Published:Updated:

வால் பாறை டீச்சர் !

வால் பாறை டீச்சர் !

தென்றல்
சிறுகதை
ஓவியம்: ஹரன்

டேலியா பூச்செடியின் மீது ஒரு அட்டைப்பூச்சி ஊர்ந்து வருவதைக் கண்கள் விரிய பார்த்து நின்றாள் குட்டிப் பெண்ணான பொன்மீனாட்சி. அருகில் நின்ற அந்தப் பழங்குடியின சிறுமி, வீட்டுக்குள் ஓடி, கை நிறைய கல் உப்பைக் கொண்டு வந்து அதன் மீது தூவினாள். கொஞ்ச நேரத்திலேயே அட்டைப்பூச்சியின் உருவம் சிதைந்து... சிதைந்து... வெறும் ரத்தமாக தரையில் வீழ... ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக நின்றாள், பொன் மீனாட்சி!

வால் பாறை டீச்சர் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருவெறும்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் டீச்சராக இருந்த அம்மா ஸ்டெல்லா மேரி, வால்பாறைக்கு டிரான்ஸ்ஃபராகிவிட, ஒன்பது வயது பொன்மீனாட்சிக்கு இங்கு வந்ததிலிருந்து எல்லாமே ஆச்சர்யம்தான்!

உயர்ந்த, தொடர்ச்சியாக செல்லும் மலைகள், மேடு பள்ளக் காடுகளில் ஒரே உயரத்தில் பசுமை காட்டி நிற்கும் தேயிலைக் காடு, அதனூடே அங்கங்கே ஓங்கி வளர்ந்து நிற்கும் சில்வர்ஓக் மரங்கள், நடுவில் அகன்று அசைந்தோடும் சின்ன ஆறு... இப்படி எல்லாமேதான்!

ஆரம்பத்தில் தேயிலைத் தோட்டங்களும், மரங்களும், செடிகளும், கொடிகளும் ரொம்ப ரொம்ப பிடித்துத்தான் இருந்தன ஸ்டெல்லாவுக்கும். கந்தக பூமியான திருச்சியில் வளர்ந்தவளுக்கு, இந்த மழை முதலில் இதமாகத்தான் இருந்தது. ஆனால், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மழை என்றால்...?! எலும்புகளை சில்லிட வைக்கும் குளிரும்கூட அவளுக்குப் பிரச்னைதான்.

காலையில் எழுந்தவுடன் தண்ணீரில் கை வைத்தால்... மைனஸ் டிகிரி ஐஸ் கட்டியைத் தொட்டது போல் சுரீர். ஸ்வெட்டர் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. காலை ஏழு மணிக்குத்தான் மனிதர்கள் நடமாட்டம். பொழுது மங்கத் தொடங்கியதுமே... கம்பளி படுக்கைக்குள் முடங்கி விடுவார்கள்.

சமதளமாக இருக்கும் இடங்களில்தான் பத்து, இருபது வீடுகளைச் சேர்ந்தாற்போல் பார்க்க முடியும். அதைவிட்டால்... கால் கிலோ மீட்டருக்கு ஒன்று, அரை கிலோ மீட்டருக்கு ஒன்று! திருச்சி மாநகரத்தையே ஸ்கூட்டியில் வலம் வந்தவளுக்கு, போகப்போக, வேப்பங்காயாக மாறிப்போனது வால்பாறை.

குடும்பத்திலேயே முதல் ஆளாக கல்லூரி சென்று படித்தவள் ஸ்டெல்லா. எம்.எஸ்சி., பி.எட். முடித்து அரசு பள்ளியில் டீச்சர் ஆனவள். டீச்சர் வேலையை உயிராக மதிப்பவள். அந்த கவர்ன்மென்ட் ஸ்கூலில் பாதி பேர் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள். மீதியெல்லாம்... காட்டுக்குள் இருந்து வரும் பழங்குடியின பிள்ளைகள். பத்தாம் வகுப்பு வந்தும் இன்னும் தமிழை எழுத்துக் கூட்டி படிப்பவர்கள்தான் அதிகம். 'இவர்களோடு குப்பைகொட்டி, உயரதிகாரிகளிடம் எப்படி  நல்ல பெயர் வாங்க முடியும்?’ என்ற கவலை வேறு!

37 டீச்சர்கள் வேலை செய்ய வேண்டிய பள்ளி. மலைக்கும், மழைக்கும், குளிருக்கும் பயந்தவர்கள்... 'இந்தப் பிள்ளைகளுக்கு எல்லாம் நம்மால பாடம் சொல்லித் தர முடியாது’ என்று பதுங்கியவர்கள் என பலரும் டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு ஓடிவிட, எஞ்சியது 12 பேர்தான். ஆனால், இந்தப் பள்ளிக்கூடமும், டீச்சர்களும் தங்கள் வாழ்க்கையில் எப்படியாவது ஒளிவிளக்கை ஏற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்... அடாத மழையில் தேயிலைக் காடுகளைத் தாண்டி, அதிலிருக்கும் அட்டைப்பூச்சிகள், பயமுறுத்தும் சிறுத்தை, யானை என்று எல்லாவற்றையும் சமாளித்து நம்பிக்கையோடு வந்துகொண்டு இருந்தனர் குழந்தைகள்.

