Published:Updated:

The Night of Broken Glass - காஷ்மீரின் கறுப்புப் பக்கங்களை அறியச்செய்யும் ஆவணம்!

The Night of Broken Glass - காஷ்மீரின் கறுப்புப் பக்கங்களை அறியச்செய்யும் ஆவணம்!
The Night of Broken Glass - காஷ்மீரின் கறுப்புப் பக்கங்களை அறியச்செய்யும் ஆவணம்!

The Night of Broken Glass - காஷ்மீரின் கறுப்புப் பக்கங்களை அறியச்செய்யும் ஆவணம்!

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கை ஒன்றை சென்ற ஜூன் மாதம் காஷ்மீரில் வெளியிட்டது. இந்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ள காஷ்மீரின் நிலை பற்றி, இந்திய அரசு கண்டுகொள்ளவேயில்லை. ``இது ஒரு வெற்று அறிக்கை" என்றே இதைக் குறிப்பிடுகிறார் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியத் தூதர் தன்மயா லால். மேலும் ``இது காஷ்மீர் பற்றிய எந்தத் தெளிவும் இல்லாத ஓர் அதிகாரியின் பாரபட்சமான, சரியாக விசாரிக்கப்படாத செய்திகளின் அடிப்படையில்  உருவாக்கப்பட்ட அறிக்கை” என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்த அறிக்கை பற்றிக் கூறும் காஷ்மீர் மக்களோ ``இதைத்தான் நாங்கள் பல வருடங்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று சிவப்புக் கம்பளம் விரிக்காத குறையாக வரவேற்கிறார்கள். அங்கே உள்ள பத்திரிகைகளும் இந்த அறிக்கையைத் தீவிரமான விவாதத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என்றே விரும்புகின்றன. ``எத்தனையோ வருடங்களாக காஷ்மீர் மக்கள்பட்ட துன்பங்களையும் அனுபவங்களையும் எழுத்தில் வடித்ததாய் இருக்கிறது இந்த அறிக்கை” என்று இதை வர்ணிக்கின்றன.

இது அத்தனையையும்  தவறானது என்றும், உறுதிசெய்யப்படாத ஆதாரங்களின் அடிப்படையில் வந்தவை என்றும் சொல்லி இதைத் திசைதிருப்பப்பார்க்கிறது இந்திய அரசு. ஆனால், காஷ்மீர் மக்கள் இதற்கான ஆதாரங்களைப் பல வருடங்களாகவே தொடர்ந்து பத்திரிகைகளில், புகைப்படங்களில், மனித உரிமை அறிக்கைகளில், வாக்குமூலங்களில், கவிதைகளில், புதினங்களில் அளித்துக்கொண்டிருக்கிறார்கள். `இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?' எனக் கேட்கிறார்கள். இந்த வகையில் ஃபெரோஸ் ராத்தரின் சமீபத்திய புத்தகமான `தி நைட் ஆஃப் புரொக்கன் கிளாஸ்' (The Night of Broken Glass) புத்தகம், காஷ்மீரின் கறுப்புப் பக்கங்களை அறியச்செய்யும் சிறந்த இலக்கிய ஆவணமாகத் திகழ்கிறது.

இதில் நாவல், சிறுகதை என்ற இரண்டு இலக்கிய வகைகளை ஒன்றிணைத்துள்ளார் ராத்தர். இந்த இணைப்பால் காஷ்மீர் மக்களின் வாழ்வையும் சாவையும் அனைவரையும் தெரிந்துகொள்ளச் செய்கிறார். ராணுவம் மூலம் கண்ணிவெடிகள் நிரப்பப்பட்ட இந்தப் பள்ளத்தாக்கில் மக்கள் எந்த அளவுக்குக் கவனமாகப் பயணிக்கிறார்கள் என்பதைத் தொடர்ச்சியான சில நிகழ்வுகளைப் பதிவுசெய்யப்பட்ட இவரது சிறுகதைகள் மூலம் மிகப்பெரிய  ஓர் அதிர்ச்சியை நமக்குள் கொண்டுவருகிறார் ராத்தர். நிகழ்வுகளையும் ஒரு தியானத்தைப் போன்று நாவலின் வடிவில் கதைமாந்தர்களின் மூலம் காஷ்மீர் மக்களின் உணர்வுப் போராட்டங்களையும் வாசகருக்கு விளக்குகிறார். இந்த இரண்டு வடிவத்தின்மூலம் காஷ்மீர் மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய புதிரை விளக்குகிறார். இந்தக் கதையில் வரும் ஒவ்வொன்றும் நிஜத்தில் நடக்கிறது அல்லது நிஜத்தில் நடப்பதை இவர் கதையாகப் படைத்துள்ளார் எனலாம்.

