Published:Updated:

கருணாநிதிக்கு அவர் அம்மா எழுதும் கடிதங்களில் மறக்காமல் குறிப்பிடும் ஒரு விஷயம்! #Karunanidhi

1943-ம் ஆண்டில் கோவையில் தங்கியிருந்தவாறே திரைப்படம், பத்திரிகைப் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தபோதும், பிரசாரத்துக்காகப் பல்வேறு ஊர்களில் முகாமிட்டிருக்கும்போதும் கருணாநிதிக்கு அவரின் அப்பா மற்றும் அம்மாவிடமிருந்து கடிதங்கள் வரும்

கருணாநிதிக்கு அவர் அம்மா எழுதும் கடிதங்களில் மறக்காமல் குறிப்பிடும் ஒரு விஷயம்! #Karunanidhi
கருணாநிதிக்கு அவர் அம்மா எழுதும் கடிதங்களில் மறக்காமல் குறிப்பிடும் ஒரு விஷயம்! #Karunanidhi

``சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பான நாள் அது... திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி, தான் போட்டியிட்ட திருவாரூர் தொகுதியின் கூட்டத்தில் பேசிவிட்டுத் தங்கும் இடத்துக்கு வருகிறார். வயது மூப்பின் காரணமாக ஓய்வு கேட்கும் உடல். ஆயினும், அடுத்த நாள் முரசொலிக்கான கடிதம் எழுதத் தொடங்குகிறார்" - இந்தச் சம்பவத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். உடல் சோர்ந்த நிலையிலும் தன் கடமையாக, முரசொலியின் முக்கியப் பகுதியான உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதும் பழக்கத்தை மேற்கொண்டவர் கருணாநிதி. 

1945-ம் ஆண்டு, கருணாநிதி தன் ஆருயிர் நண்பரான தென்னனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். வழக்கமான நலம் விசாரிப்போடு, குற்றாலம் செல்வது குறித்து எழுதியிருப்பார். அந்தக் கடிதத்தை வழக்கமான இடமிருந்து வலமாக எழுதாமல், வட்ட வடிவில் எழுதி, நடுவில் அன்பு மு.க என்று கையெழுத்திட்டிருப்பார். முரசொலியில் 1954-ம் ஆண்டு, கடிதப் பாணியிலான எழுத்தைத் தொடங்கினார் கருணாநிதி. அதன் நீட்சியே `உடன்பிறப்பே...' எனும் புகழ்பெற்ற கடிதங்கள். அந்தக் கடிதங்கள் வழியே அவர் உரையாடாத விஷயங்களே இல்லை. பல்வேறு செய்திகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்தக் கடிதங்கள் பல மாற்றங்களைக் கொண்டுவந்ததுண்டு, சமூகத்தில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கின்றன.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைப்பதில் பெரும் பணிகளைச் செய்திருந்தார். ஆனால், திறப்பு விழாவுக்குச் சில நாள்களுக்கு முன்பு ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. அதனால், அதன் திறப்பு விழாவுக்கான அழைப்பு சரியான நேரத்துக்குக் கொடுக்கப்படாத காரணத்தால், விழாவில் கலந்துகொள்ளவில்லை. அந்த நேரத்து மன உணர்வுகளை, உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதமே, தன்னால் மறக்கமுடியாத கடிதம் எனக் குறிப்பிடுவார் கருணாநிதி.

கடிதம் என்பது ஒருவழிப் பாதையாக இருப்பதில் கருணாநிதிக்கு விருப்பமில்லை. தன் கருத்துகளைப் பற்றி வரும் எதிர்வினைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தருவார். ஒருமுறை, இவரின் கடிதங்களில் தன்னை ராசாசி எனக் குறிப்பிடுவது பற்றி வருத்தப்பட்ட ராஜாஜி, `எம்.ஜி.ஆர், ராஜேந்திரன் போன்றோருக்கு நீங்கள் அப்படி எழுதுவதில்லையே' என்று கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, `தவறுக்கு வருந்துகிறேன். இனி ராஜாஜி என்றே குறிப்பிடுகிறேன்' என்று பதில் அனுப்பியிருக்கிறார். கருத்தியலில் முழு முற்றாக எதிர்நிலையில் இருக்கும் ஒருவரின் கருத்துகளைப் புரிந்துகொள்வதும் அதனை மதிப்பதும் கருணாநிதியின் அடிப்படை இயல்புகளில் ஒன்று.

1943-ம் ஆண்டில் கோவையில் தங்கியிருந்தவாறே திரைப்படம், பத்திரிகைப் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தபோதும், பிரசாரத்துக்காகப் பல்வேறு ஊர்களில் முகாமிட்டிருக்கும்போதும் கருணாநிதிக்கு அவரின் அப்பா மற்றும் அம்மாவிடமிருந்து கடிதங்கள் வரும். அந்தக் கடிதங்களில் அவரின் அம்மாவின் அன்பு ததும்பும் விசாரிப்புகளே அதிகம் இருக்கும். ஒரு நேர்காணலில் கலைஞர் சொல்லும்போது, `ராத்திரியில் தூங்கும்போது மறக்காமல் ஜன்னல்களைச் சாத்திவிட்டுப் படுக்கப் போ' என்பதை அவர் அம்மா பல கடிதங்களில் எழுதியிருப்பாராம். இவரின் பாதுகாப்பின் மீதான அக்கறையிலிருந்து வரும் வார்த்தைகள் அவை. 

தன் வாழ்நாளின் முக்கியப் பணியாக, உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதுவதைக் கருதிய கருணாநிதிக்கு, `ஒருமுறை உங்களை அப்பா என்று அழைக்கட்டுமா?' என மகன் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதம் வழியே, இருவரின் நெருக்கத்தைக் காணலாம். இந்தக் கடிதம், மூன்றாம் தலைமுறையாக கைமாற்றிக்கொடுக்கப்பட்டுள்ளது. தொடரட்டும்... நீளட்டும்!