Published:Updated:

தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்டான்லி மருத்துவமனை!

தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்டான்லி மருத்துவமனை!
பிரீமியம் ஸ்டோரி
News
தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்டான்லி மருத்துவமனை!

அலட்சியத்தால் உயிரிழந்த நோயாளிகள்...

“ஊழல் என்பது இங்கு எல்லாருக்கும் தெரிந்தேதான் நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் கண்டும் காணாமல் வாழப் பழகிவிட்டனர். நீ மட்டும்தான் தேவையில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறாய்’’ - ‘சாமுராய்’ திரைப்படத்தில், மருத்துவமனை ஊழலைப்பற்றிப் பேசி கதறி அழும் கதாநாயகியிடம் விக்ரம் பேசும் டயலாக் இது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் சிறுநீரகச் சிகிச்சைப் பிரிவின் அவலம், அந்தக் காட்சியைத்தான் நினைவுபடுத்தியது. 2014-ம் ஆண்டு இங்கு டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த சிறுநீரக நோயாளிகள் 33 பேரில் 18 பேருக்கு ஹெபடைடிஸ் சி வைரஸ் தொற்று பரவியது. அந்தத் தொற்று மற்ற நோயாளிகளுக்குப் பரவிவிடும் என அஞ்சிய மருத்துவர்கள், அந்த நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்டான்லி மருத்துவமனை!

மருத்துவமனையின் அஜாக்கிரதையால்தான் நோய்த் தொற்று பரவியதாகக் குற்றம்சாட்டி, நோயாளிகளின் உறவினர்கள் அப்போது போராட்டத்தில் குதித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வெளியேற்றப்பட்ட 18 பேரில் எட்டு பேர், வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே உயிரிழந்துவிட்டனர். மற்ற 10 நோயாளிகள் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளவர்களைத் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றி சிகிச்சை அளிக்க அறப்போர் இயக்கம் முடிவுசெய்துள்ளது. இதற்காக நிதியும் திரட்டி வருகிறது. 

இதுகுறித்து அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம். “இவர்களுக்கு நிவாரணம் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘தவறு நடந்திருப்பது தெளிவாகிறது. அதனால் நிவாரணத் தொகை ஐந்து லட்ச ரூபாய் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட 16 பேருக்கு நிவாரண உதவி கிடைத்தது. மேலும் இரண்டு நோயாளிகளுக்கும் நிவாரணம் கிடைக்கப் போராடி வருகிறோம். அப்போது நோய்த் தொற்று ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். இதில் கார்த்திகேயன் என்பவருக்குத் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. மற்றவர்களின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்டான்லி மருத்துவமனை!

டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரிடம் பேசினோம். ‘‘போராட்டத்தில் பங்கேற்றவன் என்பதால் மருத்துவர்கள் நடத்துகிற விதம் மிகவும் கொடுமையானது. நோய்த்தொற்று ஏற்பட இங்குள்ளவர்கள்தான் காரணம். பயன்படுத்தப்பட்ட டியூப்பையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தினார்கள். ஒட்டுமொத்த டியூப்பையும் ஒன்றாகச் சேர்த்துக் கழுவுவது, பயிற்சி இல்லாத மருத்துவர்களையும் செவிலியர்களையும் வைத்து சிகிச்சை அளிப்பது போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இதுதான் எட்டு பேர் உயிரிழக்கக் காரணம். இவர்கள் செய்யும் சித்ரவதைக்குச் செத்தே போகலாம். நம்பிக்கை தர வேண்டிய டாக்டர்களே, ‘நீ செத்துப் போயிடு’னு சொல்றாங்க. இந்த நோய் தர்ற வலியைவிட இங்குள்ளவர்கள் தருகிற டார்ச்சர் அதிகம்’’ என்றார் கண்ணீருடன்.

நோய்த் தொற்று ஏற்பட்டு இறந்து போன சம்சுதீனின் மனைவி பர்வீன் பானுவிடம் பேசியபோது, ‘‘நோயில் இருந்து அவரை மீட்டு வீட்டுக்கு அழைத்துப் போவேன் என்ற நம்பிக்கையுடன் சேர்த்தேன். ஆனால், இங்குள்ளவர்களின் அலட்சியத்தால் என் வாழ்கையைத் தொலைத்துவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் நடுத்தெருவில் நிற்கிறேன். அரசாங்கம் கொடுத்த ஐந்து லட்ச ரூபாய், அவருடைய மருத்துவச் செலவுக்கும் நடந்த காரியங்களுக்குமே சரியாகி விட்டது. துணி தைத்துக்கொடுத்து இரண்டு பிள்ளைகளை வளர்த்து வருகிறேன்’’ என்றார் கண்ணீருடன்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்டான்லி மருத்துவமனை!

நோய்த் தொற்றால் இறந்துபோன ஜெயலட்மியின் மகள் வந்தனாவிடம் பேசியபோது, ‘‘அரசாங்கம் கொடுத்துள்ள இந்த நிவாரணம் எங்களுடைய வலியை எந்த வகையிலும் ஈடுகட்டாது. மருத்துவமனையில் செய்த தவறால்தான் என் அம்மாவை இழந்தேன். நோயாளிகளையும், உறவினர்களையும்  முட்டாள்களாக நினைக்கிறார்கள். இந்த நினைப்புதான், இப்படியான மரணம் நிகழக் காரணம்’’ என்றார் கோபமாக.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக கிட்னி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 30 சதவிகிதத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது எனச் சொல்கிறது சர்வதேச ஆய்வுகள். ஆனால், அதைக் காரணம் காட்டக் கூடாது. நோயைத் தடுக்க வேண்டியது மருத்துவர்களின் கடமை. மருத்துவமனையில் தவறுகள் நடப்பதாகப் புகார் வந்தால், அதைப் பார்த்துக்கொண்டு அமைதி காக்க மாட்டேன். இது தொடர்பாக சிறுநீரகச் சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவர் எட்வின் பெர்னாண்டோவிடம் பேசியுள்ளேன்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து சிறுநீரக சிகிச்சைப் பிரிவின் துறைத் தலைவரான எட்வின் பெர்னாண்டோ நம்மைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். “சிறுநீரக சிகிச்சைப் பிரிவில் தற்போது நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நம்பவில்லை என்றால் மருத்துவமனைக்கு வந்து நீங்கள் ஆய்வு செய்யலாம். பாதிக்கப்படுவதாக சொல்லும் அந்த நோயாளிகளையும் அழைத்து வாருங்கள்’’ என்றார்.

மருத்துவத்துக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது.

- கே.புவனேஸ்வரி
படம்: தி.குமரகுருபரன்