Published:Updated:

“மோடி ஆட்சியைக் கண்காணிக்க பூதக்கண்ணாடி தேவை!”

 “மோடி ஆட்சியைக் கண்காணிக்க பூதக்கண்ணாடி தேவை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“மோடி ஆட்சியைக் கண்காணிக்க பூதக்கண்ணாடி தேவை!”

சொல்கிறார் ஜோ டி குரூஸ்

டந்த நாடாளுமன்றத்  தேர்தல் நேரத்தில்   பி.ஜே.பி-க்கு ஆதரவு தெரிவித்தவர், எழுத்தாளர் ஜோ டி குரூஸ். சமீபத்தில் அப்துல் கலாம் நினைவிடத்தைத் திறந்து வைக்க ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி, ஆழ்கடலில் மீன் பிடிக்கும் நீலப்புரட்சித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இதற்கான ஆலோசனையை மத்திய அரசுக்குக் கொடுத்தவர், ஜோ டி குரூஸ். அவரிடம் இதுபற்றிப் பேசினோம். கேள்விக்கு முன்பே விளாசத் தொடங்கிவிட்டார்.

‘‘வளர்ச்சி என்றால் ஒட்டுமொத்த வளர்ச்சியைத்தானே சொல்வோம்? ஆழ்கடலுக்குப் போயி மீன்களைப் பிடிச்சிட்டு வந்திடலாம். மீன்களுக்கு உரிய விலை வேணாமா? விலை கிடைக்கணும்னா மீன் நல்லா இருக்கணும். அதுக்கு பதப்படுத்தும் வசதி வேணும். உதாரணத்துக்கு, நீலத்தூவி சூறைமீன், மஞ்சள்தூவி சூறைமீன் ரெண்டுக்கும் சர்வதேசச் சந்தையில விலை, ஒரு கிலோவுக்கு 60- 70 டாலர்கள். ஆனா, கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், இரயுமன் துறையில இருந்து ஏழு நாள்கள் பயணம் செஞ்சு, ஆழ்கடலில் இரண்டு நாள் மீன் பிடிச்சுட்டு, திரும்பவும் ஊருக்கு வர இன்னும் ஏழு நாள்கள் ஆகும். கரைக்கு வந்தவுடனேயே அந்த மீன்களை வித்துடணும். ஏன்னா, பதப்படுத்தி வைக்கிற எந்த ஏற்பாடும் இல்ல. அதனால, 70 டாலருக்கு விக்கவேண்டிய தரமான மீனை ஒரு டாலருக்குக்கூட விக்கமுடியலை. மீன் வள மேம்பாட்டு வாரியம் தூத்துக்குடியில, ராமேஸ்வரத்தில, நாகப்பட்டினத்தில, சென்னையில கட்டிவெச்சிருந்த பதனக்கிடங்குகள் 30 வருஷமா நாசமாக் கெடக்கு.

ஆழ்கடல்ல 400 கடல் மைல் போகும் படகுக்குப் போக்குவரத்துச் செலவு, குறைஞ்சது பத்து பேருக்கான உணவுச்செலவு, பதப்படுத்துறதுக்கான ஐஸ்னு ஒரு பயணத்துக்கு 10 லட்ச ரூபாயாவது ஆகும். கணக்குப்பாத்தா வரவுக்கும் செலவுக்கும் சரியாப் போயிடும். ஆழ்கடல்ல போற சரக்குக் கப்பல்களுக்குச் சுங்கவரியில்லாத எரிபொருள் தாறாங்க. மீன்பிடிப் படகுகளுக்குத் தர்றதில்ல. விசைப்படகு மீனவர்கள், இவங்ககிட்ட வேலை பாக்குற தொழிலாளர்கள்னு ராமேஸ்வரத்தை எடுத்துக்கிட்டா அந்த ஊரோட ஒட்டுமொத்த பொருளாதாரமே மீன்தானே? ஆனா, இதைப் பத்தி அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை!”

 “மோடி ஆட்சியைக் கண்காணிக்க பூதக்கண்ணாடி தேவை!”

‘‘நீங்கள்தானே இந்த அரசாங்கத்தை ஆதரித்து, டெல்லிக்குப் போய் ஆலோசனைகளைத் தந்தீர்கள்? இப்போது இப்படிச் சொல்கிறீர்களே?’’

