‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார் வள்ளுவர். ஆனால், புத்தகமே எழுதிவிட்டார் சந்தியா நடராஜன். இதயத்தின் ஓரிடத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு, அதற்கான சிகிச்சை பெற்றபோது, அவருக்கு மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் அதிகமாக வந்துள்ளன. எனவே, மரணத்தைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறார். அதுபற்றிய படைப்புகளைத் தேடத் தொடங்குகிறார். யோசிக்க ஆரம்பிக்கிறார். அவற்றை எல்லாம் தொகுக்கிறார்; எழுதுகிறார். அதையே புத்தகமாகவும் கொண்டுவந்துவிட்டார். யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகமா?

மரணம் பயமுறுத்தும்... எல்லோரையும். மரணத்தை வென்றவர் எவரும் இல்லை. ஆனால், மரணத்தைப் பற்றி படிக்கும்போது சுவாரஸ்யமாக இருக்கிறதே? ஆமாம். மகாபாரதம் தொடங்கி கல்யாண்ஜி வரை படிக்கும்போது வாழ்வதற்கான அர்த்தமும் அழகும் கூடுகிறது. நமது உபநிஷதங்களில் கடோப உபநிஷதம், மரணத்தைப் பற்றி அதிகம் பேசுகிறது. மரண தேவனுடன் ஒரு சிறுவன் உரையாடுவதாக அது அமைந்துள்ளது.
‘நமது வாழ்வு ஒரு நித்திரை. வரப்போகும் வாழ்வோ ஒரு விழித்தெழுதல். இவ்விரண்டுக்கும் இடைப்பட்டதுதான் மரணம்’ என்ற அரேபிய மரபின் தத்துவார்த்தப் பதிவு முதல்... ‘வாழ்க்கையின் மறுபெயர் மரணம், மரணத்தின் மறுபெயர் வாழ்க்கை’ என்ற விவேகானந்தரின் வேத வரிகள் வரை, எல்லா மரணங்களும் இதில் பேசப்படுகின்றன. ‘நான் மரணத்துக்காகத் துக்கப்படுவதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன’ என்று காந்தி சொல்கிறார். ‘மரணத்தைக் கொண்டாடுங்கள்’ என்கிறார் ஓஷோ. ‘மரணம் என்பது ஒன்றுமில்லை. தோற்று இழிவில் வாழ்வது தினசரி மரணம்’ என்கிறான் மாவீரன் நெப்போலியன். ‘ஒரு மரணம் என்பது துயரம். ஆயிரம் ஆயிரம் மரணங்கள் வெறும் புள்ளிவிவரங்கள்’ என்று ரஷ்யாவின் ஸ்டாலின் சொல்வது, எல்லா தத்துவங்களையும் மறக்கடிக்கிறது. ‘மரணம் ஒரு முகத்திரை. அதை, வாழ்பவர்கள் வாழ்க்கை என்கிறார்கள். அவர்கள் உறங்கும்போது முகத்திரை பறிக்கப்படுகிறது’ என்ற ஷெல்லியின் வரிகள், யதார்த்தத்தை உணர்த்துகின்றன.
இப்படி ஏராளமான துணுக்குகள் கோக்கப்பட்டுள்ளன. துணுக்குகளின் சேர்க்கைதானே வாழ்க்கையும்?
இறுதியாக கல்யாண்ஜியின் கவிதை:
‘இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப்போகிறது
இருந்து தொலையலாம்’
இனி இல்லை மரணபயம்...
உரையும் மொழிபெயர்ப்பும்: சந்தியா நடராஜன்
சந்தியா பதிப்பகம், புதிய எண்: 77, 53-வது தெரு,
9-வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-83. தொடர்புக்கு: 044-24896979
விலை: ரூ.100/-
- புத்தகன்
