Published:Updated:

சிலை கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகள்!

சிலை கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகள்!
பிரீமியம் ஸ்டோரி
சிலை கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகள்!

அன்றே சொன்னது விகடன்

சிலை கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகள்!

அன்றே சொன்னது விகடன்

Published:Updated:
சிலை கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகள்!
பிரீமியம் ஸ்டோரி
சிலை கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகள்!

‘ஒப்பிலியப்பன் கோயில் நகைகளைத் திருடிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கைது!’

‘ஸ்ரீவைகுண்டம் கோயிலில், நகை மோசடி செய்த அறநிலையத்துறை அதிகாரி கைது!’

‘சேலத்தில், பூசாரியை நியமிப்பதற்கு 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கைது!’


- இந்தச் செய்திகளின் வரிசையில் உச்சமாக, இப்போது சிலைக் கடத்தலிலும் அறநிலையத் துறை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது, நம்மையெல்லாம் பதற வைத்திருக்கிறது. தஞ்சாவூர் பந்தநல்லூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயிலில்தான் இந்த அவலம்.

சிலை கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகள்!

3-1-2017 தேதியிட்ட ‘சக்தி விகடன்’ இதழில், ‘பரிதாப நிலையில் கோட்டைக் கோயில்’ என்ற தலைப்பில், ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயில் பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தோம். அதில், ‘கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பாதுகாப்பற்ற கோயில்களின் சிலைகளை, இந்தக் கோயிலின் பிரகாரத்தில் சுரங்கப்பாதை போன்ற பாழடைந்த இடத்தில் சிலை பாதுகாப்பு மையம் அமைத்து வைத்திருக்கிறார்கள். இந்தச் சிலைகள் பற்றிய முழுமையான விவரங்கள் இல்லை. ஏதேனும் சிலைகள் கணக்கில் குறைந்திருந்தால் கூட கண்டுபிடிப்பது  சிரமம்தான். கிட்டத்தட்ட 200-க்கும் அதிகமான சிலைகள் இருந்தன. அவற்றில் சில காணாமல் போயிருக்கலாம்’ என்றும் குறிப்பிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து அன்றைய இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி, இங்கு ஆய்வு மேற்கொண்டார்.

ஆனால், இந்தக் கடத்தல் விவகாரம் இப்போதாவது வெளிச்சத்துக்கு வருவதற்குக் காரணம் ஒரு வழக்கு. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வெங்கட்ராமன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இங்கு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு விநாயகர் சிலைகள், புஷ்கரணி, வள்ளி, தெய்வயானை மற்றும் சந்திரசேகர் என ஆறு உலோகச் சிலைகள் மாயமானது தெரியவந்தது. மயிலாடுதுறை இணை ஆணையர் கஜேந்திரன், கும்பகோணம் துணை ஆணையர் ஞானசேகரன், கோயில் செயல் அலுவலர் காமராஜ் மற்றும் கோயிலின் தலைமை எழுத்தர் ராஜா ஆகிய நான்கு அறநிலையத்துறை அலுவலர்கள் மீது இப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிலை கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகள்!

வழக்குத் தொடர்ந்த வெங்கட்ராமனிடம் பேசினோம். “2013-ம் ஆண்டுக்கு முன்பாகவே இந்தச் சிலைகள் திருடப்பட்டுள்ளன. விலை மதிக்கமுடியாத ஐம்பொன் சிலைகளை உலோகத் திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், சிலைகளை அங்கு வைக்காதது ஏன்? அதேபோல இரண்டாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த வில்லி ஆண்டவர் கோயில் சிலைகளை உலோகத் திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்காமல், அணைக்கரை பயணியர் மாளிகையில் வைத்து 20 ஆண்டுகளாக பாதுகாத்து வருவது பாதுகாப்பானதா? பயணியர் மாளிகை பல பேர் வந்து போகின்ற இடம், அங்கே எப்படி சிலைகள் பாதுகாப்பாக இருக்கும்? அரசு பாதுகாப்பு மையத்தில் வைக்கச் சொல்லியும், பயணியர் மாளிகையிலிருந்த 10 சிலைகளில் 3 சிலைகளை, ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு மாரியம்மன் கோயிலில் வைத்திருக்கிறார்கள். பயணியர் மாளிகைக்கு அடிக்கடி யார் யாரோ வந்து போகிறார்கள். அங்குதான் சிலைத் திருட்டு நடந்துள்ளது” என்றார்.

ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயிலின் பரம்பரை அறங்காவலர் பசுபதி, “மற்ற கோயில்களின் சிலைகளைப் பூஜை செய்யும் நாட்களில் மட்டும் இங்கிருந்து எடுத்துச் செல்வார்கள். திருட்டு, கடத்தலுக்கு வாய்ப்பில்லை. ஆனால், சிலைகள் காணாமல் போயிருக்க வாய்ப்பிருக்கிறது” என்றார்.

கோயில் எழுத்தர் ராஜா, “நான் ஒரு சாதாரண கிளார்க். கோயில் சிலைகளை எடுத்துச் செல்லும்போது, கூட இருப்பேன். எடுபிடி வேலைகள் செய்வேன். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.

சிலை கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகள்!

மயிலாடுதுறை இணை ஆணையர் கஜேந்திரன், “சிலைகள் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் காலகட்டத்தில் நான் பொறுப்பில் இல்லை. சிலைகள் காணவில்லை என்பது குறித்து விசாரணை நடத்தியிருக்கிறேன். தற்போது என் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இதற்குமேல் எதுவும் பேச முடியாது” என்றார்.

அறநிலையத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ‘‘சிலைகள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்படாமல், துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது” என்று முடித்துக் கொண்டார்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், “இந்த வழக்கில், மேலும் சில அறநிலையத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம். விரிவாக விசாரித்து வருகிறோம். முழுமையான விசாரணை முடித்து, தகுந்த ஆதாரத்தோடு இன்னும் சில ஊழியர்கள் மீதும் வழக்குத் தொடர்வோம்” என்றனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது.

- ஏ.ராம், இ.லோகேஷ்வரி
படங்கள் க.சதீஷ்குமார்