Published:Updated:

காரில் வந்து விழுந்த உடன்பிறப்பின் கடிதத்தை, முரசொலியில் வெளியிட்ட கருணாநிதி!

காரில் வந்து விழுந்த உடன்பிறப்பின் கடிதத்தை, முரசொலியில் வெளியிட்ட கருணாநிதி!
News
காரில் வந்து விழுந்த உடன்பிறப்பின் கடிதத்தை, முரசொலியில் வெளியிட்ட கருணாநிதி!

நான் சட்டைப்பையில் வைத்துக்கொள்ளும் சிறிய அளவிலான பாக்கெட் சைஸ் நோட்டில் எழுதியிருந்த `உடன்பிறப்பின் ஓர் கடிதம்' கவிதையை அவரது மடியில் போட்டுவிட்டு கூட்டத்துடன் கூட்டமாகக் கரைந்துபோனேன்.

22 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதியைக் கூட்டத்தோடு கூட்டமாகப் பார்த்த கதிரேசன் என்ற இளைஞர், தான் கையோடு எழுதி எடுத்துவந்த கடிதத்தை காருக்குள் இருந்த கருணாநிதியின் மடியில் போட்டார். முகம் தெரியாத அந்தக் கதிரேசனின் கவிதையை, அடுத்த சில நாள்களிலேயே முரசொலியில் போட்டார் கருணாநிதி. ஆனால், அன்று தொடங்கி, ஆகஸ்ட் 8 வங்கக்கடலோரம் புதைக்கப்பட்ட நாள் வரையிலும்கூட கருணாநிதியைச் சந்திக்கவே இல்லை கதிரேசன். அன்றைய நிமிடங்களைக் கண்ணீருடன் நம்மிடம் விவரித்தார் கதிரேசன்...

``80 களின் தொடக்க காலம் அது. திருச்சி, பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் பி.ஏ வரலாறு முடித்துவிட்டு, வேலைவாய்ப்புக்காக ரயில்வே சர்வீஸ் கமிஷன், வங்கித் தேர்வுகள் மற்றும் மத்திய மாநில அரசுப் பணிகளுக்கு மனுசெய்துகொண்டிருந்தேன். கூடவே பத்திரிகைகளின் ஆழ்ந்த வாசிப்புடன், `தினம் ஒரு கவிதை நூல்' என வாசித்துக்கொண்டிருப்பேன். கதை, கட்டுரைகள் எழுதுவதிலும் பேரார்வம்.

வாழ்வாதாரப் பிரச்னைக்காக எனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம், துறையூர் மிளகாய் மண்டியில் கணக்குப்பிள்ளையாகப் பணியாற்றி வந்தேன். மிளகாய் மண்டியில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாள்களில் பெரிய அளவில் வேலைகள் இருக்காது. ஆனால், ஐந்நூறு, ஆயிரம் எனச் சாக்கு மூட்டைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் மிளகாய் மூட்டைகளுக்கு மத்தியில் இருப்பதே மிகவும் சிரமமான காரியம். அப்படி நான் மிளகாய் மூட்டைகளின் மேல்உட்கார்ந்துகொண்டு 1985-ம் ஆண்டு கலைஞரின் மணிவிழாவுக்காக எழுதிய கவிதைதான் இது. அப்போது நான் பல பத்திரிகைகளுக்கும் இந்தக் கவிதையை அனுப்பியிருந்தேன்... பிரசுரமாகவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, த.மா.கா கூட்டணி 195 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்ற செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.

தி.மு.க தலைவர் கருணாநிதியைப் பார்ப்பதற்காகத் தொண்டர்களின் கூட்டம் அலைகடலென சென்னை, ஆழ்வார்பேட்டை வீட்டில் திரண்டிருந்தது. ஆயிரக்கணக்கானோரின் வாழ்த்துகள், மாலைகள் மற்றும் சால்வைகளைப் பெற்றுக்கொண்டு கலைஞரின் கார் வேகவேகமாகப் புறப்பட்டது.

