கண்ணகி சிலை மெரீனாவில் இரவோடு இரவாக காணாமல் போனதுபோல நடிகர் சிவாஜி கணேசனின் சிலை திடீரென்று இரவோடு இரவாக அகற்றப்பட்டிருக்கிறது. தன் நடிப்பால் திரையுலகைக் கட்டி ஆண்ட சிவாஜியைச் சிலை விவகாரத்தில் தமிழக அரசும், நடிகர் சங்கமும் அவமதித்துவிட்டதாகக் கொதிக்கிறார்கள் சிவாஜியின் ரசிகர்கள்.
2006 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, தன் திரையுலகத் தோழன் சிவாஜி கணேசனுக்கு சென்னைக் கடற்கரையில் சிலை அமைத்தார் கருணாநிதி. 2006-ம் ஆண்டு சிவாஜியின் நினைவு நாளான ஜூலை 21-ம் தேதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையும், காமராஜர் சாலையும் சந்திக்கும் இடத்தில் காந்தி சிலை அருகில் இந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், காந்தி சிலையின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் சிவாஜி சிலை இருப்பதாக சிலர் எதிர்க்குரல் எழுப்பினார்கள். இந்தச் சிலையால் காமராஜர் சாலையில் விபத்துகள் ஏற்படுவதாகவும், இதை அகற்றவேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீனிவாசன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நடந்தபோதும், தி.மு.க ஆட்சிக்காலம் முழுவதும் சிலைக்குப் பெரிய சிக்கல் எழவில்லை. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் தமிழக அரசின் நிலைப்பாடு மாறியது.
‘சிவாஜி சிலையால் 2013 -15 காலகட்டத்தில் 20 விபத்துக்கள் நடந்திருப்பதால், அந்தச் சிலையைச் சாலையின் மையப்பகுதியில் இருந்து அகற்றி, கடற்கரைப் பரப்பில் மற்ற சிலைகளின் வரிசையில் வைக்கலாம்’ எனப் போக்குவரத்துக் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்தது. இதனால், நீதிமன்றம் சிலையை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டது. இந்நிலையில், 2015-ல் முதல்வர் ஜெயலலிதா, சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றதோடு, சிவாஜி சிலையை அங்கு வைப்பதாகவும் அறிவித்தார். மணிமண்டபம் அமைக்கும் பணி தாமதமானதால், நீதிமன்றத்திடம் கால அவகாசம் கேட்டபடியே இருந்தது தமிழக அரசு.
இதற்கிடையில் ‘மணிமண்டபத்தில் வைத்தால், சிலைக்கு முக்கியத்துவம் இருக்காது. கடற்கரை சாலையில் உள்ள மற்ற சிலைகளின் வரிசையில் பொதுமக்கள் பார்வையில் படும் இடத்தில் வைக்கவேண்டும்’ என ‘சிவாஜி சமூக நலப் பேரவை’ சார்பாக, நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் பலனில்லை. ஆகஸ்ட் 2-ம் தேதி நள்ளிரவில், சிவாஜி சிலையைச் சத்தமின்றி அகற்றி, அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் வைத்துவிட்டது அரசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து ‘சிவாஜி சமூக நலப் பேரவை’த் தலைவர் கே.சந்திரசேகரனிடம் பேசினோம். “சிவாஜி என்ற பெரும் கலைஞனை அவரது சொந்த மாநிலமே அவமரியாதை செய்திருக்கிறது. தன் நடிப்பால் உலகக் கலைஞர்களையே திரும்பிப் பார்க்க வைத்து, தமிழகத்துக்குப் பெருமை தேடித்தந்த அந்தக் கலைஞனைத் தமிழக அரசு அவமரியாதை செய்திருப்பது வேதனைக்குரியது. போக்குவரத்துக்கு இடையூறு என்பதால் சிலை அகற்றப்படுகிறது என்கிறார்கள். தமிழகம் முழுக்க 13 ஆயிரம் சிலைகள் சாலைகளின் நடுவே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றையெல்லாம் அரசு அகற்றுமா? இரவோடு இரவாகச் சிலையை அகற்றி, மணிமண்டபத்தில் வைத்துவிட்டு நிம்மதியடைந்துவிட்டார்கள் ஆட்சியாளர்கள். ஆனால் ஒவ்வொரு ரசிகனும் வேதனையில் இருக்கிறான். இதற்கான விளைவை விரைவில் அனுபவிப்பார்கள். அந்த மூத்த கலைஞனுக்கு நேர்ந்த அவமானத்தை நடிகர் சங்கம் கண்டும்காணாமல் இருப்பது வெட்கக்கேடு.

அமெரிக்க அரசின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அங்கு போய்வந்த சிவாஜிக்கு நடிகர் சங்கத்தில் மிகப்பெரிய பாராட்டுக் கூட்டம் நடத்தியவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்குச் சிறந்த நடிகர் தேசிய விருது அளிக்கப்பட்டதற்கு நடிகர் சங்கம் சார்பாக மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தியவர் சிவாஜி. இப்படி அன்றைக்கு கட்சிமாச்சர்யங்களின்றி இயங்கிய நடிகர் சங்கம் இன்று அரசியல் கட்சிகளின் கிளை போல் ஆகிவிட்டது. சிவாஜிக்கு அரசும் நடிகர் சங்கமும் செய்த இந்த அவமானத்தைக் காலம் உள்ளவரை ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்” என்றார் சந்திரசேகரன் வேதனையுடன்.
‘‘இது, நீதிமன்ற ஆணைப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கூறப்பட்டாலும்கூட, இதன் பின்னணியில் சில சதிகள் அரங்கேற்றப்பட்டதை மறுக்க முடியாது’’ என்று சொல்லியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். ‘சிவாஜிக்குப் புதிதாக ஒரு சிலை செய்வோம். அதனை எந்நாளும் காப்போம்’ என்று கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘‘கடற்கரையில் சிலையை நிறுவ வேண்டும் என்றால் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி பெற வேண்டும். அதனாலேயே சிலையை மணிமண்டபத்தில் வைத்தோம்’’ என்கிறார்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.
‘கடற்கரைப் பரப்பில் மற்ற சிலைகளின் வரிசையில் வைக்கலாம்’ எனப் போக்குவரத்துக் காவல்துறை அன்றைக்கு நீதிமன்றத்தில் சொன்னது ஒப்புக்கு சப்பாணியாகத்தானா?
‘‘எங்களுக்கு மனமில்லை’’ என்பதை இப்படியும் சொல்லலாம்.
- எஸ்.கிருபாகரன்
படங்கள்: பா.காளிமுத்து, கே.ஜெரோம்