Published:Updated:

அமைச்சருக்கும் அடங்காதவர் - தனி ராஜ்ஜியம் நடத்தும் எடப்பாடி ஆதரவு அதிகாரி!

அமைச்சருக்கும் அடங்காதவர் - தனி ராஜ்ஜியம் நடத்தும் எடப்பாடி ஆதரவு அதிகாரி!
பிரீமியம் ஸ்டோரி
News
அமைச்சருக்கும் அடங்காதவர் - தனி ராஜ்ஜியம் நடத்தும் எடப்பாடி ஆதரவு அதிகாரி!

அமைச்சருக்கும் அடங்காதவர் - தனி ராஜ்ஜியம் நடத்தும் எடப்பாடி ஆதரவு அதிகாரி!

‘எடப்பாடி பழனிசாமியின் உறவினர்’ என்று தன்னை சொல்லிக்கொள்ளும் அதிகாரியுடன், ஒரு அமைச்சரும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் இருவரும் ஆக்ரோஷமாக மோதுவது தான் நாகை மாவட்டத்தின் இப்போதைய பரபரப்பு. அந்த அதிகாரி, மயிலாடுதுறை பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் பாலசுப்ரமணியன். இவர் மீது மயிலாடுதுறை அ.தி.மு.க எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், சீர்காழி அ.தி.மு.க எம்.எல்.ஏ பாரதி, இதே மாவட்டத்தைச் சேர்ந்த கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் இணைந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

பொது மக்கள் தரப்பிலும் இவர் மீது புகார்கள் எழ, விசாரணையில் இறங்கினோம். தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளர் சீனிவாசனிடம் பேசியபோது, ‘‘பாலசுப்ரமணியன் இங்கு வந்து சுமார் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. பினாமி பெயர்களில் கான்ட்ராக்ட் பணிகளை அவரே செய்கிறார். உதாரணமாக, சீர்காழி அருகே திருவாலி ஏரிக்கும், தென்னலக்குடிக்கும் இடையே சுமார் இரண்டு கோடி ரூபாயில் ரெகுலேட்டர் அமைக்கும் பணியை முறையாகச் செய்யவில்லை. குவாரிகளில் மணல் அள்ள வரும் லாரி மற்றும் டிராக்டர்காரர்களிடம் ‘பராமரிப்புச் செலவு’ எனக் கூறி, தனியாகக் கட்டணம் வசூலித்து, அதிகாரிகள் பங்கிட்டுக்கொள்கிறார்கள். இதுவே நாள் ஒன்றுக்கு சுமார் மூன்று லட்ச ரூபாய் தேறும். இதுகுறித்துப் புகார் அனுப்பியிருக்கிறேன். தகுந்த நடவடிக்கை இல்லாவிட்டால், விரைவில் பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார். 

அமைச்சருக்கும் அடங்காதவர் - தனி ராஜ்ஜியம் நடத்தும் எடப்பாடி ஆதரவு அதிகாரி!

பாலசுப்ரமணியன் மீது முதல்வரிடம் புகார் கொடுத்துள்ள சீர்காழி எம்.எல்.ஏ பாரதியிடம் கேட்டோம். ‘‘இவர் அரசுக்கு எதிராகவும் பொதுமக்களுக்கு எதிராகவும் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். கேட்டால், ‘நான் எடப்பாடி பழனிசாமியின் உறவினர். என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது’ என்று திமிராகப் பதில் சொல்கிறார். எனது தொகுதியிலுள்ள திருநகரி உப்பனாற்றில் கடல்நீர் உட்புகாமல் தடுக்க தற்காலிகமாய் ஆண்டுதோறும் மண்ணாலான தடுப்பணை கட்டுவது வழக்கம். ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த அணை தானாகவே அடித்துச் செல்லப்படும். ‘இந்த ஆண்டு தடுப்பணை கட்டுங்கள்’ என்று வலியுறுத்தியும் அவர் அதைச் செய்யவில்லை. வடரங்கம் அரசு மணல்குவாரிக்கு ஆற்றில் கரும்பு சக்கைகளைக் கொண்டு ரூ.10 லட்சம் செலவில் நாங்கள் சாலை அமைத்தோம். ஆனால், பொதுப்பணித் துறையினர் சாலை அமைத்ததுபோல் ரூ.20 லட்சத்துக்குப் பில் போட்டுப் பணத்தை எடுத்திருக்கிறார்கள். இதுபோல் பல விஷயங்களில் ஊழல் நடப்பதால்தான் முதல்வரிடம் புகார் கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.

மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், ‘‘தொகுதிப் பிரச்னைகள் குறித்து பாலசுப்ரமணியனிடம் பேசமுடியவில்லை. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட ரூ.400 கோடியில் திட்டம் அறிவித்தார் அம்மா. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் கடல்நீர் ஆற்றில் உட்புகாது, மழைநீர் வீணாகப் போய்க் கடலில் சேராது. நிலத்தடி நீர் மட்டமும் உயரும், குடிக்க நல்ல தண்ணீரும் கிடைக்கும். இப்படிப்பட்ட அருமையான திட்டத்தைச் செயல்படுத்த இவர் எந்த முனைப்பும் காட்டவில்லை. இப்படி இவர் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால்தான், இவரைப் பற்றி முதல்வரிடம் புகார் கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.

புகார் குறித்து கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ‘‘சில அதிகாரிகள் மக்களுடன் இணைந்து அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவார்கள். சில அதிகாரிகள் ஏதோ கடமைக்காகச் செயல்படுவார்கள். பாலசுப்ரமணியன் பற்றி பொது மக்களும் எங்கள் கட்சியினரும் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். அதேநேரத்தில் அரசின் நிர்வாக நடவடிக்கை குறித்து நான் வெளிப்படையாகப் பேசுவது நாகரிகமில்லை’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அமைச்சருக்கும் அடங்காதவர் - தனி ராஜ்ஜியம் நடத்தும் எடப்பாடி ஆதரவு அதிகாரி!

பாலசுப்ரமணியன் பற்றிய புகார்கள் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு விதமாகவும் எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. ‘‘சித்தமல்லி அரசு மணல் குவாரியில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், வடரங்கம் அரசு மணல்குவாரியில் சீர்காழி எம்.எல்.ஏ பாரதி, கடக்கம் அரசு மணல் குவாரியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மருமகன் ஆகியோர்தான் பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டுகின்றனர். இவர்கள் மூவரும் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி விற்கவும், அதன்மூலம் வருமானம் ஈட்டவும் பாலசுப்ரமணியன் தடையாக இருப்பதால்தான் அவரை இடமாற்றம் செய்ய மும்முரமாக இருக்கிறார்கள்’’ என்று அவர்கள் சொல்கிறார்கள்.

செயற்பொறியாளர் பாலசுப்ரமணியத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து விளக்கம் கேட்டோம். ‘‘அரசு விதிகளின்படி பணிபுரிகிற அரசு ஊழியராக என் கடமையைச் சரியாக செய்கிறேன். மற்றபடி பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்க எனக்கு அனுமதியில்லை’’ என்றவரிடம், ‘‘நீங்கள் எடப்பாடி பழனிசாமியின் உறவினரா?’’ என்று கேட்டோம். ‘‘முதல்வராக யார் இருந்தாலும் அவர் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் உறவினர்தான்’’ என்று ஒரு அர்த்தப் புன்னகையுடன் விடைகொடுத்தார்.

அதிகாரியா, ஆளும்கட்சியா... யுத்தம் உச்சத்தில் இருக்கிறது!

- மு.இராகவன்
படங்கள்: க.சதீஷ்குமார்