Published:Updated:

அழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்... அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்கை!

அழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்... அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
News
அழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்... அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்கை!

அழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்... அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்கை!

துரை மீனாட்சி அம்மன் கோயில் உள்பட தமிழ்நாட்டில் பழைமை வாய்ந்த கோயில்கள் பலவும், புனரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்படுவதாக யுனெஸ்கோ வெளியிட்ட ஆய்வு அறிக்கை, ஆன்மிகவாதிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மானம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள நாகநாத சுவாமி கோயில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்தது. இந்தக் கோயிலில், ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாகத் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தக் கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகத் தொல்லியல் துறையின், 88  பாதுகாக்கப்பட்ட பாரம்பர்யச் சின்னங்களின் பட்டியலில், இந்தக் கோயிலும் உள்ளது. ‘திருப்பணி’ என்ற பெயரில் இந்தக் கோயில் தடயமே இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளது. அதோடு, இதுபோல 17-க்கும் அதிகமான கோயில்கள் சிதைக்கப்பட்டுள்ளன.

அழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்... அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்கை!

இந்த விவகாரத்தை, 2015-ம் ஆண்டு, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. அதுதவிர, ‘புனரமைப்பு’ என்ற பெயரில் ஆகம விதிகளைக் கடைப்பிடிக்காமல் பழைமையான கோயில்கள் சேதப்படுத்தப்படுவதாக ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, கோயில்கள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க, மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், ‘முறையான கண்காணிப்பு இல்லாமல், கோயில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது’ என, 2015 அக்டோபரில் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காமல், பல கோயில்கள் திருப்பணி என்ற பெயரில் இடிக்கப்பட்டுள்ளன.

மானம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை 20 மீட்டர் அகலப்படுத்துவதற்காக நாகநாத சுவாமி கோயிலின் வடபகுதி மதிற்சுவர் முழுவதுமாக இடிக்கப்பட்டது. இதுபற்றி மானம்பாடி கிராமத்தினர், “எல்லோரும் கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். அவருதான், கோயிலோட சிறப்புகளைத் தொல்பொருள் துறைக்கு எடுத்துச் சொன்னாரு. அவங்க வந்து கல்வெட்டுகளையும், சிலைகளையும் பார்த்துட்டு, ‘கோயிலை அப்புறப்படுத்தக் கூடாது’னு சொன்னாங்க. அதன்பிறகு, அறநிலையத் துறை நிதி ஒதுக்கி, கோயிலைப் புதுப்பிக்கிற வேலையைத் தொடங்கியிருக்கு. 32 லட்ச ரூபாய் ஒதுக்கினாங்க. வேலையையும் ஆரம்பிச்சாங்க. ஏனோ திடீர்னு வேலைய நிறுத்திட்டாங்க” என்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்... அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்கை!

2015-ம் ஆண்டு, தமிழகத்தில் உள்ள முக்கியக் கோயில்களை ஆய்வுசெய்து அறிக்கை தருமாறு யுனெஸ்கோ அமைப்பை, உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதை எதிர்த்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி, ‘பழைமையான கோயில்களை ஆகம விதிகளின்படி புனரமைத்துப் பராமரிக்க, அரசு  தகுதியான நிபுணர்கள் குழுவை 2013-ல் அமைத்தது. தொல்லியல் துறை பரிந்துரைகளை ஏற்று, அவசரத் தேவைகளைச் சரிசெய்ய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. புதிதாக எந்தக் குழுவையும் நியமிக்க வேண்டியதில்லை’ என்றார். இதை ஏற்க மறுத்துவிட்டனர் நீதிபதிகள்.

இதையடுத்து, யுனெஸ்கோ அமைப்பைச் சேர்ந்த அபூர்வசிங்கா, கிரிகுமார் உட்பட நான்கு பேர், 10 கோயில்களில் ஆய்வு செய்து, முதற்கட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அறநிலையத் துறை பல விதிகளை மீறியுள்ளதாகவும், பல கோயில்களைச் சிதைத்துள்ளதாகவும் இதில் குறிப்பிட்டுள்ளனர். ‘மானம்பாடி நாகநாத சுவாமி கோயில், உரிய காரணம் ஏதுமின்றி இடிக்கப்பட்டுள்ளது. அறநிலையத் துறையின் தவறான அணுகுமுறையே இதற்குக் காரணம்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். மீனாட்சி அம்மன் கோயிலில் பொற்றாமரைக் குளத்தின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள தூண்கள் மாற்றியமைக்கப்பட்டதில், சிற்ப சாஸ்திர விதி பின்பற்றப்படவில்லை. ‘பழைய தூண்கள் இடிக்கப்பட்டுள்ளதால், கோயிலின் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து’ என யுனெஸ்கோ அச்சம் தெரிவித்துள்ளது.

