Published:Updated:

“நாடு தழுவியது இந்த திராவிடம்!” - முரசொலித்த கமல்

“நாடு தழுவியது இந்த திராவிடம்!” - முரசொலித்த கமல்
பிரீமியம் ஸ்டோரி
News
“நாடு தழுவியது இந்த திராவிடம்!” - முரசொலித்த கமல்

“நாடு தழுவியது இந்த திராவிடம்!” - முரசொலித்த கமல்

ருணாநிதிக்கு வயது 94. அவரது மூத்த பிள்ளையான ‘முரசொலி’க்கு வயது 75. உடல்நலமில்லாமல் கோபாலபுரத்தில் கருணாநிதி ஓய்வில் இருந்தாலும், அவரது விருப்பத்துக்குரிய இடமான முரசொலி அலுவலகத்திலும், அவரால் அமைக்கப்பட்டு இன்று புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் அரங்கத்திலும், ‘முரசொலி பவள விழா’ கொண்டாட்டங்கள் நடந்தன.

இளம்வயதில் ‘முரசொலி’யின் பிரதிகளைத் தலையில் தூக்கிக்கொண்டு, திருவாரூர் மூங்கில் பாலத்தில் ஓடிய கருணாநிதியின் உழைப்புக்கு இந்தப் பவள விழா மூலம் மகுடம் சூட்டியிருக்கிறார்  தி.மு.க-வின் செயல் தலைவர் ஸ்டாலின். அவருக்குத் துணையாக நின்றார், முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் முரசொலி அலுவலகத்தில் காட்சி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ‘இந்து’ என்.ராம் ஆகியோர் இந்த அரங்கைத் திறந்து வைத்தனர். முரசொலி கடந்து வந்த காலத்தை கண்முன் நிறுத்தியது இந்தக் காட்சி. ‘முரசொலி’ தொடக்க காலத்தில் அண்ணா சாலையில் இருந்த கட்டடம், கோடம்பாக்கம் கட்டடம் போன்ற முகப்பு அமைக்கப்பட்டு, அதில் ஆரம்பகால அச்சு இயந்திரம் முதல் தற்போதைய இயந்திரம் வரை இடம் பெற்றுள்ளன. ஆரம்பம் முதல் வெளிவந்த முரசொலி நாளிதழ்கள், இதழ்கள், கருணாநிதியின் அறை, அதில் அவர் அமர்ந்திருப்பது போன்ற மெழுகுச் சிலை, உரிமை மீறல் பிரச்னைக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்ட ‘முரசொலி’ செல்வம் சட்டமன்றக் கூண்டில் நிற்பது போன்ற அமைப்பு, கருணாநிதி எழுதிய புத்தகங்கள், எமர்ஜென்சி கால படங்கள், வீடியோக்கள், ராஜீவ் காந்தி படுகொலையின்போது ‘முரசொலி’ அலுவலகம் எரிக்கப்பட்டதன் செட் வடிவம் என முரசொலியின் வரலாறு பேசுகிறது அந்த அரங்கம். ‘‘இதை ஒரு முறை சுற்றி வந்தாலே 75 ஆண்டுகளைச் சுற்றி வந்ததாக அர்த்தம்” என்று முரசொலி ஆசிரியர் குழுவைச் சேர்ந்த சேது சொல்கிறார்.

“நாடு தழுவியது இந்த திராவிடம்!” - முரசொலித்த கமல்

பத்திரிகையாளர்கள் பங்கேற்ற மாபெரும் வாழ்த்தரங்கம் கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. ‘இந்து’ என்.ராம், ‘ஆனந்த விகடன்’ மேலாண்மை இயக்குநர் பா.சீனிவாசன், ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன், ‘நக்கீரன்’ கோபால், ‘தினமலர்’ இணை ஆசிரியர் ராமசுப்பு, ‘தினத்தந்தி’ தலைமைப் பொது மேலாளர் சந்திரன், ‘டெக்கான் கிரானிக்கள்’ ஆசிரியர் பகவான் சிங், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆசிரியர் அருண்ராம், ‘தினகரன்’ செய்தி ஆசிரியர் மனோஜ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள்.

