Published:Updated:

```பாக்கி’ இருந்தால் கேளுங்கள்... துப்`பாக்கி’ கேட்காதீர்கள்!'' -கருணாநிதியின் சிலேடைச் சிதறல்கள்

```பாக்கி’ இருந்தால் கேளுங்கள்... துப்`பாக்கி’ கேட்காதீர்கள்!'' -கருணாநிதியின் சிலேடைச் சிதறல்கள்
```பாக்கி’ இருந்தால் கேளுங்கள்... துப்`பாக்கி’ கேட்காதீர்கள்!'' -கருணாநிதியின் சிலேடைச் சிதறல்கள்

ழுத்து, பேச்சு, நிர்வாகம் எனப் பன்முகத் திறனும் ஒருங்கே அமையப்பெற்றவர், கருணாநிதி! நெருக்கடியான சூழலிலும்கூட தனது தேர்ந்த நகைச்சுவைத் திறனால், சமயோசிதமாகப் பேசி சூழலையே தன்வசப்படுத்திவிடுவார். அந்தவகையில், பல்வேறு சூழல்களிலும் தன்னுடைய தனிப்பெரும் தமிழறிவால் சிலேடையாகப் பேசி நகைச்சுவையைச் சிதறவிட்ட நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே....

2004 ம் ஆண்டு ஒருமுறை உடல்நலம் குன்றியதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் கருணாநிதி. அப்போது, ``மூச்சை இழுத்துப் பிடியுங்கள்” என்று மருத்துவர் கேட்டுக்கொண்டதையடுத்து, கருணாநிதியும் மூச்சை இழுத்துப் பிடிக்கிறார். சில நொடிகளில், ``இப்போ மூச்சை விடுங்க” என்கிறார் மருத்துவர்.

``மூச்சை விடக் கூடாது என்பதற்காகத்தான் மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன் டாக்டர்” என்று சட்டென கருணாநிதி பதில் கொடுக்க மருத்துவரும் சிரித்துவிட்டார்.

***
`அறிஞர் அண்ணா நினைவு ஹாக்கிப் போட்டி'யின் பரிசளிப்பு விழா! சிறப்பு அழைப்பாளராகக் கலைஞர் அழைக்கப்பட்டிருந்தார். 
போட்டியில், இரு அணிகளும் சமமான எண்ணிக்கையில் `கோல்’ போட்டிருந்ததால், `டாஸ்’ முறையில் வெற்றி - தோல்வி நிர்ணயம் செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது. இரு அணிகளிடமும் `பூவா, தலையா' கேட்டு நாணயத்தைச் சுண்டிவிட்டனர். `தலை’ கேட்ட அணி தோற்று, `பூ’ கேட்ட அணி வெற்றி பெற்றது.

பரிசளித்துப் பேசிய கருணாநிதி, ``இது நாணயமான வெற்றி. நாணயத்தால் தீர்மானிக்கப்பட்ட வெற்றி. `தலை’ கேட்டவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். ஏனெனில் தலை கேட்பது வன்முறை அல்லவா?” என்று சிலேடையாகப் பேச.... கூட்டம் ஆர்ப்பரித்தது.

***

ருணாநிதி, முதல்வராகப் பதவி வகித்துக்கொண்டிருந்தபோது, `முப்பெரும் விழா கவியரங்கம்' ஒன்று நடைபெற்றது. ஈழத்துயர் பற்றி கவிதை வாசித்த புலவர் புலமைப்பித்தன் ஈழத் துயர் ஏற்படுத்தியிருக்கும் வலியை உணர்த்தும்விதமாக, ``கலைஞரே எனக்கொரு துப்பாக்கித் தாருங்கள்!” என்று கேட்டவாறு தனது கவியை முடித்தார்.

கருணாநிதி, தனது பதிலுரையின்போது, புலமைப்பித்தனுக்குப் பதிலளிக்கும்விதமாக, ``புலவரே! வேறு ஏதாவது `பாக்கி’ இருந்தால் கேளுங்கள். துப்`பாக்கி’ மட்டும் என்னால் தரமுடியாது!” என்று கூறி அரங்கையே அதிரவைத்தார்.

***
ட்டசபை நிகழ்வுகளின்போது, எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு சாமர்த்தியமாகப் பதிலளித்துப் பேசுபவர் கருணாநிதி.
1969 ம் ஆண்டு சட்டசபையில் நடைபெற்ற சம்பவம் இது...

சட்டமன்ற உறுப்பினரான கே.விநாயகம், ``மெரீனா கடற்கரையின் ஒரு பகுதியில், லவ்வர்ஸ் பார்க் இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல், காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?’’ என்று கேள்வி கேட்டார்.

உறுப்பினரின் இந்தக் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய கருணாநிதி, ``இந்த விஷயத்தில் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்’’ என்று நகைச்சுவையாகப் பதில் கூற, சபையில் அனைவரும் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

***
1971 ம் ஆண்டின்போது நடைபெற்ற சட்டசபை நிகழ்வு....

``கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாக நிறைய செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தமும் குறைந்துள்ளது. எனவே, கூவம் ஆற்றில், அசுத்தத்தைப் போக்க முதலைகள் விடுவது பற்றி அரசு ஆலோசிக்குமா?’’ என்று கேள்வி கேட்டார் அப்துல் லத்தீப்.

‘‘ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் `முதலை’ கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது’’ என்றார் கருணாநிதி சிலேடையாக. 

***

1973 ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி பேசும்போது,``மதுரை மீனாட்சிக்கு வைர கிரீடம், வைர அட்டிகை... இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு?’’ என்ற கேள்வியை முன்வைத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய கருணாநிதி : ‘‘மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன்னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே!’’ என்றார்.

***

1989 ம் ஆண்டு சட்டசபையில்...

‘‘கன்னியாகுமரி மக்களின் கோரிக்கை படி முதல்வர், கருணை கொண்ட கடைக்கண் பார்வையைக் குமரியின் மீது திருப்பி, மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற்சாலை அமைக்க, முன் வருவாரா?’’ என்றார் உறுப்பினர் நூர் முகம்மது.

‘‘குமரியின் மீது கடைக்கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது!’’ என்று சிலேடையாய் பதில் கொடுத்தார் கருணாநிதி.

***

ருணாநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டார் எனக்கூறி, வடநாட்டைச் சேர்ந்த ஒரு சாமியார் `கருணாநிதியின் தலையைச் சீவுவேன்' எனப் பகிரங்கமாகப் பேசிவிட்டார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய கருணாநிதி, ``என் தலையை நான் சீவியே பல வருடங்கள் ஆகிவிட்டன...'' என்றார் நகைச்சுவையாக....!

***