பொதுநல வழக்குத் தொடர்ந்த ரங்கராஜன், “திருப்பணி செய்ய அறநிலையத் துறைக்குச் சட்டரீதியாக எந்த உரிமையும் இல்லை. அப்படியே செய்ய வேண்டுமானாலும், ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக அரசாணை பிறப்பிக்க வேண்டும். உள்ளூர் ஒப்பந்தக்காரர்களை பணியமர்த்தும்போது, பழைய கோயில்களைச் சீரமைப்பதைவிட, மறுகட்டுமானம் செய்யவே ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி புராதனமான கோயில்களை இடிப்பது விதிகளுக்கு முரணானது. புராதன நினைவுச் சின்னங்களை இடித்தால், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிப்பதற்குச் சட்டத்தில் இடமுள்ளது” என்றார்.

அழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்... அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்கை!

தொல்லியல் துறை வல்லுநர் இரா.நாகசாமி, “இன்றைக்கு உள்ள நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், மானம்பாடி கோயில் மாதிரியான ஒரு கோயிலைக் கட்ட முடியாது. அப்படிப்பட்ட கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கி உள்ளனர். பாதுகாக்கப்பட வேண்டிய கோயில்களை என்ன காரணத்துக்காக இடித்தார்கள் என்று தெரியவில்லை. யுனெஸ்கோ அறிக்கையில் கூறப்பட்டிருப்பவை சரியானவைதான்” என்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் நடராஜன், “பழைமையான தூண்களெல்லாம், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில்தான் உள்ளன. யுனெஸ்கோ வெளியிட்டுள்ள தகவல்கள் தவறானவை. 1991-ம் ஆண்டிலிருந்து கோயிலுக்கென்று பிரத்யேகமாக புனரமைப்புப் பணிகள் நடக்கின்றன. துறை நிபுணர்களின் வழிகாட்டுதலின்படிதான், கோயிலுக்கு எவ்வித பாதிப்பும் வராதபடி புனரமைப்புப் பணிகள் நடக்கின்றன” என்று விளக்கமளித்தார்.

‘அறநிலையத் துறையின் தலைமை ஸ்தபதியான முத்தையா ஸ்தபதியிடம் கலந்து ஆலோசிக்காமல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் செயல்பட்டது’ என யுனெஸ்கோ அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இது குறித்து முத்தையா ஸ்தபதியிடம் கேட்டபோது, “கோயில் நிர்வாகம், தூண்களை மாற்றுவது குறித்து என்னிடம் எதுவும் கேட்கவில்லை. அதன்பிறகு கோயில் சார்ந்த அனைவரிடமும் ‘இது தவறு’ என்று கூறியும், அதை அவர்கள் கேட்கவில்லை. யுனெஸ்கோ அறிக்கை உண்மைதான்” என்றார்.

இந்திய தொல்பொருள் துறையைச் சேர்ந்த மகேஸ்வரி, “மானம்பாடி கோயில், இந்திய தொல்பொருள் துறையின் கீழ் வரவில்லை. இதற்கு முழுக் காரணம், தமிழ்நாடு அறநிலையத் துறைதான்” என முடித்துக்கொண்டார்.

அழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்... அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்கை!

மானம்பாடி கோயிலின் செயல் அலுவலர் ஞானசேகரன், “தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆலோசனையின் பேரில்தான், கோயில் பிரிக்கப்பட்டது. பிரித்த கற்களுக்கு எண்கள் கொடுத்து வைத்துள்ளோம். நீதிமன்ற உத்தரவு வந்ததும், திருப்பணி வேலைகள் தொடங்கும். கோயிலில் இருந்த சிலைகளை எல்லாம் பாதுகாத்து வருகிறோம்” என்றார்.

யுனெஸ்கோ, பல கோயில்களைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்ய இருக்கிறது. அதில், இன்னும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரலாம்.

- இ.லோகேஷ்வரி
படங்கள்: க.சதீஷ்குமார், ஈ.ஜே.நந்தகுமார்