ஆறாங்கிளாஸிலிருந்து பத்தாம் கிளாஸ் வரை கணக்கு சொல்லித் தர ஒரே ஒரு டீச்சர் - ஸ்டெல்லா மேரி மட்டும்தான். 'எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு இரண்டு வருஷமாவது வேலை பார்த்துவிட்டு, திருச்சிக்கே டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு ஓடி விட வேண்டியதுதான்' என்று தான் நினைத்திருந்தாள். ஆனால், அந்த மழையும், குளிரும், அவளுடைய ஓட்டத்தை விரைவுபடுத்தும் காரணிகளாக உருவெடுத் தன.

இதற்கு நேர்மாறாக... குட்டிப் பெண் பொன்மீனாட்சி, அந்த ஊரையும் மனிதர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க ஆரம்பித்தாள். அந்த ரசனை மனதுக்குள் ஆழமான நேசமாக மாறத் தொடங்கியது.

பிரம்பால் அடிக்காத டீச்சர் என்பதால் 'இந்த அல்ஜீப்ரா கணக்கு மட்டும் புரியவே மாட்டேங்குது டீச்சர்’ என்று ஸ்டெல்லாவின் வீடு தேடி வரும் பிள்ளைகளும் இருந்தனர். அவர்கள்தான் பொன்மீனாட்சிக்கு விளையாட்டுத் தோழர்கள், தோழிகள். தாட் பூட் பழம், தண்ணிக்கா பழம், கம்பிளிப்பூச்சி பழம் என்று விதவிதமான பழங்களையும், டேலியா பூ, மைக் செட் பூ, உண்ணி பூ என்று கலர் கலரான பூக்களையும் பாசம் கலந்து மீனாட்சிக்காக கொண்டுவரத் தவறுவது இல்லை.

''அக்கா, இந்த தண்ணிக்கா பழத்தை எப்படி சாப்பிடுறது?'' என்று மீனாட்சி கேட்கும்போது ஆசையாக பழத்தை உரித்து ஊட்டி விடுவார்கள். அப்போதெல்லாம் அவளுக்கு அந்த அக்காக்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றும். 'அவங்களையெல்லாம் தொட்டுத் தொட்டு உரசி நின்னு பேசாதே’ என்று பல முறை அம்மா எச்சரித்தது ஞாபகம் வரும்... அடக்கிக் கொள்வாள்.

திருச்சி 'பெல்’ நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை செய்யும் காதல் கணவர் அழகுராஜு, தங்களைப் பார்க்க வால்பாறைக்கு வரும்போதெல்லாம், ''டிரான்ஸ்ஃபர் வேணும்... யாரையாவது புடிச்சி வாங்குங்க'' என்று நச்சரித்தாள் ஸ்டெல்லா மேரி. முதலில் கெஞ்சலாகச் சொன்னாள். அடுத்த தடவை, கொஞ்சம் சத்தம் போட்டுச் சொன்னாள். பிறகு, அழுது கொண்டே சொன்னாள். உச்சகட்டமாக நகைகளை அடகு வைத்து அவர் கையில் பணத்தைத் திணித்துச் சொன்னாள்!

ஒரு நன்னாளில், அதே திருவெறும்பூர் மேல்நிலைப் பள்ளிக்கே டிரான்ஸ்ஃபர் கிடைத்தது. குடும்பமாக வால்பாறை சுப்ரமணியசுவாமி கோயிலுக்குப் போனார்கள். ஸ்டெல்லா, சாமிக்கு நன்றி சொன்னாள்.

பொன்மீனாட்சி சாமியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். கோயிலை விட்டு வெளியே வந்தபோது ''என்னமா வேண்டிக்கிட்ட சாமிகிட்ட..?'' என்றாள் ஸ்டெல்லா மேரி டீச்சர்.

''நான் சீக்கிர சீக்கிரமே பெரியவளாகி, நல்லா படிச்சு, எங்க அம்மாவைவிட பெரிய கணக்கு டீச்சராகி, இந்த ஸ்கூலுக்கு டீச்சரா வந்து எல்லோருக்கும் நல்லா பாடம் சொல்லித் தரணும்னு வேண்டிக்கிட்டேன்!'' என்று குழந்தை சொன்னபோது, யானை போல தெரியும் மலை இன்னும் அழகாக தெரிந்தது!