ஒரு முன்னேற்பாடாக ஏற்கெனவே, நான் சட்டைப்பையில் வைத்துக்கொள்ளும் சிறிய அளவிலான பாக்கெட் சைஸ் நோட்டில் எழுதியிருந்த `உடன்பிறப்பின் ஓர் கடிதம்' கவிதையை அவரது மடியில் போட்டுவிட்டு கூட்டத்துடன் கூட்டமாகக் கரைந்துபோனேன். அதை அவர் குழந்தையைப்போல் பாவித்து எடுத்துச்சென்று முரசொலியில் பிரசுரிக்கச்செய்தார். என் கவிதையை கலைஞர் வெளியிட்டார். ஆனால், நான்தான் அதை எழுதியவன் என்பது அவருக்குத் தெரியாது. நானும் இன்றுவரை அவரைச் சென்று பார்த்ததில்லை. என் அன்பை நன்றியை அவருக்குத் தெரிவிக்க எண்ணினேன். தெரிவித்தேன். அவ்வளவுதான். அவருடைய உடன்பிறப்பு என்பதைத் தவிர வேறு என்னவேண்டும்?’’ என்று கலங்குகிறார் கதிரேசன்.

அந்தக் கவிதை….

உடன்பிறப்பின் ஓர் கடிதம்!

அன்புள்ளம் கொண்ட தலைவா!

நீ தித்திக்கும் தீந்தமிழின் புகழை

எத்திக்கும் பாடும் தமிழனின் மானம்!

***

தமிழனின் புகழை

தரணிக்குப் பாடும் உதய தாரகை!

அஞ்சுகத்தின் தங்கமே!

தென்பாண்டிச் சிங்கமே!

***

ஏச்சுக்கும் இழிபேச்சுக்கும்

ஆளான தமிழன்

மாட்சிக்கு வந்ததும்

உன்னால்தான்

வரப்போவதும் உன்னால்தான்!

***

சோதனைகள் பல தாண்டி

நீ படைத்த சாதனைகள் பல

அவற்றுள் சில...

அண்ணாவின் மறைவால் கழகம்

ஆதரவு இழந்தபோது - நீ

நிழல் தந்து காத்த ஆயுள் காப்பீடு!

***

பெரியாரின் மடியில் அண்ணாவின்

தோளில் வளர்ந்த கழகக் குழந்தையை

நீதான்

எங்களுக்கு அடையாளம் காட்டினாய்!

***

வள்ளுவர் கோட்டம் அமைத்த

நீதான் மூழ்கிப் போன பூம்புகாரை

மேலே கொணர்ந்தாய்!

தலைநகரத்தில் உன் கரத்தால் மலர்ந்த

கட்டடப் பூக்களெல்லாம்

உன்கதையைச் சொல்லிக்கொண்டே இருக்கும்!

ஏன்?

திரைப்படத் துறையின்

திருப்புமுனைகூட ஆரம்பிப்பது

உன்னிடம்தான்...

***

சிறைகளைப் பார்த்துச்

சிரித்தே வந்த நீ

வீண் பழிகளைப் பார்த்து பயந்ததில்லை!

***

யாகங்களில் உனக்கு

நம்பிக்கை இல்லா காரணத்தால் - உன்

தியாகங்களால் கழகத்தை வளர்த்தாய்!

***

'உடன்பிறப்பே' என்று

நீ அழைக்கின்ற நாதம்

எங்கள் உயிரிலே கலந்திட்ட வேதம்!

***

எத்தனையோ தூண்கள்

கழகத்தை விட்டு

பிறருக்குக் கால்களாகிப் போனபோதும்

இந்தக் கழகம் இருப்பதன் காரணம்

நீ அங்கே அஸ்திவாரமாய்

இருப்பதுதானென்பது

உன் உடன்பிறப்புகளுக்கே தெரிந்த தேவ ரகசியம்!

***

துன்பப் புயல்களெல்லாம்

கழகத்தைத் தூக்கியெறிய வந்தபோது

நீ நங்கூரமாய் இருந்து காப்பாற்றியதெல்லாம் இந்த ஏழைத்தொண்டனின்

மனதில் பசுங்கனவுகளாய் என்றும் இருக்கும்!

***

பெண்ணுரிமைப் புத்தகத்தின் அட்டையிலே

பெயரெழுதிப் போனவர்களுண்டு...

ஆனால், நீ வழங்கியுள்ள

பெண்ணுரிமைக்கு ஒரு புத்தகமே போடலாம்!

***

உன்னுடைய வாழ்வையும்

கழகத்தின் வரலாற்றையும்

இரண்டு புத்தகங்களாக

எழுதவேண்டிய வேலை

எந்தக் கவிஞனுக்கும் இருக்காது!

***

திருவாரூரில் உதித்த சூரியன் நீ

திமுகவுக்கு மட்டுமல்ல

இந்த தேசத்துக்கே திசைகாட்டி

என்பதில் சத்தியத்தை தவிர மிச்சமில்லை!