‘‘ஆமா, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம், மீன்வளத்துக்கான என்னுடைய மாற்றுத் திட்டத்தைக் கொடுத்தேன். விவசாயத்தைப் போல பெருமளவுக்கு வேலைவாய்ப்பைத் தரக்கூடியதாவும், பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடியதாவும் கடல் வளம் இருக்கு.  8,000 கி.மீ நீளமுள்ள கடலோரத்தைக் கொண்ட மீன்வளப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கணும். ஆனா, அதுக்கான எந்தத் திட்டமும் இப்போ இல்ல. மீன்வளத்துக்குத் தனி அமைச்சகம் இல்லை... விவசாயத்தின் கீழ் இன்னொரு பிரிவாகத்தான் வைக்கப்பட்டு இருக்கு. கடலோரப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தணும்னா துறைமுகங்களுக்கு இணையா மீன்வளத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். நாட்டின் மொத்தப் பொருள் உற்பத்தியில் 85 சதவிகிதம் தருகிற மக்களுக்குப் பாதுகாப்பு தரலைன்னா, அவன் எப்படி நாட்டைப் பாதுகாப்பான்?”

‘‘இப்போது இப்படிச் சொல்லும் நீங்கள், முன்பு மோடி மீது நம்பிக்கை வைத்து அவரை ஆதரிக்கச் சொன்னீர்களே?’’

‘‘இதுவரைக்கும் ஆட்சிசெஞ்ச காங்கிரஸ் எதுவுமே செய்யலை. அடுத்த வர்ற யாரையாவது ஆதரிக்கிறது தப்பில்லையே! வளமான பாரதம், வலிமையான பாரதம்னு சொல்றதுல இன்றைக்கும் எனக்கு உடன்பாடுதான்! விவேகானந்தர், ‘புது இந்தியாவைப் படைக்கணும்னா விவசாயிகள், மீனவர்கள், கைவினைஞர்கள்கிட்டப் போகணும்’னாரு. அவங்கள விட்டுட்டு எப்படி புதிய பாரதத்தை உருவாக்கமுடியும்?

நான் பணிபுரிகிற துறைமுகத் துறையை மோடி மேம்படுத்தினார். இன்றைக்கு இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தை துறைமுகத் துறையில முன்னணியா நிக்கவச்சார். நகரங்களை இணைக்க வெச்சாரு. ‘இவர்கிட்ட பெரிய பயணம் இருக்கு... பிரதமரா வந்தா வளர்ச்சி பெருகும்’னு நினைச்சோம். ‘அடித்தட்டு மக்களுக்குப் பயன்படக்கூடிய, அடித்தளப் பொருளாதாரம் மேம்படும்’னு நினைச்சோம்.

ஆனா, அப்படி நடக்கலை. தமிழ்நாட்டுல நான்காவது பெரிய துறைமுகம்னு சொல்லி, குமரி மாவட்டம் இனயத்துல 27,500 கோடி ரூபாயில் ‘சர்வதேச சரக்குப்பெட்டக மாற்றுமுனையத் திட்டம்’ கொண்டு வந்திருக்காங்க. மீன்பிடித் தொழிலுக்கு மட்டுமில்ல, துறைமுகத் துறைக்கும் இது பயனில்லை. இதுல 10 சதவிகிதம் கமிஷன் எவ்வளவு? இனயம் ஒண்ணு போதும், அடுத்து வர்ற நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம். குளச்சலைச் சுத்தி 50 கோடீஸ்வரங்க உருவாவாங்க. அவங்க எம்.பி, எம்.எல்.ஏ ஆவாங்க. தொடர்ந்து அதே பதவியில இருப்பாங்க. ஆனா, அடித்தட்டு மக்களுக்கு ஒண்ணும் கிடைக்காது! இதப் போலத் திட்டங்களை நான் எதிர்பார்க்கலை. சமீபத்தில குஜராத்தின் உள்பகுதிகளுக்குள்ள போய்ப் பாத்தேன். பெரும்பாலான இடங்களில குறைஞ்சபட்சம் மூணு குடங்களோட தண்ணிக்காகப் பெண்கள் ஏழெட்டு கி.மீ நடந்துபோறதப் பாக்க முடிஞ்சது. இதுபோல பலப் பிரச்னைகள். இந்த ஆட்சியில அடித்தளக் கட்டமைப்பு வளர்ச்சியைக் கண்காணிக்க பூதக்கண்ணாடி தேவை!’’

- இரா.தமிழ்க்கனல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz