Published:Updated:

ஒரு வனத்தின் தொடக்கம் !

உதயசங்கர்ஹாசிப்கான்

ஒரு வனத்தின் தொடக்கம் !

உதயசங்கர்ஹாசிப்கான்

Published:Updated:
##~##

எப்போதோ, யாரோ தண்ணீர் சுமந்து கொண்டுபோகும்போது சிந்திய ஒரு துளி ஈரத்தில் அந்தப் புல், பூமிக்குள்ளே இருந்து வெளியே தலை நீட்டியது. இளம் பச்சை நிறத்தில் காற்றில் ஆடி, ஒளி வீசியது. கண்களை உருட்டி சுற்றும் முற்றும் பார்த்தது. சுற்றிலும் பொட்டல் காடு... வெட்டவெளி. ஒரு மரமோ, செடியோ இல்லை. ஒரு ஆடோ, மாடோ இல்லை. ஒரு பறவையோ, பூச்சியோ இல்லை. பூக்களோ, வண்ணத்துப்பூச்சிகளோ இல்லை. அதேபோல மனிதர்களும் இல்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வறண்ட பூமி. புல்லுக்கு எதுவும் புரியவில்லை. 'வேறு உலகத்தில் பிறந்துவிட்டோமா? என்ன ஆச்சு எல்லோருக்கும்? எங்கே போனார்கள்?’ நேரம் ஆக ஆக தனிமை அதை வாட்டியது.

மேலே சூரியன் நெருப்பாய் எரிந்தது. வெப்பம் தாங்க முடியவில்லை. புல் தன்னுடைய வேரினால் பூமிக்குள் துழாவியது. ஈரப்பதமே இல்லை. தாகம் உயிரை வாட்டியது. தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. புல் சுற்றும் முற்றும் பார்த்துக் கூப்பிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''யாராவது இருக்கீங்களா..? யாராச்சும் வாங்களேன்... எனக்குப் பயமா இருக்கு. ஒரு சொட்டுத் தண்ணியாச்சும் தாங்களேன்.''

ஒரு வனத்தின் தொடக்கம் !

யாரும் வரவில்லை. நேரம் செல்லச் செல்ல அதனால் நிமிர்ந்து நிற்கக்கூட முடியவில்லை. பலவீனமாகிக்கொண்டே வந்தது. உடல் வளைந்து சுருங்கியது. இப்படிப் பிறந்து துன்பப்படுவதைவிட பிறக்காமலேயே இருந்திருக்கலாமே என்று நினைத்தது.

'பெரிய வனாந்திரங்கள் எங்கே போயின? அருவிகளும், சுனைகளும், நதிகளும், ஆறுகளும், குளங்களும், ஏரிகளும் என்ன ஆயின? பறவைகள், விலங்குகள் எல்லாம் எங்கே?’ புல்லினால் யோசிக்கவே முடியவில்லை.

'இதுதான் உலகத்தின் அழிவா? நான் அந்த அழிவின் ஆரம்பமா? இல்லை முடிவா?’

கொஞ்சம் கொஞ்சமாக அதன் நினைவு தவறிக்கொண்டே போனது. அப்போதுதான், தூரத்தில் குழந்தைகளின் பேச்சுக்குரல் கேட்டது. புல் எவ்வளவு முயற்சித்தும் நிமிர முடியவில்லை. காலடிச் சத்தம் அருகில் வந்தது.

''விஜய், இங்க பாரு... ஒரு புல்லு.''

''ஆமா சரண்யா, நேத்து இங்கே இந்தப் புல் இல்லையே''

''இன்னிக்குத்தான் முளைச்சிருக்கும்னு நெனைக்கிறேன். எவ்வளவு அழகா, பச்சைப் பசேல்னு இருக்கு பாத்தியா?''

''ஆனா, வாடிப்போய் இருக்கே? ஒருவேளை செத்துப்போயிருமோ?''

ஒரு வனத்தின் தொடக்கம் !

''அய்யய்யோ... நாம இதைச் சாகவிடக் கூடாது. எப்படியாச்சும் காப்பாத்தணும். நாம் பார்க்கிற முதல் புல் இதுதானே. இதுக்குக் கொஞ்சம் தண்ணி ஊத்துவமா?''

''சரி, ஆனால் குடிக்கிறதுக்கே தண்ணி இல்லாமல் எவ்வளவு தூரம் நடந்துபோய் எடுத்துட்டு வர்றோம். சமயத்தில் அதுவே கெடைக்க மாட்டேங்குது. எங்க தாத்தா சொல்வாரு... இங்கே ஒரு காலத்தில் பெரிய காடும் நீரோடைகளும், இருந்துச்சாம்.''

''அப்படியா... காடுன்னா என்ன? எப்படி இருக்கும்?''

''அதுவா? இந்தப் புல் மாதிரி ரொம்பப் புல் சேர்ந்து செடி, கொடி, மரங்கள் எல்லாம் இருக்கும். எப்பவும் தண்ணி ஓடிக்கிட்டே இருக்குமாம்.''

''ஹைய்யா... எவ்வளவு நல்லாருக்கும். அப்படின்னா நாம் தினசரி தண்ணி எடுத்துட்டு வரும்போது, இந்தப் புல்லுக்குக் கொஞ்சம் ஊத்துவோம். இது வளர்ந்து பெரிசாகி குட்டி போட்டு, நிறையப் புல் வளர்ந்து பெரிய காடாயிரும்.''

''ஆமா. அந்தக் காட்டில் குருவிகள் இருக்கும், அணில்கள் இருக்கும், பூக்கள், வண்ணத்துப் பூச்சிகள் இருக்கும். மரங்கள் இருந்தால் மழை பெய்யும்னு  தாத்தா சொல்வார். மழை பெய்தால் நிறையத் தண்ணி வரும். நாம் இவ்வளவு தூரம் நடக்க வேண்டாம்.''

உடனே தலையில் இருந்த குடத்தை இறக்கி, ஒரு கை நீரை அள்ளி, புல்லின் தலையில் ஊற்றினாள் சரண்யா. விஜய்யும் தன்னுடைய குடத்தில் இருந்து ஒரு கை நீரை அள்ளி ஊற்றினான். புல்லின் உயிர் நனைந்தது.  மெதுவாக விழித்து எழுந்து, மெள்ளத் தலையாட்டியது புல்.

''நாளைக்கும் மறக்காம தண்ணி ஊத்தணும்'' என்றபடி சிரமத்துடன் குடங்களைத் தலையில் வைத்துக்கொண்டு நடந்தார்கள். புல்லுக்கு ஆனந்தம். 'இந்தக் குழந்தைகளின் கனவை நிறைவேற்ற வேண்டும்’ என்று நினைத்தது. அப்போது ஒளிர்ந்த மாலை வெயிலில் வெகு காலத்துக்குப் பிறகு, ஒரு புல்லின் நிழல்... பூமியின் மீது நீண்டு விழுந்தது. அது ஒரு வனத்துக்கான தொடக்கமாக அமைந்தது.