`18 வருடங்கள் முன்பு ஶ்ரீநகர் வந்த ஒரு தந்தை, நகரம் முழுவதும் ராணுவ வீரர்களால் சுடப்பட்ட குண்டுகளின் ஷெல்களை எடுத்து வந்து வீட்டில் ஒளித்துவைக்கிறார். `ஏன்?' என்று மனைவி கேட்டதற்கு `என் மகன் விளையாட வெளியே போகும்போது ஷெல்களைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை' என்கிறார்.

இதுபோல அவரது கதைகளில் சாமானிய மனிதர்களையும் ஒரு ராணுவ வீரரின் சிக்கலான மனநிலைகளையும் மனதோடு படம்பிடித்துக் காட்டுகிறார் ராத்தர். இது, பொது ஊடகங்கள் செய்யாத ஒன்று.

`இறையாண்மையின் நிழலாக ஒரு படை வீரர். எலும்புகளின் கோட்டையில் பனி உறைந்த தனது கரங்களில் சில்லிட்ட உலோகத்தை எடுத்துத் திணிக்கிறார். சுவருக்கு அப்பால்... நகரத்தின் இதயத்துக்குள். மூச்சுத் திணறவைக்கும் சுவர்களுக்கிடையே இருக்கும் இந்த வீரர் பங்கருக்கு வெளியே காலடி எடுத்து வைத்த அடுத்த கணம் கொல்லப்படலாம். சிறிய ஒரு தூண்டுதல் இருந்தாலும் அவருக்கும் கொல்வதற்கான முழு உரிமை உண்டு. சபீரால் இந்த மனநிலையை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. இது, கொளுத்தும் நிலமா... கொல்லும் காடா? அழிப்பதற்கான கடமையும் அழிக்கப்படுவதற்கான பயத்துக்கும் நடுவே ஊசலாடுகிறது.'

இந்தியப் பொது ஊடகங்களில் இதைப்போல ஒரு பத்தியை எவரும் படித்திருக்க வாய்ப்பில்லை. இதை ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களும் ஒப்புக்கொள்வார்கள். குற்றவாளியாகவே காஷ்மீர் மக்களால் பார்க்கப்படும் ராணுவத்தின் வீரரைப் பற்றிய வரிகள். அவர் மனதைப் பற்றிய வரிகள். ஒருவழியாக காஷ்மீர் எழுத்தாளர் ஒருவர், இந்த மனநிலையைப் படம்பிடித்துவிட்டார். கொடூரமான வன்முறையையும் ராணுவத்தினரின் செயல்கள் உருவாக்கும் சின்னச் சின்னச் சச்சரவுகளின் சரத்தையும் அவதானித்து மக்களால் குற்றவாளியாகக் கருதப்படுபவர்களின் மனநிலையையும் ராத்தர் பதிவுசெய்துள்ளார். 

காஷ்மீரை ராணுவத்தினர் எப்படி அழித்தனர் என்பதற்கு, இந்த இலக்கியவாதிகளே சாட்சி. மீர்ஜா வாஹீத், நிடாஷா கவுல், அகா ஷாஹித் அலி, முசாபர் கரீம், அதெர் ஜியா, மாலிக் ஷஜத், சித்தார்த்தா கிகூ, முபாஷிர் கரீம் ஆகியோரை உள்ளடக்கிய காஷ்மீரின் நீளமான இலக்கியப் பாரம்பர்யத்தில் இப்போது ராத்தர் இணைகிறார். இவர்கள் எல்லோருமே சண்டைகள் நிறைந்த, உலகின் அதிகமாக ராணுவப்படுத்தப்பட்ட இடம் என வர்ணிக்கப்படும் இந்த இடத்தில் வாழவும் சரி, இந்த இடத்திலிருந்து நாடு கடத்தப்படவும் சரி என்ன விலை கொடுக்கவேண்டியிருக்கும் என அறிந்தவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு