புடேய்கின். ‘ப்ளூ வேல்’ கேமை உருவாக்கிப் பிள்ளைகள் தற்கொலைக்குக் காரணமாக இருந்ததற்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு இதில் வருத்தம் இல்லை. ‘‘அந்தக் குழந்தைகள் சந்தோஷமாகவே செத்துப் போனார்கள். எந்தச் சாதனையும் செய்யாமல் ஒருவர் எதற்காக வாழ வேண்டும். எந்த இலக்கும் இல்லாமல் அப்படி இருப்பவர்கள் ‘உயிரியல் களை’கள். இந்தச் சமூகத்துக்கு அவர்களால் ஆபத்து. அதனால்தான் நான் சுத்தம் செய்தேன்’’ என்று சொல்லி திடுக்கிட வைத்திருக்கிறார் அவர்.

வீதிகளில் விளையாடாமல் ஒளிரும் திரைகளில் மூழ்கிக் கிடப்பது உடல்நலனுக்குத் தீங்கானது என்று இதுவரை நினைத்திருந்தோம். உயிரையே எடுக்கும் எமன் அல்லவா, அதன் வழியே இப்போது வருகிறது! தனக்கு ஏற்படும் வலியும் வேதனையும்கூட சந்தோஷம்தான் என நினைக்கும் பைத்தியக்கார மனநிலைதான் இத்தகைய விளையாட்டுகளில் ஈடுபட வைக்கிறது. ‘ப்ளூ வேல் சேலஞ்ச்’ தற்கொலை, மும்பையுடன் நிற்க வேண்டும் என்பதுதான் பெற்றோர்களின் கவலை.

- ரமேஷ் பாலசுப்ரமணியன்

பிரேக் போடக் கற்றுக்கொள்ளாத டிரைவர்!

டீன் ஏஜ் பருவத்தினர் நிறைய பேர் இப்போதைய வாழ்க்கைச் சூழலால் பெரும் சிக்கலில் இருக்கிறார்கள். பெற்றோர்களுக்குத் தங்கள் வாழ்க்கை பிஸியில் இவர்களோடு செலவிட நேரம் இருப்பதில்லை. அதனால் இவர்கள் நிறைய தனிமையை உணர்கிறார்கள். ‘என்னை யாருக்குமே பிடிக்கவில்லை’ எனச் சுய இரக்கத்தில் தவிக்கிறார்கள். டீன் ஏஜ் மூளை என்பது, பெரியவர் களின் மூளையில் கிட்டத்தட்ட 80 சதவிகித அளவுக்கான வளர்ச்சி மட்டுமே கொண்டது. 120 கி.மீ வேகத்தில் கார் ஓட்டும் டிரைவர், பிரேக் போடக் கற்றுக்கொள்ளாத நிலையில் இருப்பது போன்ற வளர்ச்சி இது.

இந்த வயதினரை இதுபோன்ற கொடூர விளையாட்டுகள் ஈர்ப்பதில் வியப்பில்லை. நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அவர்களுடன் உரையாடுங்கள். பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேளுங்கள். விசாரணை நடத்தாதீர்கள். இணையத்தை முழுமையாக பிள்ளைகளுக்குத் தடை செய்யாதீர்கள். விளைவுகள் மோசமானதாக இருக்கும். அளவோடு இருந்தால் எதுவும் அமிர்தமே.

டீன் ஏஜ் பருவத்தினர், சமூக ஊடகங்களில் முகமறியா நபர்களுடன் நட்பு பாராட்டக்கூடாது. நண்பர்கள் செய்கிறார்கள் என்பதற்காக எதையும் நன்மை, தீமை உணராமல் செய்யக்கூடாது. பெற்றோரிடம் எதையும் மறைக்கக்கூடாது, பிரச்னைகள் உள்பட!