நடிகர் கமல்ஹாசனும் கவிப்பேரரசு வைரமுத்துவும் பேசினார்கள். இவ்விழாவில் பேசுவதற்கு ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்து இருந்தார். ‘‘வருவேன். ஆனால், பேச மாட்டேன். பார்வையாளராக நிச்சயம் இருப்பேன்’’ என்றாராம் ரஜினி. அதுபோலவே முதலில் இருந்து கடைசி வரை பங்கேற்றார் ரஜினி. அவருக்கு ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கினார்.

கமல் பேச்சு கூட்டத்தினரை உற்சாகப்படுத்தியது. ‘‘நான் கேட்ட இரண்டாவது குரல் கலைஞருடையது. முதல் குரல் சிவாஜியுடையது. சிவாஜிதான் அந்த வசனங்களை எழுதுகிறார் என்று முதலில் நினைத்தேன். குரல் நன்றாக இருக்கிறதே என்று வசனத்தைக் கேட்டு, வசனத்தை எழுதியவர் யார் என்று அறிந்தது முதல் கலைஞரின் ரசிகனாக இருக்கிறேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“நாடு தழுவியது இந்த திராவிடம்!” - முரசொலித்த கமல்

ரஜினி இந்த விழாவுக்கு வருகிறாரா என்று கேட்டேன். ‘வருகிறார். ஆனால், பேசவில்லை’ என்றார்கள். அவருக்குப் பக்கத்தில் நாமும் சும்மா உட்காரலாம் என்று நினைத்தேன். ஆனால், ‘இது மிகப்பெரிய வாய்ப்பு. தவற விட்டுவிடக் கூடாது’ என்று உணர்ந்தேன். தற்காப்பு இல்லை முக்கியம், தன்மானம்தான் முக்கியம். அதனால்தான் வந்தேன். மிகப்பெரிய பத்திரிகை அதிபர்கள் இங்கு இருக்கிறார்கள். நான் பத்திரிகை நடத்த முடியாமல் நிறுத்தியவன். நானும் இங்கு உட்கார வைக்கப்பட்டு இருப்பதுதான் வாய்ப்பு’’ என்றவர், தி.மு.க-வை மையப்படுத்தி அவரைச் சுற்றும் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

‘‘என்னை, ‘நீ தி.மு.க-வில் சேரப் போகிறாயா’ என்று கேட்கிறார்கள். தி.மு.க-வில் சேரச் சொல்லி 1983-ல் கலைஞர் அனுப்பிய தந்திக்கு இன்றுவரை பதில் அனுப்பவில்லை. அதுபற்றி அதன்பின் கலைஞர் என்னிடம் ஒருமுறைகூட கேட்கவே இல்லை. அந்தப் பெருந்தன்மை இந்த மேடையிலும் எனக்குக் கிடைக்கும் என்பதால் வந்துள்ளேன். இதோடு திராவிடம் முடிந்தது என்று சிலர் சொல்கிறார்கள். ‘ஜன கண மன’ பாடலில் ‘திராவிடம்’ என்ற வார்த்தை இருக்கும்வரை திராவிடம் இருக்கும். நாடு தழுவியது இந்த திராவிடம். இந்த அரங்கு மட்டுமல்ல, நாடும் இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று முடித்தார்.

‘‘கருணாநிதி இந்த மேடையில் இருந்தால் என்ன பேசி இருப்பாரோ, அதைக் கமல் பேசினார்’’ என்று சொன்னார் தி.மு.க தொண்டர் ஒருவர்.

- சி.மீனாட்சி சுந்தரம்
படங்கள்: சு.குமரேசன், சொ.பாலசுப்ரமணியன்